3/17/2011

வெல்வது திமுகவா? அதிமுகவா?? ஒரு நாடோடியின் பார்வையில்!

மார்ச் 17, அதிகாலை 3.15, கோயம்பத்தூர்.


முன்பெல்லாம் ஒரு ஊரை எடுத்துக் கொண்டால், இந்தந்த வீட்டார் இன்ன கட்சி, இந்த வீட்டாரைச் சேர்ந்தவர்கள் எக்கட்சியையும் சாராதவர் என எளிதில் தெரிந்து கொள்ளும் நிலை இருந்து வந்தது. ஆனால், இன்றைய நிலை அப்படி அல்ல. யாரும், யாரையும் அவ்வளவு எளிதில் எடை போட முடியாதபடிக்கு, தத்தம் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

தொகுதி மறுசீரமைப்பின் பாதிப்பு அதைவிடப் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதும் கண்கூடு. இதுகாறும் எங்கள் ஊர் இருந்து வந்த தொகுதி, உடுமலைப் பேட்டை சட்டமன்றத் தொகுதியாகும். அது நிலப்பரப்பிற்கு ஏற்றபடியாகவும் இருந்தது. உடுமலைப் பேட்டையில் இருந்து ஏழு மைல் தொலைவில் இருக்கும் ஒரு ஊர், உடுமலைப் பேட்டைத் தொகுதியில் இருப்பதில் என்ன பிரச்சினை இருந்துவிட முடியும்?

ஆனால் இன்றைய நிலை? உடுமலையைக் கடந்து கிழக்கே வெகுதொலைவில் இருக்கும் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது எனச் சொல்கிறார்கள். பெருவியப்பாக இருக்கிறது. மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உடப்பட்ட ஊர்கள் கீழே வருமாறு:

செல்லப்பம்பாளையம், புங்கமுத்தூர், உடுக்கம்பாளையம், பெரிய பாப்பனூத்து, சின்னப் பாப்பனூத்து, பாப்பன்குளம், ஆண்டிகவுண்டனூர், தும்பாளப்பட்டி, வடக்கு பூதநத்தம், ஆர்.வேலூர், பெரிய வாளவாடி, சர்க்கார்புதூர், தின்னம்பட்டி, தேவனூர்புதூர், ராவணபுரம், எரிசினம்பட்டி, கொடுங்கியம், ஜிலோபநாய்க்கன்பாளையம், அரசூர், ரெட்டிபாளையம், சின்னவாளவாடி, தெற்கு பூதிநத்தம், போதிகவுண்டந்தாசரபட்டி, கொழுமம், எலயமுத்தூர், குருவப்பநாய்க்கனூர், ஆலம்பாளையம், பள்ளப்பாளையம், மொடக்குப்பட்டி, தீபாளப்பட்டி, கிருஷ்ணபுரம், வலயபாளையம், ஜல்லிப்பட்டி, லிங்கமாவூர், வெங்கிட்டாபுரம், சின்னகுமாரபாளையம், குறிச்சிக்கோட்டை, மானுப்பட்டி, கல்லாபுரம், காரத்தொழுவு, துங்காவி, தாந்தோணி, முக்கூடுஜல்லிப்பட்டி, வென்சப்பட்டி, மைவாடி, ஜோத்தம்பட்டி, கடத்தூர், சோழமாதேவி, வேடப்பட்டி, கணபதிபாளையம், பூலாங்கிணர், அந்தியூர்,ராகல்பாவி, கண்ணம்மநாய்க்கனூர், குறள்குட்டை, போடிபட்டி, அமராவதி, குதிரையார், குக்கல், மற்றும் கஞ்சம்பட்டி, கொமாரலிங்கம், தளி, கணியூர் மற்றும் கணக்கம்பாளையம்.

நகராட்சி எனபது இல்லாது, நூறு விழுக்காடு ஊராட்சிகளைக் கொண்ட ஒரு தொகுதியாகும். வேளாண்மை என்பதே பிரதானம். எம்.ஜி.ஆர் காலத்திலே, இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் இரட்டை இலை மட்டுமே. அதைக்கடந்து வந்தோமானால், மிட்டா மிராசுகள் அடங்கிய பேராயக் கட்சி. நிலச்சுவான்தார்கள் எல்லாம், காங்கிரசுப் பாரம்பரியத்தைப் போற்றி அதையொட்டி வாழ்ந்து வந்தார்கள். இவ்விரு கட்சிகளுக்குப் பின்னர்தான், திமுக என்பது வரும். உடுமலை நகராட்சியை விடுத்துப் பார்த்தால், இப்பகுதியில் திமுக வெல்வது என்பது குதிரைக் கொம்புதான்.

ஆனால் இன்றைய நிலை என்ன?? காட்சிகள் அடியோடு மாறிப் போய்விட்டன. எம்.ஜி.ஆரின் அடித்தட்டு வாக்குகள் அப்படியே பலவாறாகப் பங்கு போடப்பட்டு விட்டன. அவ்வாக்குகள், 50%, 30%, 20% என முறையே அதிமுக, திமுக, தேமுதிக என்ப் பிரிந்து விட்டன. எம்.ஜி.ஆரின் கட்சி நிர்வாகிகள் என்று எடுத்துக் கொண்டால், 50%, 40%, 10% என முறையே, அதிமுக, தேமுதிக, திமுக ஆகிய கட்சிகளில் ஐக்கியம் ஆகிக் கொண்டார்கள். அதிமுக மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகளுக்குள் பங்காளி மனப்பான்மை(கசப்புணர்வு) இருப்பதைக் காண முடிகிறது.

இச்சூழலில்தான், தமிழக சட்டமன்றத்தின் பதினான்காவது தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. மக்கள் சகலவசதிகளுடன் இருக்கிறார்கள். கட்ந்த ஐந்தாண்டு காலத்தில் எங்களுக்குக் கிடைத்தது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நிறைவாக இருக்கிறது. ஆனால், அவர்கள் ஊழல்வாதிகள் என முணுமுணுக்கிறார்கள்.

ஒரு ரூபாய்க்கு அரிசி, வேட்டி சேலைகள், தொலைக் காட்சிப் பெட்டி, மலிவு விலையில் இதரப் பொருட்கள் என்பனவற்றை சரளமாக நினைவு கூறுகிறார்கள். அதே வேளையில், வண்டி வண்டியாகக் கேரளாவுக்குக் கடத்தப்படும் அரிசியையும் நினைவு கூறுகிறார்கள். அத்தோடு, அரசியல்வாதிகள் பெரும் பணக்காரர்களாக மாறிவருவதையும் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை இவர்கள்.

பொருளாதாரத்தில் சிறிது மேம்பட்டவர்கள், அரசியலை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எல்லாருமே திருடர்கள் என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். இவர்கள்தான் உணர்ச்சிகளுக்கான இலக்கு என்பதை அரசியல்வாதிகளும் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். சாதி, மதம், பிடித்த நடிகர் முதலானவற்றில் ஏதோவொன்றின்பால் இரையாவதற்கு, அவர்களும் தயாராக இருப்பதையே காண முடிகிறது. சாதியுணர்வு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தலைவிரித்தாடுகிறது.

பொருளாதாரத்தில் மேம்பட்ட தொழில் அதிபர்கள், நிலப்பண்ணையார்கள் முதலானவர்கள், எடுத்த எடுப்பிலேயே குறிப்பிடுவது மின்பற்றாக் குறை, சாலை வசதிகள் ஆகிய இரண்டையும்தான். குறை கூறுவதை எல்லாம் குறிப்பிட்டுவிட்டு, அதிமுகவுக்கு திமுக எவ்வளவோ மேல் என்பதையும் சொல்கிறார்கள். காசைக் கொடுத்தாவது காரியம் சாதிக்க முடிகிறது. எந்த நேரத்திலும் இவர்களை அணுக முடிகிறது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

மற்றபடி, ஈழப் பிரச்சினை, ஸ்பெக்ட்ரம், அண்டைய மாகாணங்களுடன் இருக்கிற நதிநீர்ப் பிரச்சினை, தமிழகத்தின் வளர்ச்சி நிலை, நிதி நிலை முதலானவற்றை எல்லாம் யாரும் எண்ணிப் பார்க்கவோ அல்லது அதில் நாட்டம் கொண்டவர்களாகவோ இருப்பதாகத் தெரியவில்லை.

