12/17/2025

2025 பேரவைத் திருவிழா - பன்மைத்துவப் பெருவிழா

பண்பாட்டு மாநாடுகளில் சமநிலையைப் பேணுவதற்கான பல முக்கியமான பற்றியங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பண்பாட்டு விழாக்களில் பன்மைத்துவம் என்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் உயிர்ப்பாகும். பலதரப்பு மக்களுக்கும் உரிய கவனத்தைக் கொடுத்து, பங்களிப்புக்கான இடத்தைக் கொடுத்து, சமநிலையோடு நன்றி பாராட்டி ஒன்றிணைந்து கொண்டாடும் போது, நமக்குள் இருக்கும் வேறுபாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு உறவு தழைக்கின்றது. நம் பிள்ளைகள் இத்தகைய மாநாடுகளைப் பார்க்கும்போது, உலகம் என்பது பலதரப்பட்ட மக்களைக் கொண்டதென்பதை இயல்பாகவே புரிந்துகொள்கிறார்கள். இது அவர்களையும் நம்மையும் சகிப்புத் தன்மை கொண்டவர்களாகக் கட்டமைத்துக் கொள்ள வழிகோலுகின்றது.

🎭 உள்ளடக்கம், பல்சார்புப்பங்களிப்பு 

பல்வேறு விழுமியங்கள், கோட்பாடுகளின் வெளிப்பாடுகள்; மாநாட்டில் விவாதிக்கப்படும், காட்சிப்படுத்தப்படும் விழுமியங்கள், சிந்தனைகள் ஒரே வட்டத்திற்குள் அடங்கிவிடாமல், பரந்துபட்ட, வட்டார, சகல தரப்புப் பண்பாடுகளையும் விருப்பங்களையும் சமமாக வெளிப்படுத்தவும் உட்பட்டதாயும் இருத்தல் வேண்டும்.

பல்வேறு கருப்பொருள்கள்: கலை, இலக்கியம், மொழி, வரலாறு, உணவு, இசை, உடை போன்ற பல்வேறு பண்பாட்டுப் பண்புகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட கூறு ஓங்கலான ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பழமை, புதுமை: பாரம்பரிய, பழமையான பண்பாட்டு வடிவங்களுடன், சமகால பண்பாட்டுப் போக்குகளுக்கும் இடம் அளிக்க வேண்டும்.

🎤 பேச்சாளர்கள், பங்கேற்பாளர்கள், கலைநிகழ்ச்சிகள், அரங்குகள்

இணையான வாய்ப்பு: மாநாட்டுப் பேச்சாளர்கள், குழு விவாத அறிஞர்கள், வழங்குநர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, பாலினச் சமநிலை, பல்வேறு வயதுக் குழுக்கள், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் பங்கேற்புக்கும் உறுதி செய்யப்பட வேண்டும்.

மாறுபட்ட சிந்தனைகள்: கல்விசார் அறிஞர்கள், கலைஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் என மாறுபட்ட பின்னணிகளைக் கொண்டவர்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

சிறுபான்மைக்குரல்: மாநாட்டில் குரல் குறைவாக ஒலிக்கக்கூடிய சிறுபான்மை, ஒதுங்குநிலைச் சமூகங்களின் பண்பாடுகளுக்கும் அவர்களின் தரப்பாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

📝 நடைமுறை ஏற்பாடுகள் 

மொழி அணுகல்த்தன்மை: பேச்சுகள், நிகழ்வுகள், ஆவணங்களைச் சீரான முறையிலும் ஏற்றத்தாழ்வுக்கு இடமளிக்காத வகையிலும் தொடர்ந்து இடம் பெறச்செய்தல் வேண்டும்.

வெளிப்படையான கொள்கைகள்: பங்கேற்பாளர்கள், கலைநிகழ்ச்சிகள், பேச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வரையறைகள், கொள்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

🧘 உரையாடல் அணுகுமுறை 

திறந்தமனப்பாடு: விமர்சனங்கள், மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், கருத்தாடல்கள் எல்லாத் தரப்பினருக்கும்  இடமளிக்கக் கூடிய வகையிலும், பண்பட்ட முறையில் நடைபெறுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை: எந்த ஒரு கூற்றினையும் தரப்பினையும் மதிப்புக் குறைவாக வெளிப்படுதலைத் தவிர்க்க வேண்டும். மேலும், ஆக்கிரமிப்பு, மேலாதிக்கம், வியந்தோதலின் வீச்சு எல்லைமீறப்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மறுமொழிகள்: மாநாடு முடிந்த பிறகு, பங்கேற்பாளர்களிடம் இருந்து கருத்துகள் பெற்று, அடுத்த மாநாட்டில் சமநிலையை மேலும் மேம்படுத்த முயன்றாக வேண்டும்.

இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம், மாநாடு என்பது, அனைவரையும் உள்ளடக்கிய, மரியாதைக்குரிய, பண்பாட்டுப் பன்முகத்தன்மையைக் கொண்ட ஒரு தளமாக அமைந்து விடுகின்றது. சிற்சிறு நகர்வுகளையும் நன்கு திட்டமிட்டு, அன்பையும் அக்கறையையும் சேர்த்துச் சேர்த்து, குருவி கூடு கட்டுவதைப் போல, ஒவ்வோர் இணுக்கு இணுக்காகக் கொணர்ந்து கொணர்ந்து, பின்னிப்பின்னிக் கட்டமைப்பதற்கான உழைப்பினை, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் செய்கின்றபடியால்தான் இப்படியான மாநாடு நமக்கு வாய்க்கப் பெறுகின்றது. அத்தகைய கூட்டுப்பணிக்கு இடைஞ்சலாக, திட்டமிட்டுக் குறுக்கீடுகள் நிகழும்போது எவனொருவனும் அறச்சீற்றம் கொண்டாக வேண்டும். 𝐇𝐮𝐦𝐚𝐧𝐢𝐭𝐲 𝐬𝐭𝐚𝐧𝐝𝐬 𝐭𝐨𝐝𝐚𝐲 𝐛𝐞𝐜𝐚𝐮𝐬𝐞 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐮𝐧𝐬𝐞𝐞𝐧 𝐰𝐨𝐫𝐤 𝐨𝐟 𝐬𝐞𝐥𝐟𝐥𝐞𝐬𝐬 𝐚𝐜𝐭𝐢𝐯𝐢𝐬𝐭𝐬.

ஜூலை 6, 2025. இலக்கியக் கூட்டத்தில் பேசிய ஆளுமைகள் எல்லோராலும் சொல்லப்பட்டு அன்று, வலியுறுத்திச் சொல்லப்பட்ட கருத்துதான் இது. ”பன்மைத்துவம் ஓங்கிய பெருவிழா, இந்தக்கால கட்டத்தில் இது போன்ற விழாக்களைத் தமிழ்ச்சூழலில் காணக்கிடைக்காத விழா”. குறிப்பாக, இலக்கிய ஆளுமைகள் சு.வேணுகோபால் அவர்களும், ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களும் வெகுவாகப் பாராட்டிப் பேசினர். ‘பெருமாள் முருகன் வரக்கூடாது; அண்ணாமலை வரக்கூடாது; ஸ்டாலின் ராஜாங்கம் வரக்கூடாது; செந்தலை கவுதமன் வரக்கூடாது”, இது போன்ற வரக்கூடாதுகள் பிற்போக்கானவை. எல்லாத் தரப்புகளும் வர வேண்டும். நமக்குள் பண்பட்ட உரையாடல்கள் நிகழவேண்டும். நமக்குள் இணக்கம் மேலோங்க வேண்டும். அழைக்கப்படுகின்ற விருந்திநர் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்க வேண்டும். அதே நேரம் சமநிலை தவறாமல், சீர்த்தன்மைப் பிறழ்வின்றிச் சகலகூறுகளும் இடம் பெற வேண்டும். தனிப்பட்ட பகைமைகளைப் பாரமாக்கி, மேட்டிமைகளைத் தூக்கித் திரிந்து கொண்டிருத்தல் என்றென்றும் ஆகாது. யாதும் ஊரே யாவரும் கேளிர்! 

ஐயா மணியரசன் அவர்கள், தாமாகவே நம்மை அழைத்து, ’நீங்கள் யார்?, பல இடங்களில் உங்களைப் பார்க்கின்றேன், மங்காத தமிழென்று சங்கே முழங்கு என நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது கண்டு மகிழ்கின்றேன்’ என்றெல்லாம் சொல்லி, பாவேந்தர் பாரதிதாசன் குறித்துத் தம் நினைவுகளைப் பகிர்ந்து ஊக்கமூட்டிப் பேசினார்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38ஆவது ஆண்டு விழா, கேரொலைனா தமிழ்ச்சங்கத்தின் செம்மாந்த விருந்தோம்பல்ப் பெருவிழா, பன்மைத்துவம் போற்றியதன் உச்சகட்டம். அதில் நாமும் பங்காற்றினோமென்பதில், தன்னார்வலர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்நாள்ப் பெருமை உண்டு. வாழிய நற்றமிழ்!

𝐌𝐞𝐠𝐚 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬 𝐡𝐚𝐩𝐩𝐞𝐧𝐬 𝐰𝐡𝐞𝐧 𝐨𝐩𝐭𝐢𝐦𝐢𝐬𝐦, 𝐞𝐦𝐩𝐚𝐭𝐡𝐲, 𝐚𝐧𝐝 𝐭𝐨𝐥𝐞𝐫𝐚𝐧𝐜𝐞 𝐣𝐨𝐢𝐧 𝐟𝐨𝐫𝐜𝐞𝐬.

-பழமைபேசி.


#Truth,Transparency & Trust

#FeTNA2025

#Empathy

#Inclusiveness


No comments: