6/25/2024

பெருமையும் சிறுமையும் தான்தர வருமே


"I have taken more out of alcohol than alcohol has taken out of me" -Winston Churchill

நான் எட்டாம் வகுப்பு அரையாண்டு விடுமுறைக்கு என் பாட்டி ஊருக்குச்(லெட்சுமாபுரம்) சென்றிருந்தேன். காலை ஆறு மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டுத் தோட்டத்துக்கு அனுப்பிவிடுவார் பாட்டி. போகும் போது தாத்தாவுக்கு திருகணிச் செம்பில் காப்பி கொண்டு செல்ல வேண்டும். பால்கரந்த பின்னர், இரவுக் காவலுக்காய் தோட்டத்திலேயே தங்கியிருந்த தாத்தா தூக்குப்போசியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பி விடுவார். வீட்டுக்குச் சென்று, குளித்து, சாமிக்குப் பூசனை செய்து, கும்பிட்டுவிட்டு, காலைச்சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு மீண்டும் தோட்டம் வர எப்படியும் காலை 10 மணி ஆகிவிடும். சில நாட்கள் வெளியூர், அல்லது உடுமலைப் பேட்டைச் சந்தையெனக் கிளம்பிவிடுவார். அப்படியான நாளொன்றை முன்கூட்டியே கணித்து வைத்திருந்தோம்.

தோட்டம் என்றால் நமக்கு எல்லாமும் வேலன் அவர்கள்தான். காலை 7 மணிக்கு வந்தால் மாலை 7 மணி வரையிலும் தோட்டத்தில் அருகு தோண்டுதல், தண்ணீர் பாய்ச்சுதல், உரம் வைத்தல், உழவு ஓட்டுதல், எரங்காட்டிலிருந்து மண்ணடித்தல் என ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பார். என்னைக் கண்டதும் பரவசமாகிவிடுவார். இன்னதென்றில்லை, எங்களுக்கு வானமே எல்லை; பலதும் பேசிக்கொண்டிருப்போம். அவருக்கு எம்ஜிஆர் தத்துவப் பாடல்கள் மிகவும் பிடித்தமானவை. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு பாடு ராஜா என வாய்விட்டுப் பாடுவார்.

அந்தநாள் இப்படியாகக் கனிந்தது. இரண்டு ரூபாய் நோட்டொன்று கைமாறியது. தக்காளிக்கூடை, கூடைக்குள் நாய்க்குக் கூழ் கொண்டு வந்த தூக்குப்போசி. எடுத்துக் கொண்டு கிளம்பினார். “நான் வீட்டுக்குப் போய்ப் பசியாறிவிட்டு, வரும் போது உங்களுக்கு இட்லிகளும் வாங்கி வந்து விடுகின்றேன்”.

வேலன் அவர்கள் வரும் வரையிலும் தோட்டத்துக்குள் இருக்கும் தாத்தய்யன் கோயில் சாயமரத்து ஊஞ்சலில் தூரி ஆடிக் கொண்டிருந்தேன். வெகுதூரத்தில், கிணற்றடி மதிற்சுவருக்குள் தலைச்சும்மாடு ஒன்று படிப்படியாக உயரும் காட்சி தெரிந்தது. நான் சாளைக்கு ஓடோடிச் சென்றேன். சென்று சேர்ந்த கொஞ்சநேரத்தில் வேலன் வந்து விட்டார்.

தூக்குப் போசி நிறைய கள்ளு. பரந்திருந்த கொட்டமுத்து இலையில் 3 இட்லிகள், இரு தேங்காய்ச் சிரட்டைகளில் சட்னியும் சாம்பாரும். வெறும் வயிற்றில் வேண்டும். குழந்தைப்பிள்ளை. முதலில் இரண்டு இட்லிகளைச் சாப்பிடுங்க என்று சொன்னார் வேலன். பேச்சுத்தட்டாமல் இரண்டு இட்லிகளையும் சாப்பிட்டேன். அமோக ருசியாய் இருந்தது. மற்ற இரண்டுக்கும் ஆசைப்பட்டேன். தடுத்து விட்டார். போசியில் இருக்கும் கள்ளில் கொஞ்சத்தை திருகணிச்சொம்புக்குள் ஊற்றிக் குடிக்கலானேன். பக்கத்தில் குத்த வைத்து உட்கார்ந்திருந்தவர், நாய்க்குட்டி குடிப்பதை மற்றவர் வேடிக்கை பார்க்கும் பாங்கில் என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். வயிறு நிரம்பி விட்டிருந்தது. இனி முடியாதென்றவுடன், மிச்சத்தை அவர் மாந்திக்கொண்டார். நாளெல்லாம் ஒரே சிரிப்பு. வானத்தையே வில்லாய் வளைத்து விட்ட சாகசம்!

ஆண்டுகள் ஓடோடி விட்டன. கல்யாணம் ஆகி, புதுமனைவி. வீட்டில் இருந்தோம். மாலை வேளை. அம்மா, அண்ணி, மனைவி மூவரும் பைகளைத் தூக்கிக் கொண்டு சூலூர்ச் சந்தைக்குச் சென்றிருந்தனர். ஆளாளுக்குப் பைகளைக் காவிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். மருமகள்களைப் பார்த்து அம்மா சொன்னது, “போற வழியில பைய்யனுக்கு குடிக்கிறதுக்கு எதனா வாங்கிட்டுப் போகலாம்”. இஃகிஃகி, மனைவியார் பேஜாராகி விட்டார். “அம்மா, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்” என மறுப்புத் தெரிவித்தவர், வீடு திரும்பிய பின்னர் என்னிடம் கடிந்து கொண்டார், “ஏன் வீட்டில இருக்குறவங்களையெல்லா இப்படி பயமுறுத்தி வெச்சிருக்கீங்க?”. “இல்லம்மா, அது பயம் கெடியாது. அன்பால் விளைந்தது. நம்பிக்கையால் விளைந்தது” எனச் சொன்னேன்.

மாந்தன் இருக்கும் வரையிலும் குடி இருக்கத்தான் செய்யும். அது பொறுப்புடன் கூடியதாய் இருக்க வேண்டும். எந்த அளவுக்கு வில்லத்தனமாய்ச் சமூகம் பார்க்கின்றதோ அதே அளவுக்கு ஈனத்தனமானதாகவும் அது அமையும். அதாவது, அமெரிக்காவில் இருந்தும், வீட்டின் மையத்தில் பெண்கள், பிள்ளைகள் எல்லாம் இருக்க, ஆடவர் மட்டும் வாகனத்தரிப்பிடத்துக்குள் சென்று துண்டு போட்டுக் குடிக்காத குறையாக இருந்து குடித்துவிட்டு வருவது போன்று.

கள்ளக்குறிச்சி சம்பவம். காரசாரமான விவாதங்கள். நான் கள்ளுக்குடிக்கும் படங்களைப் போட்டு விட்டேன். இயல்பான படங்கள் அவை. பொதுவெளியில் கிடைக்கக்கூடிய படங்கள்தான். பகிர்ந்ததே நார்மலைஸ் செய்யத்தான். இருந்தும், அதனை மீண்டும் பகிர்ந்து, பெண்கள் எல்லாம் இருக்கக் கூடிய இந்த குரூப்பில் இது போன்றவற்றை எப்படிப் பகிரலாமென வாதவிவாதம்.

கேள்வி முயல்; பீடுபெற நில்! Drink Responsibly.

-பழமைபேசி.

No comments: