7/02/2024

நூற்றாண்டு விழாக்காணும் கலைஞர் மு.கருணாநிதி

இந்தியாவில் 1956ஆம் ஆண்டு இந்துவாரிசுச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, தந்தையும் தாயும் ஈட்டிய சொத்துகளில் அவர்களுக்குப் பிறகு பாலின வேறுபாடின்றி எல்லாக் குழந்தைகளுக்கும் உரிமையுண்டு எனப்பட்டது. எனினும், பூர்வீகச் சொத்தில் ஆண் வம்சாவளிக்கு மட்டுமே உரிமை உண்டு. பெண்களுக்கு உரிமை கிடையாது. தமிழ்நாடு மாநிலச் சட்டத்தின் வழியாக அம்மாநில அளவில் பூர்வீகச் சொத்திலும் பெண்களுக்கு உரிமை கிடைக்கும் வகையில், 1989ஆம் ஆண்டில் அம்மாநில முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி சட்டத்திருத்தம் கொணர்ந்தார். அதையொட்டி, 2005ஆம் ஆண்டு, இந்தியநாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் அதேபோல பெண்களுக்கான சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்தது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர், அரசியல்வாதி, எழுத்தாளர், நடிப்புக்கலைஞர், இதழியலாளர், பேச்சாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை எனும் ஊரில் முத்துவேலர், அஞ்சுகம் அம்மையார் ஆகியோருக்கு 1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் நாள் பிறந்தவர். மாணவப் பருவத்திலேயே செயலாற்றல் மிகுந்து திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் எனும் அமைப்பைத் தோற்றுவித்து அதன் தலைவராகவும் விளங்கினார். அதுவே பின்னாளில் மாநில அளவிலான அமைப்பாகவும் உருப்பெற்றது. இவ்வமைப்புக்கான இதழாக மாணவநேசன் எனும் இதழையும் தோற்றுவித்து நடத்தினார் அதன் தலைவர் கருணாநிதி அவர்கள். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், 1942ஆம் ஆண்டில் முரசொலி இதழையும் தோற்றுவித்து ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.

இளம் வயதிலேயே தமிழ்த் திரைப்படங்களுக்கும் நாடகங்களுக்கும் கதை வசனம் எழுதுவதையும் மேற்கொண்டார். இராஜகுமாரி எனும் திரைப்படம்தான் கலைஞர் கருணாநிதி அவர்கள் கதை வசனம் எழுதிய முதற்திரைப்படம், வெளியான ஆண்டு 1947. அவர் கதை வசனம் எழுதி வெளியான முதல்நாடகம் ’பழநியப்பன்’ என்பதாகும்; வெளியான ஆண்டு 1944. இதற்குமுன்னர் உள்ளூரளவில் பல நாடகங்களில் நடித்தும், கதை வசனம் எழுதியும் இருக்கின்றார். ‘தூக்குமேடை’, ‘பரப்பிரம்மம்’, ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமகுடம்’ என 21 நாடகங்களை எழுதியுள்ளார். அவர் கதை எழுதிய திரைப்படங்களுள், ‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘பூம்புகார்’, ‘பாலைவன ரோஜாக்கள்’ முதலானவை வெற்றிப் படங்களாக அமைந்ததோடு, தமிழ்ச்சமூகத்தின் சீர்திருத்தப் பாதையில் பெரும் தாக்கத்தை உண்டு செய்தபடங்களாகவும் அமைந்தன.

’தூக்குமேடை’ நாடக விளம்பரத்தில் இடம்பெற்ற கருணாநிதி அவர்களை ‘அறிஞர் கருணாநிதி’ எனக் குறிப்பிட்டிருந்தார் சகநடிகரும் நாடகத் தயாரிப்பாளருமான எம்.ஆர்.இராதா அவர்கள். அறிஞர் என்றால், அது தலைவர் அண்ணாத்துரை ஒருவரேயென கருணாநிதி அவர்கள் மறுப்புரைத்துவிடவே, ‘கலைஞர்’ எனக் குறிப்பிட்டு அழைக்கப்படலானார். அன்றுமுதல் ‘கலைஞர்’ என்பதும் ‘கருணாநிதி’ என்பதும் ஒருசொல்போலவே நிலைத்துவிட்டன.

