சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.
-பிரமிள்
நவீனக்கவிதையிலக்கியப் புலத்தில் இதனை வாசித்திராதவர் அரிதுயெனும் அளவுக்கு, எல்லாராலும் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கவிதை இது.
உணர்வுக்கவிதைகளைக் காட்டிலும் தத்துவார்த்தக் கவிதைகளே காலத்தால் மங்காதனவாக இருக்கின்றன. இதுவும் அந்த இரகத்தைச் சார்ந்ததுதான்.
பறவைக்கு இரு சிறகுகள். அடித்து அடித்துப் பறக்கின்றது. வால்ப்பகுதியைத் தேவைக்கு ஏற்றவாறு திருப்பியும் வளைத்தும் தாம் செல்ல வேண்டிய திசையை, வேகத்தைத் தீர்மானித்துக் கொள்கின்றது. இம்மூன்றுக்கும் அடிப்படையாக இருப்பன அவற்றுக்குள் இருக்கும் இறகுகள். இப்படியான இறகு ஒன்று, பிரிந்த இறகு ஒன்று, பறவையினின்று பிரிந்த இறகு ஒன்று, காற்றில் அல்லாடி அல்லாடி அங்கிங்கெனதாபடிக்கு அடிக்கப்பட்டுத் தாள இறங்கிக் கொண்டிருக்கையில், காற்றின் தீராத பக்கங்களில், இவ்வெளியில், தீராத இவ்வெளியில் காற்றினால் அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், அந்தப் பறவை எங்கெல்லாம் பறந்து உயர்ந்து உயர்ந்து சென்றதோ, அந்த வாழ்வையெல்லாம், தரையைத் தொட்டு மக்கி மண்ணாகிப் போகும் வரையிலும், காற்றுவெளியின் பக்கங்களில், அந்தப் பறவையின் சுகதுக்கங்கள், சூதுவாதுகள், நல்லன தீயன, உயர்வு தாழ்வுகள் என எல்லாவற்றையும் சொல்லிச் செல்கிறது என்பது நேரடியாக நாம் பொருள் கொள்ளக்கூடியது.
நல்ல கவிதை என்பது நல்லதொரு ஊடகம். ஊடகத்தினூடாக நாம்தான் நமக்கான அகப்பொருளைக் கண்டடைந்தாக வேண்டும்.
’சிறகிலிருந்து உதிர்ந்த இறகு ஒன்று’ என இருக்குமேயாயின் அது இயல்பாக நடக்குமொன்றாகக் கருதியிருப்பேன். ஓர் ஆசிரியர், மருத்துவர், இப்படி எவராகினும் ஒருவர், ஒரு நிறுவனம், மருத்துவமனை, பள்ளிக்கூடம் போன்றதொரு பறவை உயரே உயரே செல்ல, பயணிக்கத் துணை புரிந்த இறகாக இருந்து, அந்த அனுபவத்தை, கண்டதை, அறிந்து கொண்டதை, ஓய்வுக்குப் பின்னரான காலத்தில், மக்கி மண்ணாகிப் போகும் வரையிலும் சொல்லிச் செல்லும் காவியமெனப் புரிந்து கொண்டிருப்பேன். “பிரிந்த” எனும் சொல்தான் நம்மை இன்னும் ஆழ்ந்து யோசிக்க வைக்கின்றது.
சமூகத்தில் பார்க்கின்றோம். நைச்சியமான பேச்சுகள். உணர்வூட்டுகள். சாதி, சமயம், சினிமா, குழுவாதம், கும்பலிசம், இனவாதம், நிலப்பரப்பு இப்படி ஏதாகிலும் ஓர் ஆயுதம். நிறுவனங்களில் பார்க்கின்றோம். நாமெல்லாம் ஒரு குடும்பம் என்பார்கள். ஒற்றுமையே வலு என்பார்கள். நிறுவனத்தின் சொத்தே நீங்கள்தாம் என்பார்கள். உழைப்புச் சுரண்டலை எங்கும் பார்க்கலாம்.
மூத்தபிள்ளை பிறந்திருந்த நேரம். என்றுமில்லாதபடிக்குப் பனிப்பொழிவு. அலுவலகங்களுக்கு விடுமுறை. முக்கியமான வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது அலுவலகத்தில். விடிய விடிய வேலை பார்த்த காலமெல்லாம் உண்டு. காரை எடுத்துக் கொண்டு அலுவலகம் செல்கின்றேன். எனக்கு முன்பாகவே இயக்குநர் பொறுப்பில் இருக்கும் அம்மையார் வந்திருந்தார். அவர் கேட்ட முதல் வினா, “ஏன் வந்தாய்?”. அதற்குப் பிறகு உட்காரவைத்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார், சொன்னார், “family first no matter what".
பொன்னான காலத்தைக் காவு கொடுத்து விட்டு, பிரிவுக்கு ஆட்பட்ட பின்னர் புலம்பிக் கொண்டிருப்பர். ’அவசரத்தில கல்யாணம், அவகாசத்துல அழுகை’ என்பார்களே அதைப் போல. கறிவேப்பிலையைப் போலத் தூக்கி வீசி விட்டார்களேயென்பதைப் போல; காற்றின் தீராத பக்கங்களில், வாழ்வின் எஞ்சிய காலம் முழுமைக்கும்! அப்படியான ஒரு துயரத்தைத்தான் நான் இக்கவிதையினூடாகப் புரிந்து கொள்கின்றேன். புரிந்து? மனம் பண்படுகின்றது. நிதானத்தைக் கொடுக்கின்றது. அதுதான் இலக்கியம்.
-பழமைபேசி.
7/01/2024
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment