9/10/2025

ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும் -ஆபிதீன்

 ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும் -ஆபிதீன்


வணக்கம். கதையின் இருவேறு பிடிமானங்களாக, வாப்பாவின் மோதிரமும், மனம் கொள்கின்ற பயங்களும் உணர்வுகளும், அடுத்தடுத்து, மாறி மாறி, வந்து வந்து போய், கடைசியில் மோதிரம் தன் கைக்கே வந்து, இருப்புக் கொள்வதாக அமைந்திருக்கின்றது.

கதையில் நேரடியாகச் சொல்லப்படுகின்ற அடுத்தடுத்த தகவல்களையும் கடந்து, இந்த இரு பிடிமானங்களும் நமக்குள் ஏதோவொன்றைச் சொல்கின்றதாக நமக்குள் புலப்படுகின்றது.

பெளத்த சமயத்தின் அடிப்படையாகச் சொல்லப்படுவது, தத்துவார்த்த ரீதியாகச் சொல்லப்படுவது, என்னவென்றால், Do not dwell in the past, do not dream of the future, concentrate the mind on the present moment. Mindfulness மனமார்ந்திருத்தல் என்பதற்கும் இதுதான் அடிப்படை. அதாவது, நம் மனம் அலைபாயக் கூடியவொன்று. ஒன்று, கடந்தகால நினைவுகளின்பால் இருக்கும். பெரும்பாலான நேரங்களில் அது ஏக்கத்தையும் வருத்தத்தையும் கொடுக்கக் கூடியது.

அடுத்தது, எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள். எண்ணி எண்ணியே கலக்கம் கொண்டு, அச்சம் கொள்வது. இவை இரண்டும்தான் நம்மில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியன, கடந்தகால எச்சத்தின் குறியீடாக வாப்பாவின் மோதிரமும், எதிர்கால எண்ணப் பதற்றங்களின் விளைவாகப் பயமும், மாறி மாறி வந்து போகின்றது கதை நெடுகிலும்.

தற்காலத்தில் ஒன்றியிருக்கும் போது, செயற்பாடுகளால், நான் ஆற்றிக் கொண்டிருக்கும் வினையின்பால் மனம் நிறைந்து இருக்கும். கடந்தகாலத்தின் பொருட்டு, கவலை அல்லது வருத்தம் என்பது இல்லை. வருங்காலத்தின் பொருட்டு, அது நடந்து விடுமோ அப்படியாகி விடுமோ இப்படியாகி விடுமோ எனும் பயம் என்பதும் இல்லை.

கதையின் முடிவாக நாயகன் வசம் வாப்பாவின் மோதிரம் வந்து விடுகின்றது. கடந்தகால எச்சத்தின் சுவடுகள், இன்னும் இன்னுமிருந்து தொடரக்கூடுமெனும் புரிதலைத்தான் இதனூடாக நான் பார்க்கின்றேன்.

ஆபீதீன் அவர்களது, ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும் எனும் இந்தக் கதை, புலம்பெயர் வாழ்வு, நாயகனின் வாழ்க்கைப் பின்னணி எனப் பலவற்றையும் நமக்குக் கொடுத்தாலும் கூட, ”கதையை படித்துப் படித்து எடிட் செய்வது ஏன் முக்கியம்” என்பதையும் நமக்கு உணர்த்துகின்றது. Dwelling on the past or obsessing about the future leads to suffering இயன்றவரை, நாம் தற்காலத்தில் திளைத்திருப்போம். நன்றி, வணக்கம்.

[கதைப்போமா குழுமத்தில், கதை குறித்துப் பேசியது]


8/22/2025

𝑹𝒆𝒂𝒅 𝒕𝒉𝒆 𝑷𝒐𝒆𝒎 𝑴𝒐𝒓𝒆 𝑻𝒉𝒂𝒏 𝑶𝒏𝒄𝒆


இத்தனை வருடங்களும்
இதன் நிழல்வாங்கி
இதன் பழம் தின்னும்
பறவைகள் பார்த்து
இதன் துளிரில் துளிர்த்து
சருகில் சரசரக்க நடந்து
திரிகிறவன் எனினும்
இந்த மரத்தை முழுதாகப்
பார்த்ததில்லை என்று புரிய
நேற்றுவரை ஆயிற்று
ஆயுசு போதாது
ஒருமரம் பார்க்க

###

உன்னுடைய கைகள் தானே
யாருடைய கைகளோ போல
பார்க்கிறாயே – என்றான்
என்னுடைய கைகளைத் தான்
வேறு யாருடைய கைகளையோ போல
பார்க்கிறேன்.
என்னுடையதை
என்னுடையதாகப் பார்ப்பதில்
என்ன இருக்கிறது

###

புத்தரைப் போல
நின்று பார்த்தேன்
கூடவில்லை
புத்தரைப்போல
அமர்ந்து பார்த்தேன்
இயலவில்லை,
சுலபம் தான் என்று
புத்தரைப் போலச்
சிரிக்க முயன்றேன்
புத்தர்தான் சிரித்துக்
கொண்டிருந்தார்
என்னைப் பார்த்து
இப்போதும்!

கவிதைகள் - கல்யாண்ஜி
நன்றி: Vannadasan Sivasankaran S

###

𝐈𝐧𝐭𝐞𝐫𝐩𝐫𝐞𝐭𝐢𝐧𝐠 𝐩𝐨𝐞𝐦𝐬 𝐢𝐬 𝐛𝐨𝐭𝐡 𝐚𝐧 𝐚𝐫𝐭 𝐚𝐧𝐝 𝐚 𝐩𝐫𝐚𝐜𝐭𝐢𝐜𝐞. 𝐓𝐡𝐞𝐫𝐞’𝐬 𝐧𝐨 𝐬𝐢𝐧𝐠𝐥𝐞 “𝐜𝐨𝐫𝐫𝐞𝐜𝐭” 𝐰𝐚𝐲 𝐭𝐨 𝐫𝐞𝐚𝐝 𝐚 𝐩𝐨𝐞𝐦, 𝐛𝐮𝐭 𝐡𝐞𝐫𝐞’𝐬 𝐚 𝐭𝐡𝐨𝐮𝐠𝐡𝐭𝐟𝐮𝐥 𝐟𝐫𝐚𝐦𝐞𝐰𝐨𝐫𝐤 𝐭𝐨 𝐡𝐞𝐥𝐩 𝐠𝐮𝐢𝐝𝐞 𝐢𝐧𝐭𝐞𝐫𝐩𝐫𝐞𝐭𝐚𝐭𝐢𝐨𝐧:

🔍 1. 𝑹𝒆𝒂𝒅 𝒕𝒉𝒆 𝑷𝒐𝒆𝒎 𝑴𝒐𝒓𝒆 𝑻𝒉𝒂𝒏 𝑶𝒏𝒄𝒆

First, read for the general feel—emotion, tone, rhythm.
On later readings, focus on details: word choices, images, patterns, and shifts.

🧱 2.𝘾𝙤𝙣𝙨𝙞𝙙𝙚𝙧 𝙩𝙝𝙚 𝙎𝙩𝙧𝙪𝙘𝙩𝙪𝙧𝙚

What form is it in? (Sonnet, free verse, haiku, etc.)
How does the structure affect the meaning?
Look at line breaks, stanza divisions, punctuation (or the lack of it), rhyme, and rhythm.

💬 3. 𝙋𝙖𝙮 𝘼𝙩𝙩𝙚𝙣𝙩𝙞𝙤𝙣 𝙩𝙤 𝙇𝙖𝙣𝙜𝙪𝙖𝙜𝙚

Focus on figurative language: metaphors, similes, personification, symbolism.
Note any repetition or striking word choices—they usually point to key themes.
Ask: Why this word? What connotations does it carry?

🧠 4.𝑨𝒔𝒌 𝑾𝒉𝒂𝒕 𝒕𝒉𝒆 𝑷𝒐𝒆𝒎 𝑰𝒔 𝑨𝒃𝒐𝒖𝒕—𝑻𝒉𝒆𝒏 𝑨𝒔𝒌 𝑾𝒉𝒂𝒕 𝑰𝒕’𝒔 𝑹𝒆𝒂𝒍𝒍𝒚 𝑨𝒃𝒐𝒖𝒕

What's happening on the surface level (a description, a story, a memory)?
Then dig deeper: What is the emotional or philosophical core?
Think in terms of themes: love, loss, identity, time, death, nature, etc.

🎭 5. 𝑪𝒐𝒏𝒔𝒊𝒅𝒆𝒓 𝒕𝒉𝒆 𝑺𝒑𝒆𝒂𝒌𝒆𝒓’𝒔 𝑽𝒐𝒊𝒄𝒆

Who is speaking? Not the poet, necessarily.
What’s their attitude, tone, or emotional state?
Who is being addressed? Is there an implied audience?

🌍 6. 𝑪𝒐𝒏𝒕𝒆𝒙𝒕 𝑪𝒂𝒏 𝑯𝒆𝒍𝒑 (𝑩𝒖𝒕 𝑰𝒔𝒏’𝒕 𝑨𝒍𝒘𝒂𝒚𝒔 𝑵𝒆𝒄𝒆𝒔𝒔𝒂𝒓𝒚)

Historical, biographical, or cultural context can add layers of meaning.
But many poems stand on their own and resonate personally or universally.

✨ 7. 𝑻𝒓𝒖𝒔𝒕 𝒀𝒐𝒖𝒓 𝑹𝒆𝒔𝒑𝒐𝒏𝒔𝒆—𝑩𝒖𝒕 𝑺𝒕𝒂𝒚 𝑪𝒖𝒓𝒊𝒐𝒖𝒔

Your emotional reaction matters. If a line strikes you, ask why.
But be open to multiple interpretations, and let the poem surprise you.

🛠️ 𝑻𝒐𝒐𝒍𝒔 𝒕𝒐 𝑼𝒔𝒆:

Paraphrase: Put the poem in your own words to clarify meaning.
Annotate: Mark up the poem with notes on figurative language, shifts, questions.
Compare: Look at other poems by the same poet or in the same genre.

𝑭𝒊𝒏𝒂𝒍 𝑻𝒉𝒐𝒖𝒈𝒉𝒕:

> A good poem doesn’t just say something—it does something.
> Interpretation is the process of feeling what it's doing, and figuring out how.

𝐖𝐨𝐮𝐥𝐝 𝐲𝐨𝐮 𝐥𝐢𝐤𝐞 𝐭𝐨 𝐭𝐫𝐲 𝐢𝐧𝐭𝐞𝐫𝐩𝐫𝐞𝐭𝐢𝐧𝐠 𝐚 𝐩𝐨𝐞𝐦 𝐭𝐨𝐠𝐞𝐭𝐡𝐞𝐫?

###

மரம் என்பது பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி முதலான காப்பாளருக்கு ஒப்பாகின்றது, உவமேயக்கவிதை. அவர்கள் நமக்கு முந்தையவர்கள். முழுதாகப் பார்க்கும் வாய்ப்பு நமக்கில்லை. அவர்களின் முழுமையின் பாகங்களைச் சிறுகச் சிறுக உள்வாங்கிக் கொண்டு இருக்கின்றோம்.

###

தன் செயற்பாடுகளை அடுத்தவர் பார்வையில் பார்க்கும் விமர்சனப் பாங்கு கொள்ள வேண்டும். கை என்பது செயற்பாடுகளின் குறியீடு.

###

சும்மா பாசாங்காகச் செய்வதை இடித்துரைக்கின்றது. riveting thought poem.

-பழமைபேசி.

8/12/2025

குரங்குமத்தேவைகள்

 


ஏன் வகுப்புத் தோழர்களின் தொடர்பும் நட்பும் இன்றியமையாதது?

சமகால நண்பர்கள்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. இளையோர், மூத்தோரும் இருக்கத்தான் வேண்டும். அப்போதுதான் அனுபவமும் புதியனவும் நமக்குக் கிடைக்கும். ஆனாலும், சமகால வகுப்புத் தோழர்களின் நட்பும் தொடர்பும் முதன்மையானதும் அத்தியாவசியமானதுமாகும். ஏன்?

சமகால நண்பர்கள், சமகால வாழ்க்கைப் பயணித்தில் உடன் பயணிக்கும் பயணிகள். ஒரே காலகட்டத்தில் மேடு பள்ளங்கள், புறவுலக மாற்றங்கள், அனுபவங்கள், நிகழ்ச்சிகளைக் கண்டவர்களாக இருப்பர். பள்ளி முதல், வேலை, உறவுகள், விழாக்கள், வரலாற்று நிகழ்வுகள், பரிணாமங்கள் முதலானவற்றை எதிர்கொண்டிருப்பதால், எளிதில் புரிந்து கொள்ளவும் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆளுக்காள் தேற்றுதல்களைப் பகிர்ந்து கொள்ளவும் எளிதாகவும் இயல்பாகவும் இருக்கும்.

உடல்நலம், மனநலம் ஆகியவற்றிலும் ஒத்த வயதுடன், ஒரே போன்ற சூழலைக் கொண்டிருப்பதால், அளவளாவலில் ஈடுபட உதவியாக இருக்கும். தத்தம் நிலைப்பாடுகள், அதற்கான தீர்வுகள், ஆதரவு முதலானவற்றை ஈந்து, மனவூக்கம் பெறுவது இயல்பாகவே நடக்கும். 

இறந்தகாலத்தைப் பற்றி விரித்துரைக்கத் தேவையில்லை. உடன்பயணித்தவர்களென்பதால், அவர்களுக்கு நம்மைப் பற்றித் தெரியும். சமூகத்தில் நாமும் ஒரு ஆள், நாமும் பங்கு வகிக்கின்றோம், தொடர்வதிலும் நல்லதொரு வாய்ப்பு அமையவிருக்கின்றது போன்ற உளநல மேம்பாடுகள் தொடர்ந்து இடம் பெற்றுக் கொண்டே இருக்கும்.

வயது கூடக் கூட, வயதில் மூத்தோர் மறைந்து கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் நமக்கு யாருமே இல்லாதது போலத் தோன்றும். வயதில் குறைந்தோர் அந்நியமாகத் தோற்றமளிப்பர். அத்தகு நிலையில், சமகால நண்பர்கள் நிறையப் பேர் நம்முடன் இருப்பது அத்தகு வெறுமையை அப்புறப்படுத்தவல்லது.

நம் வாழ்வைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருப்பார்கள் சமகாலத்தவர்கள். நம் அடையாளத்தின் சாட்சிகளாக விளங்குவார்கள். மரணித்துக் காடேகும் வரையிலும் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய, பகடி செய்ய என எதற்குமானவர்களாக இருக்க ஒரு வாய்ப்புத்துணையாக இருப்பர்.

Not just classmates, but partners in crime through every chapter of life. Jumunakhan is pacca four twenty, beware of him, stay away!

-பழமைபேசி.

8/10/2025

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை - 38ஆவது ஆண்டுவிழா

அமெரிக்கத் தமிழ்த்திருவிழா 2025

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38ஆவது ஆண்டுவிழா, தவத்திரு குன்றக்குடி அடிகளார், தோழர் இரா. நல்லகண்ணு ஆகியோரது நூற்றாண்டு விழாவாக, வட கேரொலைனா மாகாணத்தில் உள்ள இராலே நகரின் மாநாட்டுக் கூடத்தில், 2025 ஜூலை 3, 4, 5, 6 ஆகிய நாள்களில் கோலாகலமாகவும் சீரும் சிறப்புமாகவும் வாழ்வியல்த் திருவிழாவாகவும் இடம் பெற்றது.

ஜூலை மூன்றாம் நாள் காலை 8 மணி துவக்கம், பன்னாட்டுத் தமிழ் தொழில்முனைவோர் மாநாடு இடம் பெற்றது. மாநாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், தொழில் முனைவர் வீரப்பன் சுப்பிரமணியன், செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு, விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஷ்வநாதன்,  தொழில்தலைவர் வேலுச்சாமி சங்கரலிங்கம், ஆதித்யா ராம், நெப்போலியன் துரைசாமி, நக்கீரன் கோபால் ஆகியோருடன் ஏராளமான தொழிலறிஞர்களும் தொழில்முனைவோரும் பல்வேறு நாடுகளிலிருந்தும் கலந்து கொண்டிருந்தனர். மாலை 6 மணி வரையிலும் பல்வேறு அமர்வுகளும், சிறப்புரைகளும் இடம் பெற்றன.  பேரவைத் தலைவர் விஜய் மணிவேல், ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாரதி பாண்டி, மாநாட்டின் துணைத்தலைவர்கள் பி.டி,சதீஷ்குமார், மகேந்திரன் சுந்தர்ராஜ், கோபி ராமசாமி ஆகியோர் மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முதலாவது, பன்னாட்டுத் திரைப்பட விழாவும் மாநாட்டு வளாகத்தில், ஜூலை 3ஆம் நாள் மாலையில் இடம் பெற்றது. மிச்சிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ஸ்வர்ணவேல் ஈஷ்வரன் தலைமையிலான நடுவர்குழாம், சிறந்த படத் தயாரிப்பாளராக வாழை படத்தயாரிப்பாளர் மாரி செல்வராஜ், சிறந்த இயக்குநராக அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி,  சிறந்த தொழில்நுட்பத்துக்காக பொன்னியின் செல்வன் படத்துக்கான ரவி வர்மன், சிறந்த அமெரிக்க தமிழ்ப்படத்துக்காக ஊழியின் காயத்ரி ரஞ்சித், சிறந்த குறும்படத்துக்காக ஓடம் படத்துக்கான விவேக் இளங்கோவன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. விழாவில், இயக்குநர்கள் லிங்குசாமி, சீனு ராமசாமி, ராஜ்குமார் பெரியசாமி, மாரி செல்வராஜ், நடிப்புக்கலைஞர் நெப்போலியன், நக்கீரன் கோபால், இசையமைப்பாளர் டி இமான், பேராசிரியர்கள் ஸ்வர்ணவேல் ஈஷ்வரன்,  ராம் மகாலிங்கம், தயாரிப்பாளர் ஆதித்யாராம், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திரைப்பட விழாவினை அடுத்து, பேரவையின் புரவலர்கள், கொடையாளர்களுக்கான நட்சத்திர மாலை நேர நிகழ்வு இடம் பெற்றது. நிகழ்வில் நகைச்சுவைத் தொடர்களைப் படைத்துவரும் “பரிதாபங்கள் புகழ்” கோபி, சுதாகர், சின்னதிரைக் கலைஞர்கள் செளந்தர்யா, ஃபரினா, விஜய் விஷ்ணு, பேச்சுக்கலைஞர் முத்துக்குமரன், மாயக்கலை வித்தகர் எஸ்ஏசி வசந்த் முதலானோர் சிறப்புத் தோற்றம் அளித்தனர்.

ஜூலை 4ஆம் நாள் காலையில், 8 மணிக்கு மங்கல இசையுடன் அமெரிக்கத் தமிழ்த்திருவிழாவின் கலை, இலக்கிய, வாழ்வியல்த்திருவிழா, இராலே மாநாட்டுக்கூடத்தில் எழுச்சியுடன் துவங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்தினைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் விஜய் மணிவேல், கேரொலைனா தமிழ்ச்சங்கத் தலைவர் பாரதி பாண்டி, விழா ஒருங்கிணைப்பாளர்கள் பாரதி முருகேசன், மீனா இளஞ்செயன் ஆகியோர் மாநாட்டினைத் துவக்கி வைத்தும் வரவேற்றும் பேசினர். தொடர்ந்து, பல்வேறு தமிழ்ச்சங்கத்தினரின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இவற்றுக்கிடையே தமிழிசை அறிஞர்கள் வி.குமார், அரிமளம் பத்மநாபன், ஆ.ஷைலா ஹெலின் ஆகியோரது தமிழிசை நிகழ்ச்சி, கவிஞர் சினேகன் அவர்களது தலைமையில் ”யாதுமாகி நின்றய் தமிழே” எனும் தலைப்பில் கவியரங்கம், மரபுக்கலைகள் குழுவின் சார்பில் மாபெரும் தமிழ்க்கலைகள் நிகழ்ச்சி, நூற்றாண்டு விழா நாயகர்களும் தமிழும் எனும் தலைப்பிலான புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களது சிறப்புரை, மதுரை ஆர் முரளிதரன் குழுவினரின் “மருதிருவர்” நாட்டிய நாடக நிகழ்ச்சி முதலானவை இடம் பெற்றன. நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், விஐடி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர்  விஷ்வநாதன், சூழலியல் செயற்பாட்டாளர் முனைவர் செளமியா அன்புமணி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், எழுத்தாளர் மன்னர் மன்னன் உட்படப் பலரின் உரைகளும் இடம் பெற்றன.

மின்னசோட்டா தமிழ்ச்சங்கம் வழங்கிய, “பழந்தமிழ்க்கலைகளும் செவ்வியலே” எனும் நாடகம், பொருள் பொதிந்திருந்ததாகவும் தமிழ்க்கலைகளின் ஒவ்வோர் அடிப்படைக் கூறுகளையும் விவரிக்கும்படியாகவும் அமைந்திருந்தது. இலக்கிய வினாடி வினாவின் நடுவர்களாக இருந்த எழுத்தாளர்கள் சு.வேணுகோபால், ஸ்டாலின் ராஜாங்கம், பழமைபேசி ஆகியோர், இலக்கிய வினாடி வினா குறித்தும், மின்னசோட்டாத் தமிழ்ச்சங்கத்தின் நாடகம் குறித்தும் பாராட்டிப் பேசினர்.

ஜூலை 4ஆம் நாள், விளையாட்டுப் போட்டிகளும் இடம் பெற்றன. போட்டிகளை, முன்னாள் அமைச்சர் நெப்போலியன் அவர்கள் துவக்கி வைத்திட, விளையாட்டுத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் அன்பு மதன்குமார் போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். போட்டிகளில் வென்றவர்களுக்குப் போட்டிகளின் முடிவில் பரிசளிக்கப்பட்டன.

ஜூலை 3, 4 ஆகிய நாள்களில், மாணவர்கள், இளையோருக்கான நாடளாவிய கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள், வட அமெரிக்க வாகை சூடி எனும் பெயரில் மாபெரும் அளவில் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டன. இதில், அறிவியல்தேனீ, குறள்தேனீ, தமிழ்த்தேனீ, கலைத்தேனீ, படைப்புத்தேனீ என ஐந்து பிரிவுகளில், இயல், இசை, நாடகம், நாட்டியம், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்து நூற்றுக்கும் கூடுதலான போட்டிகள் இடம் பெற்றன. 1500 பேருக்கும் கூடுதலானவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வென்றவர்களுக்குக் கோப்பைகளும், இறுதிப்போட்டிகளில் கலந்து கொண்டோருக்குப் பதக்கங்களும், பங்கேற்றோர் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

ஜூலை 5ஆம் நாள், காலை 8 மணிக்கு பேரவைப் பொதுக்குழுக் கூட்டமும், காலை 9 மணிக்கு கலை, இலக்கிய நிகழ்ச்சிகளும் துவங்கின. முதன்மை அரங்கில் வைத்து, வட அமெரிக்க வாகை சூடி போட்டியாளர்கள் அனைவரும் பதக்கம் அணிவிக்கப்பட்டுச் சிறப்புச் செய்யப்பட்டனர். அமெரிக்கத் தமிழ் முன்னோடிகள் விருதளித்தல், ஊடகவியலாளர் நிர்மலா பெரியசாமி அவர்களின் தலைமையில் விவாதமேடை, நாஞ்சில் பீற்றர் அவர்கள் வழங்கிய இலக்கிய வினாடி வினா, உலகத்தமிழர் நேரம், தமிழ்ச்சங்கத்தினர் அனைவரும் கலந்து கொண்ட மாபெரும் சங்கங்களின் சங்கமம் நிகழ்ச்சி முதலானவற்றோடு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

ஜூலை 4, 5 ஆகிய நாள்களில், இணையமர்வுகளாக, 45இக்கும் கூடுதலான நிகழ்ச்சிகள், கலை, இலக்கியம், மருத்துவம், சட்டம், வாழ்வியல் தொடர்புடையதாக அமைந்திருந்தன. பேரவையின் இலக்கியக்குழுக் கூட்டங்களில், எழுத்தாளர்கள் ஸ்டாலின் ராஜாங்கம், சு.வேணுகோபால், புலவர் செந்தலை கவுதமன், இயக்குநர்கள் லிங்குசாமி, சீனு ராமசாமி, ராஜ்குமார் பெரியசாமி, மாரி செல்வராஜ் முதலானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசின், அயலகத் தமிழர்நல வாரியத்தின் கூட்டம் அதன் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி தலைமையில் இடம் பெற்றது. பேரவையின் TamilER குழுவின் கூட்டம், அன்புடை நெஞ்சம் குழுவின் மணமாலை நிகழ்ச்சி, சட்டம் குடிவரவுக் குழுவின் சட்ட அறிஞர்கள் கூட்டம் முதலானவற்றோடு, பல்வேறு அமைப்பினர் நடத்திய கூட்டங்கள், முன்னாள் மாணவர் கூடல் முதலானவையும் இடம் பெற்றன.

இந்தியத் தூதரகத்தின் சார்பாக, விசா, கடவுச்சீட்டு, குடிபுகல், குடிவரவு தொடர்புடைய பணிமுகாமும் மாநாட்டுக்கூட வளாகத்தில் இடம் பெற்றமை பொதுமக்களுக்குப் பயனுள்ளதாக அமைந்தது. இந்திய ஒன்றிய அமைச்சர் மாண்புமிகு ஜக் மோகன் வாழ்த்துரை வழங்கி இருந்தார். இந்தியத் தூதுவர் மேன்மைமிகு வினய் குவெத்ரா அவர்கள், பேரவையின் சிறப்பு குறித்துப் பேச, அவருக்கும் சிறப்பளிக்கப்பட்டது.

விழாவுக்குச் சிறப்பு விருந்திநராக வருகை புரிந்திருந்த மலேசிய நாட்டின் முன்னாள் துணைப்பிரதமர் மாண்புமிகு சரவணன் முருகன், மாண்புமிகு சசிகாந்த் செந்தில், அமெரிக்கத் தமிழ் ஆளுமை முனைவர் வீரப்பன் சுப்பிரமணியன், மேயர் பேட்ரிக் பிரவுன், காங்கிரசுமேன் டெப்ரா ராஸ், வணக்கத்துக்குரிய வைலி நிக்கல், மாண்புமிகு ஜேனட் கோவெல், ஆளுமைகள் கஜன், ஸ்ரீநேசன், ஜனார்த்தனன் உள்ளிட்ட பலரும் உரையாற்றி வாழ்த்துரைக்க, அவர்களுக்குத் திருவிழாக்குழுவினர் சிறப்புச் செய்தனர். திருவிழா நிமித்தம் வட கேரொலைனா ஆளுநர் ஜோஷ் ஸ்டெயின் அவர்களின் தமிழ்மரபுத்திங்கள் சாற்றாணை வெளியிடப்பட்டு, அவர் வழங்கி வாழ்த்துரைக் காணொலியும் விழா அரங்கில் காண்பிக்கப்பட்டது. நூற்றாண்டு விழா நாயகர்கள் குன்றக்குடி அடிகளார், இரா. நல்லகண்ணு ஆகியோரது ஆவணப்படங்கள் வெளியிடப்பட்டு, விழா மலரினை அதன் ஆசிரியர் தேவகி செல்வன் அவர்கள் வெளியிட்டுப் பேசினார். 

ஜூலை 5ஆம் நாள் இரவு, இசையமைப்பாளர் டி இமான் அவர்களின், ‘கச்சேரி ஆரம்பம்’ மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி அரங்கேறியது. அரங்கம் நிரம்பிய மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டாடியது. 

ஜூலை 6ஆம் நாள் காலையில் இடம் பெற்ற, இலக்கியக்குழுவின் சிறப்புக் கூட்டத்தில் பேசிய விருந்திநர்கள் எல்லாருமே, இடம் பெற்ற திருவிழாவினைப் பெருமைபட பாராட்டியப் பேசியதோடு, பல்லுயிர் ஓம்புதல் என்பதற்கொப்ப பன்மைத்துவம் போற்றுவதற்கான மாபெரும் விழாவாக இருந்ததெனவும், தமிழ்க்கலைகளான மரபு நாடகம், காவடியாட்டம், சிலம்பாட்டம், களரி, பறை, பொய்க்கால் குதிரை, புலியாட்டம், கும்மி, ஒயில் என யாவும் இடம் பெற்ற தமிழ்விழா, தீரத்தீர சுவையான உணவு வழங்கி விருந்தோம்பலைச் சிறப்பாக்கிக் காட்டிய விழாயெனவும் பாராட்டினர். விழாவுக்காக உழைத்தவர்களுக்கும் புரவலர்களுக்கும் கொடையாளர்களுக்கும் விழாக்குழுவினர் நன்றி நவின்றனர்.

FeTNA Raleigh Convention Photos

July 3rd - https://photos.app.goo.gl/EJec624JyuYdXH6f7
July 4th - https://photos.app.goo.gl/V1JSAQ3UWu8XA96p9
July 5th - https://photos.app.goo.gl/w6y5ABTVizxEVrUJA
International Film Festival - https://photos.app.goo.gl/dqfh9f2RPcFi2ZJY6


8/03/2025

கலைப்பார்வை

 


கலைப்பார்வை

கலை, இலக்கியம் தழுவிய ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தையோ அல்லது நிலைப்பாட்டையோ வெளிப்படுத்துவது. கற்பனைத்திறனின் வெளிப்பாடு, பல்வேறு விழுமியங்களைத் தொடர்புபடுத்தி ஒருங்கிணைத்து ஒரு முடிவுக்கு அல்லது நிலைப்பாட்டுக்கு வரும் ஆற்றலெனவும் கொள்ளலாம்.

அண்மையில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன. தூரிகைக்கலைஞர் டிராஸ்ட்கி மருது , உளவியல்ப் பேராசிரியர் இராம் மகாலிங்கம் அவர்களுடனான உரையாடல்; ஓதுவது ஒழியேல் எனும் குழுமத்தில் இடம் பெற்ற நற்றிணைப் பாடலும் அதன் உரையும்; தமிழ்விழாவில் இடம் பெற்ற முரண்பாடு. இத்தனையிலும் முன்வைக்கப்பட்ட பொதுவான பற்றியம்தான், கலைப்பார்வை குறித்த கருத்து.

ஓவியம், கலை, இசை, கதை, கவிதை முதலான எல்லாவற்றிலும் தேவையானது ஊன்றி உணரும் ஆழமான உணர்வு. நுண்ணியது அறிதல். அதற்கு அவசியமானது, துறைசார் விருப்பமுள்ள நேயர்களுக்கிடையிலான கலந்துரையாடல். ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக்கொள்வதற்கான வடிகால்.

நற்றிணை: 106- நெய்தல்

அறிதலும் அறிதியோ பாக பெருங்கடல்
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள
ஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாது
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு
உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர்
ஞாழல் அம் சினைத் தாழ்இணர் கொழுதி
முறி திமிர்ந்து உதிர்த்த கையள்
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே

[தலைவன் தன் தேர்ப்பாகனிடம் தன் காதலி செய்ததைச் சொல்கிறான். பாக! உனக்குத் தெரியுமா? கடலலை மணலில் ஏறித் திரும்புகிறது. அந்தப் பகுதி மணக்கும்படி நண்டு வரிக்கோடு போட்டுக்கொண்டு ஓடி விளையாடிவிட்டு வளையில் நுழைந்துகொள்கிறது. இதனை பார்த்துக்கொண்டிருந்த அவளிடம் என் ஆசை நோயை வெளிப்படுத்தினேன். அவள் மறுமொழி எதுவும் சொல்லாமல் தன் கையில் மணந்துகொண்டிருந்த ஞாழல் மலரைத் தடவி கையால் உதிர்த்துக்கொண்டிருந்தாள். அந்த மடப்பெண் அறிவு மயங்கி நின்றாள். (இதன் பொருள் என்னவாக இருக்கும்?)]

பாடலையும் அதற்கான உரையையும் படித்துக் கடப்பதென்பது, கலைப்பார்வையற்ற செயலாகத்தான் கருதப்பட வேண்டும். ஏனென்றால், கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்கள், செயற்பாடுகள், அது தொடர்பான விழுமியங்கள், குறியீடுகள், படிமங்கள், இவற்றுள் எதையுமே தொடாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் கடப்பதென்பது கலைப்பார்வையற்ற செயலே.

”ஒரு அலைக்கும் மறு அலைக்கும் இடையிலான காலத்தில், நண்டு வரைந்து கொள்ளும் சித்திரம் போலே, தம் ஆசைகளும் குற்றாயுள் கொண்டனவோ எனும் நினைப்பில் இருக்கும் அவளிடம் இவன் தன் காதலைத் தெரிவிக்கின்றான். அது கேட்ட அவள், சொக்குண்டு போய் மதிமயங்கிய நிலைக்குள் ஆட்பட்டுவிடுகின்றாள்”.

இப்படியான புரிதலுக்கு நம்மால் எப்படி வர முடிகின்றது? செய்யுள், ஓவியம், கதை/படைப்பில் இருக்கும் பொருட்கள்/குறியீடுகள், ஏற்றிச் சொலல்/படிமம் முதலானவற்றைக் கொண்டு நாம் தகவலை ஒரூங்கிணைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி?

மணல் மேட்டுக்கு வந்து செல்லும் அலை - குறுகிய காலத்தைக் குறிக்கின்றது.
நண்டின் சித்திரம். ஆசையை உணர்த்தும் படிமம்
மலரின் இதழ்களைப் பிய்த்தெடுப்பது - காதற்காமவுணர்வின் நிமித்தம் சொக்குண்டு போதலுக்கான படிமம்

கலைப்பார்வையை வளர்த்துக் கொள்ள, தொடர்ந்து வாசித்தறிதல் வேண்டும். தேடலும் நாடலும் இருக்க வேண்டும். நுண்ணறிபுலம் கொள்ள வேண்டும். சிறு வயதிலிருந்தேவும் கலைப்படைப்புகளை நுகரப் பயில்தல் வேண்டும்; கதை, கவிதை, ஓவியம், இசை, மீன்பிடிப்பு இப்படியான செயற்பாடுகள் வாயிலாக. இவைதாம் ஒருவருக்குள் பரிவு, ஆய்ந்துணர்தல், துய்த்துணர்தல் முதலானவற்றைக் கட்டமைக்கும். உருவகம், படிமம், குறியீடுகளை நாம் எங்கும் காணலாம். அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

  • கதிரவன் /சூரியன்: ஆண்மை, வாழ்க்கை, அறிவு, காலம்
  • நிலவு : பெண்மை, மாற்றம், புதிர்
  • கடல் : கொந்தளிப்பு, குழப்பம், பயணம்
  • பாம்பு /அரவம்: வஞ்சகம், தீயசக்தி
  • நெருப்பு : புத்தாக்கம், அழிவு
  • மலர் : காதல், அழகு, தொன்மை
  • ஆயுதம் : அதிகாரம், ஆணவம், மேட்டிமை
  • மணிகாட்டி : விதி, ஆயுள், மரணம்
  • கழுகு : தன்னாட்சி, ஆளுமை
  • புறா : அமைதி, ஆன்மா, விடுதலை
  • மலை - காதல்மேடை, சல்லாபம்
  • வண்ணத்துப்பூச்சி - சுழற்சி, விதைப்பு
  • மயில் - அழகு, செழிப்பு
  • கனி /பழம் - பயிர்ப்பு, இனப்பெருக்கம், பரம்பரை
  • கண் - உண்மை, பார்வை
  • ஆந்தை - நாசம், வழிப்பறி
  • யானை - வலு, பலம், படை
  • குதிரை - ஆர்ப்பரிப்பு, கொண்டாட்டம், போர்

இப்படியான குறியீடுகள் தொன்றுதொட்டு உலகின் பல்வேறு பண்பாடு, இலக்கியங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. சூழலுக்கொப்ப, இன்னபிறவற்றின் இடம் பொருளுக்கொப்ப, வெவ்வேறு பொருளை உணர்த்த வல்லதாக அவையிருக்கும். இவற்றையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி, ஒருங்கிணைத்துப் புரிந்து கொள்வதுதான் கலைப்பார்வை. நுகர்வுக்களத்தில் இன்னபிற நேயர்களுடன் இயைந்து படைப்புகளை நுகர்வதன் வாயிலாகவும், கலைஞர்களிடம் இருந்து பயில்வதன் வாயிலாகவும் அகவுணர்வுக்கான திறப்புகள் வாய்க்கப்பெறும்.

கலைநோக்கில் குறியீடுகள் : படத்தில் இருக்கும் மெழுகுவர்த்திச்சுடர் என்பது இறைத்தன்மையையும் வளமானதொரு நேரத்தையும் குறிப்பதாக அமைந்திருக்கின்றது. மெழுகுவர்த்தித் தண்டு என்பது புதுவாழ்வு, துவக்கத்தைக் குறிப்பதாகவும் அமைந்திருக்கின்றது. இதுவே பாதி அளவுக்கு இருந்திருந்தால், புரிதல் மாறுபாடும். ஆயுளில் பாதி கடந்து போய் விட்டிருக்கின்றது, நடுத்தரமான காலகட்டம் என்பதாகிவிடும். அணைந்திருந்தால், காலாவதி ஆனது, மரணித்த காலமென்றும் கருதலாம்.

-பழமைபேசி.

8/02/2025

பச்சக்கிளி

 

பச்சக்கிளி 🦜🦜🦜

முத்து, ஒரு நாள் சூலூர் சந்தைக்குப் போயிருந்தாரு. சந்தையில, மிலிட்டிரிக்கார லேடியப் ப்பார்த்துகினு ஒரே ஜொல்லு. இருந்த காசுல ஒரு எட்டணாவுக்கு, ஒரு வடையும் டீயும் ஏற்கனவே குடிச்சாச்சி. மிச்சம் இருக்குறது ஒன்னார் ருவாதான்.

பட்சிகளைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போன முத்துவுக்கு திடீல்னு அங்க போகணும்னு ஆசை. அங்க ஒரே கூட்டம். என்னானு பார்த்தா, அங்கொருத்தன் பச்சக்கிளி வித்துட்டு இருந்தான். இந்தக் கிளி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, இந்த அஞ்சு மொழிகள்லயும் பேசும். வீடே கலகலப்பாயிடும். கிளியப் பார்க்கப் பேசன்னு, பொண்ணுக கூட்டம் கூட்டமா வருவாங்க போவாங்கன்னெல்லாம் கிளி ஏவாரி கொளுத்திப் போட்டுகினு இருந்தான். முத்துக்குச் சபலம் பத்திகிச்சி

கிளி எத்தன ருவாங்ணானு முத்து கேட்க, அவன் திருப்பிக் கேட்டான், “தம்பி, நீ எவ்ளோ வெச்சிருக்கே?”னு. இந்த லூசுமுத்து, உள்ளதச் சொல்ல, அப்ப அந்த ஒன்னார் ருவாயும் குடு, கிளி ஒனக்குத்தான்னு சொல்ல, கிளி முத்து கைவசம் வந்திரிச்சு.

ஒரே குதூகலம். வீட்டுக்கு வந்தா, வீட்டுத் திண்ணையில பாசக்கார நண்பன். இதா பாரு, நான் கிளி வாங்கியாந்துருக்கன். உனுக்குத் தெரிஞ்ச எந்த பாசையிலும் பேசு, அதுவும் பேசும்னு முத்து சொல்ல, அந்த நண்பனும் தெலுகு, மலையாளம், இந்தினு, தனக்குத் தெரிஞ்சமாட்டுக்குப் பேசு பேசுனு பேசறாரு. கிளி ஒன்னுமே பேச மாட்டீங்குது. முத்துவுக்கு ஒரே சங்கட்டமாப் போச்சுது. சந்தை முடியுறதுக்குள்ளார போயிக் குடுத்துப் போட்டு காச வாங்கியாறனும்னு, ஆராகொளத்துக்கும் சூலூருக்குமா ஒரே ஓட்டம் கிளியத் தூக்கிகிட்டு.

கடைக்குப் போய், குய்யோ முய்யோனு குமுறல். கடைக்காரன் கேட்டான், ஏன், என்ன பிரச்சினை? ”யோவ், கிளி எதுவுமே பேச மாட்டீங்குது, நீ ஏமாத்திட்டய்யா மயிரு!!”

கிளிக்குக் கோவம் வந்து போட்டுது, 🦜 “நீ மூடு. உன்ற சேர்க்க சரியில்ல. வந்திருந்த உன் நண்பன் ஒரே டுபாக்கூரு. துக்ளக்கப் படிச்சிப் போட்டு கண்டதையும் உளறுவாரு. கூடா கூடாப் பேசி, மொக்க வாங்குறதுக்கு நான் என்ன உன்னமாரி லூசா?, போடா போக்கத்தவனே!” முத்துக்கு மொகத்துல ஈ ஆடலை. நெம்பவும் அவமானமாப் போயிட்டுது. கடைக்காரன், வித்தது வித்ததுதான்னு சொல்லி, கிளியத் திரும்பவும் வாங்க மாட்டேனுட்டான். ஊட்டுக்குத் திரும்பி வர்ற வழியெல்லாம் ஒரே ஏச்சும் பேச்சும் ஏகத்துக்கும். வந்திருந்த அந்த டுபாக்கூர் நண்பன் யார்? உங்க முடிவுக்கே விடப்படுகின்றது.

𝐆𝐨𝐨𝐝 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐬 𝐝𝐨𝐧’𝐭 𝐥𝐞𝐭 𝐲𝐨𝐮 𝐝𝐨 𝐬𝐭𝐮𝐩𝐢𝐝 𝐭𝐡𝐢𝐧𝐠𝐬… 𝐚𝐥𝐨𝐧𝐞! ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ 𝐇𝐚𝐩𝐩𝐲 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐬𝐡𝐢𝐩 𝐝𝐚𝐲 𝟐𝟎𝟐𝟓!!

[வகுப்பு நண்பர்களுக்கான வாட்சாப் குழுமத்தில் பகிர்ந்தது; 08/03/2025]

-பழமைபேசி.

7/31/2025

உளமார்ந்திருத்தல் (𝐛𝐞𝐢𝐧𝐠 𝐦𝐢𝐧𝐝𝐟𝐮𝐥)

 


உளமார்ந்திருத்தல் (𝐛𝐞𝐢𝐧𝐠 𝐦𝐢𝐧𝐝𝐟𝐮𝐥)

நீராருங்கடலுடுத்த, அன்பார்ந்த, மனமார்ந்த முதலான சொற்களை அன்றாடம் பயன்படுத்துகின்றோம். இவற்றுள் இருக்கும் ’ஆர்ந்த’ எனும் சொல்? நிறைந்த, நிரம்பிய, பரவிய முதலானவற்றின் பொருள் கொள்கின்றோம். ஆனால் இதன் பொருள் அதற்கும் மேலானது. நீரால் ஆனது கடல், அன்பாகவே ஆகிப்போன நண்பன், இப்படியாக, அதுவாகவே ஆகிப் போவதுதான் ‘ஆர்தல்’ என்பதாகும். வாழ்த்துதலாகவே, வாழ்த்துதல் மட்டுமாகவே ஆகிப் போவதுதான் மனமார்ந்த வாழ்த்து.

உளப்பூர்வமாய், உளப்பூர்வமாக மட்டுமே ஒன்றிக் கிடத்தல் உளமார்ந்திருத்தல். பயிற்சியினூடாக வாடிக்கையாக்கிக் கொளல் உளமார்ந்திருத்தல்.

நம்மில் பெரும்பாலானோர் பொட்டிதட்டிகள்(software programmers), மென்பொருள்ச் சாலைக்கூலிகள். நிரல் எழுதுகின்றோம். மண்டையை உடைத்துக் கொள்கின்றோம். பிழைகளும் வழுக்களுமாக, சென்று சேர வேண்டிய இடத்திற்குச் சென்று சேரமுடியவில்லை. காரணம், எண்ணங்கள் பல வாக்கில். எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் கூடச் செலவு செய்திருப்போம். வேலைக்காகவில்லை. எழுந்து காலார ஒரு நடை போய்விட்டு வந்தானதும், பிழை தென்படுகின்றது. ஐந்து மணித்துளிகளில், வேலை முடிவுக்கு வருகின்றது. என்ன காரணம்?

தனிமையில் நடந்து செல்லும் போது, நடப்புக்கு வருகின்றோம். எல்லாத் தளைகளிலும் இருந்து விடுபட்டு, மனம் ஒருமுகம் கொள்கின்றது. தெளிவு பிறக்கின்றது. மனமார்கின்றோம். பிழை எளிதில் தென்படுகின்றது. சரி செய்கின்றோம். நிரலோட்டம் வெற்றி அடைகின்றது. இதுதான் உளமார்ந்திருத்தல்.

  • தற்காலத்தில் மனம்கொள்தல்
  • முன்முடிவுகளின்றி இருத்தல்
  • சலனமற்றுத் தெளிந்திருத்தல்
  • பரிவுடன் இருத்தல்
  • உணர்ந்திருத்தல்
இவையாவும் மனமேயாக இருப்பதுதான் உளமார்ந்திருத்தல். இதனால், மனநலமும் மெய்நலமும் சமூகநலமும் மேம்பட்டே தீருமென்பதுதான் அறிவியலாய்வுகளின் அடிப்படை.

இத்தகு துறையில், பேராசிரியராக, ஆய்வறிஞராக, நம்மவர் ஒருவர் இருக்கின்றாரென்பது நமக்கெல்லாம் பெரிய பெருமை. நிமிர்வு கொள்ள வேண்டும்.

டாக்டர் ராமசாமி (ராம்) மகாலிங்கம் அவர்கள், புகழ்பெற்ற கலாச்சார உளவியலாளர், விருது பெற்ற ஆராய்ச்சியாளர், பேராசிரியர், வழிகாட்டி, கலைஞர், திரைப்பட தயாரிப்பாளர். சாதி, பாலினம், இனம், பாலியல், சமூக வர்க்கம் ஆகியவற்றை, விமர்சனக் கலாச்சார உளவியல் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்துவருகின்றார் (www.mindfuldignity.com). அமெரிக்க உளவியல் சங்கத்தின் உறுப்பினரான டாக்டர். மகாலிங்கம் அவர்கள், தனது கற்பித்தல், ஆராய்ச்சி, வழிகாட்டுதலுக்காக பல விருதுகளைப் பெற்றதோடு, “தமிழ் அமெரிக்கன் முன்னோடி (𝑻𝒂𝒎𝒊𝒍 𝑨𝒎𝒆𝒓𝒊𝒄𝒂𝒏 𝑷𝒊𝒐𝒏𝒆𝒆𝒓 𝑨𝒘𝒂𝒓𝒅)” விருதையும் பெற்றவர். https://youtu.be/rSJ6Rb3VYW4

அன்றாடம் கவிதை, கதை, ஏன் டைரியில் ஒரு பக்கம் எழுதுவது கூட, நம்மை மனமார்தலுக்கு இட்டுச் செல்லும். இது போன்ற நுண்ணிய தகவல்களையும் பயிற்சிகளையும் நமக்குத் தருகின்றார் பேராசியர் அவர்கள். மாணவர்கள், இளையோர், அலுவலர்கள், ஏன் நாம் எல்லாருமே நுகர்ந்து பயன்பெற வேண்டிய தருணம். மிச்சிகன் பல்கலைக்கழகச் சான்றிதழுடன் கூடிய 10 மணி நேர வகுப்பு: https://www.coursera.org/learn/mindfulness-dignity-and-the-art-of-human-connection நாளொரு மணி நேரமாகக் கூட பயின்று பயன் கொள்ளலாம்!

"𝗕𝗲 𝘄𝗵𝗲𝗿𝗲 𝘆𝗼𝘂𝗿 𝗳𝗲𝗲𝘁 𝗮𝗿𝗲, 𝘁𝗵𝗮𝘁'𝘀 𝘁𝗵𝗲 𝗵𝗲𝗮𝗿𝘁 𝗼𝗳 𝗺𝗶𝗻𝗱𝗳𝘂𝗹𝗻𝗲𝘀𝘀." 🧘‍♂️✨

-பழமைபேசி.

7/28/2025

குள்ளாம்பூச்சி

 



குள்ளாம்பூச்சி


தற்போது நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு, இரண்டே இரண்டு கலைவிருந்திநர்கள்தாம் வந்திருக்கின்றனர். முதலாமவர் எழுத்தாளர் பெருமாள் முருகன், அடுத்தவர் தூரிகைக் கலைஞர் டிராட்ஸ்கி மருது. வீட்டுக்குழந்தைகள், அக்கம்பக்கத்துப் பெண்களுக்கு, எங்கள் எல்லாருக்கும் விருப்பமானவர்களாக, நுட்ப உணர்வினை ஊட்டுபவர்களாக இருந்தனர்.

அண்ணன் மருது அவர்களின் ”கோடுகளும் வார்த்தைகளும்” நூலிலிருந்து, “தமிழர்களுக்கு மிகச்சிறந்த காண்பியக்கலை வரலாறு உண்டு. ஆனால் சமகாலச் சமுதாயத்தில் தமிழர்கள் காண்பியல்க்கலைகளைக் கண்டுணரவும் பாரவைப்படிப்பினைப் பெறவும் கலைமனத்தை வளர்த்துக் கொள்ளவும் அக்கறையற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள்”.

எட்டு கட்டுரைகளை வாசித்திருக்கின்றேன் என்பதைக் காட்டிலும், அதனுள் மூழ்கிப் போய் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கின்றேனென்றுதான் சொல்ல வேண்டும். நூலெங்கும் ஓவியங்கள், ஓவியங்கள் சார்ந்த கட்டுரைகள், அடுக்கடுக்கான தகவல்கள். நானாக, வலிய வலிய நூலை எட்ட வைத்திருக்கின்றேன், தற்போதைக்கு!

கண்டறிதல் என்பது ஒரு வேள்வியைப் போன்றது. ஒரு படத்தைப் பார்த்த மட்டிலும், காட்சி, அது இருக்கின்றது, இது இருக்கின்றதெனும் தட்டையான பார்வையிலும் சென்று விட முடியும்; அதன் ஆழத்தின் ஆழத்துக்கேவும் ஒருவரால் தம்மை அதில் மூழ்கடித்துக் கொள்ள முடியும். அது அவரவர் நுண்ணறிபுலத்தைப் பொறுத்தது.

சில நாள்களுக்கு முன்புதான் நான் நண்பர்களிடம் குள்ளாம்பூச்சியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். முதன்முதலில் நான் காடேகியது, என் அம்மாவழிப் பாட்டனாரின் ஊரில்தான். காலையில் நாய்க்கு சாமைக்கூழ் தூக்குப் போசியில் கொண்டு போக வேண்டும். போய்ச் சேர்ந்ததும் மாடு மேய்க்க வேண்டும். மாடு மேய்க்கையில், எஞ்சோட்டுப் பையன்களுக்கெல்லாம் ஏதோவொரு துணுக்குறு செயற்பாடுகள் கிடைத்துவிடும். கிடக்கும் கற்களை ஒவ்வொன்றாகப் புரட்டிப் போடுவது. அப்படிப் புரட்டுகையில், கல்லுக்குக்கீழே தேள், பாம்பு, அரணை, தேரை என ஏதாகிலும் இருக்கும். அவற்றைக் கொல்வது ஒரு விளையாட்டு. அதன் நீட்சியாக இடம் பெற்றதுதான் இதுவும். குறங்காட்டுப்(தரிசு நிலம்) புழுதியில் ஆங்காங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாக மரணக்கிணறுகள் இருக்கும். புழுதிக்காட்டுக்குள், தோய்ந்த மெலிதான மணற்பரப்புடன் கூடிய சிறு சிறு குழிகள். அதனுள் எறும்பு போன்றவை விழுந்து விட்டால் மீள முடியாது. மீள்வதற்குள்ளாகவே, குழிக்குள் பதுங்கி இருக்கும் குள்ளாம்பூச்சி அவற்றைப் பிடித்துத் தின்று விடும். வில்லத்தனமான, விளையாட்டுத்தனமான மனம். ஓடியோடித் தேடிப் போய், அவ்வாறான மரணக்குழிகளைக் காலால் எத்திவிடுவது. குழி குலைந்து, அதனுள் பதுங்கி இருக்கும் குள்ளாம்பூச்சி ஓட்டமெடுக்கத் துவங்கும். அந்தக் காட்சியைக் காண்பதில் ஒரு சிரிப்பு. இலயிப்பு.

ஒரு கட்டத்தில் ஆழ்மனம் தலையெடுக்கின்றது. குழியின் அமைப்பைக் கண்டு வியப்புக் கொள்கின்றது மனம். அந்த சிறுபூச்சி எப்படி இப்படியான மரணக்கிணற்றைத் தோண்டி இருக்க முடியுமென வியப்பு மேலிடுகின்றது. தோண்டுகின்ற காட்சியைக் காண வேண்டுமென ஆவல் கொள்கின்றோம். மனிதநடமாட்டம், தப்படி அதிர்வைக் கண்ட பூச்சிகள் மண்ணுக்குள் பதுங்கி விடும்தானே? ஏதேவொரு நாள் எவனுக்கோ அக்காட்சி பிடிபடுகின்றது. அழைத்துப் போகின்றான். சலனமின்றி வரச் சொல்கின்றான். பூச்சிக்கு உணர்வுப்புலம் மட்டுப்பட்டிருக்கக் கூடும். தோண்டிக்கொண்டிருக்கவில்லை. மாறாக, ஓயாத நடையில், நடையாய் நடந்து கொண்டிருக்கின்றது. தன் சிறுகால்களால் நடந்து நடந்தேவும் சாய்குழியை உண்டாக்கிக் கொள்கின்றது அப்பூச்சி. பட்டதும் வழுக்கி விழுவதற்கான மேற்பரப்பை நுணுக்கரிய நுண்துகள் மண்ணால் ஆக்கிக் கொண்டிருக்கின்றது. எஞ்சோட்டுப் பையன்கள், திண்ணைகளில் படுத்துக் கொண்டு விடிய விடிய கருத்துப் போர் கொள்கின்றோம். மீண்டும் காடேகுதல். அலைகின்றோம் குழிகளைக் கண்டறிய.

மனம் அடுத்த கட்டத்திற்குப் பாய்கின்றது. மெய்யியல் தொடர்பான வாதவிவாதம். இப்படியான சொற்களெல்லாம் இப்போது பயன்படுத்துகின்றோம். அப்போதெல்லாம் அவை குறித்த எந்த பிரஞ்ஞையும் இருந்திருக்காதுதானே? இந்த இடத்தில் மரணக்கிணறு உண்டாக்கிக் கொண்டால், தமக்கு இரை கிடைக்குமென்பது அந்தக் குள்ளாம் பூச்சிக்கு எப்படித் தெரியும்? சூட்சுமம். காத்திருக்கும். வரும் வரையிலும் காத்திருக்கும். தன் இடத்துக்கே வந்து இரையாகும் நுட்பம் அதற்கு வாய்த்திருக்கின்றது. மாடு மேய்க்கும் இந்தப் பையன்கள் கொள்ளும் உணர்வுதானே கலையுணர்வு? பேரூர் கோவிலுக்குச் செல்வோம். கோயிலின் நாற்புறங்களிலும் ஓவியங்கள், சிற்பங்கள் உண்டு. இருந்து, பார்த்து, காண்பதைப் பற்றிய தம் நினைப்புகளைச் சொல்ல, மற்றவரும் தம் எதிர்கருத்தைச் சொல்லும் காலமொன்று இருந்ததுதானே?

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே! (சிவபுராணம் 76 - 79)

நோக்குகளில் அரிய நோக்கே, நுணுக்கங்களில் அரிய நுணுக்கத்தின் நுண்ணுணர்வேயென்றெல்லாம் மணிவாசகப் பெருமான் பாடிச் சென்றிருப்பதுதானே? Mass Media & Communication, பெருந்தொகை ஊடகங்களால் தனிமனிதச் செயற்பாடுகள் அருகிப் போய்விட்டன. ஒன்று கிடைக்கும் போது, மற்றொன்று கைவிடப்படுகின்றது. வாசிப்பு மட்டுப்படுகின்றது. ஊடகக்கட்டமைப்புகள், தனிமனித வெளிச்சம் பாய்ச்சிப் பாய்ச்சியே, வெளிச்சம் நோக்கிய விட்டில்பூச்சிகளை அறுவடை செய்து கொள்கின்றன. சொல்வதை அப்படியப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்போக்கு தவிர்க்கவே இயலாதவொன்றாக ஆகிவிட்டது. எனவேதான் பேச்சாளர்களுக்கு இருக்கும் தேவை, மதிப்பு, கலைஞர்களுக்கு இல்லாமல் ஆகிவிட்டிருக்கின்றது! நுண்ணுணர்வு கொண்டிருப்பவர்கள், எளிதில் பொதுப்போக்கின்பால் கிளர்ச்சியுறுபவர்களாக இருந்து பொருளியல் வாழ்வில் தோற்றும் போய்விடுகின்றனர் அல்லது தமக்குத்தானே தளையும் இட்டுக் கொள்கின்றனர்.

𝑻𝒉𝒆 𝒆𝒚𝒆 𝒔𝒆𝒆𝒔 𝒐𝒏𝒍𝒚 𝒘𝒉𝒂𝒕 𝒕𝒉𝒆 𝒎𝒊𝒏𝒅 𝒊𝒔 𝒑𝒓𝒆𝒑𝒂𝒓𝒆𝒅 𝒕𝒐 𝒄𝒐𝒎𝒑𝒓𝒆𝒉𝒆𝒏𝒅! -Robertson Davies

-பழமைபேசி.

7/26/2025

அன்பே தருக

அன்பே தருக

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.

தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு, மிகவும் விரும்பிப் போற்றப்படுகின்ற நூல். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, முப்பத்தி ஐந்து வெள்ளிகள் கொடுத்து வாங்கி அவ்வப்போது வாசித்துப் பயனடைந்து வருகின்றேன். சிறப்பு யாதெனில், ஏதோவொரு பக்கத்தினைத் திறந்து அங்கிருந்தேவும் வாசிக்கலாம். வரிசைத் தொடரின்றி, தான்தோன்றித்தனமாகச் செயற்படுவதில் ஓர் இன்பம். இஃகிஃகி.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பேவும் சுட்டியிருக்கின்றேன். ”தமிழ்மறை” என்பது ஒரு சொல். பிரித்து எழுதத்தலைப்படும் போது, பொருட்சிதைவுக்கும் மரபுச்சிதைவுக்கும் வழி வகுக்கின்றது. எடுத்துக்காட்டாக, தமிழ் மறையக் கூடிய எனும் பொருளில் ஒருவர் பொருள் கொள்ளலாம். செயற்கை நுண்ணறிவுப் புலங்களெல்லாம் தானியக்கத்திற்குப் பயன்படுத்தும் காலம் வந்தாகிவிட்டது. அவற்றுக்கெல்லாம் நாம் கொண்டு கூட்டி விளக்கமளித்துக் கொண்டிருக்க முடியாது.

”தமிழின எதிர்கால வழிகாட்டி”, தமிழினத்தின் எதிர்காலத்துக்கான வழிகாட்டி, தமிழினம் கொடுக்கும் எதிர்காலத்துக்கான வழிகாட்டி, தமிழினம் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய வழிகாட்டி எனப் பலவாக்கில் பொருட்சிதைவுக்கு இட்டுச் செல்கின்றது. மாறாக, “தமிழினத் தொலைநோக்கு வழிகாட்டி” எனும் போது பொருட்சிதைவு மட்டுப்படுகின்றது.

ஆயிரத்து எழுநூற்று முப்பத்தி மூன்றாம் பக்கத்தில், “தமிழ் எழுத்தாளர்களின் பொறுப்பு” எனும் தலைப்பில், அவசியமானதொரு கட்டுரை இடம் பெற்றிருக்கின்றது. தமிழ்ப்புலமைக்கும், புத்தாக்கப் படைப்புகளுக்குமான அக்கப்போர் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்ற இவ்வேளையிலே, அதற்கானதொரு மருந்தாக இடம் பெற்றிருக்கின்ற படைப்பாகத்தான் நான் இதைப் பார்க்கின்றேன். ’தமிழ்க்காவலர்கள்’ எனும் தோற்றப்பாடுக்கும் ’புதுமைப் புரட்சியாளர்கள்’ எனும் தோற்றப்பாடுக்கும் இடையில்தான் மேன்மை என்பதன் அவசியத்தை விளக்குகின்ற படைப்பு. அருமை. ’மொழியின் வளத்தைக் காக்கும் பொறுப்பு நமக்குளது’ என வலியுறுத்தும் படைப்பிலேயே சிதைவுகளும் பிழைகளும் இருக்கக் கூடாதன்றோ?!

அன்புடன் பொறுத்தருள்க. மாற்றுக்கருத்துகளை முன்வைப்பதாலேயே, “துரோகி, முதுகில் குத்துபவன்” போன்ற சொற்களைப் பயன்படுத்தும் அவலம் நமக்குள் நீங்க வேண்டும். அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது!

(அண்மையில், நடப்புப் பதிப்பினை அன்பளிப்பாகக் கொடுத்த இளவலுக்கு நன்றி)

-பழமைபேசி.



 

7/24/2025

தூங்கற்க தூங்காது செய்யும் வினை

 தூங்கற்க தூங்காது செய்யும் வினை

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை [பொறுமையாக செய்ய வேண்டிய செயல்களை காலம் கடந்தும் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய செயல்களுக்குக் காலத்தாழ்ச்சி கூடாது]

திரைப்பட விழா, நட்சத்திர இரவு முடிந்து தாவளம் திரும்பும் போது மணி இரவு பத்தரை இருக்கும். பிள்ளைகள் எல்லாம் உறங்க வேண்டுமென விரைவுபடுத்திக் கொண்டிருந்தனர். ஒருங்கிணைப்பாளர் ஏதோ சொன்னது போல இருந்தது. சரியாகக் கேட்டுக் கொள்ளவில்லை.

அறைக்குச் சென்றதும், மின்னசோட்டாத் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தில் கலியபெருமாள் அண்ணாச்சி அறைக்குத் தாகசாந்திக்காகச் சென்றிருந்தேன். சின்னஞ்சிறு கதைகள் பலவும் பேசிக் கொண்டிருந்தோம். திடுமென நினைவுக்கு வந்தது. ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு அனுப்ப வேண்டிய செய்தியொன்று இருந்தது. அனுப்பி வைத்தேன். நன்றிங்கண்ணா என உடனே மறுமொழி வந்ததும், அழைக்கத் தலைப்பட்டேன். அப்போதுதான் சொன்னார், நினைவுக்கு வந்தது. “உதவி தேவை, தன்னார்வலர்களுடன் வாருங்கள்?” என்றார். மணி, நடுநிசி 12.30. July 4, 2025.

பற்றியம் இதுதான். மணி பத்துக்கு மேல் பணியாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். விழா வளாகத்தில், 1000 இருக்கைகள் வெள்ளுறையுடன் இருக்கின்றன. மேசைகளின் மேல் விரிப்பு போர்த்தப்பட்டு இருக்கின்றது. அவை யாவற்றையும் பிரித்தெடுத்து விடவேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, மாநாட்டுக்கூடத்தினர் மறுநாள் காலைக்கான அரங்க அமைப்புக்கான நாற்காலிகள் 2850 போடுவர். அதற்கான காலக்கெடு 12 மணி. தற்போது 12.30. அவ்வ்வ்...

செந்தில் அண்ணாச்சி, வெற்றிவேல் பெரியய்யா, ஷான் குத்தாலிங்கம், இன்னும் இருவர்(sorry, forgot), நான் என ஆறு பேர் மாநாட்டு வளாகம் சென்று சேர்ந்தோம். வாயிற்கதவுகள் அடைபட்டுக் கிடக்கின்றன. காத்திருந்து, அரங்கம் சென்று சேரும் போது மணி 1.

இஃகிஃகி. கார்த்திப் பெருமாள், ஒருங்கிணைப்பாளரின் இணையர் முருகேசன், பாரதி பாண்டி முதலானோர் ஏற்கனவே உள்ளுறைகளை உரித்துப் போட்டு உரித்துப் போட்டு ஓய்ந்திருந்தனர். கார்த்திக் அவர்கள் சொன்னது, “குனிஞ்சு குனிஞ்சு இடுப்பே முறிஞ்சு போச்சுப்பா”. இஃகிஃகி.

பிறகு நாங்களெல்லாம் சேர்ந்து முசுப்பாத்தியுடன் கதைத்துக் கதைத்து எஞ்சி இருந்தனவற்றையெல்லாம் உரித்துப் போட்டு, அவற்றையெல்லாம் வளாகத்தின் ஓரத்திற்குக் கடத்தியென ஒருவழியாக வேலை முடிவுக்கு வந்தது. மணி ஒன்றே முக்கால்.

காலை 8 மணிக்கு நிகழ்ச்சியைத் துவக்குவதெப்படி?? எண்ணிப்பாருங்கள் தோழர்களே, ஒருங்கிணைப்பாளர்களுக்கு எவ்வளவு மன அழுத்தம் இருந்திருக்கக்கூடும்? 2 மணிக்கும் மேலென்றால் அவர்களும் போய்விடுவர்.

தொப்பலாக நனைந்துவிட்டோம். மீண்டும் அறைக்கு வந்து, குளித்து, காலையில் 6.45க்கு வளாகம் வந்துவிட்டேன்! யாரையும் உள்ளே விட மறுக்கின்றார்கள், ஒப்பந்தப்படி காலை 7.30 மணிக்குத்தானாம். எனக்கு மட்டும் பணியாளர் அட்டை இருந்தபடியால் உள்ளே விட்டுவிட்டனர்!!

இக்கட்டான சூழலில் களமிறங்கிய நண்பர்கள் வாழ்க வாழ்க! ! இஃகிஃகி!!


7/21/2025

தூரிகைப் போராளி டிராட்ஸ்கி மருது

தூரிகைப் போராளி டிராட்ஸ்கி மருது

ஓவியர் டிராட்ஸ்கி மருது, அணுக்கமானோர் இடையில் மருது அண்ணன்  என அறியப்படும் மருதப்பன் மருது அவர்களுக்கு, இயங்குபடக் கலைஞர், திரைப்பட சிறப்புத் தோற்ற இயக்குநர், கோட்டோவியக் கலைஞர், கணிப்பொறி வரைகலைஞர், காண்பியல்தள அறிஞர், முற்போக்கு சிந்தனையாளர், இப்படியான அறிமுகங்களை நாம் எங்கும் காணலாம்.

சார்லட் நகரில், எங்கள் வீட்டில் இடம் பெற்ற கலந்துரையாடலின் வழி(7/20/2025) நாங்கள் அறிந்து கொண்டது யாதெனில், பல்நோக்குச் சிந்தனையாளர் (Lateral Thinker) என்பதுதான். அடுக்கடுக்கான நுட்பங்களை விவரிக்கிறார். அவற்றை வரிசையாகச் சொல்லிக் கொண்டு போகும் போது, நல்லதொரு கதையாடலாக, சொற்பொழிவாக அது உருவெடுக்கும்.

அண்ணன் மருது அவர்கள் அப்படியான ஒரு பாங்கினைக் கொண்டிருக்கவில்லை. இந்தக் காலத்தில், இந்தக் கோட்டையானது இப்படி அமைந்திருக்கின்றது; அது ஒரு கல்கோட்டை. அதன் அமைப்பு இப்படியிப்படி எனச் சொல்கின்றார். மனம் இறும்பூது கொள்கின்றது. அங்குதான் திருப்பம். அந்த வேகத்திலேயே, அப்படி அமைந்திருக்காமல், இப்படி இப்படியெல்லாம் அமைந்திருக்கலாம்(what are the other options). அவற்றுக்கிடையே இது இப்படி அமைந்திருக்கின்றது. அதன் நுட்பம் இதுவாக இருக்கலாமென அவர் சொல்கின்ற பாங்கில், தனித்துவமாக மிளிர்கின்றார். நமக்குள் அந்த இடத்தில் ஒரு புது உலகம் காணக்கிடைக்கின்றது. நுட்பத்தின் அடி ஆழத்துக்கே அழைத்துச் செல்கின்றார்.

எடுத்துக்காட்டாக, குதிரை ஓடுகின்றது. அந்த ஓட்ட இயங்குதலில் பல்வேறு விதங்கள் உள்ளன. விரைவாக நேர்கோட்டில் ஓடுவது, வளைந்து வளைந்து பாதையின் அமைப்புக்கொப்ப ஓடுவது, கொண்டாட்ட மனநிலையில் சவாரி மனப்பான்மையில் ஓடுவதென நிறைய. ஒவ்வொன்றின் தன்மையும் இயற்பியலுக்கொப்ப மாறுகின்றது. அந்த இயற்பியலைப் புரிந்து கொண்டால்தான், காண்பியலும் நிறைவுகொள்ளும்; இயற்கையை வெளிக்காட்ட வல்லதாக அமையும். இந்த நுட்பத்தை விவரிக்கின்றார்.

ஏராளமான கலைஞர்களைப் பற்றியும் அவர்களின் பின்னணியில் நிகழ்ந்த சுவைமிகு சம்பவங்களையும் குறிப்பிடும்போது, அந்தக் கலைஞனின் தனித்துவத்தைத் தன்பார்வையில் சொல்லும் போது, அந்தத் தனித்துவத்தின் சிறப்பு புலப்படுகின்றது.

கலைப்பார்வையிலிருந்து விலகி, அதே சம்பவத்தை சமூகப்பார்வையிலும் விவரிக்கத் தலைப்படுகின்றார். பொதுவாக ஆதிக்கசக்திகளை நாம் விமர்சிக்கின்றோம், வெறிகொண்டு திட்டித் தீர்க்கின்றோம். ஆனால், இவரோ, அது ஏன் ஆதிக்கசக்தியாக நிலைபெற்றதென்பதைச் சொல்கின்றார். காரணங்களை நாம் புரிந்து கொள்கின்றபோது நாம் நம்மைத் திருத்திக் கொள்வதற்கும் சூழலின் தன்மையில் இருக்கும் புலப்படாப் பொருளை புரிந்து கொள்வதற்குமான அகவெளி நமக்கு அமைகின்றது.

பிரிய மனமில்லைதாம். ஓவியர் மருது என்பவர் யாரென்று கேள்விப்படாதவர்கள்தாம், பிரியமனமின்றி விடைபெற்றுச் சென்றனர்.


-பழமைபேசி, pazamaipesi@gmail.com


 

7/08/2025

பேரவை விழா 2025


வணக்கம். இப்பதிவினை நான் தனிமனிதன் எனும் இடத்தில் இருந்து எழுதுகின்றேன். எவ்விதப் பொறுப்பின்சார்பாகவும் எழுதவில்லை.

2025 விழா துவக்கப்பணிகளேவும், எதிர்மறை எண்ணங்கள் நிரம்பிய சூழலில்தான் துவக்கப்பட்டன. உள்ளூரிலும் சரி, பேரவை சார்ந்தவர்களும் சரி, வதந்திகளை, அவதூறுகளை நீக்கமற எங்கும் பரப்பிக் கொண்டிருந்தனர். இந்தச் சூழலில்தான் துவக்கவிழா(kickoff meeting) இடம் பெற்றது. நானும் அதில் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்திலும் சரி, மற்ற நேரங்களிலும் சரி, திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டது, be optimistic, convention will be sold out.

மாமதுரைத் தொழில்முனைவோர் மாநாடு வந்தது. அங்கிருந்த நண்பர்கள் சொன்னார்கள். நடுத்தர, விளிம்புநிலை மக்களுக்கானதாக இருத்தலே, உங்களின் இலக்காக இருக்க வேண்டுமெனச் சொன்னார்கள். அப்படியேவும் நடந்தது. சகலதரப்பும் அடங்கிய பொதுநிகழ்வாக இருக்கவும் ஆசைப்பட்டோம். அவ்வண்ணமே விருந்திநர்களும் அழைக்கப்பட்டனர். தம் தரப்பு மட்டுமே இடம் பெற வேண்டுமென நினைப்பது, இலாபநோக்கற்ற பொது அமைப்புக்கு என்றுமே உகந்ததன்று. மாநாடு பெருவெற்றி கொண்டது. துணை அரங்கும் நிரம்பியது. அதுகண்டாவது அமைதி கொண்டிருந்திருக்கலாம்.

