6/09/2024

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தேர்தல் 2024-2026

பேரவை என்பது 62 அமைப்புகளை உறுப்புகளாகக் கொண்டுள்ளது. அதற்கும் மேற்பட்டு, கனடா, அமெரிக்கா, இந்தியா, ஏன் உலகெங்குமிருந்து கவனிப்பவர்கள் உண்டு. எனவே ஆளுக்காள் ஒவ்வொருவிதமான பார்வை கொண்டிருப்பர். இயன்றமட்டிலும் நேர்மையாக எழுத விழைகின்றேன். இருந்தாலும், நான் தேர்தலில் இடம் பெற்ற அணிகளுள் ஓர் அணியை ஆதரித்தவன். இந்தப் புரிதலோடு மேற்கொண்டு வாசிக்க வேண்டுகின்றேன். #UnconsciousBiasAlert

செயற்குழுவில் இருக்கின்ற எல்லாப் பொறுப்புகளுக்கும், ’எலக்சன்படி’ கட்டமைப்பைப் பயன்படுத்தி இணையத்தினூடாக நடந்த தேர்தல் இதுவே முதன்முறையாகும். தேர்தல் விதிமுறைகளை மிக நேர்த்தியாகக் கொண்டிருக்கும் சட்டக்கோப்பு விதிமுறை வகுப்பாளர்களான பேரவை முன்னோடிகளும், நெறிவழுவாமல் நடத்திக் கொடுத்த தேர்தல் அலுவலர்களும் மிகுந்த பாராட்டுக்குரியவர்களாவர்.

ஏன் இந்தப் பதிவினை எழுத வேண்டியுள்ளது? பேரவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்வு ஆவணப்படுத்தப்பட வேண்டும். எனக்கே கூட என்னெவெல்லாம் நிகழ்ந்தது என்பது எதிர்காலத்தில் மறந்து போகக் கூடும். ஆகவே எழுதிப் பதிய வேண்டிய தேவை நமக்கு உள்ளது.

பேரவையிலிருந்து முற்றாக ஒதுங்கி இருந்தேன். 2017ஆம் ஆண்டு விழாவுக்குப் பிறகு அமைப்பில் தலையெடுத்த வணிகமயம், தனிமனித ஆதிக்கம் முதலானவை பெருகிக் கொண்டே வந்தன. விருப்பு வெறுப்பின்றி அவற்றைப் பற்றி அவ்வப்போது தொடர்ந்து எழுதியும் வந்தோம். முழுக்க முழுக்க அமைப்பின் செயற்பாடுகளையும் பொறுப்பில் இருப்பவர்களின் செயற்பாடுகளைப் பற்றியும்தானேவொழிய, எவ்விதத்திலும், இயன்றவரை, தனிமனிதர்கள் குறித்தோ பெயர்குறிப்பிட்டோ விமர்சிக்காமல், கவனமாகவே இருந்து வருகின்றோம். எம் 18ஆவது வயதில் கோவையில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் Asst Foreman வேலைக்குச் சேர்ந்திருந்தோம். “கண்பதியப்பனே டிஸ்மிஸ் ஆர்டரை திரும்பப்பெறு” எனும் வாசகம் ஊரெங்கும் எழுதப்பட்டிருந்தது. தொழிற்சங்கத்தலைவர் கடிந்து கொண்டு, கணபதியப்பனே என்பதை எல்.எம்.டபுள்யூ நிர்வாகமேயென அழித்து எழுதுமாறு நடுரோட்டில் வைத்துத் தொண்டரை அறைந்த நிகழ்வு நமக்கான பாலபாடம்.

2022ஆம் ஆண்டுவாக்கில் திடீரென ஓர் அழைப்பு நண்பரிடமிருந்து. ”இன்னும் இருநாட்களே உள்ளன; வேட்புமனுத்தாக்கல் நிறைவுக்கு. நான் துணைத்தலைவர் பொறுப்புக்கு நிற்கலாமென இருக்கின்றேன். எனக்கு விருப்பமில்லை. ஆனால்...” என இழுத்தார். நாங்கள் சொன்னது இதுதான். “முடிவு உங்களுடையது. அது என்ன முடிவாக இருந்தாலும் அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டியது எங்களுடையது”.

மிகக்குறுகிய காலத்தில் இணையதளம் கட்டமைக்கப்பட்டு, பரப்புரை வேலைகளைத் துவக்கியிருந்தோம். நிறைய புதுமைகளைப் புகுத்திச் செய்த வேலையில் சிறப்புக் காட்டினோம். தேர்தலில் நண்பர், நண்பர்தம் அணியினர் சிறப்பாகவே வாக்குகளைப் பெற்றிருந்தனர். ஒரு இரு வாரங்களுக்கு முன்பாக வேலையைத் துவக்கி இருந்தால்கூடப் போதும், தேர்தல் முடிவுகள் வேறுமாதிரியாக இருந்திருக்குமென்பதில் எமக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. ஓரிருவர் மட்டுமே வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.

இரு ஆண்டுகள். பேரவையின் பாதையில், மேலாண்மை என்பது மேலும் வீழ்ச்சியையே எதிர்கொண்டது. தனித்தனி நிகழ்ச்சிகளைச் சொல்லி அவையெல்லாம் பேரவையின் வளர்ச்சிக்கான அறிகுறிகள் என்றனர். அமைப்புச் செயற்பாடுகளை முன்வைத்து வீழ்ச்சி என்றது மறுதரப்பு. நம்மைப் பொறுத்தமட்டிலும், இத்தகைய போக்கானது, ஏழை, எளிய, நடுத்தரவர்க்கத்துக்கும் பணக்காரவர்க்கத்துக்குமான வேள்வியாகவே பார்க்கின்றோம். பணக்காரவர்க்கம் வழிநெடுகிலும் எண்களைச் சுட்டிக்காட்டி பொருளியல் மதிப்பீடுகளை(economical values) முன்வைத்தது. நாமோ, அன்பு, அக்கறை, அரவணைப்பு, மரியாதை, எல்லாருக்குமான பங்களிப்பு முதலான சமூக விழுமியங்களை(social values) முன்வைத்து மாபெரும் சறுக்கல் என்றோம்.

சீப்பை ஒளித்து வைத்துக் கொண்டால் கல்யாணம் நின்றுவிடும்தானே என்கின்ற நினைப்பில் அடுத்தடுத்துத் தடைகள் வந்து கொண்டேயிருந்தன. ஒவ்வொரு தடையையும் உணர்வு வயப்படாமல் எதிர்கொண்டு, அவற்றை நமக்கு ஏதுவானதாக மாற்றியமைப்பதில் தொடர்ந்து முன்னேறி வந்தோம். அச்சம் கலந்த ஒரு பதற்றம் இருந்தது. அவநம்பிக்கை குடிகொண்டிருந்தது.  ஏவப்பட்டிருந்த பொய்கள் அவற்றுக்குக்காரணம்.. உடனுக்குடனே அவற்றுக்கான எதிர்வினை ஆற்றக்கூடாதென்பதில் மிகக்கவனமாக இருந்தோம்.

ஒருகட்டத்தில் எம்மீதே எமக்கு நம்பிக்கையற்றுப் போனது. பொறுப்பில் இருக்கும் தரப்புக்கு ஆதரவாக 12 முன்னாள் தலைவர்கள், நம் தரப்புக்கோ மூன்றே மூன்று பேர். இருக்கின்ற 22 வாழ்நாள் உறுப்பினர்களில் 14 பேர் எதிர்ப்பு அல்லது ஆதரவில்லை. ஒருவேளை நாம்தான் தவறான புரிதலில் வெட்டிவேலை பார்த்துக் கொண்டிருக்கின்றோமோயெனும் சலனம், சஞ்சலம். எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு நடைப்பயிற்சிக்குப் போனோம். சில பல மைல்கள் இதே சிந்தனைதான். வீட்டுக்குத் திரும்பவும் வந்து சேர்ந்தபோது, மிகத் தெளிவாக இருந்தோம். நம் தரப்பு வென்றாக வேண்டிய தேர்தல் இது, ஆதரிப்பதற்கு எல்லாக் காரணங்களுமுண்டு என்பதில்.

தேர்தல் முடிவுகள் கிடைக்கப் பெற்றோம். போட்டியிட்ட எல்லா இடங்களிலும் நம்தரப்பு அணியினர் வெற்றி பெற்று இருந்தனர். பதிவான வாக்குகளில் (2928), நம் அணியினர் 1750 வாக்குகளைப்(~60%) பெற்றிருந்தனர்.

வேட்பாளர்கள் மிகக்கடுமையாக உழைத்திருந்தனர். இந்த வேட்பாளர்களுக்காய் கண்களுக்குப் புலப்படாத மனிதர்கள் ஏராளமானோர் ஆங்காங்கே பணிபுரிந்தனர் என்பதும் கண்கூடு. இந்த மனிதர்களின் உழைப்புக்கான மணிநேரங்களைத் தொகுத்துக் கணக்கிட்டால் சில ஆயிரம் மணி நேரங்களுக்கும் மேலாக வரும். அதன் பயனீடு? அவுட்புட்?? இந்த உழைப்பை அமைப்பின் கட்டமைப்பு, மனிதமேம்பாடு போன்றவற்றுக்குச் செலவிட்டிருந்தால்? இப்படியெல்லாம் வினாக்கள் பிறக்கின்றன.

தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போதேவும் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. சொன்னேன், “உங்களுக்கான பொறுப்புகள் இந்த நொடியிலிருந்து துவங்குகின்றன. அவற்றை நிறைவு செய்யும் போதுதான் காத்திருக்கின்றது உங்களுக்கான வெற்றி”. அதுவரையிலும் அவர்களுக்கான ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டியது நம் எல்லாரது கடமை!

-பழமைபேசி, 06/09/2024.

No comments: