9/03/2009

மச்சூட்டு மஞ்சுளாவை, மறக்காமக் கேட்டு வையி!

புவியின் விரிப்பில், காற்றின் தழுவலில், லெளகீக வலையில், ஒவ்வொரு நாளும் இனிமையாகக் கழிதல் நன்றே! எனினும், தெரிந்த, தெரியாத, அறிந்த, அறியாத பலவற்றால் இனிமை நுகர்வது அவ்வப்போது தடைபடுகிறது. ஆனாலும் நம்பிக்கை எனும் துடுப்போடு, கால வெளியில் மிதந்து தவழ்வதுதானே வாழ்க்கை?

இனிய மாலைப் பொழுது, அந்த ஆண்டின் இறுதித் தேர்வு நாள் அது. மூன்று மணி நேரத் தேர்வு; பிற்பகல் 1.30 மணிக்குத் துவங்கி மாலை 4.30 மணி வரையிலும் நடைபறக் கூடியது. ஆனாலும் இவன் மூன்றரை மணிக்கெல்லாம் எழுதிய தாள்களைச் சமர்ப்பித்து விட்டு, வீட்டை நோக்கி கண்மண் தெரியாமல் ஓடோடி வந்தான்.

ஆம், முழு ஆண்டுத் தேர்வு முடிந்து விட்டது. மாலை ஐந்து மணிக்கு, இலக்கம் மூன்று இட்ட பேருந்தைப் பிடித்து, உடுமலை அந்தியூரில் இருந்து தனது தாய்வழிப் பாட்டனாரின் ஊரான லெட்சுமாபுரம் போக வேண்டும் என்கிற வேட்கை அவனுக்கு. வீட்டிற்குள் நுழைந்ததும், நுழையாததுமாய்ப் பள்ளிச் சீருடைகளைக் களைந்து விட்டெறிந்தான். ஆம், அவற்றின் ஆயுள் அன்றோடு முடிகிறது. அடுத்த ஆண்டு, புதுச் சீருடைகள் தானெனுக்கு என்கிற செருக்கு நீக்கமற நிறைந்திருந்தது அவனிடத்தில்!

லெட்சுமாபுரம் சென்றால், பரம்பிக்குளம் ஆழியாறு கால்வாயில் நீச்சல் அடிக்கலாம். பாட்டனாரின் தோப்பில் இளநீராய்க் குடிக்கலாம். தோட்டத்தில் எவருமில்லாத நேரத்தில், குண்டலப்பட்டித் தோப்பில் கள்ளு மாந்தலாம். இரவானால் நண்பர்களோடு, மிதிவண்டியில் கரட்டூர் சுகந்தி திரை அரங்கிற்கு இரண்டாவது ஆட்டம் பார்க்கப் போகலாம். அனைத்தையும் நினைத்து நினைத்து, அவன் மனவானில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தான்.

பெற்றவர்கள் காலையிலேயே இவனிடம் ஐந்து மணி வண்டிக்கு ஊருக்குப் போக அனுமதித்து விட்டு, அவர்கள் தோட்டம் சென்று விட்டிருந்தனர். வீட்டில் இருந்ததெல்லாம், தந்தைவழிப் பாட்டனார் மட்டுமே. அவருக்கா, தன் வாழ்நாளிலேயே இவன் மூலமாக தன் மகள் வயிற்றுப் பேத்தியை வீட்டிற்கு அழைத்து வந்துவிட வேண்டுமென்ற ஆசை. அந்தச் சூழலில், மாமன் மகள்கள் இருக்கும் ஊரான லெட்சுமாபுரம் செல்ல, இவன் யத்தனித்துக் கொண்டு இருப்பதைப் பார்க்கச சகிக்குமா அவருக்கு?

”டேய், என்றா கண்ணூ? எங்கியோ பயணப்பட்டுட்டு இருக்கயாட்ட இருக்கூ?”

“ஆமுங்க அப்பாரு, எனக்கு உனி ஒரு மாசத்துக்கு பள்ளிக்கூடம் லீவுங்; அதான் நான் அஞ்சு மணி வண்டிக்கு லட்ச்சுமாவரம் போறதுக்கு பொறப்பட்டு இருக்கணுங்!”

“டே கண்ணூ, அப்பார் சொல்றங் கெவனமாக் கேட்டுக்க,

குடி குடியக் கெடுக்கும்!
குட்டைக் கலப்பை உழவைக் கெடுக்கும்!
கீ காத்து மழையக் கெடுக்கும்!
மேயுற மாட்டை நக்கறது கெடுக்கும்!
அடிச்சோட்டாத காளைக சவாரியக் கெடுக்கும்!
வெளையுற பூமிய தோண்டாத அறுகு கெடுக்கும்!
வாங்குன கடன் ஒறவைக் கெடுக்கும்!
மொன்னை வால் வரவைக் கெடுக்கும்!
வளையாத உடம்பு பொழப்பைக் கெடுக்கும்!
கும்பிடாத கோயில் குலத்தைக் கெடுக்கும்!
புடுங்காத களை வெளைச்சலைக் கெடுக்கும்!
அடங்காத புள்ளை குடும்பத்தைக் கெடுக்கும்! ஆனா,
மடங்காத புள்ளை மானத்தைக் காப்பாத்தும்டா!


பாத்து, போன எடத்துல கவனமா இருக்கோணும். நெம்ப நாளைக்கெல்லா அங்க தங்கலைப் போட்றாத! போயிட்டு, ஒரு வாரம் பத்து நாளையில வந்துரு. வந்தவிட்டு, நாமெல்லாரும் உங்க அத்தையவிக ஊருக்குப் போயி ஒரு கெழமை இருந்து வரலாமாக்கூ! செரியா?”

அவர் சொன்னதைச் சிறிதும் விளங்கிக் கொள்ளாத இவன், ”செரீங், நான் அப்ப வாறன்” எனக் கூறி விட்டு, உற்சாக மிகுதியில் பாட்டு ஒன்றைப் பாடிக் கொண்டே ஊர்த் தலைவாசலில் இருக்கும் பேருந்து நிறுத்துமிடம் நோக்கி விரைந்தான்.

மந்தையூட்டு மந்தராசலா
மச்சூட்டு மஞ்சுளாவை
மறக்காமக் கேட்டு வையி

பொள்ளாச்சி நல்லப்பாவுல
மஞ்சில் விரிஞ்ச பூக்கள்
பாக்கனமுன்னு சொல்லிவையி

டே, தையல்க் கடைத் தேவா
தெம்பறத்து பாக்கியத்தை
மறக்காம மடிச்சி வையி

தேவனல்லூர் காளியாத்தா
நோம்பிக்கு தூரி ஆட
அவகிட்டச் சொல்லிவையி

டே பூந்தோட்டத்துப் பொன்னுசாமி
டைனமோச் சைக்கிள் வாங்கிவையி
வாங்குனதும் வெரசலா வாநீயி

மந்தையூட்டு மந்தராசலா
மச்சூட்டு மஞ்சுளாவை
மறக்காமக் கேட்டு வையி!

பொள்ளாச்சி நல்லப்பாவுல
மஞ்சில் விரிஞ்ச பூக்கள்
பாக்கனமுன்னு சொல்லிவையி!!

17 comments:

சரண் said...

//லெட்சுமாபுரம் சென்றால், பரம்பிக்குளம் ஆழியாறு கால்வாயில் நீச்சல் அடிக்கலாம். பாட்டனாரின் தோப்பில் இளநீராய்க் குடிக்கலாம். தோட்டத்தில் எவருமில்லாத நேரத்தில், குண்டலப்பட்டித் தோப்பில் கள்ளு மாந்தலாம். இரவானால் நண்பர்களோடு, மிதிவண்டியில் கரட்டூர் சுகந்தி திரை அரங்கிற்கு இரண்டாவது ஆட்டம் பார்க்கப் போகலாம்.//

அப்படியே சின்ன வயசு நியாபகத்தையெல்லாம் கெளரி வுட்டுடீங்க..

நம்ம கத இப்படி போகும்ங்க..

”மொடக்குறிச்சி சென்றால், வாய்க்காலிலும், நடுக்கெணத்துலயும் நீச்சல் அடிக்கலாம். நம்ம தோப்பில் இளநீரும் நொங்குமாய் குடிக்கலாம். மோளயனும், பூவானும் வயிரு முட்ட கள்ளுக் குடிச்சுட்டு பனமரத்துக்கிட்ட சண்ட போடரத ரசிக்கலாம். இரவானால் அவங்களொட, மிதிவண்டியில் வித்யா திரை அரங்கிற்கு இரண்டாவது ஆட்டம் ரெக்கார்ட்ல ”மருதமல மாமுனியே..” போடரதுக்கு முன்னாடியே படம் பார்க்கப் போகலாம்”...

Anonymous said...

//அடங்காத புள்ளை குடும்பத்தைக் கெடுக்கும்! ஆனா,
மடங்காத புள்ளை மானத்தைக் காப்பாத்தும்டா! //

யாருக்கு மடங்காத புள்ள ?

தாராபுரத்தான் said...

என் சாமி!கரட்டுா் சுகந்தி இப்ப இல்ைல கணணு !

Mahesh said...

//பொள்ளாச்சி நல்லப்பாவுல
மஞ்சில் விரிஞ்ச பூக்கள்//

தொரைசுமு நல்லப்பாவுமு... அட்ப் போங்க.... அதொரு காலம்....

ஈரோடு கதிர் said...

//மச்சூட்டு மஞ்சுளாவை///
நேத்து மரகதா... இன்னைக்கு மஞ்சுளா...
மணியானுக்கு எல்லாமே "ம" வரிச தானா..

ஆமா... கரட்டூர்னா கரட்டுமடமா?

Anonymous said...

//கதிர் - ஈரோடு said...

//மச்சூட்டு மஞ்சுளாவை///
நேத்து மரகதா... இன்னைக்கு மஞ்சுளா...
மணியானுக்கு எல்லாமே "ம" வரிச தானா..//

அட ஆமாம். :)

அப்பாவி முரு said...

அண்ணே கட்டுரை அருமையா இருக்கு.

ஆனால்,

//குண்டலப்பட்டித் தோப்பில் கள்ளு மாந்தலாம்.//

மாந்தலாம்க்கு அர்த்தம்?

vasu balaji said...

மண்டிபோட்ட காலு வலி போறதுக்குள்ள, மடங்காத பொண்ணு மானத்தக் காப்பாத்தும்டான்னு பாட்டனார் சொன்னதையும் கேட்ட கையோட மச்சூட்டு மஞ்சுளாவுக்கு மறக்காம மஞ்சில் விரிஞ்ச பூக்கள் பார்க்கணுமாமல்லோ. அம்மாடியோவ். எத்தினி 'ம'. அந்தக் காலத்துல 'ம' போடுன்னு தான் திரியிறது போல. மத்த கேள்வியெல்லாம் அப்புறம்.

vasu balaji said...

/குண்டலப்பட்டித் தோப்பில் கள்ளு மாந்தலாம்./

மாந்துறவங்கதான் மாந்தரோ?:))

பழமைபேசி said...

@@சூர்யா

அகஃகா, நல்லாத்தான் கிளறி வுட்டுட்டன் போல இருக்கு....

//சின்ன அம்மிணி said...
//அடங்காத புள்ளை குடும்பத்தைக் கெடுக்கும்! ஆனா,
மடங்காத புள்ளை மானத்தைக் காப்பாத்தும்டா! //

யாருக்கு மடங்காத புள்ள ?
//

இஃகிஃகி... இதெல்லாமா சொல்லிகிட்டு??

//அப்பன் said...
என் சாமி!கரட்டுா் சுகந்தி இப்ப இல்ைல கணணு !
//

அப்படீங்களா? அடச் சே..... ஊர்ல வேற என்னதாங்க இருக்கு?

//Mahesh said...
//பொள்ளாச்சி நல்லப்பாவுல
மஞ்சில் விரிஞ்ச பூக்கள்//

தொரைசுமு நல்லப்பாவுமு... அட்ப் போங்க.... அதொரு காலம்....
//

ஆமாங்கோ....

//கதிர் - ஈரோடு said...
//மச்சூட்டு மஞ்சுளாவை///
நேத்து மரகதா... இன்னைக்கு மஞ்சுளா...
மணியானுக்கு எல்லாமே "ம" வரிச தானா..//

இஃகிஃகி...

//ஆமா... கரட்டூர்னா கரட்டுமடமா?//

இது தெரியாதா? அய்யோ அய்யோ....

//அப்பாவி முரு said...
அண்ணே கட்டுரை அருமையா இருக்கு.

ஆனால்,

//குண்டலப்பட்டித் தோப்பில் கள்ளு மாந்தலாம்.//

மாந்தலாம்க்கு அர்த்தம்?
//

மாந்தல்

@@வானம்பாடிகள்

வாங்க பாலாண்ணே!

பழமைபேசி said...

உண்டு கெட்டது வயிறு
உண்ணாமல் கெட்டது உறவு
பார்த்து கெட்டது பிள்ளை
பாராமல் கெட்டது பயிர்
கேட்டுக் கெட்டது குடும்பம்
கேளாம்ல் கெட்டது கடன்
இட்டுக் கெட்டது காது
இடாமல் கெட்டது கண்
கொடுத்துக் கெட்டது நட்பு
கொடாமல் கெட்டது நாணயம்

க.பாலாசி said...

//குடி குடியக் கெடுக்கும்!
குட்டைக் களப்பை உழவைக் கெடுக்கும்!
கீ காத்து மழையக் கெடுக்கும்!//

எல்லாமே கெடுக்ககுற விஷயங்கள்தான்...

நல்லாருக்கு..அதையும் கெடுக்காமல் சொன்னவிதம்....

ஈரோடு கதிர் said...

என்னை தொடர்ந்து வசீகரிக்கும் மாப்பு

http://maaruthal.blogspot.com/2009/09/blog-post_04.html

நாகராஜன் said...

தொடர்ந்து கலக்கரீங் போங். எப்படித்தான் இந்த மாதிரி பழைமையான விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு ஞாவகத்துல இருக்குதோ போங் பழமைபேசி...

Unknown said...

//.. குட்டைக் களப்பை உழவைக் கெடுக்கும்! ..//

ஏனுங்கண்ணா, அது கலப்பைங்களா இல்ல களப்பைங்களா?

என்ற மாப்ள ஒருத்தன் குள்ள இருப்பான், அவன அடிக்கடி நான் இப்படித்தான் சொல்லுவேனுங்,

குட்ட கலப்ப காட்ட கெடுக்கும்.
கூள குடிய கெடுக்கும்..

நானு என்ற மாப்ளைய மட்டுந்தான் சொல்லுவேனுங்க, வேற யாரவது சண்டைக்கு வந்தராதிங்க..


//.. மொன்னை வால் வரவைக் கெடுக்கும்! ..//

அருத்தமாகுலீங்களே..

பழமைபேசி said...

//பட்டிக்காட்டான்.. said...

//.. மொன்னை வால் வரவைக் கெடுக்கும்! ..//

அருத்தமாகுலீங்களே..//

எருமைக் கன்னுக்கு வால் மொன்னையா இருந்தா, விலை போகாது இராசா! இஃகிஃகி!!

தமிழ் பையன் said...

<< கேட்டுக் கெட்டது குடும்பம்
கேளாம்ல் கெட்டது கடன்
இட்டுக் கெட்டது காது
இடாமல் கெட்டது கண்
கொடுத்துக் கெட்டது நட்பு
கொடாமல் கெட்டது நாணயம் >>

இதுக்கு அர்த்தம் கொஞ்சம் சொல்லுங்களேன்...