8/07/2009

இடக்குமுடக்கு!

ஒரு நாள், பெண்ணைப் பெத்த அந்தம்மா அழுது புலம்பிட்டு இருந்தாங்க. உடனே அந்தப் பெரியவர்,

”இதுக்கு ஏன் இப்ப அழுதுட்டு இருக்கே நீ? சேய் அப்படீன்னா, ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் பிரிஞ்சி எட்டத்தான போகும்? அதனாலத்தான அவுகளை சேய்ன்னு சொல்றது?”

பக்கத்துல இருந்த நாம உடனே அந்த பெருசுகிட்ட, ”அய்யா, என்ன சொல்றீங்க நீங்க?”

“ஆமா சேய்ன்னா தூரம், அண்மைன்னா கிட்டக்கங்றதுதான் தமிழ்?”

“அய்யா, சித்த வெவரமாச் சொல்லுங்க! நீங்க எடக்குமொடக்கா சொல்றீங்க போலிருக்கு?”

“டேய், டேய்... அது எடக்குமொடக்கு அல்லடா! இடக்குமுடக்குன்னு சொல்லணும்!!”

“செரி வுடுங்க. இடக்குன்னா என்ன? முடக்குன்னா என்ன??”

“இடக்குன்னா குதர்க்கம். முடக்குன்னா ஒழுங்கில்லாதது. குதர்க்கமாப் பேசி ஒழுங்கில்லாமச் செய்யுறதுதான் இடக்குமுடக்கு”

“ஓ அப்படியா? அப்ப ஏடாகூடான்னா என்னங்க பெரியவரே?”

”டேய், நீயென்னடா வெவகாரமாவே கேள்வி கேக்குற? இருந்தாலும் வயசுல சின்னவங் கேக்குறதால சொல்றேன், கேட்டுக்க; ஏடன், ஏடான் அப்படின்னா, தோழன் அல்லது நட்பானவன்னு அர்த்தம். கூடான் அப்படின்னா, சேரக் கூடாதவன். ஆக, எதிர்ப்பதமா இருக்குறதைச் சொல்லுறது ஏடாகூடான்னு!”

”பெருசூ.... அப்ப எதிரும் புதிருமாப் பேசுறான்னு சொல்றாங்களே? அது?? இஃகிஃகி!”

“டேய், கேனக்காத்தானாட்டம் இளிக்காத! ஒன்னுக்கொன்னு எதிர்ப்பதமா இருக்குற அர்த்தத்துல பாவிக்கிறது அல்லடா அது! ஆனாக் காலவட்டத்துல நீங்கெல்லாம் இப்படி மாத்திபுட்டீகடா... எதிர் அப்படீன்னா முன்னாடி நிக்கிறது. புதிர் அப்படீன்னா, சுலுவுல புரிஞ்சிக்கும் படியா இல்லாம இருக்கிறது. ஆக யாராவது முன்னாடி வந்து, சொல்லவந்ததை நேரிடையாச் சொல்லாமச் சொல்லுற பழமதாண்டா அந்த எதிரும்புதிருமாங்றது!”

”ஓ இதுல இத்தனை கதை இருக்கா? அப்ப எதிர்ப்பதம்னா என்ன பெருசு?”

“எதிர்ப்பதம்னா, முரணான பதம்ங்றதுதான். இப்ப கொஞ்சம் எதிர்ப்பதங்களை சொல்லுறேன் கேட்டுக்க,

சிறுமை X பெருமை
சேய்மை X அண்மை
தீமை X நன்மை
வெம்மை X தண்மை
புதுமை X பழமை
மென்மை X வன்மை
மேன்மை X கீழ்மை
திண்மை X நொய்மை
உண்மை X இன்மை
நுண்மை X பருமை"

"நல்லா இருங்க பெரியவரே, நான் கழண்டுக்குறேன் இப்போதைக்கு! இஃகி!!”

வாங்க மக்கா, நாம போயி நம்ம பொழப்பு தழைப்பப் பாக்கலாம். விட்டாப் பெருசு விடிய விடியத் தமிழ்ப் பாடம் எடுக்கும் போல இருக்கு?

கறக்குற பசுவையும், கைக்குழந்தையையும் கண்ணுல வெக்கணும்ன்னா,
தமிழை இரசிச்சு அனுபவிக்குறதுல வெக்கணும்யா!!

11 comments:

ஈரோடு கதிர் said...

நல்லா இருங்க மாப்பு, நான் கத்துக்கிறேன் உங்ககிட்ட இப்போதைக்கு!

vasu balaji said...

உருப்படியா நாலு வார்த்த கத்துண்டாச்சி. ரொம்ப நன்றி பழமை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உண்மை X இன்மை
அப்படியா?


உண்மை x பொய் ;
இன்மை x மறுமை

படித்ததாக ஞாபகம்

ஆரூரன் விசுவநாதன் said...

உள்ளூர் விசயம், கடல் கடந்த வெளிநாடுகளில் இருந்து.......யோசித்துப் பார்க்ககூட முடியவில்லை. நண்பர் கதிர் இன்று என்னிடம் சொன்னது போல் " எங்கிருந்துதான் இவருக்கு இதெல்லாம் கிடைக்குதுன்னே தெரியலையே" என்று ஆதங்கமும், ஆச்சரிய பெருமூச்சும் உண்மை. வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
உண்மை X இன்மை
அப்படியா?


உண்மை x பொய் ;
இன்மை x மறுமை

படித்ததாக ஞாபகம்
//

வாங்க ஐயா வணக்கம்! நல்ல கேள்வி கேட்டிங்க போங்க.... நான் இதை இடுகையிலயே சேர்க்கணும்...

உண்மை - உள்ளது உள்ளபடி
இன்மை - இல்லாதது இல்லாதபடி
பொய் - இல்லாதது இருப்பதாக அல்லது இருப்பது இல்லாததாக

மு(உ)ம்மை - முற்பிறப்பு
இம்மை - இப்பிறப்பு
மறுமை - மறுபிறப்பு

பழமைபேசி said...

@@கதிர் - ஈரோடு
@@வானம்பாடிகள்
@@ஆரூரன் விசுவநாதன்

வாங்க மக்களே வணக்கம்! எல்லாம் ஊர் நினைப்புத்தான்!!

செல்வநாயகி said...

பழமை பேசி,
நல்ல வேலைதான் செஞ்சுக்கிட்டிருக்கீங்க, நன்றி. ஆனா உண்மைக்கு எதிர்ப்பதமா இன்மை சரியாப் பொருந்துமான்னு இன்னும் கேள்வி தொக்கி நிக்குது எனக்கு. மூளை ஒத்துப் போக மாட்டேங்குது உங்க விளக்கத்தோட அந்தச் சொல்லுக்கு.

பழமைபேசி said...

@@செல்வநாயகி

//உண்மை uṇmai : (page 404)

Internal piles; உட்பக்கமாக உண்டாகும் மூலநோய்.

உண்மை uṇmai
, n. < உள்¹. [M. uṇma.] 1. Existence, reality, opp. to இன்மை; உள்ளது. உண்மையுமா யின்மையுமாய் (திருவாச. 38, 8). //

மேல கொடுத்து இருக்கிறது அகராதியிலிருந்த எடுத்ததுங்க... வேணுமின்னா G.U போப் அவங்களோட கையேட்டுப் பிரதியும் நகலெடுத்துப் போடுறேன்... இஃகிஃகி!

http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.1:1:2922.tamillex

பொய் = இல்லாதது இருப்பதாக அல்லது இருப்பது இல்லாததாக!

மெய் = இருப்பது இருப்பதாக அல்லது இல்லாதது இல்லாததாக

ஏங்க பொழக்கத்துல இருக்குறதெல்லாம் சரின்னு நெனைக்க முடியுமா? வருத்தமாத்தான் இருக்கு, நிலைமை அதுதானுங்களே? என்ன நாஞ் சொல்றது?!

ஆ.ஞானசேகரன் said...

அருமை..... வேறு என்ன சொல்ல நண்பா

பெருசு said...

பழமை மாட்டிகிட்டாரு நம்ம கிட்ட.

வாயக் குடுத்து வாங்கி கட்டிக்கறதுன்னா இதுதான்

பழமைபேசி said...

//பெருசு said...
பழமை மாட்டிகிட்டாரு நம்ம கிட்ட.

வாயக் குடுத்து வாங்கி கட்டிக்கறதுன்னா இதுதான்
//

அட மக்கா, பெருசு இங்கயும் வந்திடிச்சுடோய்... வாங்க, ஓடிறலாம்!