8/18/2009

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு எட்டுத் தாழ்ப்பாள்?

அது சரி said...

நன்னாயிட்டு உண்டு...ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு எட்டுத் தாழ்ப்பாள்...இதுக்கு பின்னாடி என்ன அர்த்தம்?? :0))

இலண்டன் மாநகர், அது சரி அண்ணாச்சி அவர்களே வணக்கம்! சமுதாயத்திலே, பிறழ்தலும் திரிதலும் மருவுதலும் இயல்பே; அவற்றிற்கு காரணம் என்னவாக இருக்க முடியும்? திரிதலுக்கு காரணம், தகவல் தொடர்பில் ஏற்படும் உணர்ச்சிகள் என்க; மருவுதலுக்குக் காரணம் வெகுளித் தன்மையும், பாமர இயல்புமென்க; பிறழ்தலுக்குக் காரணம் அதன் மூலம் தெரியாமையும் மறைதலும் என்க! அந்த வகையிலே இன்றைக்கு அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

திரிதலுக்குக் காரணம் உணர்ச்சிகள் என்றோம். ஒருவன் எதிர்ப்படுகிறான்; மற்றவன் அவனது சினங்கொண்ட தோற்றத்தைக் கண்டதும், ‘ஏன்டா மூஞ்சிய உர்ன்னு வெச்சிகிட்டு இருக்கே?’ என்கிறான்.

அதற்கு அவன், ‘அவன் என்னடா எக்கச்சக்கமா வாயுடமாப் பேசிட்டே இருக்கான். மண்டை காஞ்சி போச்சி தெரியுமா?’ என அங்கலாய்த்துக் கொள்கிறான்.

இந்த இடத்திலே என்ன நடக்கிறது? சினம் என்கிற உணர்ச்சியானது, வாயுடாமப் பேசிட்டே இருந்தான் என்கிற தகவலுடன் சேர்ந்து, ‘எக்கச்சக்கமா’ என்கிற சொல் திரிபடைகிறது.

ஆம் மக்களே! ‘எக்கச்சக்கமா’ என்றால் என்ன? தாறுமாறாகப் பேசுவது, அல்லது எக்குத்தப்பாகப் பேசுவது என்று பொருள். இந்த சொல்லானது, அனைத்துத் திராவிட மொழிகளிலும் இருப்பதை நீங்கள் காண்லாம். ‘வாடு எக்கசக்காலு மாட்லாடுத்தாடு’, ‘நூவு எக்கசக்கா கெலித்து’ என மற்ற மொழிகளிலும் அதே பொருளில் காணலாம்.

ஆனால், தமிழில் இதன் இன்றைய பயன்பாடு என்ன? நிறைய, ஏராளமாக, அளவுக்கதிகமாக எனும் பொருளில் இயல்பாகப் புழங்கப்பட்டு வருகிறது. இது திரிதலுக்கு நல்ல உதாரணம்.

மேலே நடந்த உரையாடலில், ‘ஏன் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டிருக்கிறாய்?’ என்று வினவும் போது, முகமானது மூஞ்சியென மருவியதை நாம் காணலாம். அதாவது உச்சரிப்பானது மாறிக் கலந்தது.

பிறழ்தல் என்பது, மூலத்தை அறியாததாலோ அல்லது மறைந்து போவதாலோ ஏற்படுவது எனக் கண்டோம். அந்த வகையிலானதுதான் அண்ணாச்சி அவர்கள் வினவியிருக்கும் இந்தக் கேள்வியும் என்பது அடியேனின் தாழ்மையான எண்ணம். இனி, மூலத்தைக் காண்போமாக!

ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு எட்டுத் தாழ்ப்பாள் என்பது அல்ல சொலவடை! ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதே பிறழாத சொலவடை எனக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

சீரும் சிறப்புமாய் ஆண்டு வந்த சோழமன்னன் இராஜ இராஜ குலோத்துங்கனின் மனைவியானவள் இராஜகுமாரி. பட்டத்து இராணி இராஜகுமாரியின் ஆசான், நளவெண்பா பாடிய புகழேந்திப்புலவர். பாண்டிய நாட்டில் இருந்து மணம் முடித்து சோழ நாட்டுக்கு வந்த இராஜகுமாரியின் அழைப்பின் பேரில், பாண்டிய நாட்டுப் புலவர்களில் ஒருவரான புகழேந்திப் புலவர் சோழ நாட்டில் வந்து சிலகாலம் தங்கி இருந்தார்.

