7/06/2008

கூறுகள், பாகம்-2

1. வாத்து மடையன் - விளக்கம் என்ன?

இது சம்பந்தமா ரெண்டு விளக்கம் சொல்லுறாங்க. முதலாவது, நம்ப ஊர்ல கோழி, சேவல அந்திசாயும் நேரத்துல அடைக்கப் போனா, நாலும் நாலு திசைல ஓடி, வேலை வாங்குமாம். அந்த அளவுக்கு சாதுரியமானது அதுக. ஆனா, ஒரு வாத்தப் புடிச்சு சாக்குப் பைல போட்டா, அடுத்தடுத்த வாத்துக, தானா வந்து கோணிப்பை (சாக்குப்பை)ல விழுமாம். அந்த அளவுக்கு மடம் கொண்டதாம் வாத்து. அதனால, புத்திக்கூர்மை இல்லாதவங்களை வாத்து மடையன்னு சொல்லுவாங்களாம்.

ரெண்டாவது விளக்கம், தங்க முட்டை இடும் வாத்தை, பேராசைப்பட்டு வயித்த அறுத்த மடையனை ஒப்பிட்டு சொல்லுற மாதிரி, வாத்தை அறுத்த மடையன் வாத்து மடையன்னும் சொல்லுறாங்க.

2. மாங்கா மடையன் - விளக்கம் என்ன?

சிவன் கோயில் பெரிய பூசாரி, உச்சி நேர பூசைக்கு முக்கனிகளை வெச்சி பூசை செய்யணும்னு பிரயத்தனப்பட்டு, அது குறிச்சு மடத்துல இருந்த திருவாத்தான்கிட்ட சொன்னாரு, 'டேய் திரு, பலாவும் வாழையும் இருக்கு. மாங்காய் தான் இல்ல. போயி, மாங்கா பறிச்சிட்டு அப்படியே அதுல கொஞ்சம் இலையும் பறிச்சிட்டு வா' னு சொன்னாரு. கொஞ்ச நேரத்துல மாங்காய்களோட திருவாத்தானும் வந்தான். 'எங்கடா, மாவிலையக் காணோம்'னு பூசாரி கேக்க, திருவாத்தான் சொன்னான்,'நீங்க காய்களப் பறிச்சிட்டு, அதுல கொஞ்சம் இலையும் பறிச்‌சிட்டு வர சொன்னீங்க. ஆனா, எந்தக் காய்லயும் இலைக இல்லை'னு சொன்னான். உடனே பூசாரி திருவாத்தானை கடுமையா திட்டிகினு இருந்தாரு.

அந்த நேரம் கோயிலுக்கு வந்த ஜமீன் (ஊர்த் தலைவர்), என்ன பூசாரி திருவாத்தானை திட்டிகினு இருக்கீங்கன்னு கேக்க, 'அவன் மாங்காய்ல இலை தேடுன மாங்கா மடையன்'னு சொல்லிட்டு, நடந்ததை ஜமீன் கிட்ட சொன்னாரு பூசாரி. இப்படித்தாங்க, 'மாங்கா மடையன்'ங்ற அடை சொல்லு பொழக்கத்துக்கு வந்தது. குறிப்பா, 'மாங்கா மடையன், திருவாத்தான்'ங்ற வார்த்தைகள கொங்குச் சீமைல அடிக்கடி பொழங்குவாங்க.

ரெண்டாவது விளக்கம்: மாங்கா மடையன் என்ற சொற்றொடருக்கு நன்னன் அவர்கள் ஒருமுறை மக்கள் தொலைக்காட்சியில் விளக்கம் அளித்தார். மாங்காயை மா என்றும் அழைப்போம் அல்லவா, அதனால் மாங்காய் மடையன் என்றால் மாமடையன் என்று பொருள் என்றார். நன்றி: பாலராஜன்கீதா

3. மடச்சாம்பிராணி - விளக்கம் என்ன?

அந்தக் காலத்துல மடம், கோயில் கூடம், சத்திரம்னு சனங்க கூடுற பொது இடங்கள்ல பெரிய சாம்பிராணிக் கட்டிய வெச்சிருப்பாங்களாம். இது தணல்ல போட்டு தூபம் போடுற சாம்பிராணி இல்லங்க. இருந்த இடத்துல இருந்து நல்ல வாசம் குடுத்து, காத்துல இருக்குற கிருமிகளநீக்குற சாம்பிராணி. இருந்த இடத்துல இருந்து, காத்துல கரைஞ்சு உருமாறி, நாளடைவுல இது அரை குறையா ஆயிடுமாம். அத வெச்சி, அரை குறையா புத்திக்கூறு இல்லாம இருக்கறவங்கள 'மடச்சாம்பிராணி'னு திட்ற பழக்கம் பொழக்கத்துல வந்தது. மடையன் சாம்பிராணினு ஒரு செடி இருக்குதுங்க. ஆனா, அதுக்கும் இந்த சொல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்களாம். அது ஒரு மூலிக மருந்தாம்.

4.பல வண்ணங்கள் இருக்க, நம் ஊர்களில் சுவர்களுக்கு வெண்மை நிறம் அடிப்பதேன்?


வீடு குளிர்ச்சியா இருக்கவும், கூட வெளிசசமா இருக்கவும் பெரியவங்க வெண்மை நெறத்தை தேர்வு செஞ்சாங்க. அதே சமயம், கரியும் சில தாவரங்களும் கலந்து பூசின கருப்பு நெற வீடுகளும், கட்டிடங்களும் இருந்ததாம். இனப் பெருக்கம் சம்பந்தப்பட்ட இடங்களான கோழிப் பண்ணை, கால்நடைக் கொத்தளங்கள், பட்டுப்பூச்சி வளர்ப்புனு கொஞ்ச இடங்கள், அப்புறம் பார்வைக்கு எட்டக் கூடாத இடங்கலான கோட்டை, பதுங்கு குழிகள், அமைதி வேண்டிய இடங்கள்னு இருக்குற இடங்கள, கருப்பு நெறத்துல பூச்சு பூசி இருப்பாங்களாம்.

5.பல வண்ணங்கள் இருக்க, குடைகள் கருப்பு நிறத்தில் இருப்பதேன்?

குடைகள் கருப்பு நெறம்னு சொன்ன உடனே, கருப்பு நெறம் ஒளி வீச்சுக் கதிர்களை கவரக் கூடியதுனு சரியா சொல்லுவாங்க. அப்ப, பெரியவங்க ஏன் ஒளி வீச்சுக் கதிர்களை உடனே திருப்பி அனுப்புற வெள்ளை நெறத்தை தெரிவு செய்யல? பெருசு சொன்னது, 'கொடை தலைக்கு மேல அரை அடி ஒசரத்துல கருப்பு துணியோட இருக்கும். ஆனா, ஆறு அடி மனுசனை சுத்தி இருக்குற சூட்டையும் உறிஞ்சீரும்'னு. அதே சமயத்துல வயசுல மூத்தவங்க, கௌரவத்துல மூத்தவங்க, வெள்ளை நெற கொடைகள வெச்சிக்கறதும் பழக்கத்துல இருந்ததாம். இந்தப் பழக்கம் தன்னை தனிச்சுக் காமிக்கறதுக்காக இருந்து இருக்கலாம். இன்னைக்கும் நூறு வருசப் பழமையான லக்ஷ்மாபுரம் விநாயகர் கோயில் கல்வெட்டுல, 'மிராசுதார் வெண்குடை சுப்பையா'னு தான் போட்டிருக்கு.

6.பரிணாம வளர்ச்சி என்று கூறினாலும்,இறைவனின் ஒவ்வொரு படைப்புக்கு பின்னும் ஒரு அர்த்தம் பொதிந்து இருக்கிறது என்று நம்புகிறேன். நீங்களும் அதே கட்சியா? அப்படியானால், பிறப்பில் தலை மயிர் கருப்பாகவும் பின் (சிலருக்கு)வெள்ளை நிறமாகவும் மாறுகிறது. அது ஏன்?

கிட்டத்தட்ட மேல சொன்ன பதில் தான் இதுக்கும். ஆனா, ஒரு சிறு வித்தியாசம். அடர்ந்து இருக்குற கருப்பு நிற தலை முடி, சூட்டை உறிஞ்சி மேல் புறமாத்தான் வெச்சு இருக்கும். தலைக்கு உள்ள விடாதாம். ஆக, வெப்பம் நெறஞ்ச பூமியில உடலை சுத்தி இருக்குற சூட்டை கிரகிச்சு, அதைத்தணிக்க கருப்புத் தலை முடி ஒதவுது. வயசான காலத்துல தலையில் மயிரின் அடர்த்தி கொறயக் கொறய, ஒளி வீச்ச திருப்பி அனுப்புற மாதிரி வெள்ளை நெறமா நரைக்க ஆரம்பிக்கும், மண்டைல சூடு உள்ள போகக் கூடாதுன்னு. ஆனா, இந்த வயசுல உடல சுத்தி இருக்குற சூட்டை தணிக்க தலை முடி ஒதவறதது இல்ல. அதான் சூட்டை உறிஞ்சுற கருப்பு நெறம் இல்லையே?!



வாக்களியுங்கள் மக்களே!

3 comments:

பாலராஜன்கீதா said...

மாங்கா மடையன் என்ற சொற்றொடருக்கு நன்னன் அவர்கள் ஒருமுறை மக்கள் தொலைக்காட்சியில் விளக்கம் அளித்தார். மாங்காயை மா என்றும் அழைப்போம் அல்லவா, அதனால் மாங்காய் மடையன் என்றால் மாமடையன் என்று பொருள் என்றார்.

பழமைபேசி said...

//
பாலராஜன்கீதா said...
மாங்கா மடையன் என்ற சொற்றொடருக்கு நன்னன் அவர்கள் ஒருமுறை மக்கள் தொலைக்காட்சியில் விளக்கம் அளித்தார். மாங்காயை மா என்றும் அழைப்போம் அல்லவா, அதனால் மாங்காய் மடையன் என்றால் மாமடையன் என்று பொருள் என்றார்.

//
மேலதிகத் தகவலுக்கு மிக்க நன்றி! அதையும் உங்கள் இசைவுடன் பதித்து விடுகிறேன்.

Unknown said...

வாத்துக்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில் ஒருவர் வானத்தை நோக்கி துப்
பாக்கியால் சுட,தன்னைத்தான் சுட்டதாக நினைத்து கீழே விழ, மற்ற வாத்துகளும் கீழே விழுமாம். அந்த மாதிரியான ஆளை அப்படி சொல்லுவர்.