7/03/2008

பிறழ்ந்த பழமொழிகள்

ஊர்ல பெரியவங்க சொல்லி, கேட்டு இருப்பீங்க.'அர்த்தத்தை அநர்த்தம் ஆக்குறாங்'கன்னு.சரியான வழிகாட்டுதல் இல்லாம வேற அர்த்தம் எடுத்துக்குவோம். அதுல எனக்கு தெரிஞ்ச சிலத இப்ப பாப்போம்.

பந்திக்கு முந்தணும்! படைக்கு பிந்தணும்!!

பந்தினா, ஒன்று கூடல். அது ஊர்க் கூட்டமாவும் இருக்கலாம். போருக்கான ஆயத்தக் கூட்டமாவும் இருக்கலாம். சமபந்தினா, எல்லாரும் ஒரே அணியா ஏற்றத்தாழ்வு இல்லாம கூடுறது. அப்படிப்பட்ட ஒன்றுகூடல் எதுவானாலும் உடனடியா போகணும்.

படை அப்படீன்னா படைப்பது. படைப்பாளி, படையல், படையப்பன் இதெல்லாம் 'படை'யிலிருந்து வந்த சொற்கள். ஆக, குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் வழி விட்டு, படையலுக்கு பிந்தணும். இதுதான் இந்த பழமொழியோட சாராம்சம். அது மருவி, நேர் எதிர் அர்த்தம் தர்ற மாதிரி நாம பாவிக்க கூடாது.

வீட்டுக்கு வீடு வாசப்படி

'மேன்மையான வாழ்க்கை'ங்ற வீட்டுக்கு 'ஆன்மீகம்'ங்ற வீடு வாசற்ப்படி. அடுத்த வீட்டு பிரச்சினைகள் மாதிரி தான் நம்ம வீட்டு பிரச்சினைகளும்னு அர்த்தம் இல்லை.

கல்லைக் கண்டா, நாயைக் காணோம்! நாயைக் கண்டா, கல்லைக் காணோம்!!

செதுக்கி வச்சிருக்கும் நாய் போன்ற சிலையை, கலை கண்ணோட்டத்துல பாத்தா,நாய் தோற்றம் தெரியும்.கல்லா நினைச்சுப்பாத்தா நாய் தெரியாது. அதான்,'கல்லைக் கண்டா நாயைக் காணோம்.நாயைக் கண்டா கல்லைக் காணோம்'ங்றது. தெருவில் இருக்கிற நாயையும் கல்லையும் இணைச்சி அர்த்தம் கொள்ளக்கூடாது நாம. இதையே தான் திருமூலர் சொல்கிறார்:

மரத்தில் மறைந்தது மாமதயானை; மரத்தை
மறைத்தது மாமதயானை!

மரத்தை கண் கொண்டு பார்த்தால், யானை தெரியாது. யானையை மனதில் இருத்தி பார்த்தால்,யானையின் பின் இருக்கும் பெரிய மரம் தெரியாது.

பெண் புத்தி, பின் புத்தி

சலிப்பின் காரணமாகவும் அலுப்பு காரணமாகவும் பெண்களை வசை பாடுறதுக்குன்னே சிலர் இந்த பழமொழிய பயன்படுத்துவாங்க. ஆனா, பொருள் அதுவல்ல. பாட்டி, தாய், அக்கா, தங்கை, மனையாள்னு எல்லாருமே பின் வருவன அறிந்து செயல்படும் ஆற்றல் இருப்பதால், ஒட்டுமொத்த பெண் குலத்தின் புத்தியும் பின் வருவன தெரியும் புத்தி உடையவர்கள் என்றார்கள் தமிழ்ச்சான்றோர்.

பசிக்கு பனங்காயத் தின்னு

பசி எடுத்தால் பனங்காய தின்னுவது என்பது மட்டும் பொருள் அல்ல. பசி எடுத்தால் பனங்காயை வேண்டுமானாலும் தின்னலாம், ஆனால் யாசித்துச் சாப்பிடுவது சுயமரியாதைக்கு இழுக்கு.

புண்பட்ட மனத்தை, புக விட்டு ஆத்து

'ஏண்டா பீடி சிகரெட் குடிச்சே சாவறே'னு கேட்டா, நம்மாளு சொல்லுவான், 'வள்ளுவர் என்னா சொல்லி இருக்கார்? புண்பட்ட மனத்தை, புக விட்டு ஆத்துனு சொல்லி இருக்காருல்லே? அதான்'. நாம புகைப் பிடிக்கிறதுக்கு இந்த பழமொழி தானா கிடைச்சுது? ஆனா, விசயம் அதுவல்ல. புண்பட்ட தன் மனத்தை பிடித்த வேறொன்றில் புக விட்டு ஆற்றிக்கொள் என்பது அர்த்தம்.

விருந்தும் மருந்தும் மூணு நாள்

வழக்கத்தில சொல்லுறது பெரும்பாலும் என்னன்னா,
உபசரிப்பு குறுகிய காலத்துக்குதான்னு. அத சுட்டி
காட்டுறதுக்கு இத சொல்லுவாங்க. ஆனா, இந்த பழமொழி
என்ன சொல்லுதுன்னு பாத்தீங்கன்னா,குளிர்ந்த நாட்களான
திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகள் விருந்து
படைப்பதற்கும், ஞாயிறு செவ்வாய் வியாழன் ஆகிய
வெப்ப நாட்கள் மருந்து உட்கொள்வதற்கும் சரியான நாட்கள்.
அந்த நாட்களில உணவைக் கொறச்சி கூட சாப்பிடலாம்.
அதான் இந்த மூணு நாட்கள விரதம் இருக்க
தேர்ந்தெடுப்பாங்க. அது போக,சனிக்கிழமைய நீராடுவதற்கு
தலைக்கு எண்ணை வெச்சு). தேர்ந்தெடுத்தாங்க. அதான்
விருந்து மூணு நாள்,மருந்து மூணு நாள்!!!

இடத்தக் குடுத்தா, மடத்தப் புடுங்குவான்

ஒரு ஆள இருக்கவிட்டா, நம்ம கிட்ட இருக்குறத புடுங்கிகிட்டு போய்டுவாங்கங்ற அர்த்தத்தில இந்த பழமொழிய பாவிப்பாங்க. ஆனா, பழமொழி சொல்லுது பாருங்க "அறிவூட்டுற 'குரு'க்கு நம்ம மனசுல இடத்தக் குடுத்தா, மடமைங்ற அறிவின்மைய அவர் பிடுங்கிவிடுவாரு"ன்னு.

(அப்பாட, இனியும் நிறைய பழமொழி இருக்கு. ரெண்டு நாளா தட்டச்சு அடிச்சுகினே இருக்கேன். முடியல... கையே வலிக்குது. அடுத்த வாரம் பாப்போம். அஞ்சலை, அந்த நீலகிரி தைலத்த எடுத்துட்டு வாடி அம்மா, அக்கா பெத்த மவராசி.......)

6 comments:

Anonymous said...

அப்படியே தயவுசெய்து 'சனி நீராடு 'என்ற ஒளவையாரின் மொழியையும் விளக்குவீராக, உங்களுக்கு புண்ணியமா போகும்..

பழமைபேசி said...

//
raman said...
அப்படியே தயவுசெய்து 'சனி நீராடு 'என்ற ஒளவையாரின் மொழியையும் விளக்குவீராக, உங்களுக்கு புண்ணியமா போகும்..

//சீக்கிரமே உங்களுக்காக பிரத்தியேக பதிவு ஒன்னு போடுறேன்ங்க.... நன்றி!

Anonymous said...

//http://www.kamakoti.org/tamil/part1kural5.htm//

இங்கு சென்று பாருங்கள் திருமந்திரத்திற்கு
மகா பெரியவர் அழகாக
விளக்கம் கொடுத்திருக்கிறார்.


மற்றய விளக்கங்கள் நன்று.

பழமைபேசி said...

//
Anonymous said...
//http://www.kamakoti.org/tamil/part1kural5.htm//

இங்கு சென்று பாருங்கள் திருமந்திரத்திற்கு
மகா பெரியவர் அழகாக
விளக்கம் கொடுத்திருக்கிறார்.


மற்றய விளக்கங்கள் நன்று.
//
அனாமதேய அன்பருக்கு வணக்கம்! மேலதிகத் தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி! நான் படித்த திருமூலரின் விளக்கம் நான் குறிப்பிட்டதுதான். எனினும் பெரியவர் கூறியிருப்பதையும் ஏற்கிறேன்.

நசரேயன் said...

கலக்கல் பழமைபேசி ஐயா..

Unknown said...

தப்பான தகவல்கள்
ஆதாரமற்ற விடைகள்