9/05/2009

Cousin In Law

மக்களே அனைவருக்கும் வணக்கம்! நேற்றைக்கு வெளியூர்ல இருந்து வந்ததுமே, இரவைச் சாப்பாட்டுக்கு என்ன செய்யலாம்ன்னு யோசிக்க யோசிக்க, அண்ணன் சீமாச்சு அலைபேசில அழைச்சு, வந்திருங்க வீட்டுக்குன்னு சொன்னாரு.

கஞ்சி கண்ட இடமே கைலாசம்; சோறு கண்ட இடமே சொர்க்கம்னு இருக்குற நமக்கு, இதைவிட வேற என்ன வேணும்?! அழைச்ச அஞ்சாவது மணித் துளிகள்ல, அவங்க வீட்டுப் படையலை ஒரு பிடி பிடிக்கப் பாய்ஞ்சி போனம்ல?!

எப்ப அவங்க வீட்டுக்கு போனாலும், சுவாரசியத்துக்குப் பஞ்சமே இருக்காதுங்க. நேற்றைக்கு அண்ணன் பகிர்ந்துகிட்ட சுவாரசியத்துல ஒன்னோட சாராம்சந்தான் இது. அவரோட மகள், ஆறு வயது சூர்யாதான் நம்ம இடுகையோட கதாநாயகி.

“நாம எல்லாரும் நியூயார்க் போகும் போது என்னோட cousin வீட்டுக்குப் போயிட்டு அப்புறம் வெளில போகலாம்!”


o.k Daddy, எப்ப போகப் போறோம்?”

உரையாடல் அப்படியே தொடர்ந்து முடிஞ்சதுக்கு அப்புறம், காட்சி மாறுது. சமயலறையில தாயுடன், நம்ம கதாநாயகி சூர்யா இப்ப!

Mummy, நாம நீயுயார்க் போறப்ப உங்க cousin in law வீட்டுக்குப் போறமா?”

பலத்த சிரிப்போட, “what? who is my cousin in lawdah?? என்ன சொல்லுற?”

“ஆமா, அப்பாவோட அப்பா உங்களுக்கு Father In Law! அப்ப அப்பாவோட cousin, உங்களுக்குக் cousin in lawதானே?”

“இஃகிஃகி”

இதைக் கேட்ட எனக்கும் சிரிப்புதான். குழந்தை தன்னோட தருக்க(logic)த்தை வெகு அழகாத்தான் வெளிப்படுத்தி இருக்கு. ஆனாப் புழக்கத்துல இந்த சொல் இல்லை. இருந்தாலும், அதை உறுதிப்படுத்திக்கலாம்ன்னு வலையில மேய்ஞ்சப்பதாந் தெரிஞ்சது, உள்ளபடியே அப்படி ஒரு சொல் ஆங்கிலத்துல இருக்குன்னு.

cousin-in-law

Husband of one's cousin
Wife of one's cousin
Cousin of one's husband
Cousin of one's wife
Husband of the cousin of one's husband
Husband of the cousin of one's wife
Wife of the cousin of one's husband
Wife of the cousin of one's wife


இப்ப இதுகளை உங்க மனசுல நிறுத்தி, உங்க cousin in law யாரெல்லாம்னு அடையாளப் படுத்த முயற்சி செய்யுங்க பார்க்கலாம்! என்னா வில்லத்தனம் இவனுக்குன்னு, நீங்க காந்தலி(tension)க்கிறது தெரியுது. கோபப்படாம முயற்சி செய்யுங்க....

சரி, இனி இதுகளைத் தமிழ்ல என்ன சொல்றதுங்றதுக்கு முன்னாடி, உறவு முறைகளோட தமிழ்ப் பெயர்களைப் பார்க்கலாம் வாங்க.

தந்தை, அப்பன், தமப்பன், தகப்பன், அத்தன், அச்சன், ஆஞான், ஆஞி, இஅயன், தா, நாயன்

தாய், அம்மை, அவ்வை, அன்னை, அஞ்ஞை, அத்தி, ஆத்தி, ஆத்தை, அச்சி, ஆச்சி, ஐயை, ஆய், தள்ளை

மகன், புதல்வன்

மகள், புதல்வி

பொதுவானதாக, மகவு, பிள்ளை, சேய், மதலை, கான்முளை, மக்கள்

அண்ணன், தமையன், ஆயான், அண்ணாட்சி, அண்ணாத்தை, தம்முன், மூத்தோன், முன்னோன்

தம்பி, தம்பின், இளவல், இளையான், பின்னோன்

அக்கை, அக்கைச்சி, தமக்கை, மூத்தாள், அச்சி

தங்கை, தங்கை அச்சி, செள்ளை, இளையாள், பின்னை, பின்னி

அண்ணன் மனைவி, அண்ணி, ஆயந்தி, நங்கை, அத்தாச்சி

அக்கை கணவன், அத்தான், மச்சான், மாமன்

மருமகன், மருமான், மருகன், மணவாளன்

மருமகள், மருமாள், மருகி, மணாட்டுப் பெண்

பெண் கொடுத்தோன், மாமன், மாமி

கணவன், அகமுடையான், கண்ணாளன், கொழுநன், கொண்கன், கொண்டான், நாயகன், மணவாளன், மணாளன், வீட்டுக்காரன்

மனைவி, அகமுடையாள், இல்லாள், மனையாள், பெண்டு, பெண்டாட்டி, கண்ணாட்டி, மணவாட்டி, வீட்டுக்காரி (damager?!)

கணவனின் தம்பி - கொழுந்தன், கணவனுடைய அண்ணன் - அத்தான், மூத்தார், கணவனுடைய தங்கை - கொழுந்தி, கணவனுடைய அக்கை - நாத்தூண், நாத்துணாள்

மனைவியின் அண்ணன் - மூத்த அளியன், அத்தான், மனைவியின் தம்பி- இளைய அளியன், மனைவியின் அக்கை - மூத்தளியாள், கொழுந்தி, மனைவியின் தங்கை (most wanted?!) - இளையளியாள், கொழுந்தி

ஓரகத்தான் - ஓர் குடி மணாளன், ஓர் குடியோன் (சகலன்)

ஓரகத்தி - ஓர்ப்படி, ஓர்ப்படைச்சி (ஒரே வீட்டில் புகுந்தவர்கள்)

தந்தையண்ணன், பெரியப்பா, மூத்தப்பா, பெரியையா

தந்தை தம்பி - சின்னப்பன், சிறிய தகப்பன், குட்டப்பன், சின்னையா

தந்தை சகோதரி, அத்தை, சின்னத்தை, பெரியத்தை

தாயின் சகோதரன், பெரியம்மான், சின்னம்மான், அம்மாண்டார், அம்மான் (மாமன் அல்ல)

தாயின் அக்கை, பெரியம்மை, பெரிய தாய், பெரியம்மா

தாயின் தங்கை, சின்னம்மா, தொத்தா, சித்தி, பின்னி

தந்தையின் தந்தை, அப்பச்சன், தாதா, தாதை, தத்தா, அப்பார்

தந்தையின் அதாய் - அப்பாச்சி, அப்பாத்தை, அப்பத்தி, அப்பாய்

தாயின் தந்தை, அம்மாச்சன்

தாயின் தாய், அம்மாச்சி, அம்மாய், அமிஞை, அம்மத்தா

பெற்றோர் தந்தை, பாட்டன், போற்றி, போத்தி

பெற்றோர் தாய் - பாட்டி

பாட்டன் தந்தை - பூட்டன், அப்பாட்டன், கொள்ளுப்பாட்டன்

பாட்டன் தாய் - பூட்டி, கொள்ளுப் பாட்டி

பூட்டன் தந்தை - ஓட்டன், சீயான், சேயான்

பூட்டன் தாய் - ஓட்டி, சீயாள் (சேயாள்)

மச்சினன்/மச்சம்பி: தங்கை கணவன், அம்மான் மகன், அத்தை மகன், இல்லாளின் சகோதரன், வயதில் இளையவன், மூத்தவன் மச்சான்

மச்சினி: இல்லாளின் தங்கை, அம்மான் மகள், அத்தை மகள் (வயதில் இளையவள், மூத்தவள் மச்சாள்)

மச்சாண்டார்: கணவனின் மூத்த சகோதரன்


மகன் மகன், மகள் மகன் - பெயரன், பேரன்

மகன் மகள், மகள் மகள் - பெயர்த்தி, பேத்தி

பேரன் மகன் - கொள்ளுப் பேரன், பொட்பேரன்

பேரன் மகள் - கொள்ளுப் பேர்த்தி, கொட்பேர்த்தி

சக நிலையில் களம் புகுந்தவள், சககளத்தி, சக்களத்தி, ஒக்களத்தி

Cousin என்பது போல பொதுச் சொல், அண்ணாழ்வி, மூத்தாழ்வி, இளச்சனாழ்வி

Cousin-In-Law? மருஆழ்வி

மேல கொடுத்த தகவல்களை அடுத்த தலைமுறைக்கு அளித்துச் சென்ற மொழிஞாயிறு பாவாணர் ஐயா அவர்களுக்கும், போப் அடிகளாருக்கும் நம்ம நன்றிகளைச் சொல்லிட்டு, cousin in law குறித்த தகவலுக்கு போலாம் வாங்க.

Husband of one's cousin: ஒருத்தருடைய ஆழ்வியோட கணவன். உதாரணத்துக்கு சொல்லப் போனா, பெரியப்பா மகள், வயசுல மூத்தவர்ங்றதால அவர் மூத்தாழ்வி. அவரோட கணவர் மூத்த மருஆழ்வி, மூத்த மராழ்வி.

Wife of one's cousin: மேல சொன்னதோட பெண்பால், மருக்கையாழ்வி

Cousin of one's husband: மூத்த மராழ்வி, இளைய மராழ்வி

Cousin of one's wife: மரு தங்கையாழ்வி, மருதங்காழ்வி

Husband of the cousin of one's husband: உதாரணத்துக்கு, என் மனைவியின் பெரியப்பா மகளோட கணவன், என்னோட மனைவிக்கு மருஅண்ணாழ்வி, வயசுல மூத்தவரா இருக்கும்பட்சத்தில்

Husband of the cousin of one's wife: உதாரணத்துக்கு சொல்லப் போனா, என்னோட damagerக்கு, ச்சீ, என்னோட இல்லாளுடைய இளையாழ்வியின் கணவர் எனக்கு மரு இளையாழ்வி.

Wife of the cousin of one's husband; கணவரோட அக்கையாழ்வி அல்லது தங்காழ்வியின் கணவர், மரு அக்காழ்வி அல்லது மரு தங்காழ்வி.

Wife of the cousin of one's wife: மனைவியின் அண்ணாழ்வி, அல்லது இளையாழ்வியின் மனைவி, மரு அண்ணாழ்வி அல்லது மரு பின்னாழ்வி.

இந்த ஏழு தலைமுறை, ஏழு தலைமுறைன்னு சொல்லுறாங்களே? அது?? சேயோன்(ஓட்டன்), பூட்டன், பாட்டன், தந்தை, தான், மகன், பெயரன், கொள்ளுப் பெயரன், எள்ளுப் பெயரன் ஆகிய இதுகள்ல, முதலும் கடையும் போக மிஞ்சியதைச் சொல்றதுதாங்க அது.

பொறுப்பி: போங்க, தாராளமாப் போயி இங்க நீங்க படிச்ச உறவு முறைகளோட பெயர்களை வெச்சே உங்க உறவுக்காரங்களை விளிச்சி அழைச்சி, கொஞ்சிக் குலாவுங்க... யார் வேண்டாமுன்னு சொல்றா இங்க?!

ஆனா மகனே, நீங்க ஆழ்வி, மருஆழ்வி, ஓட்டன், பூட்டன்னு எல்லாம் விளிச்சு அழைச்சுதை அவங்க ஏத்துகிட்டா மகிழ்ச்சி. விளைவு வேறவிதமா ஆகி, ஏதாவது இரசாபாசம் ஆச்சுதுன்னா அதுக்கெல்லாம் நாம பொறுப்புக் கெடையாது; சொல்லிப் போட்டஞ் செரியா?!

(பொறுப்பி -> பொறுப்பு அறிவித்தல் --> டிஸ்கி - > Disclaimer)

20 comments:

கயல் said...

அப்பப்பா! என்ன இது? இத்தனை உண்டா தமிழில்!! அசத்தீட்டீங்க வழக்கம் போல!!!

vasu balaji said...

இப்பத்தான் தெரியுது. இத்தன ஒறமொற எல்லாம் யாரு கவனம் வெச்சிக்கிறதுன்னே எல்லாத்தையும் தொலைச்சிட்டோம் போல. ஆம்பிளையாளெல்லாம் அங்கிள், பொம்பளையாளெல்லாம் ஆண்டினு போயாச்சி. இப்படியெல்லாம் ஏங்கடிக்கப்படாது. அவ்வ்வ்வ்.

ஆ.ஞானசேகரன் said...

நிறைவான விளக்கங்கள்

பழமைபேசி said...

//கயல் said...
அப்பப்பா! என்ன இது? இத்தனை உண்டா தமிழில்!! அசத்தீட்டீங்க வழக்கம் போல!!!
//

நன்றிங்க கயல்!

//வானம்பாடிகள் said...
இப்படியெல்லாம் ஏங்கடிக்கப்படாது. அவ்வ்வ்வ்.
//

அதுக்கு அவசியமே இல்லைங்க பாலாண்ணே! ஏன்னா, இது நாம் இருவர் நமக்கொருவர் காலம்!!

//ஆ.ஞானசேகரன் said...
நிறைவான விளக்கங்கள்
//

நன்றிங்க ஞானியார்!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இந்த உறவுகளை பலர் காதில் கூட கேட்டதில்லையே தல..

பழமைபேசி said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
இந்த உறவுகளை பலர் காதில் கூட கேட்டதில்லையே தல..
//

மனம் இருந்தால் மார்க்கமுண்டு... மனசுல உறவை நினைச்சா, அதுவும் நடக்குமாயிருக்கும்?!

அப்பாவி முரு said...

அருமையான உறவுமுறை அமைப்பிலிருந்து வெளிவந்து,

நண்பன், நண்பனோட நண்பன் கூட மட்டுமே வாழ்க்கையை ஓட்டும் நிலைக்கு வந்துவிட்டோமே?

:(((

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல். தமிழின் வளத்தைக் காட்ட இது ஒன்று போதாதா?

உங்கள் விளக்கத்தை மிகவும் ரசித்தேன்.

ஈரோடு கதிர் said...

ஆமா மாப்பு...
இத்தன கஷ்டப்பட்டு எழுதி என்ன பிரயோசனம்

இங்கிலிபீசுல...

பெரியப்ப பையனையும் 'கசின்'ங்றான்
மாமம் பையனையும் 'கசின்'ங்றான்

சித்தப்பனையும் "அங்கிள்"ங்றான்
மாமனையும் "அங்கிள்"ங்றான்

நம்மூர்லயும் கொழந்தைங்கிட்ட மாமாவுக்கு, சித்தப்பாவுக்கு வணக்கஞ் சொல்லுனா சொல்றானுவ, அங்கிளு
குட்மார்னிங் சொல்லி நெத்தி மேல
கையை வையிங்றான்.

//(damager?!)//
ம்ம்ம் தங்கச்சி கோயமுத்தூர்லதான இருக்கு... இந்த மேட்டர போஸ்டர் அடிச்சு ஒட்டிபோடறேன். அப்பறம் தெரியும்...


//தந்தையின் தந்தை, அப்பச்சன், தாதா, தாதை, தத்தா, அப்பார்//

அப்போ "தாத்தா" கிடையாதா?

//தந்தை, அப்பன், தமப்பன், தகப்பன், அத்தன், அச்சன், ஆஞான், ஆஞி, இஅயன், தா, நாயன்//

கேரளா அச்சன் நம்ம சரக்குதானா?

நாயன் தான் நைனா ஆகிருக்குமோ?

தீப்பெட்டி said...

பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்..

இராகவன் நைஜிரியா said...

அருமையான விளகங்கள். நீங்க சொன்ன மாதிரி வருங்காலத்தில் அம்மா, அப்பா, மனைவி, மகன் / மகள் இந்த உறவுகள் மட்டும் தான் இருக்கும். மாமன், மாமி, அத்தை, பெரியப்பா. சித்தப்பா உறவுகள் இருக்காது.

