6/23/2024

இலக்கியக்கூட்டம் - 2


நீரின் மேற்பரப்பில் ஒரு மீன்
துள்ளி விழுகையில் கண்டது சுடும்பாறை
மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால்
மேலும் ஒரு துள்ளலில் மரணம்
மரித்த அக்கணமே பறவை.
-தேவதேவன்

கவிதையை வாசித்தமட்டிலும்  சிலருக்குப் புதிராகத் தெரிந்திருக்கும். சிலருக்கு, உணவுச்சங்கிலி நினைவுக்கு வந்திருக்கக்கூடும். ஒரு உயிரினத்தை பிறிதோர் உயிரினம் உண்கின்றது. படிநிலைகளைக் கடந்து கடந்து மேல்நோக்கி வருங்கால் மனிதன் உச்சத்தில் இருக்கிறான். ஆட்டம் போடுகின்றான். அவனுக்கானதுதான் இந்தக் கவிதை. அப்படியானால் இக்கவிதையானது இந்த மனிதனுக்கு என்ன சொல்கின்றது?

நிலையாமையை உணர்த்துகின்றது. நீரின் மேற்பரப்பில் ஒரு மீன். துள்ளி விழுகையில் ஒரு சூடான பாறையின் மீது போய் விழுகின்றது. சூடுதாங்காமல் மீண்டும் துள்ளுகின்றது. துள்ளலைக் கண்ட பறவை ஒன்று விரைவாய்ப் பறந்து வந்து தம் காலால் போட்டு அமுக்குகின்றது. காலில் அகப்பட்டதால் மீண்டும் துள்ளுகின்றது அம்மீன். இது துள்ளுவதைக் கண்டதும் தம் அலகுகளால் கவ்வி விழுங்குகின்றது பறவை. மூச்சுத்தப்பி மரிக்கின்றது மீன். மரித்த அக்கணத்தில் பறவையாகவே ஆகிப் போகின்றது அம்மீன். எதுவும் நிரந்தரமில்லை இவ்வுலகில். இதைத்தானா இக்கவிதை சொல்கின்றது? இல்லையென்பதே நம் புரிதலாக இருக்கின்றது. ஏன்?

கவிதைக்குத் தலைப்பு என ஒன்று இருக்க வேண்டும்தானே? தலைப்புக்கான தெரிவுகள் என்னவாக இருக்கலாம்? மீன் என்பதாக இருக்கலாம். பறவை என்பதாக இருக்கலாம். துள்ளல் என்பதும் ஒன்றுக்கும் மேற்பட்டுப் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளதாலே, துள்ளல் என்பதும் தலைப்பாக இருக்கலாம்.

மீன் என்பது தலைப்பாக இருக்குமேயானால், அது இழப்பின் குறியீடாக உருப்பெறும். பறவை என்பது தலைப்பாக இருக்குமேயானால், அது கொள்தல்/வெற்றி என்பதன் குறியீடாக உருப்பெறும். துள்ளல் என்பது தலைப்பாக இருக்குமேயானால், அது செயற்பாட்டின் குறியீடாக அமையும். இங்கே கவிஞர் தேவதேவன் அவர்கள் நமக்குக் கொடுத்திருப்பது, “துள்ளல்” என்பதேயாகும். அதுதான் கவிதையின் வெற்றியாக, சிறப்பாகப் பார்க்கின்றேன். கவிதையின் பரிமாணத்தையே ஒட்டுமொத்தமாய் மாற்றிப்போட்டு விடுகின்றது அத்தலைப்பு.

துள்ளல் என்பதில் இருவகையுண்டு. தம் பாதுகாப்புக்காய், உரிமைக்காய், விழுமியத்துக்காய் செயற்படுவது ஒருவகை. முன்னணியில் இருந்து கொண்டு, செயற்பாடு, விழுமியம், நோக்கம், குறிக்கோள் முதலானவற்றின்பாலல்லாது,  விளம்பரத்துக்காய், தன்முனைப்புக்காய், அப்போதைய இன்பத்துக்காய்ச் செயற்படுவது இரண்டாவது வகை. இவ்விருவகையானவையும் நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன இக்கவிதையுனுள்.

நீரின்மேற்பரப்பில் இருக்கின்ற மீன் துள்ளுகின்றது. தேவையின்றித் துள்ளுகின்றது. விழுமிய நோக்கில்லை. நோக்கற்றதினாலே போய்விழுகின்றது சுடும்பாறையினுள். தற்காப்புக்காய்த் துள்ளுகின்றது இம்முறை. ஒரு தவறினின்று காத்துக் கொள்ள மற்றொன்று, மற்றொன்றெனப் போய்க் கடைசியில் வல்லாதிக்கத்துக்குள் அடக்கமாகிவிடுகின்றது அம்மீன். இதுதான் கவிதை நமக்கு உணர்த்துவதாய்ப் பார்க்கின்றோம்.

ஒரு சிறுகவிதைக்கு இவ்வளவு மெனக்கெட்டுச் சிந்தித்து உணர்தல் தேவைதானா எனும் வினா உங்களுக்குள் எழலாம். அதுதான் நவீன இலக்கியம்!

ஃபிலடெல்பியா படிப்பு வட்டத்தில் ஏராளமான நவீனக் கதைகளுக்கு கோனார் உரை எழுதியிருந்தேன். அக்கதைகள் எல்லாமுமே  3- 6 வயதினருக்குட்பட்ட கதைகள் என்பதுதாம் சிறப்பு. என்னிடம் அதற்கான தரவுகள் தற்போது இல்லை. எனினும் The Dot எனும் 5 வயதுக்குழந்தைகளுக்கான கதை குறித்தும் எழுதியதாக நினைவு. https://www.prindleinstitute.org/books/the-dot/ அதற்கான மண்டைக்கசக்கல் எத்தகையது என்பதை இங்கு பார்க்கலாம்.

எதற்காக இதையெல்லாம் நாம் செய்ய வேண்டியதாய் இருக்கின்றது? மனிதன் என்பவனுக்கு மானம் எனும் நுண்ணுணர்வு உயிர்மூச்சாக இருக்க வேண்டியவொன்று. அத்தகு நுண்ணுணர்வுகள் சாகும்வரையிலும் நமக்குள் குடிகொண்டிருக்க வேண்டும். அதைப் பேணுவதற்கே கதை, கவிதை போன்ற இலக்கியங்கள் தேவையாக இருக்கின்றன. பார்த்த மாத்திரத்தில் ஒரு இன்முகச்சிரிப்பு, ’சாரி’ சொல்தல், முகமன் செலுத்துதல் இவையெல்லாம் நுண்ணுணர்வுள்ள சமூகத்தின் அறிகுறிகள்.

"அமெரிக்கப் பண்பாடு, கலையிலக்கியம் ஆகியவற்றுடன் ஓர் ஆக்கபூர்வமான உரையாடலுக்கு அவர்கள் முயல்வதே இல்லை. அங்குள்ள தீவிரமான அறிவியக்கம் பற்றி முழுமையான அறியாமையே இவர்களிடம் உள்ளது. அங்குள்ள அறிவியக்கத்துடன் உரையாடவேண்டும் என்றல் இங்குள்ள தரமான அறிவியக்கத்தையே கொண்டுசெல்லவேண்டும். ஆனால் அதை இவர்கள் அறிந்திருப்பதில்லை. இதன் விளைவாக இவர்கள் அமெரிக்காவில் பிறந்து வளரும் தங்கள் குழந்தைகள் முன் மிகக்கீழ்மையாக தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்" - எழுத்தாளர் ஜெயமோகன்.

அமெரிக்கவாசியான நான் இதனை எண்ணற்றமுறை அனுபவித்திருக்கின்றேன். கேலி, கிண்டலுக்காட்பட்டிருக்கின்றேன். என்னுடைய பதில் இப்படியாகத்தான் இருந்தது, “அம்மணாண்டிக லோகத்துல கோவணம் கட்டினவன் கோமாளி”.

-பழமைபேசி, pazamaipesi@gmail.com


No comments: