9/22/2009

விடியல், புலம்பெயர்ந்த மண்ணிலே!

முற்பகலிலே கட்டியம் கூறின
கூடிக்குலாவிய தும்பிக்கூட்டம்!
பெய்தமழையில் பெருத்துப்போயின
வெடிக்காத பருத்திக்காய்கள் !!

சுற்றி வளைத்தடித்த சாரலில்
சுத்தமாகிப் போயின கோபுரக்கலசங்கள்!
பொங்கிய கண்மாயைச்சுற்றி வேடிக்கை
பார்த்தவண்ணம் ஊர்க்கூட்டம்!!

திடீர் எனப்பிறந்த சிறுகுளங்கள் ஊர்த்தெருவில்,
நீர்கிழிய அதில் ஏர்க்குச்சி ஓட்டிய சிறுவர்கள்!
ஊர்க்கண்மாயில் சில்லடித்துப் போட்டி
நடத்திய உற்சாக விடலைகள்!!

ஏர்க்கலப்பை தேடி அங்குமிங்குமாய்
அலையும் நேற்று வரை சோம்பிய உழவன்!
கைக்களை எடுக்க நெட்டி முறித்து,
ஆயத்தமாகிக் காடு நோக்கும் காரிகைகள்!!

மட்டம் உயரக்கண்டு கேணியில் சாலோட்ட
காளைகளை நோக்கும் உழைப்பாளி!
அடித்த மழையில் புடைத்த காளான்களைப்
பறிக்கப்போன முதியவர் கூட்டம்!!

அன்று தெரியவில்லை;பெய்த மழையில்
தமிழ்ச்சுவடுகள் விட்டுப்பிரிகிறதென!
அன்று தெரியவில்லை;பெய்த மழையில்
தமிழ்ப்பண்பாடும் பட்டுப் போகிறதென!!

ஆனாலும் விட்டுவைத்தாய் என்னை; ஆதலினால்,
அலைகின்றேன் நினைவுகளின் எச்சமாய்!
ஆனாலும் விட்டுவைத்தாய் என்னை; ஆதலினால்,
கண்கள் பனிக்கப் படைக்கின்றேன் இதனை!

கொங்குவள நாட்டிலே அன்புத் தேனும், விருந்தோம்பல் எனும் பழச்சாறும், ஊர்கூடித் தேரிழுக்கும் ஒருமனம் கொண்ட சமூகப் பற்றும் எங்கும் வியாபித்திருக்கும். பல்வேறு தொழில்களை முனைந்து செய்யும் மக்கள், செய்யும் தொழிலாலே மாறுபட்டு அடையாளம் காணப்பட்டாலும் கூட, அவர்களிடத்தே சமூகப் பிணைப்பு இருந்தது. மந்தராசல ஐயா தோளில் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு கொசவம்பாளையத்துக் குட்டையில் மண்ணடிக்க காலை ஆறு மணிக்கெல்லாம் வண்டியைப் பூட்டிக் கொண்டு செல்கிறார். செல்லும் வழியில், ஊரோரத்தில் இருக்கும் பட்டாளம்மன் கோயிலில் சிறு கூட்டம் குழுமி இருப்பதைக் கண்டு,

”கிட்டா, அதென்றா காலையிலயே அங்க கூட்டம்? வேற வேலை வெட்டி இல்லியாக்கூ??”

“அதில்லீங் சாமி, நம்ம சின்னாம் பொண்டாட்டிக்கு வவுத்து நோவுன்னு கோயில் வாசல்ல படுக்க வெச்சு இருக்குறாங்!”

“அட என்றா பழம பேசுற நீயி! தூக்குங்டா அவளை!! வண்டியில போட்டு மொகானூர் ஆசுபத்திரிக்கு கொண்ட்டு போலாம்!”

கிட்டான் கூவிக் கொண்டே கோவிலை நோக்கி விரைகிறான். மந்தராசல அய்யாவும் எந்தவிதமான யோசனையும் இன்றி வண்டியைத் திருப்பி அந்தச் சந்தில் விடுகிறார்.

“பண்ணாடி, வண்டி சந்துல வராதுங்! இதென்னங், நெமையில இங்கயே அவளைத் தூக்கியாறமுங்!”

கூட்டம் சின்னான் மனைவி மாரியைச் சுமந்து வந்து, மண் அடிக்கச் செல்லவிருந்த வண்டியில் கிடத்த, கூட்டத்தினர் மறுத்தும் மந்தராசல அய்யாவே வண்டியை மொகானூர் செல்லும் இட்டேரியை நோக்கிச் செலுத்துகிறார். கிராமத்திலே இருக்கும் சென்ற தலைமுறையினரிடம் இன்றும் இருக்கும் சமூகப் பற்று இது.

பிற்பகல் சுமார் இரண்டு மணி; கடுமையான கோடை வெயில்! ஊருக்குள்ளே ஆடவர் நடமாட்டம் பெரிதாக இல்லை. பெரும்பாலான பெண்டிரும் அவர்களோடு சேர்ந்து காடு கழனிக்குச் சென்றிருந்த நேரம். கைக்குழந்தைகளுடன் கூடிய தாய்மார், கடை கண்ணி வைத்து நடத்துவோர், நெசவு, கூடை முடைதல், சட்டி பானை முடைதல், தச்சு வேலை என கைத்தொழில் செய்வோர் மட்டும் இதற்கு விதிவிலக்காய், வெயிலின் உக்கிரம் தாளமுடியாமல் ஊருக்குள் இருக்கும் கோவிலடி வேப்ப மரம், ஊர் முற்றத்து ஆலமரம் எனக் காற்றோட்டம் கூடிய நிழலுக்குத் தஞ்சம் புகுந்திருந்த தருணம்.

அந்த வெயிலிலும், உடன் ஒரு கையாளுடன் அரசு அலுவலர் ஒருவர் மக்கள்த் தொகைக் கணக்கெடுப்புக்காக, இட்ட வேலையைச் சரியான நேரத்தில் முடித்தாக வேண்டிய கட்டாயத்தின் பேரில் வீடு வீடாக ஏறி இறங்கிக் கொண்டு இருக்கிறார். கதவுகள் இரண்டும் திறந்திருந்த வீட்டின் வாசலில் நின்று கொண்டு,

“வீட்ல யாருமில்லீங்களா?”

பக்கத்து வீட்டுத் திண்ணையில் இருந்து, “அமுச்சீ, யாரோ ஊட்டுக்கு வந்து இருக்காங்க அமுச்சீ!”

புறக்கொல்லையில் கொட்டுப் பருத்தியை ஒழித்துக் கொண்டிருந்த மூதாட்டி வெளிப்படுகிறார். “கண்ணூ, இந்த வெயில்ல வாசல்லயே நிக்காட்டி என்னோ? உள்ள வந்து இந்தக் கட்டல்ல சித்த குக்குங்க, வாறேன்”. அந்த மூதாட்டிக்கு வந்திருப்பது யாரென்று தெரியாது. அவளுக்குத் தெரிந்ததெல்லாம், யாரோ ஒரு வெளியாள் தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார். கடுமையான வெயிலின் காரணமாய் அவர்கள் வேர்த்துக் காண்ப்படுகிறார்கள் என்பது மட்டுமே!

உள்ளே சென்று, அடுப்பங்கரையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் உறியில் இருந்த மோர்க் குவளையைக் கீழிறக்கி, சிறிது நீர் விட்டு விளாவி, அதில் உப்பும் கறிவேப்பிலையும் கிள்ளிய மிளகாயும் இட்டு இரு கோப்பைகளில் நிரப்பிக் கொண்டு முன்வாசலுக்கு வருகிறார்.

“இந்தாங்க கண்ணுகளா, இந்த மோரைக் கொஞ்சம் குடீங்க...”

”இல்லீங் ஆத்தா, இப்பத்தான் சோறு உண்ட்டு.....”

“இல்லீங்காட்டி என்னோ? வாங்கிக் குடீங்....”

இருவரும் அந்தக் கோப்பைகளை வாங்கி, மாந்து மாந்தென்று மாந்துகிறார்கள். அக்காட்சியைக் கண்டதும், பெற்ற பிள்ளைக்குப் பாலூட்டும் போது என்னவொரு ஏகாந்த உணர்வு அந்தத் தாயிக்கு மேலிடுகிறதோ, அத்தகைய உணர்வுக்கு ஆட்பட்டுப் பரவசமடைகிறாள் அந்த கொங்குவள நாட்டு மூதாட்டி. இது நமது தமிழ்ப் பண்பாட்டிலே ஊறித் திளைத்த விருந்தோம்பல்!

முன்பின் தெரியாத வழிப்போக்கர்களுக்கு, நீர்மோர்ப் பந்தல்கள், பாணக்க விநியோகம், அன்னக் காவடிகளுக்கு உணவு படைத்தல், குறியாப்புத் தருதல், தானதர்மம் செய்தல், இப்படியான சமுதாயக் கூறுகள் தமிழனின் வாழ்வில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும். மாரி பொய்த்து, காடு கழனிகளில் வேலை வெட்டி குறைந்திருந்த ஆவணி மாதம் மாலை வேளை அது. ஊர்வாசலில் இருக்கும் திண்ணையில் கூடிய பெரியவர்கள் நாட்டு நடப்பு, வேளாண்மை, பண்ணையாட்களின் சுக துக்கங்கள் என பழமை பேசியபடி இருக்கிறார்கள். கூடவே, பண்ணையிலும் வீட்டிலும் இருப்பவர்களுக்கு போதிய வேலை வெட்டி இல்லாதது கண்டு பெருத்த யோசனையில் ஆழ்ந்திருக்கிறார்கள் அந்த ஊர்ப் பெரியவர்கள்.

“மச்சே, இன்னிக்கி காலீலதான் வேலங்கிட்டச் சொல்லீட்டு இருந்தேன். நாம நம்மூர்க் குட்டையத் தூர் வாருனா என்னோ? வறண்டு கெடக்குறப்பவே சுத்தம் பண்ணி வெச்சமானா, வேலை முடியறதுக்கும் அப்பிசி மாச அடைமழைக்கு கொளம் நெம்புறதுக்கும் கணக்கா இருக்கும் பாருங்க!”

“நல்ல ரோசனை சொன்னீங்க.... இருங்க தெக்கால ஊட்டு அண்ணங்குட்டச் சொல்றேன்!”

சிறிது நேர அளவளாவலுக்குப் பிறகு, ஊர்த் தலையாறி பிரம்மன் அழைக்கப்படுகிறான். பின்னர், ஊருக்குள் சென்று நாளை முதல் கொசவங்குட்டை, ஆச்சாங்குளம் இரண்டிலும் தூர்வாரும் பணி துவங்க இருக்கிறதென்று தண்டோரோ போடும்படி பணிக்கப்படுகிறான். அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களில் ஒருவரான சின்னையன், முதல்நாள் முறையாகத் தன் வீட்டில் இருந்து மதியவேளைக்கான பந்தி பரிமாறப்படும் என்பதையும் தெரிவித்து விடுகிறார். இது சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் இருந்த பிணைப்பைக் காட்டுகிறது.

மேற்கூறிய காரியங்கள் எல்லாம் கடந்த நூற்றாண்டில் நடந்தவை அல்ல; சுமார் பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்னால் கொங்குவள நாட்டில் ஈடேறியவைதான். இன்றைக்கு இந்தக் கட்டமைப்பு இருக்கிறதா? தொழில்வளம் பெருகி, சமுதாயம் வேளாண்மையிலிருந்து மற்ற மேம்பட்ட தொழில்களுக்குச் சென்றுவிட்டாலும் கூட, அந்த உளவியல்க் கூறுகள் இருந்திருக்க வேண்டுமன்றோ? இல்லை என்பதுதானே நிதர்சனம்??!

இல்லாமற் போனதுக்கான காரணம் என்ன? தமிழனின் கலை, இலக்கியம் மற்றும் பண்பாடு திட்டமிட்டே சிதைக்கப்படுகிறது. மலிவான சலுகைகளைகயும், வேடிக்கைகளையும் காண்பித்து, தமிழனின் ஆணி வேரான மொழியும் பண்பாடும், தொன்மையான அடையாளமும் வெகுவேகத்தில் சூறையாடப்பட்டு வருகிறது என்பதே வருத்தமான உண்மை. காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது எனச் சொல்லித் தந்த தமிழ்ச் சமுதாயம், உண்மை உயிர் போன்றது என்பதை உணராமல் இருப்பதுதான் சோகத்தின் அடிநாதம். சூறையாடப்படும் உண்மையை, ஊடகங்களுக்கு எதிராகச் சொல்ல எவரும் துணிவதே இல்லை.

இந்தச் சூழலில்தான் நாமனைவரும் இருக்கிறோம்; மாறுபாட்டுக்கும் வேறுபாட்டுக்கும் உள்ள வித்தியாசங்களை உணர்ந்தாக வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. மாறுபாடு என்றால் என்ன? நம் செந்தமிழ் நாட்டிலே, தமிழர்கள் கண்டு கொண்டிருப்பது மாறுபாடு! மாற்றங்களைக் கண்டு மாந்தன் மகிழ்வது இயல்பு. ஒன்றையே பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு புதிதாக ஒன்றைக் காணுகிற வாய்ப்பு வரும்போது, அவனுக்கு அதிலே நாட்டம் வரும். அதை வணிகர்கள் விற்றுக் காசாக்குவார்கள். ஏனென்றால் அது அவர்களது தொழில்!

ஆனால், அந்த மாற்றங்கள் நுகரும் போது மட்டுமே இன்பம் தரக்கூடிய சிற்றின்பமா? அல்லது காலாகாலத்துக்கும் இன்பம் தர வல்ல பேரின்பமா என்பதைப் பகுத்துப் பார்க்கிற பக்குவம், நம்மிடையே குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது. ஆகவே, ஒவ்வாத மாற்றங்கள் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, அதில் தமிழனும் தன் அடையாளத்தை இழந்து வருகிறான்.

புலம்பெயர்ந்த மண்ணிலே வாழும் தமிழர்களின் நிலை, இதனின்று முற்றிலும் வேறானது. இங்கே இருக்கும் மேலைநாட்டுச் சமூகம், கலை, இலக்கியம், பண்பாடு முதலானவை அனைத்தும் வளர்ந்து, முதிர்ச்சியுற்று ஒரு நிலையில் நிற்கிறது. தாயகத்துடன் ஒப்பிடுகையில், பெரிதாக மாற்றங்கள் நிகழ்வதில்லை. அப்படியே நிகழ்ந்தாலும், அதைப் பகுத்தறிந்து நுகரக்கூடிய பக்குவம் மேலைநாட்டவனுக்கு உண்டு. புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாம் என்ன செய்கிறோம்? மேலைநாட்டு கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் இவற்றை நுகர்ந்து, அனுபவித்து, பின்னர் நமது பின்புலத்தோடு ஒப்பிடுகிறோம். ஒப்பிடுவதின் வழியாக இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளைக் காண்கிறோம்.

வேறுபாடுகள் காண்பதின் வாயிலாக, தமிழ் மொழி, கலை, இலக்கியம், பண்பாட்டின் மகத்துவத்தைப் புரிந்து கொள்கிறோம். நிறை குறைகளை அறிந்த கொண்ட பின்னர், தாய்மொழியின் மீது, நமது பண்பாட்டின் மீது, நம் மக்கள் மீது காதல் கொள்கிறோம். ஒரு அக்கறை பிறக்கிறது. உணர்வு கொள்கிறோம்.

செந்தமிழ் நாட்டிலே இருப்பவனுக்கு இந்த வாய்ப்பு இல்லை. அவன் மாற்றத்தின் சுழலில் சிக்குண்டவனாய் இருக்கிறான். ஆகவே, தமிழுக்கு ஒரு மறுமலர்ச்சி உண்டு என்றால் அது புலம்பெயர்ந்த மண்ணிலேதான் என்பது திண்ணம். இதைச் சரியாகப் புரிந்து கொண்டு, நம் அடுத்த தலைமுறையினரை தமிழ் காக்கும் சிங்கங்களாய் வளர்த்தெடுப்போமாக!

--பழமைபேசி.

குறிப்பு: இப்படைப்பானது, இந்த ஆண்டுக்கான கொங்கு மலருக்காக எழுதப்பட்டு வெளியான ஒன்று. வாய்ப்பை அளித்த, ஆண்டு விழா மலர்க் குழுவினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

17 comments:

Mahesh said...

அருமை... அருமை...

Anonymous said...

மூன்று தலைமுறையாய் விவசாயம் மறந்த என்னைப்போன்றவர்கள் தெரிந்துகொள்ளவேண்டியது நிறைய இருக்கு. சூப்பரு

செல்வநாயகி said...

பழமைபேசி,

நல்ல தமிழ்ச் சொற்களைப் பாவிப்பதிலும், பழந்தமிழ் இலக்கியப் பாடல்களைக் கையாள்வதிலும் எல்லாந் தாண்டித் தமிழ் மொழி மீதான ஆழ்காதலுடனும் நீங்கள் எழுதிவருவதை உணரமுடிகிறது.

ஆனால் இந்தக் கட்டுரை குறித்து எனக்குச் சில விமர்சனங்கள் உண்டு. விரிவாக எழுதவேண்டும், ஏற்கனவே தெக்கிக்காட்டான் அவர்கள் பெட்னா குறித்து எழுதியிருந்த இடுகையின் தொடர்ச்சியாய் எழுத நினைத்தது, தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இப்படியான விவாதங்களை ஏற்படுத்தும் விடயங்களை எழுதினால் அவற்றைச் சரியாகப் பிந்தொடரும் அவகாசம் அமையும்போது எழுத முயல்வேன்.

மற்றபடி இவ்விடுகையில் இருக்கும் உங்கள் மொழிசார்ந்த அக்கறைக்கு மீண்டும் நன்றி.

vasu balaji said...

அருமையான கட்டுரை. உள்ளது தொலைத்து, நல்லது தவிர்த்து அல்லது பேணுகிறது உலகம்.

ஈரோடு கதிர் said...

அருமையான இடுகை மாப்ள..

பாட்டி மோர் கொடுக்கும் வரிகளைப் படிக்கும்போது என் கண்கள் ஒரு நிமிடம் பனித்தது... மனது குளிர்ந்தது

மாப்பு வெட்டாப்பிலிருந்த குறையை.. இந்த நீண்ட இடுகை நிவர்த்தி செய்துவிட்டது

Unknown said...

என்னுங் பண்ணுறது..

ஊரே கூடி தேர இழுத்தாத்தான ஆகும்..

சொன்னாலும் ஆரும் கேக்கமாட்டிங்குறாங்க..

நாம ஒன்னு ரண்டு பேரு பேசி எனத்துக்கு ஆகப்போகுது..
நாம இப்படி பழம பேசிட்டே இருக்க வேண்டியதுதே..

ஆரூரன் விசுவநாதன் said...

அன்பிற்கினிய நண்பருக்கு,

எதையெல்லாம் இழந்திருக்கிறோம், என்பதை பட்டியலிட்டது அருமை. காலவெள்ளம், நம்மிடமிருந்து அடித்துச் சென்ற பலவற்றையும் பேசியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

//தொழில்வளம் பெருகி, சமுதாயம் வேளாண்மையிலிருந்து மற்ற மேம்பட்ட தொழில்களுக்குச் சென்றுவிட்டாலும் கூட, அந்த உளவியல்க் கூறுகள் இருந்திருக்க வேண்டுமன்றோ? இல்லை என்பதுதானே நிதர்சனம்??!//

//ஒவ்வாத மாற்றங்கள் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, அதில் தமிழனும் தன் அடையாளத்தை இழந்து வருகிறான்.//

"மறந்து போவது மானுட இயல்பு, அதை நினைவுபடுத்துவது நம் கடமை"

என்று எங்கோ படித்தது நினைவிற்கு வருகிறது. இந்த மாற்றங்கள் இயல்பானவையே. பல்வேறு காலகட்டங்களில் இதுபோன்ற கலாச்சார அழிவும், பின் மீட்டெடுப்பும் இங்கு மட்டுமல்ல...உலகளாவிய அளவில் நடந்துதான் வந்துள்ளது. ஒரு சமுதாயத்தின், பொருளாதார ரீதியில் வளர்ந்த படித்த, சிலரின் கைகளில் தான் அவை இருக்கின்றன. நம் பாட்டனும், பூட்டனும், பல சிரமங்களுக்கிடையேயும், திருவிழாக்களை நடத்தியிருக்காவிட்டால், இன்றும் அவை நாம் அறியாதவையாகவே இருந்திருக்கும்.

மேலும்
புலம் பெயர் தமிழர்கள் பற்றி பேசியிருக்கிறீர்கள். புலத்தில் நம் கலை, கலாச்சாரம், தத்துவம், சமயம் இவையெல்லாம் ஒரு ஒன்றினைக்கும் காரணியாகவே செயல்படுகின்றன.

அமெரிக்க நாடுகளைப் பற்றி நான் அறியவில்லை.ஆனால் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணித்து, அங்குள்ளவர்களோடு பேசியிருக்கிறேன். மொழியும் கலாச்சாரமும், சமயமும், அவர்களை ஒன்றினைக்கும் ஒரு காரணியாகவே செயல்பட்டிருக்கின்றனவே, தவிர நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல்,

ஒப்பீடுசெய்து பார்த்து, நம் பண்பாட்டின் மகத்துவத்தை உணர்கிறோம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

http://arurs.blogspot.com/2009_03_08_archive.html
இங்கு படித்துப் பாருங்கள்

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

தாரணி பிரியா said...

நல்லா சொல்லி இருக்கிங்க. ஆனாலும் நமக்கான அடையாளங்கள் முழுசா தொலைஞ்சு போகலைன்னுதான் நான் நினைக்கிறேன்.

பழமைபேசி said...

@@Mahesh

முதல் வணக்கமும் நன்றியும்!

@@சின்ன அம்மிணி

ரெண்டாவது வணக்கமும் நன்றியும்!

பழமைபேசி said...

@@ செல்வநாயகி

வாங்க, வணக்கம்! எதையும் பொதுவுல வெச்சா, அது விமர்சனத்துக்கு ஆட்பட்டதே! நீங்க சொல்லுங்க, நாங்க கேட்க ஆர்வமா இருக்கோம்!!

பழமைபேசி said...

@@வானம்பாடிகள்

பாலாண்ணே வணக்கம், நன்றி!

@@கதிர் - ஈரோடு

நன்றிங்க மாப்பு! பாத்து, கண்ணைத் தொடச்சிக்குங்க சித்த!!

@@பட்டிக்காட்டான்..

நல்லா சொன்னீங்க போங்க!

பழமைபேசி said...

@@ஆரூரன் விசுவநாதன்

நன்றிங்க! ஊர் வெளியில் திரியும் நாடோடிகளைப் போல, ககனமார்க்கத்தில் இரை தேடித் திரியும் பட்சிக்கூட்டத்தைப் போல, சோலையின் மருங்கில் அடைய இடம் தேடித் திரியும் தேனீக்கூட்டத்தைப் போல, நிலப்பரப்பில் ஆங்காங்கே தமிழர் கூட்டம் ஏதோ ஒன்றுக்காக கூடிக் குழுமிய வண்ணமே இருக்கிறார்கள்.

அதற்கான காரணிகளில் ஒன்று இதுவாகக் கூட இருக்கலாம்!

அப்படிப்பட்ட கூட்டங்களில் ஒன்றான ஒரு கூட்டத்தினருக்கு படைக்கப்பட்டதே இக்கட்டுரையானது. அக்கூட்டத்தார் தமிழர் பண்பாட்டின் மீது அபிமானங் கொண்டு பற்றுடன் பறை சாற்றுவோர் என்பதில் இந்த சாமான்யனுக்கு ஒரு ஆழ்ந்த நம்பிக்கை நண்பா!

பழமைபேசி said...

//தாரணி பிரியா said...
நல்லா சொல்லி இருக்கிங்க. ஆனாலும் நமக்கான அடையாளங்கள் முழுசா தொலைஞ்சு போகலைன்னுதான் நான் நினைக்கிறேன்.
//

நன்றிங்க; ஆமாங்க, முழுதுமாக இழந்துவிடவில்லைதான்.... மாற்றங்கள் வேகமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது, அவ்வளவுதான்!

க.பாலாசி said...

//வேறுபாடுகள் காண்பதின் வாயிலாக, தமிழ் மொழி, கலை, இலக்கியம், பண்பாட்டின் மகத்துவத்தைப் புரிந்து கொள்கிறோம். நிறை குறைகளை அறிந்த கொண்ட பின்னர், தாய்மொழியின் மீது, நமது பண்பாட்டின் மீது, நம் மக்கள் மீது காதல் கொள்கிறோம். ஒரு அக்கறை பிறக்கிறது. உணர்வு கொள்கிறோம்.
செந்தமிழ் நாட்டிலே இருப்பவனுக்கு இந்த வாய்ப்பு இல்லை. அவன் மாற்றத்தின் சுழலில் சிக்குண்டவனாய் இருக்கிறான். ஆகவே, தமிழுக்கு ஒரு மறுமலர்ச்சி உண்டு என்றால் அது புலம்பெயர்ந்த மண்ணிலேதான் என்பது திண்ணம்.//

உண்மையான வரிகள்...தாங்கள் நேசிக்கும் அளவிற்கு தமிழை நேசிக்கும் எண்ணம் எனக்குமிருந்தாலும் உணர்வுப்பூர்வமான நேசிப்பு என்பது புலம்பெயர் தமிழனுக்கு அதிகம்தான்.

ஆரூரன் விசுவநாதன் said...

உங்களின் இந்த கருத்தை முழுமையாக ஏற்கிறேன்.

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

ராஜ நடராஜன் said...

அகோ சொல்லலாமுன்னு வந்தா இங்கயும் கவிதையா?

அதென்ன இங்கயும்?இப்பத்தான் எக்ஸ் வொய் ஜெட் பூஜ்யம்ன்னு அதுசரியண்ணன் படம் போட்டு ஒரு கவிஜ படிச்சிட்டு வாரேன்!

ராஜ நடராஜன் said...

படைப்புக்குள் மூழ்கினேன்!