//தந்தை தம்பி - சின்னப்பன், சிறிய தகப்பன், குட்டப்பன், சின்னையா // தஞ்சை பக்கங்களில், பிராமணர்கள் சித்தப்பா என்றும் அழைப்பர்.

பழமைபேசி said...

//தீப்பெட்டி said...
பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்..
//

படித்துப் பார்த்து ஏங்க? இஃகி!

//இராகவன் நைஜிரியா said...
அருமையான விளகங்கள்.
//

நன்றிங்க ஐயா!

பழமைபேசி said...

//அப்பாவி முரு said...
அருமையான உறவுமுறை அமைப்பிலிருந்து வெளிவந்து,

நண்பன், நண்பனோட நண்பன் கூட மட்டுமே வாழ்க்கையை ஓட்டும் நிலைக்கு வந்துவிட்டோமே?

:(((
//

ஆமாங்க தம்பி....

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
கலக்கல். தமிழின் வளத்தைக் காட்ட இது ஒன்று போதாதா?

உங்கள் விளக்கத்தை மிகவும் ரசித்தேன்.
//

நன்றிங்க நம்மூர்த்தம்பி!

@@கதிர் - ஈரோடு

மாப்பு, நல்லா இருக்கீகளா? நீங்க damagerகிட்டப் போட்டுக் குடுத்தா, நான் என்னோட dammager in lawகிட்டப் போட்டுக் குடுப்பன்ல??

Mahesh said...

நாம எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆழ்விதானுங்.... ஏதோ ஒரு விதத்துல.... ஏதோ ஒரு முறைல...

பழமைபேசி said...

//Mahesh said...
நாம எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆழ்விதானுங்.... ஏதோ ஒரு விதத்துல.... ஏதோ ஒரு முறைல...
//

நூத்துல ஒரு வார்த்தை...

தங்கராசு நாகேந்திரன் said...

மிக மிக அருமை
இதப் படிக்கும்போது எங்க ஊருல உள்ள உறவுமுறைகளும் ஞாபகத்துக்கு வருது.
மாமாவோட மனைவி மாமா வண்டி
காக்கா(அண்ணன்) மனைவி காக்கா வண்டி சாச்சா(சித்தப்பா)மனைவி சாச்சா வண்டி.(எப்பூடி)
கலக்குறிங்க தல.

ஊர்சுற்றி said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்தப் பக்கம் வர்றேன்.
இங்கிட்டு வந்தா இத்தனை தகவல்களா!
அப்பப்பா...!!!!
நான் வியப்பிலிருந்து இன்னும் மீளவில்லை!
இத்தனை வார்த்தைகளா!

பழமைபேசி said...

//தங்கராசு நாகேந்திரன் said...
மிக மிக அருமை
இதப் படிக்கும்போது எங்க ஊருல உள்ள உறவுமுறைகளும் ஞாபகத்துக்கு வருது.
மாமாவோட மனைவி மாமா வண்டி
காக்கா(அண்ணன்) மனைவி காக்கா வண்டி சாச்சா(சித்தப்பா)மனைவி சாச்சா வண்டி.(எப்பூடி)
கலக்குறிங்க தல.
//

மேலதிகத் தகவல் சுவாரசியமா இருக்குங்க... நன்றி!

//ஊர்சுற்றி said...
ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்தப் பக்கம் வர்றேன்.
//

அய்ய, அடிக்கடி வந்து போங்க!

ஆரூரன் விசுவநாதன் said...

அம்மா......அப்பா..... முடியல....

இப்பவே கண்ணைக் கட்டுதே.....இன்னும் எப்புடி படிப்பேன்...


வார்தைகள் இல்லை, அற்புதம்

அன்புடன்
ஆரூரன்

பழமைபேசி said...

//ஆரூரன் விசுவநாதன் said...
அம்மா......அப்பா..... முடியல....

இப்பவே கண்ணைக் கட்டுதே.....இன்னும் எப்புடி படிப்பேன்...


வார்தைகள் இல்லை, அற்புதம்
//

சொந்தக்காரங்க எல்லார்த்தையும் பார்த்தீங்கதானே? நன்றிங்க!