5/17/2022

சிற்றின்பம்

Just because something feels good in the moment, that doesn’t mean it’s good for our long-term happiness, health, longevity, social relationships, or mental wellness. And just because something is uncomfortable, that doesn’t mean it’s dangerous. 

வாடிக்கை என்பது எப்படி ஏற்படுகின்றது? மறுகற்றல் என்பது ஏன் பெரும்பாலும் தோற்றுப் போகின்றது? வெற்றி கொள்வதற்கான வழிகள் என்ன?

ஏதோவொரு செயல் உடனடி இன்பத்தைக் கொடுக்கின்றது. மனம் நாடும். அந்தச் செயலுக்கும் மனத்திருப்திக்குமான இணைப்பென்பது உடனுக்குடனே மூளையில் இடம் பெறும். சிறு கால இடைவெளி போதுமானது. ஆகவேதான் அது சிற்றின்பம். சிலபல செயல்கள் அதன் பயனீட்டைத் தர வெகுகாலம் பிடிக்கும். அது அதனுடைய ரிசல்ட்டைக் கொடுக்குத் துவங்கினால் நீண்டகாலத்துக்கு நிலைத்து நிற்கும். எனவேதான் அது பேரின்பம்.

அமெரிக்க டாலர் அழிவு. அமெரிக்காவுக்கு அழிவு. அமெரிக்காவில் உயிருக்கு உத்திரவாதமில்லை. இப்படிப் பல தலைப்புகள், அன்றாடமும் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. என்ன காரணம்? அமெரிக்கா என்பது வல்லரசு. சட்டத்தின் ஆட்சி நிகழ்கின்ற மண். தனிமனிதர்களின் ஆட்சிமைக்கு இடமில்லை. பொருளாதாரத்தில் மேலான இடம் பிடிக்கின்ற நாடு. உலக நகர்வுகளைத் தனக்கேற்றாற்போல் வளைத்துக் கொள்ளும். அதன்பொருட்டு இயல்பாகவே மாற்றுக்கருத்துகள், ஆற்றாமை முதலானவை இடம் பெறுவது இயல்பு. அத்தகைய உணர்வு உடையோர், தலைப்பைக் கண்டதும் மனத்திருப்தி கொள்வர். அவற்றைப் புழங்கப் புழங்க அதுவே வாடிக்கையாகிப் போகும். இப்படி, ஒவ்வொரு பேசுபொருளிலும் உணர்வுக்கு அடிமையாகிப் போவதினால், பொய்யான மாயையில் வாழ்வு சிக்குண்டு போகும். இதன்பொருட்டு, வாழ்வின் தரம் சீர்குலையும். யாரோ சிலர் பயனடைவர்; பலர் வீழ்ச்சி கொள்வர்.

மனத்துக்கு இதமான தகவலைத்தான் உள்வாங்க வேண்டுமென்பதில்லை. எல்லாவற்றுக்கும் இடமளிக்கின்ற சமநிலைத்தன்மை வாய்த்தல் நன்று. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் உயிருக்கு உத்திரவாதமில்லை எனும் தலைப்பில் ஒரு வீடியோ. என்னதான் சொல்கின்றார்களெனப் பார்த்தாயிற்று. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு. பத்து பேர் பலி. ஆக, துப்பாக்கிகளின் ஏகபோகப் பயன்பாடு இருப்பதினாலே அமெரிக்காவில் இருப்போரின் உயிருக்கு உத்திரவாதமில்லை என்பது கருத்து. சற்று மாற்றிப் பார்ப்போம். கத்திக்குத்துகளால் அதிக மரணம் நிகழ்கின்றது. முறையே, பிரேசில், தென்னமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில்தான் அதிக அளவில் கத்திக்குத்து மரணங்கள் நிகழ்வதாகத் தரவுகள் சொல்கின்றன. இந்தியாவிலிருந்து கத்திகளை அப்புறப்படுத்த முடியுமா? இந்தியாவில் உயிருக்கு உத்திரவாதமில்லை என்றுதான் சொல்ல முடியுமா? சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பது இந்தியாதான். ஆகவே, இந்தியாவில் உயிருக்கு உத்திரவாதமில்லை எனத் தலைப்பிட்டு விட முடியுமா? [And India ranks number 1 as per number of persons killed and ranks number 3 as per number of persons injured in road accidents, Road Transport and Highways Minister Nitin Gadkari on Wednesday raised concern in Parliament].

