மே 9ஆம் நாள் இரஷ்யா வரலாற்றில் மிக முக்கியமான நாள். இரண்டாம் உலகப் போரில், ஹிட்லர் படைகளைகளை வென்றதன் நிமித்தம், ஆண்டுதோறும் வெற்றிநாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அந்த மே 9ஆம் நாளில், உக்ரைனின் கிழக்கு மாநிலங்களை முழுதுமாகக் கைப்பற்றி விடுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. கைப்பற்றப்பட்ட பகுதிகளுள் 80% பகுதிகள் முதல் இரண்டு வாரங்களில் கைப்பப்பற்றப்பட்டவையே.
இரஷ்யாவுக்கு வெற்றி எனச் சொல்வதா? உக்ரைனுக்கு வெற்றி எனச் சொல்வதா?? அவரவர் பார்வையில் கண்ணோட்டம் மாறுபடலாம். பகுதிகள் இரஷ்யாவசம் போயிருக்கின்றன. உள்நாட்டில் அரசியல் நிலை, பொருளாதாரம் வலுவாகவே இருக்கின்றது. அப்படிப் பார்க்கின் இரஷ்யாவுக்கு வெற்றி.
4 நாட்களுள் ஒட்டுமொத்த உக்ரைனும் இரஷ்யக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுமென எதிர்பார்க்கப்பட்டது. நடக்கவில்லை. தலைநகரைக் கைப்பற்றுமென எதிர்பார்க்கப்பட்டது. நடக்கவில்லை. வடக்குப் பகுதிகளில் கைப்பற்றப்பட்ட இடங்களில் இருந்து இரஷ்யப்படைகள் பின்வாங்கின. இரஷ்யாவினால் ஒட்டுமொத்த வான்வெளியைக் கைப்பற்ற முடியவில்லை. 11 முன்னணித் தளபதிகள் பலியாகி உள்ளனர். நாட்டின் மிக முக்கியமான போர்க்கப்பல் மூழகடிக்கப்பட்டது. 60,000 வீரர்கள், மரணம் அல்லது காயத்தினால் படையிலிருந்து இல்லாமல் ஆகிவிட்டனர். இப்படியெல்லாம் பார்த்தால், உலகின் இரண்டாவது இராணுவமெனக் கருதப்படும் இரஷ்யாவுக்குத் தோல்வி.
மே 9ஆம் நாள் வெற்றிவிழாவில், தம் தரப்பு வெற்றி பெற்றிருப்பதாகத்தான் புடின் சொல்வார். சொல்லியாக வேண்டும். அல்லாவிடில் அவரது இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிடும்.
No comments:
Post a Comment