திரைப்படப்பாடல்கள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என அவரால் எழுதப்படாத இலக்கிய வடிவங்களே இல்லையெனும் அளவிற்குப் படைப்புகளை, 178 நூல்களைக் கொடுத்திருக்கின்றார். அவற்றுள், ‘குறளோவியம்’, ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகியன முதன்மையானதும் படைப்புலகில் எவரும் உடனே சொல்லக்கூடிய வகையிலும் புகழ்பெற்றனவாகும்.

தமிழர்கள், தமிழ்நாடு ஆகியவற்றுக்கான அடையாளங்களைக் கட்டமைத்ததில் தனியிடத்தைப் பெற்றவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள். நாட்டுப்பண்ணுக்கு இணையாக தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டின் உணவுவழங்கல் நிறுவனத்துக்கு இணையாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சமயச்சார்பற்ற அறநெறி நூலான திருக்குறளுக்கு முக்கியமளித்து வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலை என நிறையப் பணிகள் இடம் பிடிக்கின்றன.

தம் பதினேழாவது வயதில் முறையாகத் தம் அரசியல் பணியைத் துவக்கியவர் இந்தியாவின் முக்கிய அரசியல்தலைவராக பரிணமித்தார். தனிப்பட்ட முறையில் தாம் போட்டியிட்ட எல்லாத் தேர்தல்களிலும் வெற்றியைக் கண்டவர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, கட்சித் தலைவராகயென நெடியதொரு அரசியல் பயணத்துக்குச் சொந்தக்காரர்; சமூகச்சீர்திருத்தக் கொள்கைகளுக்கு முன்னுரிமையளித்தவரென கருதப்படுபவர்.

பொருளாதாரச் சமுத்துவம், பாலினச்சமுத்துவம் முதலானவற்றுக்கான பல திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயற்படுத்தியவர். தமிழ்நாட்டில், மூன்றாம்பாலின நல வாரியத்தை நிறுவியவர். சமத்துவபுரம் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். 'உடல் ஊனமுற்றோர்' எனும் சொல்லுக்கு மாற்றாக, 'மாற்றுத்திறனாளிகள்' எனும் சொல்லை அறிமுகப்படுத்தி, அவர்களையும் மற்றவருக்கு இணையாகவும் ஈடாகவும் உள்ளடக்கிய பொருளாதார மண்டலங்களை உருவாக்கத் தலைப்பட்டவர்.

உலகளாவிய அளவில் ஏற்படும் சமூகச் சீர்திருத்தங்களைக்கற்று உடனுக்குடனே அவற்றைத் தமிழர்களுக்கிடையேயும் அறிமுகப்படுத்துவதில் துடிப்புமிக்கவராகத் திகழ்ந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், தம் 94ஆவது வயதில் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் ஏழாம் நாள் விடை பெற்றுக் கொண்டவரானார்.

'உடன்பிறப்பே' என விளிக்கும்பாங்கினைத் தனித்துவமாய் அறிமுகப்படுத்திக் கடைபிடித்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், சொற்களினூடாகவும் நல்லபல திட்டங்களின் வழியாகவும் தமிழின் அடையாளங்களைக் கட்டமைத்துத் தமிழின் அடையாளமாகவே ஆகிவிட்டிருக்கின்றார்! உலகெங்கும் அவரது நூற்றாண்டு விழாக்கள் கடைபிடிக்கப்படுகின்றன; அமெரிக்காவிலும்!!

[நூற்றாண்டு விழா, சமத்துவம் முதலானவற்றை முன்னிறுத்திக் கடைபிடிக்கப்படும் விழாவின் மலரில், காய்தல் உவத்தல் புகழ்ந்தோதலற்ற ஆவணத்தன்மை கொண்டதொரு கட்டுரையாக, முதற்கட்டுரையாக இடம் பெற வேண்டிய அறிமுகக்கட்டுரை இஃது. இஃகிஃகி]

-பழமைபேசி.

No comments: