விருந்தோம்பலைச் செவ்வனே செய்தாரோடு நிழல் படங்களுக்கான சம்பிரதாயம் நடாத்திவிட்டு, நானே அந்த (ஜாக்குவார்)சிறுத்தையைச் செலுத்தினேன் எலிக்காட் நகரத்தில் இருக்கும் மில்லர் நூலகம் நோக்கி! மனம் பரிதவித்தது, இன்னும் இடம் வரவில்லையே என. இம்முறை நா வென்றது, ‘என்ன ஐயா, இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?’ என்று வினவிக் காட்டியது அது. ‘இந்தா இன்னும் கொஞ்ச தூரந்தான்!’ எனும் மறுமொழி கேட்டு சலிப்படைந்தது நாவை எழுப்பிய உள்மனம்.
ஒரு வழியாக Jaquar ஆனது, நூலக ஊர்தி நிறுத்துமிடத்தைச் சென்று அடைந்தது. உள்ளே நுழைகிறோம், நுழைந்ததுதான் தாமதம், 30 வருடங்கள் பின்னோக்கிச் சென்றது லெளகீகம். சிலேட்டுப் பலகையில் எழுதுவதும், எச்சில் தொட்டு அழிப்பதுமாய் என்னேவொரு இரம்யமான வாழ்க்கைடா சாமி! ”சார் இவன் என்னைக் கிள்ளுறான் சார்!”, ”டீச்சர், நான் கெலாசு சொன்னதுக்கு, இவன் உங்க எதுத்த ஊட்டு ஆயாவைப் போட்டு வெளாசு சொல்றான் டீச்சர்!” இது மாதிரியான நினைவுகள் மின்னல்க் கீற்றுகளாய் வந்து போனது. ஆம், அங்கே எண்ணற்ற இளம் சிறார்கள் அமர்ந்து வடிவாய்த் தமிழ் கற்றுக் கொண்டிருந்த காட்சியானது, எம்மை இளம்பிராயத்திற்கே இட்டுச் சென்றது. அதிலிருந்து மீள சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது.
அதிலிருந்து மீண்டு வெளியே முற்றத்திற்கு வர, பழமைக் காவலன், ஆசானுக்கெல்லாம் ஆசானான புலவர் வெ.இரா. துரைசாமி ஐயா அவர்கள் நிற்கக் காண்கிறோம். மரியாதை நிமித்தமாக வணக்கம் செலுத்துகிறேன். அதன்பின்னர் என்ன கதைப்பது என இவனுக்குத் தெரியவில்லை ஏதும்! அவரோ, மாபெரும் புலவர், வரலாற்று ஆசிரியர்... அவரிடத்தே என்ன கேட்பது? கேட்பதற்குரிய அளவிற்கு நம்மிடம் அறிவு சார்ந்த கேள்விகள் இருக்க வேண்டுமல்லவா? ஏதோ தாந்தோன்றித் தனமாகக் கேட்பதும், அளவளாவுவதும் சான்றோருக்களிக்கும் மாண்பு ஆகுமா? இப்படி மனம் அஞ்சித் தவித்தது என்றே சொல்ல வேண்டும்.
உள்ளே நடந்து கொண்டிருந்த தமிழ் வகுப்பானது நிறைவு பெறுகிறது. இலக்கிய ஆர்வலர்கள், ஒருவர் பின் ஒருவராக வந்தடைகிறார்கள். இலக்கியக் கூட்டத்தின் தலைவர், மேன்மைமிகு. பிரபாகர் அய்யா அவர்கள் பதினாறு வயது இளங்காளையென, உற்சாகத்தோடும் கூட்டத்திற்கு தேவையான பரிவாரங்களோடும் நுழையும் அத்தருணத்தைக் கண்ணாரக் கண்டு இரசித்து மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று திரும்பியது மனம். ஆகா, ஆகா, என்னேவொரு சீரிய ஒழுங்கு? காலம் தவறாமை?? உற்சாகம்??? ஐயா, உங்களை இலக்கியம் பல நூற்றாண்டுகள் வாழ வைக்கும்! வாழ்க நீவிர்!!
தலைவர் எவ்வழியோ, அவ்வழிதானே அவர்தம் வழி வருவோரும்?! அடேயெப்பா... கண்கொள்ளாக் காட்சிதான் அது! ஆளும் கையுமாய்; கையும் புறநானூற்று உரையுமாய்!! அமெரிக்காவில் மட்டும்தான் இது சாத்தியம் என நினைக்கிறேன். தமிழே, உனக்கு ஆராதனை குறிஞ்சிப் பூவாய் கோவையில் அல்ல! இதோ இந்த எலிக்காட் மில்லர் நூலகத்தில் ஒரு சீராய் மாதமிருமுறை!!
கம்பீரமிகு மிடுக்கான பரியாய் எழுந்து முதன்மை விருந்தினரான புலவர் பெருமான் துரைசாமி ஐயாவை அறிமுகப்படுத்தி, பின் பேசவருமாறு அழைக்கிறார் நடுநாயகம் பிரபாகர் ஐயா அவர்கள். அவைக்கு மரியாதை செலுத்திவிட்டுத் தொடர்கிறார் புலவர் பெருமான். ஓலைச் சுவடிகள், செப்பேடுகள், சிலாசாசனம் (கல்வெட்டு) பற்றிச் சரளமாக, மடை திறந்த வெள்ளம் போல் அரிய தகவல்களை அடுக்க, அதில் சொக்கிப் போன இவனுக்கு குறிப்பெடுக்க விரல்கள் உதவ மறுத்தது.
பழமை, தொன்மை, வரலாற்றுக்கு ஆதாரம் இந்த கல்வெட்டுகள். அதற்கு தமிழ்நாட்டிலே அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அண்டை மாகாணங்களில் அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றி புள்ளி விவரங்களோடு அவர் அடுக்க, அடுக்க, கூட்டத்தார் வாய்விட்டு அழாததுதான் குறை. ஆம், நிசப்தத்தின் விளிம்புக்கே சென்றது அவை.
இன்றைய கணினி உலகில் Documentation is very important என்று வலியுறுத்துகிறோமே, அதைப் போல அன்றைய உலகிற்கு இந்த கல்வெட்டுகளே ஆதாரம். கல்வெட்டுகளிலே எண்ணற்ற செய்திகள் அடங்கி இருக்கிறது. அவை அனாதை ஆக்கப்பட்டு, தூக்கியெறிவது தமிழனுடைய அவலத்தின் மற்றொரு முகம்!
அன்றைய தெருக்களும் இன்றைய தெருக்களைப் போல, வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் வடிவமைக்கப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் எண்களிட்டு அமைக்கப்பட்டு இருப்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளில் காண்ப்பெறலாம் என சிலாகித்துப் பேசினார். ஒவ்வொரு தெருவின் பக்கத்தையும் ’சிறகு’ என அழைப்பார்களாம். தெற்கு வீதி, வட சிறகில் உள்ள மூன்றாவது எண் இலக்கமிட்ட வீட்டில் இருக்கிற மாதேசுவரத்தைச் சார்ந்த இன்னாருக்கு இவ்வளவு பங்கு என்று பொறிக்கப்பட்டு இருப்பதைப் பகிர்ந்து கொண்டார்.
மேலும் சேலம் நாமக்கல் பகுதிகளைப் பற்றியும், காவிரிக் கரையோர தொன்மையான ஊர்களைப் பற்றியும் பல தகவல்களை அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருந்தாரவர். அவரது உரைக்குப் பிறகு, இலக்கிய ஆய்வு துவங்கியது. புறநானூற்றுப் பாடல்கள் 102 முதல் 107 வரை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆய்வு என்பதை மிகத் துல்லியமாக நடாத்திக் காட்டினார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொருவரது கருத்துக்கும் தகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அரிய செய்திகளைப் பரிமாறி... மன்னிக்கவும், அந்தப் பாங்கை எழுத்தால் காட்சியாக்க இந்த எளியவனால் ஆகாத காரியம். நேரிலே காண்பதே சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.