சரி, ஏன் அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரம்? வல்லரசு என்கின்றனர், அப்படியிருக்க இதென்ன காவாலித்தனம்? அது சாமான்யனுக்கு அரசியல் சாசனம் கொடுத்திருக்கும் கொடை. அமெரிக்காவில் உரிமைகள் கொடுத்துத்தான் பழக்கம். எந்தவொரு அரசியல் சட்டத்திருத்தமும் உரிமைகளைக் களைவதற்காக இதுவரையிலும் கொண்டு வரப்படவில்லை. அமெரிக்கா என்பது இந்தியாவைப் போல் 5 மடங்கு பெரிய நாடு. மக்கள்தொகை மிகவும் குறைவு. விலங்குகளிடமிருந்தும், மற்ற தீயவர்களிடமிருந்தும் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளத் துப்பாக்கி அவசியமென்பது அடிப்படை. மாறாக நினைத்துப் பாருங்கள். துப்பாக்கிகள் இல்லாவிடில் எத்தனை எத்தனை மரணங்கள் நிகழ்ந்திருக்குமென. எல்லா இடத்திலும் போலீசைப் போட முடியாது. ஏனென்றால் இது ஒரு மாபெரும்நாடு. மேலும், மாநிலங்கள் தன்னாட்சி பெற்ற ஃபெடரலிச நாடு. பொதுமக்களிடத்திலே துப்பாக்கிகள் இருப்பதினாலே, நடுவண் அரசு மாநிலங்களைக் காவு கொண்டுவிடவோ அடக்கி ஆண்டுவிடவோ முடியாது. அமெரிக்காவில் இருப்பதைப் போல, ஏக போக துப்பாக்கிக் கலாச்சாரம் மற்றநாடுகளிலே இருக்குமேயானால், அந்தநாடு அந்தக் கணமே காணாமற்போய்விடும் எனக் கருதவும் இடமுண்டு என்பதறிக.

சரி, காலப்போக்கில் நம்மிடையே உண்மைக்குப் புறம்பான தகவல்கள் ஏராளமாக மண்டிக்கிடக்கின்றன. அதன் பொருட்டுத் தவறான நம்பிக்கைகளால் நிலைகொண்டிருக்கின்றோம். அவற்றையெல்லாம் திருத்திக் கொள்ள ஆசை. என்ன செய்யலாம்? அது அவ்வளவு எளிதல்ல. மறுகற்றல்(unlearning) என்பது, ஒன்றைப் புதிதாகக் கற்றுக் கொள்வதைக் காட்டிலும் மிகவும் கடினம்.  முதற்படி, feel good மகிழ்ச்சிக்காக அலைதலையும், ஒருசார்புப் பழக்கங்களையும் கைவிட வேண்டும். நல்ல நூல்கள் வாசித்தல் வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நம்மில் முதலீடு செய்ய வேண்டும். அன்றாடமும், ஏதோவொரு வரலாற்றுப் புத்தகமோ, கட்டுரைகளோ சில பக்கங்களாவது வாசிக்க வேண்டும். அறிவியற்கட்டுரைகள் வாசிக்க வேண்டும். பத்துத் தகவல்களை உள்வாங்குகின்ற நேரத்தில், ஒரு தகவலை ஆழமாகக் கற்றுக் கொள்ள ஆசைப்பட வேண்டும்.

பணம் மிகவும் முக்கியம். ஆனால் அதுவே வாழ்வையும் மனிதனின் மதிப்பையும் தீர்மானித்து விடாது. எந்த அளவுக்கு மனித மனம் பயணப்பட்டது என்பதுவே மரணப்படுக்கையில் அவரது மதிப்பை உணர்த்தும். மனத்தின் பயணம் விரிவுபட வாசித்தலும், நேர்மையான கலந்துரையாடலுமே வழிவகுக்கும். தனிமனித ஏட்டிபோட்டிகள் புதைகுழிக்குத்தான் மனத்தை இட்டுச்செல்லும்.

https://www.business-standard.com/article/pti-stories/india-tops-world-in-terms-of-number-of-persons-killed-in-road-accidents-122040600670_1.html

https://www.pewresearch.org/fact-tank/2022/02/03/what-the-data-says-about-gun-deaths-in-the-u-s/

https://worldpopulationreview.com/country-rankings/stabbing-deaths-by-country

-பழமைபேசி.

No comments: