நட்பென்பது யாதெனில் வாழ்க்கைப் பயணத்தில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது. ஏன், பேசிக்கொள்ளாமலே ஒரு *புன்முறுவல் பூப்பதாகவும்* இருக்கலாம்.
மனித வாழ்க்கையின் மிக முக்கியமான, ஆழமான உறவுகளில் நட்பு தனித்துவமானது. அது ரத்த உறவையொத்த பிணைப்பைக் கொண்டிருந்தாலும், எந்தவித கட்டாயமும் இன்றி, மனதின் ஆழத்தில் இருந்து தானாகப் பூக்கும் பூவைப் போன்றது. ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தில், இன்பத்திலும் துன்பத்திலும் உடன்வரும் ஏதோவொன்றாகக் கூட இருக்கலாம் அது.
நட்பென்பது வெறும் பேச்சால் மட்டும் கட்டப்பட்டது அன்று. ஒருவருக்கொருவர் தத்தம் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதும் நட்பின் வெளிப்பாடுகள்தான். ஆனால், அதைவிட மேலானது மௌனத்தின் மொழி. சில நேரங்களில், ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத உணர்வுகளை, இரு நண்பர்களுக்கு இடையேயான ஒரு புன்முறுவல் ஊட்ட வேண்டிய உணர்வினைப் பூக்க வைத்துவிடும். அந்தச் சிரிப்பில், ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையும், புரிதலும், அன்பும் அடங்கியிருக்கும். எதிர்பார்ப்புகள் இல்லாமல் கொடுப்பதும், ஆறுதல் சொல்வதும், தவறு செய்தால் சுட்டிக்காட்டுதும்தான் அதன் இலக்கணம். அது ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலைப் போன்றது. அதன் அடியில் அமரும்போது, எல்லா கவலைகளும் மறைந்து, மனம் அமைதி அடையும்.
வாழ்க்கைப் பாதையில், நாம் பலரைச் சந்திக்கிறோம்; பலருடன் பழகுகிறோம். ஆனால், ஒரு சிலரே நம் இதயத்தில் அவர்களுக்கானதொரு இடத்தைப் பிடிக்கின்றனர். அவர்கள்தான் நம் *நண்பர்கள்* . அவர்களின் வருகை நம் வாழ்வை வண்ணமயமாக்குகிறது. எனவே, அத்தகைய நட்பைப் போற்றுவது கடமையாகும். அந்தப் புன்முறுவல்களின் கதைகளும், பேசாத வார்த்தைகளின் பொருண்மியங்களும் என்றென்றும் நீடிப்பதே நட்பின் கதையாகத் தொடரும்.
கண்டம் விட்டுக் கண்டமாக அந்நியப்பட்டுவிட்ட நமக்கு, *வேணுகோபால்* என்பவர் யாரென்றே தெரியாது. புனைவாக நாம் அடித்து விட்ட கதைகளைக் கண்டவர், தனித்தகவல்களாக அவ்வப்போது எதையாவது அனுப்புவார். முன்பின் தெரியாத ஒருவரிடம் நாம் பெரிதாக ஒன்றும் அளவளாவிட முடியாதுதானே? நன்றி சொல்தலும் வணக்கம் சொல்தலுமாக இருந்த காலகட்டம். கோவிட் பெருந்தொற்று.
*வேணு* , போலந்தில் இருக்கும் மகளைப் பார்க்கச் சென்றவர் அங்கேயே இருக்கும்படி ஆகிவிட்டது. அன்றாடம் நம்மிடம் பேசுவார். எங்கள் அலுவலகம் _கிராக்கோவ்_ , _வார்சா_ ஆகிய இரு நகரங்களிலுமே உள்ளது. அணுக்கமான நண்பர்கள் நமக்கு அங்கு உண்டு. ஏதாகிலும் உதவி தேவைப்பட்டால் சொல்லுங்களென்றேன். ஊருக்கு டிக்கெட் மாத்திரம் ஏற்பாடு செய்யக் கேட்டுக் கொண்டார். நானும் அலுவலகத்தில் சொல்லி வைத்திருந்தேன். ஆனால் எனக்குத் தகவல் வருவதற்கு முன்னம் அவரேவும் ஏற்பாடுகள் செய்து கொண்டார். பயணக்கட்டுப்பாடுகள் எல்லாம் தளர்ந்தபின்னர் ஊருக்கு வந்திருந்த நேரத்தில் ஒரு சில முறை சந்தித்துக் கொண்டோம்.
வாழ்க்கை என்பது நிச்சயமற்ற ஒரு பயணம். எப்போது எந்தத் திருப்பம் வருமென்று யாருக்கும் தெரியாது. மரணம் என்பது வாழ்வின் நிரந்தரம். அந்த நிஜத்தின் முன் நின்று பார்க்கையில், நம் கையில் இருப்பது இந்தத் தற்காலம் மட்டுமே! இறப்பைப் பற்றிய அச்சத்திலோ அல்லது கடந்த காலத்தின் வருத்தங்களிலோ, நம் பொன்னான நிகழ்காலத்தை விரயம் செய்ய வேண்டியதில்லை. இனிமேல் வரப்போகும் நாட்களைப் பற்றிக் கனவு காண்பதை விட, இன்று என்ன செய்ய முடியுமென்பதில் கவனம் செலுத்தியாக வேண்டும். ஒவ்வொரு விடியலும் ஒரு புதிய வாய்ப்பு; ஒவ்வொரு மூச்சும் ஒரு கொண்டாட்டம். இந்த நொடியில் முழுமையாக வாழ்ந்திடுவோம்; உணருங்கள், சிரியுங்கள், அன்பு செலுத்துங்கள்!
நேசித்தவர்களோடு நாம் கழித்த நாட்களை நினைத்துத் துயரப்படுவதற்குப் பதிலாக, அவர்கள் நமக்கு அளித்த மகிழ்ச்சியான தருணங்களை எண்ணிப் பார்க்க வேண்டும். வாழ்க்கைப் பயணத்தில் இருந்து விடைபெற்றுக் கொண்டோரின் நினைவுகள்தான் நம்முடைய விலைமதிப்பற்ற சொத்து. நாம் சிரித்த சிரிப்புகள்... ஒருவருக்கொருவர் அளித்த ஆறுதல்கள்... ஒன்றாகப் பகிர்ந்து கொண்ட தருணங்கள்... இவை அனைத்தும் காலத்தால் அழியாத செல்வம். அந்த நினைவுகளின் ஒளியில், நம் எஞ்சிய வாழ்வை நாம் வாழ வேண்டும். அவர்கள் நம்முடன் இல்லாவிட்டாலும், அவர்களின் அன்பின் சுவடுகள் நம் இதயத்தில் என்றென்றும் பதிந்திருக்கும்.
துயரத்தை ஒதுக்கிவிட்டு, நேசத்துக்குரியவர்களுடன் நாம் பகிர்ந்த அனுபவங்களின் ஆனந்தத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். இந்த வாழ்க்கை நமக்கான, ஒரு அற்புதமான கதை. அதில் ஒவ்வொரு நொடியும் நாம் நாயகனாக வாழும்போது, மரணம் என்பது ஒரு முடிவாக இல்லாமல், நிறைவான ஒரு பயணத்தின் ஓய்வாக மாறும். வாருங்கள், வருத்தம் வேண்டாம். அன்னாரின் அன்பின் நினைவுகளோடு, தற்காலத்தைத் துணிவாக எதிர்கொள்வோம்! அன்பனுக்கு *மலர்வணக்கம்* !
𝐌𝐚𝐲 𝐭𝐡𝐞 𝐠𝐨𝐨𝐝 𝐭𝐢𝐦𝐞𝐬 𝐰𝐞 𝐞𝐱𝐩𝐞𝐫𝐢𝐞𝐧𝐜𝐞𝐝 𝐫𝐞𝐬𝐨𝐧𝐚𝐭𝐞 𝐭𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐭𝐡𝐞 𝐫𝐞𝐬𝐭 𝐨𝐟 𝐨𝐮𝐫 𝐣𝐨𝐮𝐫𝐧𝐞𝐲.
-பழமைபேசி.
No comments:
Post a Comment