மிக நிதானத்தோடு ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. முதலெழு, இடையெழு, கடையெழு வள்ளல்கள் பற்றித் தெரிந்திருக்கிறோம். அதற்குப் பின்னர் எவருமிலையா என வினவுகிறார் உயர்திரு பீட்டர் ஐயா அவர்கள். அதற்கு மறுமொழியாக நடுநாயகம் பிரபாகர் அவர்கள், அவர்களுக்குப் பின்னர் நீர்தான் வள்ளல் என்று ஒரே போடாய்ப் போட்டாரே பார்க்கலாம், சிரிப்பலை அடங்க சிறிது நேரம் பிடித்தது.
இதற்கிடையே எம்மையும் அவையில் பேசுமாறு நடுநாயகம் கேட்டுக் கொண்டார். நாமும், நம் நிலையில் இருக்கும் மனவோட்டங்களைப் பகிர்ந்து கொண்டோம். உயர்திரு முனைவர். அரசு செல்லையா அவர்கள் வெகுவாகப் பாராட்டி, இருக்கும் நிலையில் இருந்து மேற்கொண்டு தொடரக்கூடிய வகையிலே வழிகாட்டுதல்களை அறிவுறித்தியதற்கு நாமும் பணிவுடன் நன்றி கூறிக் கொண்டோம்.
யானையே ஆயினும், முதலையின் இடமான தண்ணீருக்குள், அது முழங்காலளவாக இருப்பினும், அங்கே முதலையை இழியன் என இகழ்ந்தால் யானையின் வெற்றி ஆட்டம் கண்டு விடும் என்கிற பாடல் எம்மனதைக் கொள்ளை கொண்டது. மற்ற பாடல்களும் சுவாரசியமாகவும், இலக்கியச் சுவை ததும்பும்படியாகவும் இருந்தது.
ஆய்வுக் கூட்டமானது இறுதிக் கட்டத்தை நெருங்கியதும், இவர்களை எல்லாம் விட்டுவிட்டு நாம் விமான நிலையம் செல்லத்தான் வேண்டுமா என மனம் பசலை நோய் கண்டது. நோயில் பீடித்த மனம், அதிலிருந்து மீளும் முகமாகவும் நினைவுகளின் எச்சமாகவும் கொழுகொம்பைத் தேடி இக்கணத்தில்!
இளையன்’ என்று இகழின், பெறல் அரிது, ஆடே!
18 comments:
பழமையண்ணா, மிக அருமையாக தொகுத்துள்ளீர்கள்.
உங்கள் எழுத்து நடையும், தமிழறிஞர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையும் மகிழ்ச்சி கொள்ளச்செய்கிறது.
நடாத்தி என்பது சரியான சொல்லா?
//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
பழமையண்ணா, மிக அருமையாக தொகுத்துள்ளீர்கள்.
//
நன்றிங்க நம்மூர்த் தம்பி!
//நடாத்தி என்பது சரியான சொல்லா?//
ஆமாம்... எழுத்திலும், முறையான மேடைப் பேசிலும் இலக்கியத் தன்மையுடன் இப்படிச் சொல்வது வழக்கம்!
நடாத்து, (p. 645) [ nṭāttu, ] கிறேன், நடாத்தினேன், வேன், நடாத்த, v. a. (poetic form of நடத்து.) To cause to ge, to drive, to lead on, to des patch, to give derection to in going, ஒட்ட. 2. To transact, to manage, to perform, to superintend, காரியம்நடத்த.
நூனடாத்த, inf. To write a treatise, a scientific work, &c.; [ex நூல்.]
இலக்கியசோலையில், தங்களால் நானும் தேன் பருகினேன். அருமையான இலக்கிய கூட்டத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள். பல புதிய தகவல்கள் உங்களால் அறிய பெற்றேன். (சிங்களாந்தகன், இராஜச்சர்யன் போன்ற இராஜரானுடைய பெயர்கள் எனக்கு மிக புதியன... )
மிக்க நன்றிகள். அழைப்பு விடுத்தமைக்கு மிக்க நன்றிகள்....
நேரம் வாய்க்கும்போது அளாவுவோம்.
போட்டுத்தாக்குங்க. ரவி அடுத்த சுவாராசியப்பதிவர் விருதோட வருகிறார்.
@@அகில் பூங்குன்றன்
வாங்க, வணக்கம்! யாம் பெற்ற இன்பம் வையகமும் பெறுக!! நாந்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்!!!
@@குடுகுடுப்பை
இஃகி, நன்றிங்ணே!
:) அனுபவிங்க பழம அனுபவிங்க!
நான் இனிமேல் என்னுடைய வலைப்பதிவில் எழுத வேண்டுமா? அப்படி எழுத என்ன அருகதை எனக்கு இருக்கு என என்னை நினைக்க வைத்துவிட்டீர்கள் ஐயா.
நீங்க எழுதியருப்பது, ஒரு நிகழ்ச்சியை எவ்வாறு எழுத வேண்டும் எனபதற்கான உதராணம்.
//மேலும் சேலம் நாமக்கல் பகுதிகளைப் பற்றியும்//
அது என்னன்னு சொல்லலாமே !!!
ஆமாம் இப்ப நாமக்கல் - மாநக்கலா மாறிடுச்சுங்கறாங்க :)
//இயற்கை நேசி|Oruni said...
:) அனுபவிங்க பழம அனுபவிங்க!
//
ஆமாங்கோ....
@@ இராகவன் நைஜிரியா
ஐயா, என்ன இப்படியெல்லாம் சொல்லித் தப்பிச்சிக்கலாம்னு பாக்குறீங்களா? நாங்க விட மாட்டம்ல! நன்றிங்க!!
@@சின்ன அம்மிணி
குறிப்பு எழுதலைங்க... ஆனாக் காணொளி போடலாம்னு இருக்கேன்... இஃகிஃகி!
அருமையான தொகுப்பு பழமை.
/அமெரிக்காவில் மட்டும்தான் இது சாத்தியம் என நினைக்கிறேன். தமிழே, உனக்கு ஆராதனை குறிஞ்சிப் பூவாய் கோவையில் அல்ல! இதோ இந்த எலிக்காட் மில்லர் நூலகத்தில் ஒரு சீராய் மாதமிருமுறை!!/
ஆமாம்.
மிக நேர்த்தியான தொகுப்பு
மிகவும் அருமையாக தொகுத்து வழங்கியமைக்கு பாராட்டுக்கள்.
ரேகா ராகவன்,
@@வானம்பாடிகள்
பாலாண்ணே வணக்கம்! நன்றி!!
@@கதிர் - ஈரோடு
வாங்க மாப்பு, நன்றிங்!
@@KALYANARAMAN RAGHAVAN
மிக்க நன்றிங்க ஐயா!
அதிசயம்,தமிழ்மணத்தில் ஓட்டு விழுந்துவிட்டது.
//ஸ்ரீ said...
தமிழ்மணத்தில் ஓட்டு விழுந்துவிட்டது.
//
அட, விழுந்திடுச்சா? எடுத்து இருந்த இடத்துலயே வெச்சிடுங்க அப்ப!!
தம்பி மணிவாசகம்:
நீங்கள் எங்கள் ஊருக்கு வந்த்தில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
இலக்கியக் கூட்டத்தைப் பற்றியும், எம்ஸ் பொன்மாலைப் பொழுதுப் பற்றியும் அருமையாக எழுதியமைக்கு நன்றி உரித்தாகுக.
வளர்க உங்கள் தமிழ்ச்சேவை.
அன்புடன்
அண்ணன் நாஞ்சில் பீற்றர்.
//naanjil said...
தம்பி மணிவாசகம்:
நீங்கள் எங்கள் ஊருக்கு வந்த்தில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
//
வணக்கம் அண்ணா, நானே நன்றிக்கடன் பட்டவன் ஆகின்றேன்... இன்னும் அது குறித்த இடுகைகள் வெளிவர இருக்கிறது!
என்னோட பொண்ணு கூட தமிழ் வகுப்புக்கு வந்திருந்தா (எலிக்காட் மில்லர் நூலகம்)
நீங்க வர விஷயம் தெரியாம போச்சு.. மன்னிக்கவும்..உங்கள சந்திக்க முடியல... :(
Post a Comment