அவதூறுகள், வதந்திகள், கொடைதடுப்புப் பணிகள் மேலும் வீறு கொண்டன. தகவல் தொடர்புப் பணிகள் சீராகவும் உண்மையாகவும் வெளிப்படையாகவும் இருந்து வந்தன. சகல தரப்பும் உள்ளே வரும் போது, எல்லாமும் ஈடேறும் என்பதில் பெரும் நம்பிக்கை நமக்கு உண்டு. இருந்தாலும், செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் குறியாக இருக்க வேண்டுமென வலியுறுத்தினோம். வாய்த்த பொருளாளரும் அதில் வல்லவர். இருந்தாலும், விருந்திநர் எண்ணிக்கையைக் கூட்டியதில் எனக்குப் பெரும் ஏமாற்றமே! 2009 - 2017ஆம் ஆண்டு வரையிலான தரவுகளை முன்வைத்துப் பேசினேன்.

வட அமெரிக்க வாகை சூடிப் போட்டிகளை வடிவமைத்தேன். பிற்பாடு, அதற்கான ஒருங்கிணைப்பாளரிடம் பொறுப்புகள் கையளிக்கப்பட்டு, பல்வேறு போட்டிகளின் தலைவர்களும் இனம் கண்டறியப்பட்டு, பன்மைத்துவம் போற்றப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.

ஒருங்கிணைப்பாளர்கள் மனவுறுதியோடு இருந்தனர். எவ்விதக் காரணத்துக்கும், நட்டமே ஆனாலும் சரி, விலையில்லா அனுமதியைத் தரக்கூடாது என்பதில். மிகச்சரியான முடிவு.

முதன்மை அரங்க நிகழ்ச்சிகள், இணையமர்வுகள், போட்டிகளில் பங்கேற்பது, விருந்திநராக வருவது போன்றவற்றுக்கு பலத்த போட்டி நிலவியது. காரணம், ஏற்படுத்தப்பட்ட நம்பகமும் தரமும்!

விழாவில் குறைகளே இல்லையா என்றால், இருக்கின்றனதான். அவையெல்லாம் பொருட்படுத்தக் கூடியன அல்ல. உள்ளூர் தன்னார்வலர்கள் குறைவு, ஆட்களை வேலைக்கமர்த்தித்தான் சாப்பாடு போட வேண்டுமென்றார் நண்பர். நான் சொன்னேன், அன்போடு அழைத்தால், ஊரே வருமென்றேன். அப்படித்தான் நடந்தது. பரிமாறுவதற்கும் போட்டா போட்டி.

அன்பை விதைத்தால் அன்பே விளையும்! 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு பேரவை கண்டிருக்கின்றது Sold Out , that too twice, Madurai, Now in Raleigh!!

-பழமைபேசி.


 

5/28/2025

கொசுவர்த்தி 🌀

கொசுவர்த்தி 🌀

ஏசுவடியான்ங்ற பெயர்ல ஒரு நண்பர், அந்தப்பக்கமா குடியிருந்தாரு. இணையத்துல ரவுசு செய்துகிட்டு செம பம்பலா இருப்பாரு. “அண்ணே, தம்பியண்ணன் போஸ்டன் வந்துருவாரு, அதுக்கப்புறம்...”னு இழுத்தன். ஒன்னியும் பிரச்சினையில்ல நாம் பார்த்துக்கிறன்னு சொல்லிட்டாரு. அப்படி அப்படி, ஒரு இருவது இருவத்தி அஞ்சி பேரு கூடிட்டாங்க. தம்பி அண்ணன் என்கின்ற, நாமஉ புதுகை அப்துல்லாவும் வந்து சேர்ந்திட்டாரு. யாரும் நகர்றமாரி இல்லை. என்னோட அறையிலயே, தரையில விரிச்சுப் படுத்துகிட்டாங்க. அப்துல்லா அண்ணனும் தரையிலயே படுத்துகிட்டு ஒவ்வொன்னா கொளுத்திப் போட்டுகினு இருந்தாரு. வெடிச்சிரிப்புதான். பேசறாங்க பேசறாங்க... பேசிகிட்டே இருக்காங்க. நான் காலையில ஒரு நாலு மணி வாக்குல, நான் அறியாமலே தூங்கிட்டன். மத்தவங்கள்ல நிறையப் பேர் தூங்கவே இல்லையாம். இப்படித்தான் 2010 பேரவை விழாவுல எங்க பொழுது போச்சு.

சென்ற ஆண்டும் கிட்டத்தட்ட அதே போலத்தான். ஒரு சிறு அறை. நாங்கள்லாம் தரையில ஒக்காந்துட்டம், ஒரு நேரத்துல கிட்டத்தட்ட 40 பேரு. ஏசியெல்லாம் வேலைக்கே ஆவலை. பால்கனி கதவு திறந்து விட்டாலும், ரூமுக்குள்ள வெக்கையோ வெக்க. காலையில மூணு, நாலுனு ரெண்டு நாளும். மூனாவது நாள் காய்ச்சலே வந்து போட்டுது. அன்பாலும் அக்கறையாலும் கழிந்த பொழுதுகள்.

இஃகிஃகி, இதோ வந்துவிட்டது அடுத்த ஆண்டு. ஜீன் 27ஆம் நாளே பொறப்புட்ருங்க. மிச்சிகன், கனடா, எங்கிருந்தாலும் சரி, மெதுவா வண்டிய உருட்டிகினு வந்தீங்கன்னா, சனிக்கிழமை, 28ஆம் நாள் சாய்ங்காலம் வந்து சேர்ந்திடலாம். நேரா, வில்மிங்ட்டன் பீச்சுக்கு வுட்ருங்க வண்டிய. அங்கனக்குள்ள ஏர்பிஎன்பியில ஒரு வீட்டப் புடிச்சி கும்பலா இருக்கலாம். சமச்சி சாப்டுகிட்டு, கடற்கரையில விளாடிகிட்டு, தாகசாந்தியும் பார்த்துகிட்டு, அங்கிருந்தேவும் பொட்டிதட்டிகினு நாலு நாள் இருந்தம்னா, புதங்கிழம வந்திரும். விடிஞ்சா விழா. பீச்சுக்கும் விழா வளாகத்துக்கும் ஒரு ரெண்டு மணி நேரம்தான். கூட்டிகழிச்சிப் பாருங்க. எல்லா செரி வரும்.

இந்தவாட்டி எல்லாமே உள்ளாரத்தான். தடுக்கி விழுந்தா தங்குமடத்துலதா தடுக்கி வுழோணும். சோத்துப் பந்திகளும் உள்ளாரயேதான். அந்தப் பக்கம் இருக்குற ஒரு நண்பர் வித்தியாசமானவர். அதாவது, வாழ்க்கய வாழ்றவரு. வெள்ளிக்கிழம சாய்ங்காலம் பொறப்பட்டு, பாண்ட் பார்க் குளத்துக்குப் போனவரு, திங்கக்கிழம காலையிலதான் வீட்டுக்கு வந்தாரு. என்னங்க இதூனு கேட்டன். ஆமா பழம, குளக்கரையிலயே கூரயக் கட்டி, தனிமையில ரெண்டு நாள் இருந்து போட்டு வந்தன்னு சொன்னாரு. அடிக்கொருக்கா, நடுநிசிப் படங்கள வேற டுவிட்டர்ல போட்டுகினு இருந்தாரு. அம்மணக்குளியல்னு அதிகால ரெண்டு மணிக்கு போட்டா வேற போட்டாரு. டுவிட்டரே அல்லோகலம் ஆகிடிச்சி. எதுக்கு சொல்றன்னா, அங்கனக்குள்ள அந்தமாரி குளங்கள், குளக்கரையில் தாவள வசதிகளும் இருக்கு.

இந்த ஒரு வாரப் போக்க வெச்சிப் பார்த்தா, சோல்ட் அவுட் ஆவதற்கான வாய்ப்புகளும் இருக்கு. டக்கு புக்குனு ஏற்பாடுகளைச் செய்து போடுங்க. தமிழாலயும் எணையுலா, கூடவே தண்ணியாலவும் எணையலாம், நான் கொளம், பீச்ச சொன்னனுங்க. வந்துருங்க அல்லாரும். வர்ட்டுமா!!

-பழமைபேசி.

4/06/2025

பேரவை விழாக்களும் நானும்

பேரவை விழாக்களால் மிகவும் பயனடைந்தவன் நான் என்பதில் எப்போதும் எனக்கு ஒரு பெருமை உண்டு. எத்தனையோ காரணங்கள் இருப்பினும் இதனை இன்று முன்னிறுத்த விரும்புகின்றேன்.

பிள்ளைகளுக்கு ஊக்கமளிக்கும் ஓர் உந்துசக்தியாகப் பேரவை எங்களுக்கு அமைந்தது. நான் கலந்து கொண்ட முதல் விழாவின் போது, முதலாம் மகருக்கு வயது 5. தொடர்ந்து பேரவை விழாக்களில் பங்கு கொண்டு, முதன்மை மேடையில் வைத்துப் பல பரிசுகள் பெற்றார். Tamil Jeopardy போட்டியில் வாகை சூடினார். தமிழ் சேம்பியன் பரிசும் பெற்றார்.

நான் கலந்து கொண்டதில் மூன்றாம் விழா, சார்ல்சுடன் நகரில் இடம் பெற்றது. நிறைய, அறிவியல் துறையில் பணியாற்றும் முனைவர் நண்பர்கள் கிடைத்தனர். பொதுவாக, ஐடி துறையில் பணியாற்றும் எங்களைப் போன்றவர்களுக்கு, கல்வித்துறையில் ஒரு மண்ணும் தெரியாது. ஆனால், அறிவியல்துறைசார் பெற்றோரின் பிள்ளைகள் மேம்பட்டதான போக்கில் இருப்பர். பேரவையினால் கிடைத்த முனைவர் உதயசூரியன் பொன்னுசாமி, முனைவர் கண்ணன் குஞ்சிதபாதம் ஆகியோர் எங்கள் பிள்ளைகளுக்கான வழிகாட்டிகளாக ஆகிப் போயினர்.

இடைநிலைப் பள்ளியிலிருந்தேவும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவது, ஆய்வுப்பணிகள் செய்வது முதலானவற்றில் இவர்கள் உதவி வந்தனர். மூன்று பிள்ளைகளும், பள்ளியில் இருக்கும் போதேவும் பல ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டு, மாகாண அளவிலான போட்டிகளில், மாகாண செனட்டர், காங்கிரசுமேன் போன்றோர் நடத்தும் அறிவியல் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கின்றனர். பரிசில்கள் பெற்றிருக்கின்றனர். அத்தனைக்கும் வித்து இவர்கள்தாம்.

4/5 ஆண்டுகளுக்கு முன்பு மாகாண அளவிலான போட்டியில் கலந்து கொள்ளச் சென்ற போதுதான், தேடி வந்து அறிமுகம் செய்து கொண்டார் முனைவர் பாரதி பாண்டி அவர்கள். அவர் நடுவர் என்பதால், போட்டி முடிந்த பின்பு, ஆய்வுப்பணிகள் இன்னும் மேம்பட என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்பதற்கான வழிகாட்டுத்தாள் ஒன்றினைக் கொடுத்தார். 

பிள்ளைகள், இன்றைக்கு, பல்கலைக்கழகத் தமிழ்மாணவர் சங்கத்தலைவர், இளம் ஆய்வாளர்கள் பள்ளியில் மாணவர்கள் என்றெல்லாம் ஆகிப் போயிருக்கின்றனர். இந்தப் பின்னணியில்தாம், அறிவியல்தேனீ களத்தினைக் காண்கின்றேன். முனைவர்கள் சுவாமி, மனோகரன் முதலானோரைக் கொண்டு அமைந்திருக்கின்ற நல்லதொரு முன்னெடுப்பு. ஐ.டி துறை பெற்றோர்களுக்கான அடுத்தகட்ட வழிகாட்டிகளாகத்தான் நான் அவர்களைப் பார்க்கின்றேன். அறிமுகப்படுத்திய நண்பர் செளந்தர் ஜெயபால் அவர்களுக்குச் சிறப்பு நன்றிகள்.

நமக்காக நம்மால் நடத்தப்படுவதுதான் நம் பேரவை. பங்களிப்புச் செய்தலும் பயனடைதலும் நம் வசமே இருக்கின்றன.


3/06/2025

எளியமுறை யாப்பிலக்கணம்

எளியமுறை யாப்பிலக்கணம்

பிற்பகல் நேரம்.  பதிவில் இல்லாத எண்ணில் இருந்து ஒரு வாட்சாப் தகவல் வந்து விழுந்தது. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக்குழுவின் அறிவிப்பு ஒன்றைக் குறிப்பிட்டு, இது பிழையன்றோயென வினவி இருந்தார். என்னுள் பல வினாக்கள் கிளர்ந்தன.

முதலில் இவர் யார்? இலக்கியக்குழுவின் அறிவிப்பைச் சுட்டி என்னிடம் ஏன் விடுக்க வேண்டும் வினாவை?? இருந்தும், அவற்றை ஒதுக்கி வைத்து விட்டுச் சொன்னேன், ’பிழைதிருத்தத்துக்கு ஆட்பட்டு மட்டுறுத்தலுக்கு ஆட்பட்டிருக்கும் அறிவிப்பு அது’. தற்போதைய அறிவிப்பில் பிழை களையப்பட்டிருக்கின்றதெனச் சொன்னேன். நாம் ஏற்கனவே பேசியிருக்கின்றோம், ”உங்கள் வலைப்பதிவில் இருக்கும் வாசகம்” என அவர் கூறியதும்தான் மெலிதாக நினைவுக்கு வந்து நிழலாடியாது. 2009/2010 காலகட்டத்தில் நிகழ்ந்த உரையாடல்கள் நினைவுக்கு வந்தன.

தொடர்ந்து அளவளாவியதில், நான் அவர் வீட்டு முகவரியைக் கேட்டேன். மறுமொழியாக அவரும் என் வீட்டு முகவரியைக் கேட்டு வாங்கிக் கொண்டார். பல பணிகள். மறந்து போய்விட்டேன். இதற்கிடையில் மேலுமொரு நிகழ்வு.

வட அமெரிக்க வாகை சூடி போட்டிகள் குழுவினருடன் பேசிக் கொண்டிருக்கையில், படைப்புத் தேனீ குழுவைச் சார்ந்த கார்த்திக் காவேரிச்செல்வன் எனும் நண்பர் சொன்னார், ’எல்லாமும் பட்டியல் இட்டிருக்கின்றீர்கள்; மரபுச்செய்யுள் எனும் பிரிவு இல்லையே?’ என வினவினார். நாங்கள் எல்லாம் சிரித்துக் கொண்டோம். அவர் சொன்னார், “அதற்கான பதிவு நிகழ்கின்றதோ இல்லையோ, ஆனால் பட்டியலில் இடம் பெறச் செய்வதே தமிழுக்கான அணியாக இருக்கும். அல்லாவிடில் அது பிழை; வேண்டுமானால் நாம் பயிற்சியும் அளிக்கலாம்” என்றார். சரியாகப்பட்டது. உடனே அப்பிரிவும் சேர்க்கப்பட்டது.

இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், “நின்று வென்ற தமிழ்” எனும் தலைப்பிலும் உரையாடி இருந்தோம். தமிழ் எப்படியாக நிலைபெற்று வென்றதென்பதன் பின்னணியாக, ஓரிரு பற்றியங்களைக் குறிப்பிட்டிருந்தோம்.

இன்று(03/06/2025) பிற்பகல். நூலஞ்சலில் சில நூல்கள். அவரும் சொல்லியிருக்கவில்லை, இப்படியிப்படியாக நூல்கள் எழுதியிருப்பதாக. வியப்பாக இருந்தது. “எளிமையாய்ப் பாக்கள் எழுதலாம்” எனும் நூலைக் கண்டதும் கூடுதலான வியப்பு மேலோங்கியது. வட அமெரிக்க வாகை சூடி குழுவினரிடம் கேட்டறிந்து கொண்டேன்.  மரபுச்செய்யுள் எழுதும் போட்டியில் இதுவரையிலும் எத்தனை பதிவுகள் ஆகியிருக்கின்றன? 11 பதிவுகள் ஆகியிருக்கின்றனவாம்! நின்று வென்ற தமிழ்!!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், வாழ்க தமிழ்!


2/25/2025

சொல்வளமே எழுத்துடைத்து

 

[மின்காந்தள் இதழுக்காக எழுதப்பட்டு வெளியாகிய கட்டுரை]

சொல்வளமே எழுத்துடைத்து

பழமைபேசி 

’வேழமுடைத்து மலைநாடு, மேதக்கசோழவளநாடு சோறுடைத்து, பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து’ என சங்ககாலப் புலவர் ஒளவையாரால் தொண்டைமண்டல சதகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. யானைகளைக் கொண்டது மலைநாடாகிய சேரநாடு, சோழநாடு சோறு படைக்கக் கூடிய நெல்வயல்கள் கொண்டது, முத்து எடுக்கக்கூடிய கடல்வளம் கூடியது தென்னாடு. அதைப்போலத்தான், எண்ணங்களை, செய்திகளையெல்லாம், எவ்விதமான சிதைவு, பொருள்மயக்கம் இல்லாமல் அந்தந்த உணர்வுகளை அப்படியப்படியே கொண்டு செல்லக் கூடிய எழுத்தென்பது, உகந்த சொல்வளத்தைக் கொண்டதாகவே இருக்கும்.

’எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ என்கின்றார் அய்யன் திருவள்ளுவர். எண்ணமும், எண்ணத்தை வெளிப்படுத்தவல்ல எழுத்துமே நம் இரு கண்களைப் போன்றவை. எண்ணங்கள் நல்ல எழுத்தாக இருந்திட வேண்டுமானால், சொல்வளம் உடைத்தாக வேண்டும்.

சொல்வளம் என்றவுடனே, நிறையச் சொற்களை நாம் அறிந்து வைத்திருப்பதும், எண்ணிக்கையில் மிகுதியாகப் பயன்படுத்துவதுமென்றெல்லாம் நினைத்து விடலாகாது. பொருளுக்கும் நோக்கத்திற்கும் நடைப்பாங்கிற்கும் விழுமியத்தைக் கூட்டுவதான சொற்களை நாம் பயன்படுத்தியாக வேண்டும். அதுதான் சொல்வளம்!

அறிவியல், சட்டம், அறிவிக்கை முதலானவற்றில், நேரிடையான பொருளைச் சட்டென விளங்கும்படியாக (denotative / referential), எளிமையான சொற்களைக் கொண்டு, எவ்வித உணர்வுகளுக்கும் இடங்கொடாமல், ஐயம் திரிபறச் சொல்வது நல்ல எழுத்தின் ஒரு அடையாளமாகும். உணர்வூட்டும்படியாக அழகூட்டியும், கற்பனைவளத்தை விவரிக்கும்படியாகவும், வாழ்வியலின் பல்வேறு கணங்களைப் புரியவைக்கும்படிச் சொல்லும் இலக்கியநடை (Emotive) என்பது நல்ல எழுத்தின் மற்றுமொரு தன்மையாகும். இவ்விரு பண்புகளுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டியது சொல்வளம்.

மேற்கூறப்பட்ட இருதன்மைகளுக்குமான இலக்குகள் வேறுவேறாக இருக்கலாம்; அறிவுபுலப்படுதல் (sense), உணர்வுபுலப்படல் (feeling), தொனியின் வாயிலாகக் குறிப்பறிவித்தல் (tone), விருப்பம் அல்லது நோக்கத்தை (intention) நிறைவேற்றுகை என்பனவாக. இலக்கு எதுவாக இருப்பினும், சொற்களையும் அவற்றைக் கையாளும் பாங்குகளையும்(style) சரியாகக் கையாளும் திறனே நல்ல எழுத்து என்றாகின்றது. இதனைத்தான் சொல்வளம், ’சொல்வளமே (நல்ல) எழுத்துடைத்து’ என்கின்றோம்.

சொல்லறிதல் மேம்பட வேண்டுமென்றால் அகராதிகளைப் புரட்டலாம். அகராதிகளைப் புரட்டி அவற்றை நினைவிலேற்றியதும் நல்ல எழுத்தென்பது கைகூடிவிடுமாயென்றால் அதுவும் இல்லை. கையாளும் திறனைக் கற்றாக வேண்டும், மேம்படுத்தியாக வேண்டும். அப்போதுதான் நாம் நம் மொழிக்குச் சிறப்புச் சேர்க்க முடியும். எழுத்துத்திறனை வலுப்படுத்திக் கொள்ள முடியும். என்ன செய்யலாம்? நூல்களை வாசித்தாக வேண்டும். அது ஒன்று மட்டுமே எழுத்தை உயிரோடு வைத்திருக்கும். அதிலும், நம் தாய்மொழியாம் தமிழுக்கு சிறப்புத் தனித்தன்மை ஒன்று உண்டு. தமிழின் ஆயுள் அதன் வேர்ச்சொற்களைக் கையாளும் முறை. அஃதாவது, ஒரு வேர்ச்சொல்லைக் கொண்டு ஓராயிரம் சொற்களைக் கூட ஒருவரால் தேவைக்கேற்றபடி வளர்த்துக் கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, நீர், நீர்மம், நீருண்டி, நீராரும், நீராவி என்றெல்லாம், நீர் எனும் சொல் தேவைக்கொப்ப நீண்டுகொண்டே போகும்.

திருக்குறள் என்பது குறைவான சொற்களைக் கொண்டு, ஈரடியில், அகண்டு விரிந்ததொரு பொருளை வெளிப்படுத்துமுகமாக, அற்புதமான கலையுணர்வைக் கொண்டு அமைக்கப்பட்ட, தமிழின் தனிப்பெரும் சொத்தென்பது நாமனைவரும் அறிந்தவொன்று. அப்படியாகப்பட்ட திருக்குறளில், பனிரெண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சொற்கள் வெவ்வேறு தறுவாயில்(context) கையாளப்பட்டுள்ளன. திருவள்ளுவத்தை ஊன்றிப் படித்தோமேயானால் சொல்வளமும் கைகூடிவருமென்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஏனென்றால், அறிவுபுலப்படுதல் (sense), உணர்வுபுலப்படல் (feeling), தொனியின் வாயிலாகக் குறிப்பறிவித்தல் (tone), விருப்பம் அல்லது நோக்கத்தை (intention) நிறைவேற்றுகை என்பன யாவும் கைக்கொள்ளப்பட்டுத்தான் அமைந்திருக்கின்றது, ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரிக்கப்பட்டிருக்கின்ற திருக்குறள்.

செய்யுளினின்று வெளிவந்து உரைநடையில் கவனம் செலுத்த முற்படுவோமேயானால், எத்தனை எத்தனையோ நாவல்களும், சிறுகதைகளும், புதுக்கவிதைகளுமென நவீன இலக்கியப் படைப்புகள் நமக்கு வாய்த்திருக்கின்றன. ஒவ்வொருவரது அனுபவமும் ஆளுக்காள் மாறுபடும். நாட்டுப்புறத்தில் பிறந்து வளர்ந்த எங்களுக்கெல்லாம் எங்கள் காலத்தில் அமைந்தது மேலாண்மைப் பொன்னுசாமி, கி. ராஜ்நாராயணன், கு. அழகிரிசாமி, நாஞ்சில் நாடன் போன்ற சமகாலத்து இலக்கிய ஆளுமைகள்தாம். அவர்களது படைப்புகளை, துவக்கநிலை வாசகர்களாக வாசிக்கத் துவங்கிய அதே காலத்தில் பின்னோக்கியும் முன்னோக்கியும் பார்க்கத் தலைப்பட்ட போது தெரிய வந்தவர்கள், நாகம்மாள் எழுதிய ஆர். சண்முகசுந்தரம், செல்லம்மாள் எழுதிய புதுமைப்பித்தன் போன்ற முந்தைய தலைமுறை எழுத்தாளர்களும், அப்போதுதான் தோன்றிய இந்தியா டுடே தமிழ் பதிப்பின் வாயிலாக அறிய நேரிட்ட க.சீ. சிவகுமார் உள்ளிட்ட புது எழுத்தாளர்களும்.

வாசித்தலென்பது நாடலுக்கும் தேடலுக்கும் வித்திட வேண்டும். விளம்பரங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெறுவனவற்றை வாங்கிப் படிக்கும் பழக்கமெல்லாம் அண்மைக்காலத்திய போக்கென்றே கருத வேண்டும். இலக்கிய வாசிப்பென்பதே விமர்சனக்கூட்டங்கள் வாயிலாக மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது. சில தட்டெச்சுப் பிழைகளுகளுக்காக ஒட்டுமொத்த நூல்களையே கொளுத்திப் போட்டுவிட்டு, மறுபதிப்புக் கண்டு, பொருளியலில் தோற்றோர் பலவுண்டு.  அச்சுப்பிழைகளைப் பார்த்துச் சரிசெய்யும் வேலையைச் செய்து கொண்டிருந்த ஒருவர்தாம், நாட்டின் உயரிய விருதுக்குச் சொந்தக்காரராக ஆன வரலாறு நம் வரலாறு. ஆமாம், ஜெயகாந்தன் அவர்கள் ‘ப்ரூஃப்ரீடர்’, உதவி ஆசியர் என இருந்து எழுத்தைத் தனதாக்கிக் கொண்டவர். அப்படியெல்லாம் தேடலும் நாடலும் வேட்கையும் இருக்கின்ற நிலையில், எவருக்கும் எழுத்தென்பது வாய்த்தே தீரும். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடைய சிறுகதை, ‘பிழை திருத்துபவரின் மனைவி” என்ற கதை, வாசிக்க வாசிக்க நம் எண்ணங்களை விரித்துக் கொண்டே போகும். அந்த அளவுக்கு, சொற்களின் மீது கடமையுடையவர்களாகவும் நெறிகொண்டவர்களாகவும் இருந்த மரபு நம் தமிழ் மரபு.

எண்ணிப்பாருங்கள். சங்ககாலத்துப் படைப்புகள் நமக்கு உள்ளன. எப்படி நாம் வாய்க்கப் பெற்றோம்? நம் முன்னோர், ஓலைகளிலே, கடும் துன்பங்களுக்கிடையே எழுதி வைக்க, அவற்றைத் தலைமுறை தலைமுறையாகப் பிழையற்றுப் படி எடுத்து வைக்க, அல்லாவிடில் ஓலைகள் நைந்து போய்விடுமல்லவா, அப்படியெல்லாம் எழுதி எழுதித்தான் அவையெல்லாம் நமக்கு வாய்த்திருக்கின்றது. ஆக, வாசித்தலும் எழுதப்பயில்தலுமே கட்டமைக்கும், “சொல்வளமே எழுத்துடைத்து”.

 

2/24/2025

நின்று வென்ற தமிழ்

 

[வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின், உலக தாய்மொழி நாள் கூட்டத்தில் ஆற்றிய உரை]

நின்று வென்ற தமிழ்

அழகிய அன்னைத்தமிழுக்கு முதல் வணக்கம். அவையோருக்கு சிறப்பு வணக்கம். இப்பூமியில், இவ்வையகத்தில், இப்பிரபஞ்சத்தில் எத்தனை மொழிகள் இருந்தன? மாந்தனின் அறிவெல்லைக்கு எட்டியவரையில், , மனித வரலாற்றில், ஏறத்தாழ முப்பத்தி ஓராயிரம் மொழிகள் இருந்ததாக நம்பப்படுகின்றது.  அவற்றுள், இன்று இருப்பது எத்தனை? ஏழாயிரத்திச் சொச்சம் மொழிகள் மட்டுமே இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஏன், மற்றவையெல்லாம், என்ன ஆயிற்று? அழிந்து போயின, வழக்கொழிந்து போயின.  அழிந்து போனது அந்த மொழிகள் மட்டும்தானா? இல்லை, அந்த மொழிகளுக்குப் பின்னாலான வரலாறுகள் அழிந்து போயின. அந்தந்த மொழிகளில் பதியப்பட்டிருந்த, பல்வேறு பற்றியங்கள் அழிந்து போயின. அந்தந்த இனங்கள் காணாமற்போயிற்று. அவற்றைச் சார்ந்தவர்களின் மரபுத்தொடர் அறுந்து போயிற்று என்பதுதான் நாம் அறிந்து கொள்ள வேண்டியது.

இருக்கின்ற இந்த ஏழாயிரத்தி சொச்ச மொழிகளில், தோராயமாக, 90 விழுக்காட்டு மொழிகள், வெறும் ஒரு இலட்சம் பேர் மட்டுமே பேசும் மொழிகளாகத் தற்போது இருக்கின்றன. பதினைந்து நாளுக்கு ஒரு மொழி என, இந்த மொழிகளும் படிப்படியாக அழிந்து வருகின்றன.  இமயமலை அடிவாரங்களில் எத்தனையோ பழங்குடியினங்களும் மொழிகளும் இருந்தன. அவையெல்லாம் காணாமல் போய்விட்டன.  மலேசியாவில் இருக்கின்ற மொத்தம் 136 மொழிகளுள் 81% மொழிகள், இந்தோனேசியாவில் இருக்கின்ற 707 மொழிகளுள் 50% மொழிகள், வர இருக்கின்ற ஒரு சில ஆண்டுகளில் அழிந்துவிடப் போகின்றன. என்ன காரணம்? நகரமயமாக்கலும் உலகமயமாக்கலும் காரணம்.

இருக்கின்ற இந்த ஏழாயிரத்தி சொச்ச மொழிகளில், எத்தனை மொழிகளுக்கு, தனக்கான, தனித்துவமான எழுத்துகள் இருக்கின்றன? 160இக்கும் குறைவான மொழிகளே தனக்கான தனி எழுத்துருக்களைக் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக,  உலகமொழி எனச் சொல்லப்படுகின்ற ஆங்கிலத்தின் எழுத்து, பண்டைய இலத்தீன் அல்லது உரோமானிய எழுத்துரு. ஆனால் நம் தமிழுக்கு? தனி எழுத்து. “ழ்சொல்லும் போது, நெஞ்சமெல்லாம் நிறைந்து பொங்குகின்றதா இல்லையா? தமிழ்!

அவனியில், தனக்கான இலக்கியம், இலக்கணம், நெடிய வரலாற்றுத்தொன்மை கொண்ட மொழிகள் எத்தனை? ஆறுமொழிகள். கிரேக்கம், இலத்தீனம், இப்ரூ, சமசுகிருதம், சீனம், அடுத்தது? தமிழ். நம் தமிழ். இவற்றுள், காலப்போக்கில், கிரேக்கம், இலத்தீனம், இப்ரூ, சமசுகிருதம் ஆகியவை வழக்கொழிந்து போயின. உயிர்ப்போடு இருப்பது சீனமும் தமிழும் என்று சொல்கின்றார்கள். ஆனால்? ஆனால் அதுவும் உண்மையில்லை. பண்டைய சீனமும் சிதைந்து போனது. சிதைவுகளின் எச்சங்கள்தாம் மாண்டரினும் காண்ட்டனீசும். இன்று சீனத்தின் பெருமொழியாக இருப்பது மேண்டரின். அதன் வயது 800 ஆண்டுகள்தாம். எனவேதான் சொல்லிக் கொள்கின்றோம், நமது  தமிழ், நின்று வென்ற தமிழ்!

அன்பு மக்களே, இதனை எப்படி ஈட்டிக்கொள்ள முடிந்தது? செந்தமிழ்ச் செம்மொழி, எப்படி நிலைபெற்றது? மரபு அறுபடாமல், வழிவழியாய்க் காத்து நின்ற அடலேறுகள் யார்? காத்துச் சிவந்த செம்மல்கள் யார்? அப்படி என்னவெல்லாம் செய்தார்கள்?

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டுத்தொகையை ,எப்படி நமக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்?  திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம், பத்துப்பாட்டு நூல்கள், நமக்குக் கிடைத்தது எப்படி? பொய்யாமொழி, உலகப்பொதுமறை, தமிழனின் அடையாளம் எனப்படுகின்ற திருக்குறள் நமக்குச் சொத்தாய் இருப்பது எப்படி?

எண்ணிப்பாருங்கள் தோழர்களே. ஆயிரமாயிரம் ஆண்டுகள். எத்தனை எத்தனை இயற்கைப் பேரிடர்கள் வந்திருக்கக் கூடும்? எத்தனை எத்தனை அந்நியப் படையெடுப்புகள் ஆட்கொண்டிருந்திருக்க வேண்டும்? எத்தனை எத்தனை பஞ்சங்கள் வந்து போயிருக்கும்? எத்தனை எத்தனை தமிழ்மக்கள் மாண்டு போயிருப்பர்? அத்தனைக்கும் இடையில் தப்பி, தென்னாட்டு மொழியாய் நிலைபெற்று, இன்று உலகமெலாம் வளைய வந்து கொண்டிருக்கின்றது  தமிழ். எப்படி, நின்று வென்றது?

மொழிக்கென இலக்கணம் படைத்தான். மொழிக்கென அறிநெறி கொண்டான். அத்தனைக்கும் மேற்பட்டு, உழைப்பைக் கொடுத்தான். தன்னுடைய இன்னுயிரைக் கொடுத்தான். படிப்பறியாப் பாமரன்கூட, இப்படித்தான் பேசவேண்டுமெனக் கருதினான். அது அவன் கொண்ட இலக்கணம். தமிழுக்கு இப்படியெல்லாம் செய்யவேண்டுமெனக் கருதினான்.  அது அவனது அறநெறி. கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், வாய்மொழிப் பதிவுகள் என அறநெறியினூடாக மொழியைக் கடத்தினான் தமிழன். அடுத்ததாக, உழைப்பைக் கொடுத்தான். எடுத்துக்காட்டாக, ஆங்காங்கே நடத்தப்பட்ட படிவிழாக்களைச் சொல்லலாம்.

ஆமாம் நண்பர்களே. ஓலைச்சுவடிகள் எழுதுவதில் உள்ள சிக்கல்களை எண்ணிப்பாருங்கள். தரம்மிக்க ஓலைகளாக இருக்க வேண்டும். அவற்றில் எழுத்தாணி கொண்டு, எழுதும் முறையைக் கற்றுப் பயின்று இருந்திருக்க வேண்டும். இத்தனைக்கும் மேற்பட்டு, நாட்படும் போது, அவையெல்லாம் நைந்து போகும்தானே? மறுபதிப்புச் செய்வதற்கான உழைப்பினை ஈந்து இருக்க வேண்டும். அப்படியாக, ஒரு ஓலையிலிருந்து மறுபதிப்பாக, படி எடுப்பதுதான் படிவிழா.

தமிழ்ப்பெருநிலத்தில் பல்வேறு குறுநாடுகள், சிறுநாடுகள். இவன் நாடு நாடாகச் சென்று, ஊர்களிலே தங்கி இருந்து, ஆங்காங்கே இருக்கின்ற தமிழ்மாடங்களில் இருக்கின்ற ஓலைகளுக்கெல்லாம் படி எடுத்துப் படி எடுத்துத்தான் நமக்குக் கொடுத்துப் போயிருக்கின்றான் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள் எல்லாமும். அதுதான் உழைப்பு. காலங்காலமாக கொடுத்துச் செல்லப்பட்ட அந்த உழைப்பினை நாம் நினைவுகூர வேண்டாமா?

அந்நியப் படையெடுப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள, எத்தனை எத்தனை பேர் மாண்டனரோ? உயிரைக் கொடுத்து மண்ணைக் காத்திருப்பான். மண் இருக்கும் போது  மண்ணுக்கான மனிதனும் இருக்கின்றான். அந்த மனிதன் இருக்கும் போது, அந்த மனிதனின் மொழியும் நிலைபெறுகின்றது. அந்த மாமனிதர்களை நாம் நினைவுகூர வேண்டாமா? எண்ணிப்பாருங்கள் தோழர்களே.

நான் சொல்லப் போவதை அரசியல் நெடியோடு யாரும் பார்க்க வேண்டாம். ஒரு அனுபவப் பகிர்வாக மட்டுமே பார்க்குமாறு, அன்போடு வேண்டுகின்றேன். இளம்பருவம். கிராமத்து ஊர்வழிகளில், இட்டேரிகளில், பிறவடைகளில் விளையாடிக் கொண்டிருப்போம்.  ஏதோவொரு திசையிலிருந்து ஒலிபெருக்கி ஓசை. ஓடோடிப் போவோம். அரசியல் மேடை.  ஏதோவொரு நிகழ்ச்சி.

எங்கள் ஊரைச் சார்ந்த செந்தோட்டம் எஸ்.கே.இராஜூ, அவர் தலைமைக்கழகப் பேச்சாளரும் கூட, பெதப்பம்பட்டியைச் சார்ந்த தளவாய் நாகராஜன் ஒன்றியச் செயலாளர், திருப்பூர் மணிமாறன் மாவட்டச் செயலாளர், சிறப்புப் பேச்சாளராக நகைமுகன் என்பதாகக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும். எதிர்க்கட்சித் தலைவரைச் சாடுவார்கள்.  அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும். உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர். ஆத்திர கோத்தர மசால் ஏத்திர வயித்துக் கஞ்சிக்கு நீ ஓட விட்றஎன்றெல்லாம் அடுக்கு மொழியில் நெக்குருகப் பேசுவார்கள். நமக்கும் அது போலவே, விலாபுடைக்கப் பேச வேண்டும் போல இருக்கும்.

அடுத்தவாரமே அதே இடத்தில் போட்டிக் கூட்டம் நடக்கும். அதே ஊரைச் சார்ந்த அரங்கநாதன், பெதப்பம்பட்டி தூயமணி என்போரெல்லாம் ஊருக்குள்ளே வந்து ஊர்வலம் போவார்கள். ”தந்தை பெரியார் ஈவெராவும், பேரறிஞர் அண்ணாவும், டாக்டர் கலைஞர் மு..வும், பேராசிரியர் பெருந்தகையும், ஊட்டி வளர்த்த தமிழுணர்வு, தீயாய் எரியுது கொண்டுணருஎன முழக்கமிடுவார்கள். எஞ்சோட்டுப் பையன்களுக்கெல்லாம் உடல் தகதகவெனக் கொழுந்துவிட்டு எரியும். இப்படித்தான் எங்கள் ஊரில் தமிழ் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது.

கூட்டங்களிலே அடிக்கடி சிலப்பதிகாரத்தைப் பற்றிப் பேசுவார்கள். வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பூத சதுக்கம், பாவை மன்றம், குரவையாடல் என அடுக்கடுக்காய் வர்ணிப்பார்கள். வந்திருப்போரைக் குதூகலப்படுத்தும் பொருட்டு, மங்கையர் அழகை இலக்கியச் சுவையோடு விவரணை செய்வார்கள்.  மயிரழகை, முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை என்றெல்லாம் சொல்லிப் பேசும் போது, தீந்தமிழ்ச்சொற்கள் தென்றலாய் வளைய வந்தன. நமக்கும் ஆவல் பிறக்கும்.

வாகைத்தொழுவு வேலூர்த் தலைவாசலில் அரசமரம் வேம்புமரம் பிணைந்த மேடை ஒன்று உண்டு. அதுதான் எங்களுக்கான பேச்சுமேடை. பேச்சு வராத நேரத்தில் ஒருவன் வந்து கழுத்துநரம்பு புடைக்க, “வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்றவரைக் கூத்தாட்டு, வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனேஎன்று சொல்வான். அவனுக்குப் போட்டியாக, நாம், “உலகம் யாவையும் தாமுளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்! அன்னவர்க்கே சரண் நாங்களே”. இதைப் பார்த்த இன்னொருத்தன் அந்த மேடையேறி, அவன் பங்குக்கு, “நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, மெத்தக்கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”, இப்படி நாளொரு விளையாட்டும் பொழுதொரு பாட்டும் பேச்சுமாய்க் கழியும்.

எதற்காக நாம் இதையெல்லாம் பேச வேண்டி இருக்கின்றது? இப்படியெல்லாம்தான் தமிழ்மொழியானது, தம் பயணத்தில் திளைத்துத் திளைத்து நம்மிடையே குடி கொண்டுள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டி இருக்கின்றது. இது மட்டும்தானா என்றால் இல்லை. எங்கள் ஊர்ப்புறத்தில், நிறைய முருகன் கோவில்களும் சிவன் கோவில்களும் உண்டு. செஞ்சேரிமலை முருகன், பூரண்டாம்பாளையம் சிவன் கோவில் எனப் பலப்பல. அங்கெல்லாம் தமிழ் தாண்டவம் ஆடும்.  நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்கயென காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

இந்த இடத்தில், அண்ணன், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் பேச்சினை இரவல் வாங்கிக் கொள்கின்றேன். “தமிழை, எவனாலும் அழிக்க முடியாது. ஆமாம், எவனாலும் தமிழை அழிக்க முடியாது!”. தமிழரைத் தவிர. ஆம், நாம் எப்போது தமிழைப் பயன்படுத்தத் தவறுகின்றோமோ, எப்போது சிதைக்கத் தலைப்படுகின்றோமோ, எப்போது அதன் மீதான அக்கறையைத் தொலைக்கிறோமோ, அப்போதுதான், அப்போதுமட்டும்தான் தமிழுக்கான பின்னடைவு துவங்குகின்றது என்பது அவரது பேச்சின் அடிப்படை.

ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்து, அச்சுக்கோர்ப்பவராக, பிழைதிருத்துபவராக, கறாரான பிழைதிருத்துபவராக இருந்து, மாபெரும் இலக்கியவாதியாக, எழுத்தாளராக உருவெடுத்தவர் ஜெயகாந்தன் அவர்கள். நான் அடிக்கடி சொல்வது உண்டு, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ஒரு சிறுகதை உண்டு.  பிழை திருத்துபவரின் மனைவி”. நெஞ்சை உலுக்கின்ற கதை. தமிழ்மொழி சிதைந்து விடக் கூடாதென உழைத்தவர்களின் கதை அது. அந்தக் கதை இணையத்தில், அவரது வலைப்பதிவிலேயே இருக்கின்றது. அனைவரும் வாசிக்க வேண்டும். இப்படித்தான் தமிழ் நின்று வென்று கொண்டிருக்கின்றது.

கடைசியாக ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். மினசோட்டா தமிழ்ச்சங்கத்தினர் என்னிடம் இருபது படைப்புகளைக் கொடுத்து, நடுவராக இருந்து, போட்டிக்கான தெரிவுகளைக் கொடுக்கச் சொன்னார்கள். மிகவும் கடினமான வேலை அது. அந்த அளவுக்கு, படைப்புகளின் தரமும் நயமும் மேலோங்கி இருந்தன. கடைசியில், கருத்தாழம், எழுத்துநடை, தலைப்பு எல்லை என அவர்கள் கொடுத்த அளவுகோல்களுக்கும் மேற்பட்டு, கையால் எழுதிக் கொடுத்தவர்களுக்கு கூடுதல் புள்ளிகள் வழங்கலானேன். ஏன்?

ஐந்து, அல்லது ஆறு பக்கக் கட்டுரையை, எந்தவொரு அடித்தல் திருத்தலுமின்றி எழுதிக் கொடுக்க, நம்மில் எத்தனை பேரால் முடியும்? உள்ளபடியே, ஊன் உயிரெல்லாம் தமிழ் குடிகொண்டிருந்தால்தான் முடியும். அதுதான் உழைப்புக்கும் உணர்வுக்கும் அடையாளம். இப்படியானவர்கள் இருக்கும்வரையிலும், இப்படியாகத் தமிழை ஆராதிக்கின்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் தமிழ்ச்சங்கங்களும் இருக்கும் வரையிலும், தமிழ் நின்று வெல்லும். வென்றாக வேண்டும் தமிழ்.

சிதையா உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே, தமிழ் வாழ்க!  நன்றி!