8/27/2009

டேய் நட்டாமுட்டி, வாடா இங்க!

”சில்லறைகளைப் பத்தி என்றா நீ பேசறது? நீயே ஒரு பெரிய நட்டாமுட்டி, இதுல நீ வேற பழமயிகளைப் பேச வந்துட்டே?! கலிகாலம்டா, செரிப் பேசு! பேசு!!”

இப்படியெல்லாம் நீங்க நினைப்பீங்க இராசா, அது நமக்கும் தெரியும். அதுக்காக சொல்ல வேண்டியதைச் சொல்லாமப் போக முடியுமா? என்ன நாஞ்சொல்றது??


விசயம் என்னன்னா, நான் சும்மா அப்படியே நம்ம ஈரோட்டு மாப்புளை கதிர் எழுதின கவிதைகளை வாசிச்சுட்டு இருந்தேன். அப்ப, சில்லரை அப்படீன்னு ஒரு சொல் தென்பட்டுது; அதான், சில்லறை ஞாவகம் வந்திட்டுது! இஃகிஃகி!!

பாருங்க கண்ணூ, நான் நெகமத்துக்குப் பக்கத்துல இருக்குற பொம்மநாய்க்கன் பட்டிக் குசுவான், ச்சீ.., விசுவாங்கூட அவங்க தோட்டத்துச் சாளைக்கு வெளையாடப் போயிருந்தேன். அப்ப அவஞ்சொன்னான், ’டேய் பழமை வாடா போயி, எங்க தாத்தனோட அங்கராக்குச் சோப்புல இருக்குற அல்லறை சில்லறை எல்லாத்தையும் எடுத்துட்டு வரலாம்’ன்னான்.

நாந்திருப்பிக் கேட்டேன், ‘அது என்றா அல்லறை சில்லறை?’ன்னு. அதுக்கு அவஞ்சொன்னான், அல்லறைன்னா தட்டுத் தடுமாறுறது. சில்லறைன்னா, சின்ன சின்ன சிறுவாட்டுக் காசு. ஆக, தட்டுமுட்டுச் செலவுக்குன்னு இருக்குற சிறுவாட்டுக் காசுகதான் அல்லறை சில்லறைன்னான்.

அதையே, எங்க அப்பிச்சி சொல்லுவாரு, ‘டேய் பழமை, போயிக் கரியூட்டு அங்காத்தா கடையில நாஞ்சொன்னேன்னு சொல்லி, இந்த அஞ்சு ரூவாயை முறிச்சு சில்வானம் வாங்கியாடா! செஞ்சேரி மலைச் சந்தையில பொரி உருண்டை வாங்குறதுக்கு, நான் உனக்கு நாலணாக் குடுத்து உடுறன்!!’ன்னுவாரு. சில்வானம்ன்னாலும் அதே சில்லறைதான்!

அதேபாணியில, கீழ்த்தரமான வேலைகளைச் செய்யுறவனை சில்லறைப் பயன்னும் திட்டுவாங்க. அவன் சில்லறை வேலை பாக்குற சல்லிப் பயன்னும் சொல்லுவாங்க. அதையே, நட்டாமுட்டிப் பயன்னும் சொல்றது உண்டு.

அதென்ன அந்த நட்டாமுட்டி? அது ஒரு பெரிய கதைங்க. முட்டின்னா, மரத்தாலான சிறு கட்டை. அப்ப அந்த சிறு முட்டிய நட்டு வெச்சி, வாகா பாத்திரங்கள்ல இருக்குற ஒடசலை எடுக்கலாம். உருண்டு போற வண்டிச் சக்கரத்துக்கு அடியில போட்டு அதை நிப்பாட்டலாம். இப்படிச், சின்ன சின்ன வேலைகளுக்கு சாதுர்யமாப் பாவிக்கலாம் அதை.

அப்படிச் சாதுர்யமாக் காரியஞ் சாதிக்கிறவங்களைக் குறிக்கிற மாதிரிச் சொன்னதுதான், இந்த நட்டாமுட்டிப் பய. அதுவே பின்னாள்ல, தந்திரமாவும், வஞ்சகமாவும், சூதாவும் காரியஞ் சாதிக்கிறவங்களையும் குறிப்பிட்டுச் சொல்லுற சொல்லா மாறுச்சுது அந்த நட்டாமுட்டி.

இப்ப இந்த பாத்திரங்கள்ல ஒடசல் எடுக்குறதுன்னதும், எனக்கு இன்னொன்னும் ஞாவகத்துக்கு வருதுங்க. எங்க ஊருக்குள்ள எப்பிடியும் மூனு மாசத்துக்கு ஒரு வாட்டி, ’யே... இந்த ஓட்டை ஒடசல் அடைக்குறது... பாத்திரத்துக்கு ஈயம் பூசுறது... ஓட்டை ஒடசல் அடைக்குறதே... ’ன்னு சொல்லிட்டு வருவாங்க. அவங்க கிட்டவும் இந்த நட்டாமுட்டி இருக்கும்.

எங்கூர்ச் சந்தைப் பேட்டைக்கு பக்கத்துல இருக்குற அரச மரத்துக்கு அடியில, பொண்டாட்டியானவ ஒரு கையில காத்துப் பைய அமுக்க, மறு கையில கொரட்டுல பாத்திரத்தைப் புடிச்சி, தீயில வெச்சிக் குடுப்பா. புருசங்காரன், வாகா உள்ள பூச்சுப் பூசிட்டு, துணிய வெச்சித் தொடச்சி எடுத்து வெப்பான். அதை மணிக்கணக்குல நின்னு பாக்க, அம்புட்டுப் பிரியமா இருக்குமாக்கும்.

இங்க அறிவியல்ப் பூர்வமா உங்களுக்கு ஒரு விசயஞ் சொல்லோணும். பாத்திரத்துக்கு ஈயம் பூசுறது, ஈயம் பூசுறதுன்னு சொல்றாங்களே?! பாத்திரத்துக்கு உள்ள பூசுறது ஈயமா? அதாங் கிடையாது!

Tin அப்படின்னா, அது தகரம். Lead அப்படீன்னா அது ஈயம். இரும்பு, தாமிரம், வெங்கலம் இதுகளாலான பாத்திரத்துல உணவுப் பொருட்களை இட்டா, அது இரசாயன மாற்றத்துக்கு ஆட்படும்.


அதுல இருந்து தடுக்கவே தகரப் பூச்சு பூசுவாங்க. சொத்தைப் பல் அடைக்கிறதுக்குப் பூசுறது கூட டின்பாதரசம்தாங்க. இந்தத் தகரத்தைப் பத்தி நிறைய உண்மைக் கதைகள் இருக்கு. அதை அடுத்த இடுகைகள்ல பாக்கலாஞ் செரியா?

எல்லாத்தையும் ஒரே நாள்ல சொல்லிப் போட்டா, நாங்க கடை நடத்துறது எப்படின்னு வேண்டாம். போங்க, போங்க, போயிப் பொழைப்பு தழைப்பப் பாருங்க.... இஃகிஃகி!!!

24 comments:

Anonymous said...

//எல்லாத்தையும் ஒரே நாள்ல சொல்லிப் போட்டா, நாங்க கடை நடத்துறது எப்படின்னு வேண்டாம்//

நல்ல அலப்பறை போங்க:)

அப்பாவி முரு said...

//புருசங்காரன், வாகா உள்ள பூச்சுப் பூசிட்டு, துணிய வெச்சித் தொடச்சி எடுத்து வெப்பான். அதை மணிக்கணக்குல நின்னு பாக்க, அம்புட்டுப் பிரியமா இருக்குமாக்கும்.//

அன்னிக்கி கிராமமே உலகமா இருந்த்து...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல் பழமை!! தகரப்பூசி ஈயப்பூசின்னு நம்மூரு ஆட்களத் திட்டறது உங்களுக்கு தெரியுமுன்னு நினைக்கறேன் :))

ஆ.ஞானசேகரன் said...

//எல்லாத்தையும் ஒரே நாள்ல சொல்லிப் போட்டா, நாங்க கடை நடத்துறது எப்படின்னு வேண்டாம். போங்க, போங்க, போயிப் பொழைப்பு தழைப்பப் பாருங்க.... இஃகிஃகி!!!//

அதுசரி,... நல்ல விடயங்கள் பாராட்டுகள் பழம

Mahesh said...

உள்ளேன் ஐயா!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நட்டாமுட்டி கேட்டிருக்கேன் அர்த்தம் இன்னிக்குத்தான் சரியா தெரிஞ்சது.. அல்லறை சில்லறையும் நல்லா இருக்கு..

ஈரோடு கதிர் said...

டேய் கதிரு..

இன்னுமேலு
சில்லறை(ரை)
றை-க்கு பதிலா ரை-னு
தப்பா
எழுதுவியா!
எழுதுவியா!!

படவா ராஸ்கோலு
போடு தோப்புக்கரணம்

ஈரோடு கதிர் said...

//அங்கராக்குச் சோப்புல//

//அஞ்சு ரூவாயை முறிச்சு சில்வானம் வாங்கியாடா//

ஆஹா.... சின்ன வயசுல கேட்ட வார்த்தைகள் மாப்பு

மாரியம்மன் கோவில் வாசல்ல ஈயம் பூசற விஞ்ஞானத்தை வேடிக்கை பார்த்த சொகம் இருக்கே... அதெல்லாம் ஒரு காலம் மாப்பு

vasu balaji said...

/அதை மணிக்கணக்குல நின்னு பாக்க, அம்புட்டுப் பிரியமா இருக்குமாக்கும்./

நம்மள மாதிரிதேன் கொள்ள பசங்க இருந்திருப்பாய்ங்க போல. சூட்டக்காட்டி அதுக்குள்ள துத்தநாகப் பொடிய வீசி துடைக்கிறப்ப சூடா கெளம்புற வாசம். ஒரு பட்டாணி அளவு ஈயத்த உள்ள போட்டு துணியால இழுத்து இழுத்து அண்டா முழுசும் தேய்க்கிற லாவகம். மனசு எங்கயோ போகுது. இத பார்த்துட்டு எங்கப்பாரு பண்ண லந்துல கொலக்கேசாக தெரிஞ்சது.( இத வெச்சி ஒரு இடுகை தேத்துவமில்ல).

தகடூர் கோபி(Gopi) said...

//Tin அப்படின்னா, அது தகரம். Lead அப்படீன்னா அது ஈயம்.//

இல்லை... Tin அப்படின்னா, அது வெள்ளீயம் (குறியீடு Sn - வேதியெண் 50 ). Lead அப்படீன்னா அது காரீயம்(குறியீடு Pb - வேதியெண் 82 ).

ரெண்டுமே ஒவ்வொரு வகையான ஈயம் தான். ஆனா வேதியெண் உட்பட இரண்டுமே வேறு வேறு.

Unknown said...

//.. கதிர் - ஈரோடு said...

//அங்கராக்குச் சோப்புல//

//அஞ்சு ரூவாயை முறிச்சு சில்வானம் வாங்கியாடா//

ஆஹா.... சின்ன வயசுல கேட்ட வார்த்தைகள் மாப்பு ..//

எனக்கும் எங்கப்பிச்சி ஞாபகம் வருதுங்க..

பழமைபேசி said...

//தகடூர் கோபி(Gopi) said...
//Tin அப்படின்னா, அது தகரம். Lead அப்படீன்னா அது ஈயம்.//

இல்லை...
//

ஆகா, சரியான (தக்டூர்) ஆள் வந்திருக்காரு..... நீங்க நெம்பத்தான் அறிவியலுக்கு உள்ள போறீங்க.....

வழக்குச் சொல் தகரம், ஈயம் ரெண்டும் வேற வேற.... உள்பூச்சு பூசுறதென்னவோ தகரம்தான்....

புலியும் பூனையும், மனிதனும் குரங்கும் ஒரே குடும்பம்... ஆனா வேற வேற இல்லையா?

சரி, தகரம்ன்னா என்ன? சொல்லுங்க, சொல்லுங்க....


// ச.செந்தில்வேலன் said...
கலக்கல் பழமை!!
//

பழமை கலக்கலா? அல்லது, பழமை கலக்கலா?? இல்லை, ரெண்டுமே கலக்கலா??

தகடூர் கோபி(Gopi) said...

//சரி, தகரம்ன்னா என்ன? சொல்லுங்க, சொல்லுங்க....//

எங்க ஊருல தகரம்/தகடு இரண்டுமே இரும்பு தகடை குறிக்க பயன்படுத்துவாங்க...

பழமைபேசி said...

@@சின்ன அம்மிணி

இஃகிஃகி!

@@அப்பாவி முரு

ஆமாங் இராசா!

@@ஆ.ஞானசேகரன்

நன்றிங்க ஞானியார்!

@@Mahesh

ஆகட்டுங் ஐயா!

@@முத்துலெட்சுமி/muthuletchumi

நன்னிங்கோ!

@@கதிர் - ஈரோடு

அந்த பயம் இருந்தாச் செரி! இஃகி!!

@@வானம்பாடிகள்

ஆமாங்க பாலாண்ணே!

@@பட்டிக்காட்டான்..

கிளறி வுட்டுட்டமாக்கூ? இஃகி!

@@தகடூர் கோபி(Gopi)

தகட்டூர்க் கோபிக் கண்ணூ.... ஆமாங் கண்ணூ, தமிழுக்கு வந்த சோதனைதான்....

நான் எதுக்குமு, தகரம், தாமிரம், துத்தநாகம், ஈயம், பித்தளை, இரும்பு, எஃகுன்னு ஒரு இடுகை போடோணும் போல இருக்கே? அவ்வ்வ்வ்வ்...........

தங்கத் தகடு, செப்புத் தகடு எல்லாம் கேட்டதில்லையாக்கூ?

தகடூர் கோபி(Gopi) said...

//தங்கத் தகடு, செப்புத் தகடு எல்லாம் கேட்டதில்லையாக்கூ?//

கேட்டிருக்கமுங்க பழமை பேசி... ஆனா எங்கூருல இரும்பு தகடை மட்டும் தான் தகரம் அப்படின்னும் சொல்லுறாங்க...

தகர கூரை போட்ட சினிமா கொட்டகைய எங்கூருல "தகர கொட்டாய்"ன்னு தான் சொல்லுறாங்க.

மத்த உலோக தகடு எல்லாம் எங்கூருலயும் தகடுதான்.

அறிவிலி said...

//அப்படிச் சாதுர்யமாக் காரியஞ் சாதிக்கிறவங்களைக் குறிக்கிற மாதிரிச் சொன்னதுதான், இந்த நட்டாமுட்டிப் பய//

நெறய தமிழ் வார்த்தைகளை நட்டாமுட்டித்தனமா (சாதுர்யமா)புரிய
வெச்சிட்டீங்க.:)))

பெருசு said...

அது சரிங்

தொண்டு முட்டி,தொண்டு முட்டி அப்படின்னு

ஒரு வார்த்தை சொல்லுவாங்க.

அதப்பத்தியும் ஒரு வார்த்தை சொல்லிப்போடு சாமி

இராம்/Raam said...

கலக்கல்.. :)

இராம்/Raam said...

/ தகடூர் கோபி(Gopi) said...

//தங்கத் தகடு, செப்புத் தகடு எல்லாம் கேட்டதில்லையாக்கூ?//

கேட்டிருக்கமுங்க பழமை பேசி... ஆனா எங்கூருல இரும்பு தகடை மட்டும் தான் தகரம் அப்படின்னும் சொல்லுறாங்க...

தகர கூரை போட்ட சினிமா கொட்டகைய எங்கூருல "தகர கொட்டாய்"ன்னு தான் சொல்லுறாங்க.

மத்த உலோக தகடு எல்லாம் எங்கூருலயும் தகடுதான்.///

அரவிந்தசாமி,

சத்யராஜ் ஸ்டைலிலே தகடு தகடு’ன்னு பேசிட்டு இருக்கீங்களே... :)

Unknown said...

//.. @@பட்டிக்காட்டான்..

கிளறி வுட்டுட்டமாக்கூ? இஃகி! ..//

உங்க இடுகைகள படிக்கும்போதெல்லாம் எனக்கு அப்புச்சி நெனப்புதான்.. இப்போ அவரு இருந்தாருன உங்களுக்கு போட்டி கடை நடதியிருப்பேனுங்கோ..

பழமைபேசி said...

@@அறிவிலி

நன்றிங்க

@@பெருசு

நீங்கதாஞ் சொல்லணும், இஃகி!

@@இராம்/Raam

நன்றிங்க

@@பட்டிக்காட்டான்..

போட்டியாக் கடையா? அவ்வ்வ்வ்.....

பழமைபேசி said...

//தகடூர் கோபி(Gopi) said...
தகர கூரை போட்ட சினிமா கொட்டகைய எங்கூருல "தகர கொட்டாய்"ன்னு தான் சொல்லுறாங்க.
//

கண்ணூ, அது தகரம் பூசிய உலோகத் தகட்டுக் கூரை....

ஓலைக் கொட்டாய், தகரக் கொட்டாய், மச்சுக் கொட்டாய்... இப்பிடி.... இஃகிஃகி!!

"உழவன்" "Uzhavan" said...

எல்லா வார்த்தைகளும் நமக்கு புதுசா இருக்கு :-)

பழமைபேசி said...

//உழவன் " " Uzhavan " said...
எல்லா வார்த்தைகளும் நமக்கு புதுசா இருக்கு
//

இப்பத் தெரிஞ்சிகிட்டீங்கதான...மகிழ்ச்சிங்க உழவரே!