இப்படியான சூழலில் யார் முந்துகிறார்கள் என்பதைக் கணிப்பது எவருக்கும் இயலாத காரியம். அப்படி யாராவது சொல்வார்களேயானால், அது ஒருபக்கச் சார்பாகவே இருக்கும் என்பது திண்ணம்.

அதிமுக கூட்டணியின் வெற்றி என்பது கூட்டணிக் கட்சியினரின் அரவணைப்பில் அடங்கி இருக்கிறது. திமுக கூட்டணியின் வெற்றி என்பது, அவர்களின் பிரச்சாரத்தில் அடங்கி இருக்கிறது. அரவணைப்பு முந்துமா அல்லது களப்பணி முந்துமா என்பது இன்னும் பத்து நாட்களில் தெரியத்தானே போகிறது?!

- பழமைபேசி.

17 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்கு நாடி பிடித்து பார்த்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

குடுகுடுப்பை said...

பேராயக்கட்சி ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஓலை said...

Vanakkam reporter. Nallaa thaan naadi pidikkareenga.

7 K villages unga thoguthiyoda sernthidichaa.

Aduththathu yentha thoguthi reporter.

தாராபுரத்தான் said...

ஓட்டு இருக்குதா...போட்டுவிட்டுதான் புறப்படுகீர்களா..

பழமைபேசி said...

//ஓலை said...
Vanakkam reporter. Nallaa thaan naadi pidikkareenga.

7 K villages unga thoguthiyoda sernthidichaa.//

பிச்சுப்புடுவன் பிச்சு... அந்த ஏழு குளம் எப்பவும் எங்க தொகுதியில்தானுங்க.... இன்னைக்கென்ன புதுசா??

குறும்பன் said...

தேர்தல் நேரத்தில் ஊர் இருக்கறதால தேர்தல் தொடர்பா இன்னும் சில இடுகைகளை எதிர்பார்க்கறோம்.

செந்திலான் said...

ஜல்லிப்பட்டி, லிங்கமாவூர், வெங்கிட்டாபுரம், சின்னகுமாரபாளையம்//

இந்த மூணு ஊரும் எப்படி மடத்துகுளத்துல? இது உடுமலைல இருந்து வடக்கால அல்ல இருக்குது என்ன தொகுதி பிரிப்போ ?

மடத்துக்குளம் உடுமலைக்கு தெக்க அல்ல இருக்குது (நான் ஒரு முறை கல்லூரி இடப் பரிந்துரைக்கு கெங்கு சாமி நாயுடுவப் பாக்க அமராவதி காகித ஆலைக்கு வந்தேன்)

பழமைபேசி said...

@@செந்திலான்

தம்பி, மடத்துக்குளம் பழனி போற வழில இருக்குதுங்க... உடுமலைக்கு வடக்க, குறிஞ்சேரி, ஏரிப்பாளையம்... மேக்க இராகலபாவிப் பிரிவு... தெக்க போடிபட்டி... கிழக்க, காந்தி நகர்.. காகித ஆலை, KTL....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அண்ணா தொகுதியப் பிரிச்சதுல, உடுமலைக்குட்பட்ட பல பகுதிகள் மடத்துக்குளத்துக்கு வந்தாலும்.. அதிமுக சார்பா போட்டியிடவது என்னவோ உடுமலையோட தற்போதிய எம்.எல்.ஏ சண்முகவேலு தான்.

பொள்ளாச்சி தொகுதில இருந்த பல ஊர்கள் உடுமலை தொகுதிக்கு வந்திருக்கு. இதனால தான் பொள்ளாச்சி ஜெயராமன் உடுமலை தொகுதில நிற்கறாரு.

ஒரு வருசத்துக்கு முன்னாடி மடத்துக்குளம் தொகுதிய புதுசா அறிவிச்சவுடனேயே ஊருக்குள்ள மு.ப.சாமிநாதன் தான் நிற்கப்போறதாப் பேச்சு அடிபட்டுச்சு. அவர் அசலூர்க்காரர்னாலும் எதிர்பார்த்த ஒன்னு தான். அதனால் தொகுதியப்பிரிச்சதுல பெருசா பாதிப்பு வராதுன்னு நினைக்கிறேன்.

*

நாடோடியின் பார்வையில பார்த்தா.. இருக்கற திருட்டுப்பசங்கள்ல யாருக்குப் போடலாம்ங்கறது தான் இன்றைய யதார்த்த நிலைமை.

பார்ப்போம்..

ஓலை said...

பழமை, தொகுதி சீரமைப்பிலே மாறிடிச்சுன்னு நினைச்சேன்.

இந்த 7 குளத்தில ஒரு குளத்தில தான் எழுபது வருடம் முன் என் தாய் வழியில ஒரு 'கேரக்டர் ரங்கு' உருவானது.

குறும்பன் said...

பழமை வெத்து பேச்சு மக்களை கணக்கில் எடுக்காதிங்க. வாக்கு செலுத்துற மக்களை மட்டும் கணக்கில் எடுத்து பல இடுகைகள் தருக.

கூட்டணி குழப்பம் வேற அபாரமா இருக்கு, ஒரு நாள் தள்ளி இடுகை போட நினைச்சிங்க நிலைமை மாறி போறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு அதனால சட்டு புட்டுன்னு இடுகை போடுங்க.

செந்திலான் said...

அண்ணே அந்த மூணு ஊர்தான் உடுமலைக்கு வடக்கே இருக்குனு சொன்னேன் மடத்துக்குளம் பழனி போற வழியில தான் நான் வந்துருக்கேன் அமரவாதி காகித ஆலை அங்க தானே இருக்கு.

ராஜ நடராஜன் said...

தலைப்பை மட்டும் பார்த்துட்டு கடைல புகுந்து விட்டேன்.நீங்களா:)

ராஜ நடராஜன் said...

//மற்றபடி, ஈழப் பிரச்சினை, ஸ்பெக்ட்ரம், அண்டைய மாகாணங்களுடன் இருக்கிற நதிநீர்ப் பிரச்சினை, தமிழகத்தின் வளர்ச்சி நிலை, நிதி நிலை முதலானவற்றை எல்லாம் யாரும் எண்ணிப் பார்க்கவோ அல்லது அதில் நாட்டம் கொண்டவர்களாகவோ இருப்பதாகத் தெரியவில்லை.//

முடிவை மதில் மேல் பூனையாக்கி விட்டீங்களே?காசா?பணமா?இவ்வளவு கூர்ந்து பார்த்துவிட்டு ஆக்டோபஸ் செய்வதில்தான் தேர்தலுக்குப் பின்பு திரும்பி பார்க்கும் போது இடுகையின் வெற்றியிருக்கிறது.

இப்ப அடைப்பானுக்கு!எண்ணிப்பார்க்கவோ நாட்டமில்லாத சூழல் இருக்கிறதென்பதே சரியாக இருக்கும்.பல விசயங்கள் மக்களுக்கு சேராவிடினும் முத்திரைக்கால தேர்தல் தொட்டு மக்கள் அவர்களது கடைமையைச் செய்கிறார்கள்.

அரசியல் தில்லுமுல்லுகளை மட்டும் களைந்து விட்டால் தமிழகம் சிறக்கும்.

அரசூரான் said...

நாடோடியா பதிவிட்டது இருக்கட்டும், ஒரு நல்ல குடிமகனா உங்க தொகுதியில் போட்டியிடுகிற நல்ல வேட்பாளருக்கு ஒட்டு போட்டுட்டு வாங்க... :)

Naanjil Peter said...

தம்பி மணி நலமா?
உங்கள் தமிழகத் தேர்தல் கண்ணோட்டம் நன்றாக உள்ளது. வெளிநாட்டிலுள்ள‌ எங்க‌ளுக்கு இது ஒரு ந‌ல்ல‌ த‌க‌வல் ப‌ரிமாற்ற‌மாக‌ அமைந்துள்ள‌து.
ந‌ன்றிக‌ள் ப‌ல‌

அன்புட‌ன் நாஞ்சில் இ. பீற்ற‌ர்
மேரிலாந்து.

தெய்வசுகந்தி said...

நல்ல தொகுப்பு!!!