இது வரையிலும், திமுக வெல்வதற்கான காரணிகள், திமுக தோற்பதற்கான காரணிகள் முதலானவற்றைப் பார்த்தோம். எஞ்சி இருப்பது, அதிமுக வெல்வதற்கான காரணிகள் மற்றும் தோற்பதற்கான காரணிகள் மட்டுமே. இவற்றில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கப் போவது திமுகவின் தோல்விக்கான காரணிகளே!!
அதிமுக வெல்ல வேண்டும் என வெகுவாக யாரும் வாக்களிக்கப் போவதில்லை என்பதே இன்றைய வாக்காளரின் மனநிலை. ஒரு கட்சியை, தலைவரை நேசித்து வாக்களித்தது என்பது புரட்சித் தலைவர் M.G.R அவர்கள் காலத்தில் மட்டுமே. இன்னும் எமக்குப் பசுமையாக நினைவிருக்கிறது. பெருவாரியான மக்கள், அவரைக் கொடை வள்ளல் என்றார்கள். கண்மூடிகளாக நேசித்தார்கள். அந்த நேசிப்பு, நிச்சயமாக ஜெயலலிதா அம்மையாருக்குக் கிடையாது.
இன்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையும் தாமதமான ஒன்றாகும். இவரைப் பொறுத்த வரையில், தம்மீதான நம்பகத்தன்மையைத் தாமே சீர்குலைத்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். எனவே, என்னதான் இலவசங்களை அள்ளி வீசினாலும், மக்கள் ஐயத்துடனே அதை நோக்குவர்.
எனினும், அவருக்கே உரிய பல சிறப்பம்சங்களும் உண்டு. அவை, எஞ்சிய அந்த 65% வாக்காளர்களிடமிருந்து கணிசமான ஆதரவு வாக்குகளைக் கொண்டு சேர்க்கும் என்றே நம்பலாம்.
10. ஒடுக்கப்பட்ட(?) சமூகத்திற்கு ஆதரவான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
9. அண்டை மாகாணங்களுடன் எவ்வித சமரசத்திற்கும் இடமின்றிப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும்.
8. உலகவங்கிக் கடனைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
7. சமூகநலத்துறை வாயிலாக, பெண்கள் முன்னேற்றத்துக்கு பல திட்டங்கள் தீட்டப்படும்.
6. தொலைக்காட்சி இணைப்பகத்தில் நாட்டுடமை அறிமுகப்படுத்தப்படும். தனியாரின் ஆதிக்கம் ஒழிக்கப்படும். திரைப்படத்துறையில் இருக்கும் ஆதிக்கம் ஒழிக்கப்படும்.
5. மின்சாரப்பற்றாக் குறைக்குத் தீர்வு காண்பதில் அதிமுக முனைப்பாக இருக்கும்.
4. கல்வித்துறையைச் சீர்படுத்தி செம்மைப்படுத்துவதில் அதிமுக சிறந்து விளங்கும்.
3. அதிமுக செயலாளர் மிகவும் கண்டிப்பானவர். அதிகாரிகளிடம் கண்டிப்பைக் காண்பித்து, நிர்வாகத்தைச் செம்மைப்படுத்துவார். அதிமுக ஆட்சிக்கு வந்தால், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும்.
2. திமுகவை விட, அதிமுக அதிக இலவசங்களை அளிக்கும் (மின்விசிறி, அரவைப்பொறி, கலவைப்பொறி, இலவசத் தொலைக்காட்சி இணைப்பு )
1. தேமுதிக மற்றும் பொதுவுடமைக் கட்சிகளுடனான கூட்டணி, அதிக வாக்குகளைக் கொண்டு சேர்க்கும்.
குறிப்பு: திமுக ஆதரவு வாக்குகள், திமுக எதிர்ப்பு வாக்குகள் மற்றும் அதிமுக ஆதரவு வாக்குகள் முதலானவற்றுக்கான காரணிகளை இதுவரையிலும் பார்த்திருக்கிறோம். திமுக எதிர்ப்பு வாக்குகளுக்கான பிரச்சாரத்தை முதன்மையாக அதிமுக மேற்கொள்ளுமா? அல்லது, தேர்தல் வாக்குறுதி மற்றும் கடந்தகால சாதனை(?)களை முன்னிறுத்தி ஆதரவு வாக்குகளைப் பெற முயற்சிக்குமா என்பதை அரசியல் ஆய்வாளர்கள் எதிர்நோக்கி உள்ளனர். அதற்கான விடை இன்னும் ஓரிரு நாளில் தெரிய வரும்.
அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகளுக்கான காரணிகளைப் பார்க்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது, கோவையிலிருந்து பழமைபேசி!
5 comments:
அம்மா ஆட்டம் கண்டிருப்பது அவரின் அட்டை காப்பி இலவசங்களில் தெரிகிறது.. ! கலைஞ்சரின் அறிக்கையை கிண்டலடித்தவர் இப்போ எப்படி பதிவு போடரங்கோ பார்க்கலாம்.. ! அம்மா சுரத்தே இல்லம் தேமே என்று பேசியது அவரின் பயத்தை காட்டியது.. மேலும் கலைஞ்சர் தேர்தல் அறிக்கை வெளியிட்ட போது அருகில் பல கட்சி புள்ளிகள், .. இங்கே அம்மா மட்டுமே .. தான் என்ற அகங்காரம் போகவில்லை போலும்..
என்னவோ போங்க..... இதை விட்டா அது! :-(
தேர்தல் அறிக்கையை எல்லாம் மக்கள் நம்புவதில்லை. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஜெயிப்பது என்றால் தி.மு.க. மேல் உள்ள வெறுப்பினால் தான் இருக்க முடியும். இவர்கள் மேலும் மக்களுக்கு நம்பிக்கை கிடையாது.
ச்சும்மா...காமெடி செய்யாதீங்க மாப்பு...
1,2 தவிர மற்றவையெல்லாம் உங்களுக்கு நல்ல நகைச்சுவையுணர்வு இருக்கிறது என்பதை காட்டுவதுபோல இருக்கிறது.
விட்டுப் போன இன்னொரு காரணம் இந்தத் தேர்தலில் அதிமுக வில் அதிகமாக புது முகங்கள் இல்லை. பழகிய,பழைய ஆட்களுக்கு அதிகம் இடமளித்திருப்பதாகவும் தோன்றுகிறது. வெற்றிக்கு இதுவும் கூட உதவலாம்
@@ஆரூரன் விசுவநாதன்
ஆகா... இப்பிடிச் சொல்லிட்டீங்களே? நான் இரத்தத்தின் இரத்தங்களுக்கு போனைப் போட்டு 10 தேத்துறதுக்குள்ள பெரும்பாடு ஆன கதை எனக்குத்தானுங்க தெரியும்! இஃகி!
Post a Comment