அந்த காலகட்டத்திலே, சோழ நாட்டுப் புலவரான ஒட்டக்கூத்தருக்கும் பாண்டிய நாட்டுப் புலவரான புகழேந்திப் புலவருக்கும் மனத்தாங்கல் என்றாகிவிட, அதன் விளைவாய் புகழேந்திப் புலவர் சிறையில் அடைப்படுகிறார்.

இதுகேட்ட மகாராணி இராஜகுமாரி, கடும் சினங்கொண்டு அந்தப்புரத்தில் உள்ள அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டு உண்ணா நோன்பில் ஆழ்ந்து விட, குலோத்துங்க சோழன் தன்னாட்டுப் புலவரான ஒட்டக்கூத்தரை விட்டு இராணியைப் புகழ்ந்து பாடி, எப்படியாவது அவரைக் கோபத்திலிருந்து விடுவிக்குமபடி கேட்டுக் கொள்கிறார்.

அவ்விதமே ஒட்டக்கூத்தரும் அந்தப்புரத்திற்கு சென்று, அறையின் வெளியே நின்று கொண்டு பாடுகிறார். ஆண் சிங்கம் போன்றதொரு வீரனாகிய மன்னன் குலோத்துங்கன் வர, உன் தாமரை போன்ற கைகள் தானாக வலியச் சென்று கதவைத் திறந்திடச் செய்யுமன்றோ எனப் பாடுகிறார்.

தனது ஆசானும், பாண்டிய நாட்டுப் புலவருமான புகழேந்திப் புலவரைச் சிறையிலடைக்கக் காரணமான ஒட்டக்கூத்தரின் குரலைக் கேட்டு மேலும் பல மடங்கு சினங்கொண்ட இராஜகுமாரி, இருந்த மற்றுமொரு தாழ்ப்பாளைப் போட்டுக் கொண்டாள்.

அதன்பிறகு, ஒட்டக்கூத்தரால் புகழேந்திப் புலவர் சிறையில் அடைக்கப்பட்டதுதான் மனைவியின் சினத்திற்குக் காரணம் என்பது மன்னனுக்குத் தெரியவர, பின்னர் புகழேந்திப் புலவர் விடுவிக்கப்பட்டு, அவர் சென்று பாடியதும் இராணி அந்தப்புரத்தில் இருந்து வெளிப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

20 comments:

priyamudanprabu said...

இப்படி நிறைய மாறி இருக்கு
"சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா" என்பது
"சோழியன் குடுமி சும்மா ஆடுமா" என்று சொல்வார்கள்

பழமைபேசி said...

Proto-South Dravidian : *ekasak-

Meaning : confusion [onom.]

Tamil : ekkaccakkam

Tamil meaning : confusion, disorder, irregularity, awkward predicament

Tamil derivates : ekattāḷi, ekattāḷam mockery, jest, ridicule (< Te.)

Malayalam : ekkaccakkam, ekkaccakku

Malayalam meaning : confusion, doubt

Kannada : ekkasakka, ekkasekka

Kannada meaning : confusion, doubt, perverseness; ridicule, mockery, a joke

Kannada derivates : eksukya, egaciga, ekkatāḷi, egatāḷa, egatāḷi ridicule, mockery, jest; ekkarisu to make faces at, mock, deride

Tulu : ekkụsakkụ, ekkacakka, ekkasakka

Tulu meaning : confusedly, indiscriminately

Number in DED : 0767

naanjil said...

தம்பி மணி:
அருமையான இலக்கிய தகவலை எளிமையாக எழுதியதற்கு நன்றி.

ஒட்டக்கூத்தர் படைத்த நூல்கள்:
இராமாயணம் உத்தரகாண்டம், ஈட்டியெழுபது எழுப்பெழுபது, அண்டத்துப்பரணி, குலோத்துங்க சோழன் உலா, குலோத்துங்கன்கோவை, தக்கயாகப்பரணி. (தகவல்-அபிதான சிந்தாமணி)

செல்வநாயகி said...

ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் விடயம் சுவையாக எழுதப்பட்டு உள்ளது, நன்றி.

ஈரோடு கதிர் said...

//எக்கச்சக்கமான//
இதுக்கு நான் இதுவரைக்கும் "அதிகமான" என்று அர்த்தம் கொண்டிருந்தேன்

நன்றி மாப்பு


//சிங்கம் போன்றதொரு வீரனாகிய மன்னன் குலோத்துங்கன் வர, உன் தாமரை போன்ற கைகள் தானாக வலியச் சென்று//

ஏன் மாப்பு...?

சிங்கத்த எப்படி... தாமரை போன்ற கை..
இஃகி இஃகி

vasu balaji said...

இதென்னங்க. இந்த ஒட்டக்கூட்தரு நேத்து கம்பர் கூட கோச்சுகிட்டு எழுதுன ராமாயணத்த கெடாசினாரு. இன்னைக்கு புகழேந்திப் புலவர உள்ள தூக்கி போட்டாரு. வில்லங்கமான மனுசன் போலயே.

மெளலி (மதுரையம்பதி) said...

அறிய தகவலை எளிமையாக சொல்லி விளக்கியிருக்கீங்க...நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

அதே அருமையான் விளக்கங்கள்

க.பாலாசி said...

// ‘வாடு எக்கசக்காலு மாட்லாடுத்தாடு’, ‘நூவு எக்கசக்கா கெலித்து’ என மற்ற மொழிகளிலும் அதே பொருளில் காணலாம்.//

அட ஆமால்ல.. இது தெரியாம இத்தன நாளு இருந்துட்டேனப்பா.

நன்றி நண்பா தங்களின் தெலிவூட்டலுக்கு

பழமைபேசி said...

மக்களே, அனைவருக்கும் நன்றி; இன்னைக்கு நித்திரை கொஞ்சம் அதிகமாயிட்டது; ஓட்டத்துல இருக்கேன், மாலை சந்திப்போம்....

Unknown said...

//சமுதாயத்திலே, பிறழ்தலும் திரிதலும் மருவுதலும் இயல்பே.//
எமதூர் அருகிலுள்ள ஊர்கள் இவ்வாறு திரிந்துள்ளது.
'பெருநெற்குன்றம்' தற்போது 'பென்னக்கோணம்'
'பெரும்புதூர்' தற்போது 'பெருமத்தூர்'
வாகையூர்' தற்போது 'வாவூர்'.
இன்னும் பல.

அதற்கு காரணமாய் தாங்கள் கொடுத்த விளக்கம்
//மருவுதலுக்குக் காரணம் வெகுளித் தன்மையும், பாமர இயல்புமென்க. பிறழ்தலுக்குக் காரணம் அதன் மூலம் தெரியாமையும் மறைதலும் என்க!//
அருமை நண்பரே.

குடுகுடுப்பை said...

நல்லா உட்காந்து திண்ணு பாட்டு பாடிட்டு இருந்திருக்காங்க. அதேதான் இன்னைக்கும் சில புலவர்கள் பண்றாங்க போல.

Unknown said...

ஓ இப்படி ஒரு அர்த்தம் இருக்குதா? நான் என்னமோ இந்தாளு பாட்டுக்கு இரட்டை தாழ் (நீங்க நினைக்குற double meaning இல்ல ..நான் சொல்ல வந்தது இரு அர்த்தங்கள்) கொண்ட அர்த்தம் இருக்குமுன்னு நெனச்சேன்.
அற்புதமான விளக்கத்துக்கு நன்றி.

-வெங்கி

- இரவீ - said...

நல்லா இருக்கு ... தொடருங்க

நாகராஜன் said...

நல்லா விளக்கமா சொல்லரீங் போங். ரொம்ப நன்றிங்கோவ்.

dondu(#11168674346665545885) said...

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டத் தாப்பாள்னுதான் நான் கேள்விப்பட்டிருக்கேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

குறும்பன் said...

நானும் "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டத் தாப்பாள்" அப்படின்னு தான் கேள்வி பட்டிருக்கேன்.

அது சரி(18185106603874041862) said...

பதிலுக்கு ரொம்ப நன்றி தல :0))

அது சரி(18185106603874041862) said...

இங்க ரொம்ப பேரு ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு ரெட்டை தாழ்ப்பாள்னு சொல்லிருக்காங்க...

ஒட்டக்கூத்தரும் கம்பரும் எங்க சோழ நாட்டுக்காரவுங்க...எங்க ஊர்ல ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு எட்டுத் தாழ்ப்பாள்னு சொல்றது தான் பழக்கம்....அதனால நாங்க தான் சரி :0)))

பாண்டியர்கள், தொண்டை மண்டலத்தார், நடு நாட்டார் சொல்வது எல்லாம் தள்ளுபடி செய்யப்படுகிறது :0)))

பழமைபேசி said...


அனைவருக்கும் நன்றிங்க!