12/15/2025

பேரவை விழா 2025 - நிகழ்ச்சி நிரல்க் கட்டமைப்பு 2

வேலையின் தன்மை, தரவுகள், முடிவெடுத்தல், செயல்முறைகள் தொடர்பாகத் திறந்த மனப்பான்மை, அணுகல், தெளிவு ஆகியவற்றை மேம்படுத்த, கையில் உள்ள தொழில்நுட்பத்தை நேரிய வழியில் பயன்படுத்துவது உகந்தது. தொழில்நுட்பம் என்பது தற்போது வெறும் உற்பத்தித்திறனுக்கானது மட்டுமல்ல; வெளிப்படையான கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முதன்மை வழிமுறையாகவே நாம் கருத வேண்டும்.

தொழில்நுட்பப் பயன்பாடு என்பது, விவாதங்கள், கூட்டக்குறிப்புகள், ஆவணங்களை ஒருங்கே திரட்டி, முடிவுகளையும் அவற்றின் காரணங்களையும்  பதிவுகளாக ஆக்கி, தேடக்கூடியதாகவும், சான்றுகளாகவும் வெளிப்படைத் தன்மையைக் கட்டமைப்பதையும் உறுதி செய்கின்றது. அந்த வகையில் நிகழ்ச்சிநிரல் வகுப்பிலும், தரவுகளும் செய்யறிவுத் தொழில் நுட்பமும் பயன்படுத்தப்பட்டன.

2009 - 2017 ஆண்டுகளுக்கிடையேயான சில ஆண்டுகளின் நிகழ்ச்சி நிரல்களை செய்யறிவுத் தொழில்நுட்ப வழங்கியிடம் கொடுக்கவும், அது அவற்றைப் பகுப்பாய்ந்து பொதுவான ஓர் அட்டவணையைக் கொடுத்தது. அதன்படிக்கு, முதல்நாள் இத்தனை மணி நேரம், இரண்டாம் நாள் இத்தனை மணி நேரம், ஆண்டுதோறும் இடம் பெறுகின்ற நிகழ்ச்சிகள் இன்னின்னவை, அவை ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு காலம் என்பதையெல்லாம் கொடுத்து, ஒரு மாதிரி நிரலையும் நமக்குத் தந்துவிடுகின்றது.

மேற்படித் தரவுகள் நிகழ்ச்சிக்குழு, வழிகாட்டுதல்க்குழு ஆகியவற்றிடமும் காண்பிக்கப்பட்டு, கூடுமானவரையில் கிட்டத்தட்ட 50 விருந்திநர்கள் வரையிலும் அழைக்கலாமென்பதாகப் பணிகள் துவங்கின. செய்யறிவு(AI) கொடுத்த வரைவினையே அடிப்படையாகக் கொண்டுதாம் நிகழ்ச்சிநிரல்ப் பணிகளும் இடம் பெற்றன. இப்படியான நிகழ்ச்சிநிரல் என்பது தகவல் தொடர்புக்குரிய மின்னஞ்சல் கணக்கில் உருவாக்கப்பட்டு இருந்தாலும் கூட, தலைவர், ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட சிலருக்கும் இணைப்பராமரிப்பு (edit access) வழங்கப்பட்டிருந்தது.  எந்தவொரு திருத்தமும் தன்னிச்சையாகச் செய்யப்படவில்லை. தலைவர், ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையிலேயே ஒவ்வொன்றும் செய்யப்பட்டன.

70% அளவுக்கு அட்டவணை முதிர்ச்சித் தன்மை கண்டதுமே, சுட்டி(url) இருப்போர் எவரும் பார்க்கக்கூடிய அளவில் வசதியமைப்புச் செய்யப்பட்டு ஒலி ஒளிக்குழுவினரிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டது. காரணம், அவர்கள் ஒவ்வொரு நிகழ்ச்சிப் பொறுப்பாளரிடமும் நேரிடையாகப் பேசவும் ஒலி, ஒளி, நுட்பங்களைப் பேசித் தீர்த்துக் கொள்வதற்கும் வசதியாக. அந்த நாளிலிருந்து, அது நிகழ்நிலை ஆவணமாகவே இன்று வரையிலும் இருந்து வருகின்றது.

95% முதிர்ச்சி கண்டவுடன், செயற்குழுவின் ஒப்புதலுக்குப் பகிரப்பட்டது. சில திருத்தங்கள் சொல்லப்பட்டன. தலைவர், ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் அவை செய்யப்பட்டன. பிற்பாடு, நிகழ்ச்சிக்குழுவுடன் பகிரப்பட்டது. சில நிகழ்ச்சியின் பெயர்கள், வடமொழி, ஆங்கிலத்தில் இருந்தன. அவற்றுக்கான மாற்றுப் பெயர்கள் வைக்கச் சொல்லப்பட்டது. அப்படியாகப் பெயர்கள் மாற்றப்பட்டன. வழிகாட்டுதல்க் குழுவுக்கும் பகிரப்பட்டது. இப்படியாக அந்தச் சுட்டியினூடாக, நிகழ்நிலை ஆவணம் பொதுப்பார்வைக்கும் திறந்துவிடப்பட்டது. 

மேற்படிக்குழுக்களின் ஒப்புதல்களும் திருத்தங்களும் செய்யப்பட்டு இன்றளவும் பேரவைக் கணக்கில் காணக்கிடைக்கும் ஆவணம் இதுதான். https://shorturl.at/WLrx3 ஜூலை 2ஆம் நாளுக்குப் பின்னர் எவ்விதத் திருத்தங்களும் எம்மால் மேற்கொள்ளப்படவில்லை. இணைப்பராமரிப்பாளர்கள், பதிப்பு வரிசையையும்(version history) இன்றளவும் காணமுடியும். மனிதர்கள் மாற்றிப் பேசலாம். ஆவணங்கள் பேசுவதில்லை.

𝐃𝐨𝐜𝐮𝐦𝐞𝐧𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐢𝐬 𝐚𝐧 𝐚𝐜𝐭 𝐨𝐟 𝐞𝐦𝐩𝐚𝐭𝐡𝐲 𝐟𝐨𝐫 𝐟𝐮𝐭𝐮𝐫𝐞 𝐫𝐞𝐚𝐝𝐞𝐫𝐬, 𝐢𝐧𝐜𝐥𝐮𝐝𝐢𝐧𝐠 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐮𝐭𝐮𝐫𝐞 𝐬𝐞𝐥𝐟.

-பழமைபேசி,

#Truth,Transparency & Trust
#FeTNA2025
#Empathy
#ProgramLineUp

No comments: