7/31/2009

FeTNA: தமிழ்த் திருவிழா படங்கள்!







மக்களே, FeTNA, வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ்விழா-2009 தொடர்பான நிழல்படங்கள் பேரவையின் வலையகத்தில், கிட்டத்தட்ட 1500 படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அங்கு சென்று கண்டு களித்திடுவீர்!

(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)


7/30/2009

மோர்க்காரியின் முதுகு!

Virginia Beach Marriott


சிவப்பு வண்ண விளக்குகள்
பறை சாற்றியது இது
Marriott என!
உயரே நின்று பார்க்கின்
கண்ணுக்கெட்டிய தொலைவு
வரை கடலின் நீலவெளி!
கீழே நின்று பார்க்கின்
இருமருங்கிலும் பச்சைப்பட்டு
படர்ந்த புல்வெளி!
உள்ளே நின்று பார்த்துவிட்டு
அலறினான் இருந்த
பெரிய அறை கண்டு,
முந்தானையில் சும்மாடு
கட்டிய மோர்க்காரியின்
திறந்த வெளி முதுகைப்
போல் இருக்கிறதென!

-பழமைபேசி

மாலைப் பொழுது அந்தி சாயும் நேரம். இவன் மூன்று கல் தொலைவில் இருக்கும் கோயிலடிக்குச் செல்லலாம் என வீதியில் இறங்கிச் செல்ல முற்படுகையில் ஆடவர் கூட்டம் சென்று கொண்டிருக்கிறது.

அவர்களுடன் இணைந்த இவன், ‘என்ன விசயம்?’ என்பது போல குறிப்பு மொழியால் (body language) வினவுகிறான். அதற்கு அவர் சைகையாலேயே பதில் சொல்கிறார், எனக்குத் தெரியவில்லை, எல்லோரும் போகிறார்கள் நானும் அவர்களோடு சேர்ந்து போய்க் கொண்டிருக்கிறேன் எனும் பொருளில்.

இப்படியே இவன் ஒருவர் மாறி ஒருவராகக் கேட்க, அத்துனை பேரும் முன்னே இருக்கும் ஆட்களைக் கை காண்பிக்க, கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் தாண்டித் தாண்டி இறுதியில் முன் வரிசையில் இருக்கும் அந்த ஒற்றை ஆடவனை நெருங்கி விடுகிறான் இவன்.

அவனிடமும் என்ன விசயம் என வினவ, அவன் சொன்னான் முன்னே செனறு கொண்டிருக்கும் பெண்ணின் இரவிக்கையில், முதுகுப் புறத்தின் நடுப்பகுதியில் இருக்கும் சிறு சாளரம்(ஜன்னல்) போன்ற வடிவினைப் பார்த்துக் கொண்டே செல்கிறேன் என்றான்.

அதாவது, எதுவும் இருக்க வேண்டிய அளவாக, கிடைப்பதற்கரியனவாக இருந்தால்தான் அதில் குதூகலம் பிறக்கும். ’ஜன்னல் வெச்ச ஜாக்கெட்’ எனும் வடிவமைப்பு பிறந்ததும் அதனடிப்படையில்தான். தலையில் தனது கொங்குத் தலைப்பால் கட்டிய சும்மாட்டின் மீது பானையை வைத்துச் செல்லும் போர்க்காரியின் முதுகு திறந்த வெளியாகப் பரந்திருக்கும். அதைப் பார்ப்பதில் எந்த குதூகலமும் இல்லை என்பதுதான் நுண்ணுணர்வு!

மாதத்திற்கு ஒரு முறை, இரண்டாவது சனிக்கிழமை மாலையில், மாதமெல்லாம் காத்திருந்து கோவை இராம்நகர் Udhayam Restaurent மொட்டை மாடியில் அடித்த கல்யாணியில் இருந்த மப்பு, இன்று எளிதாக அளவுக்கதிகமாகவே கிடைக்கும் பன்னாட்டு மதுவில் கூடக் கிடைப்பதில்லை என்பதும் அதுவே!

7/28/2009

அந்தக் காலமும் இந்தக் காலமும்!!

கல்லிருக்க குழவியாடினது
அது அந்தக் காலம்!
குழவியிருக்கக் கல்லாடுறது
இந்தக் காலம்!!

கால் கடுகடுக்கப் படியேறினது
அது அந்தக் காலம்!
நிலையில் நாம நிக்க, படி ஏறுறது
இந்தக் காலம்!!

அவசரத்துக்கு வெளிய
ஓடினது
அது அந்தக் காலம்!
அவசரம்ன்ன உடனே
உள்ள ஓடியாறது
இந்தக் காலம்!!

சுட்டுப் பிடிச்சது
அது அந்தக் காலம்!
பிடிச்சதை சுடுறது
இந்தக் காலம்!!

கிடைச்சதை ஒப்படைக்க
வெள்ளிடை மன்றம்,
அது அந்தக் காலம்!
தொலைஞ்சதைக் கண்டுபிடிக்க
காவல் நிலையம்,
இந்தக் காலம்!!

பாட்டுக்கு தாளம்
அது அந்தக் காலம்!
தாளத்துக்கு பாட்டு
இந்தக் காலம்!!

அலம்பிட்டு உள்ள போனது
அது அந்தக் காலம்!
உள்ள போயிட்டு அலம்புறது
இந்தக் காலம்!!

மொடாவுல காசு
அது அந்தக் காலம்!
காசுக்கு மொடாத்தண்ணி
இந்தக் காலம்!!

மானம் போனா தொங்கறது
அது அந்தக் காலம்!
தொங்கறதுக்கு மானம் போறது
இந்தக் காலம்!!

அடி வாங்கினவன் கத்தறது
அது அந்தக் காலம்.
அடி கொடுக்கறவன் (கராத்தேயில்) கத்தறது
இந்தக் காலம்.

யானைப் படை இருந்தது
அது அந்தக் காலம்
பூனைப் படை இருப்பது
இந்தக் காலம்

கந்தல் அணிந்தால் ஏழை என்பது
அது அந்தக் காலம்
அதையே அணிந்து மினிக்கிட்டு
ஃபேஷன் என்பது இந்தக் காலம்.

ஏழ்மையினால் கூழ் அருந்தியது
அது அந்தக் காலம்
நோயினால் கூழ் குடிப்பது
இந்தக் காலம்.

வீட்டை வெச்சிக் கடன்
அது அந்தக் காலம்!
கடன் வாங்கி வீடு
இந்தக் காலம்!!


--பழமைபேசி

7/27/2009

என்னோட நேரம்?!

மாலை ஏழு மணி
சார்லத் விமான நிலையம்
போக வேண்டிய இடம்
குடாப் பிரதேசமான
Norfolk, Virginia!

மணித்துளிக்கு ஒன்றாய்
அசைந்து ஆடி ஆடி,
ஊர்ந்து, பின் வேகமெடுத்து
சீரானதொரு இடைவெளியில்
சிட்டாய்ப் பறந்து சென்றன!!

அடேயப்பா கொள்ளையழகு,
ஒன்றன் பின் ஒன்றாய்
நேர்த்தியாய் துல்லியமாய்
மிகச்சரியாய் உச்சிநோக்கிப்
போய்க் கொண்டே இருந்தன
சமிக்கைக்கான காத்திருப்பில்
நின்று கொண்டு இருக்கும்
இவ்விமானம் தவிர்த்து
மற்றன யாவும்!

FeTNA .. தமிழ்த் திருவிழாச் சிதறல்கள் - 6





ஏய் செங்கல்லே
மனிதன் மரித்ததும்
சுடப்படுகிறான்!
ஆனால் நீயோ
சுடப்பட்டதும்
உயிர்த்தெழுகிறாயே?!

--சிலம்பொலியார்

-------------------------

காற்றுப்பை (balloon)
விற்பவனுக்கும்
காற்றுப்பை (balloon)
வாங்குகிற
வயதுதான்!

-----------------

அய்யா
திருக்குவளையாய்
இருந்தென்ன?
இரு குவளைகளாய்
இருக்கிறதே??

--கவிஞர் செயபாசுகரன் பகிர்ந்தது


தீதும் நன்றும் பிறர்தர வாரா!
(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

7/26/2009

மயிலே மயிலே, நீ எந்த மயிராண்டிக்கும் இறகு போடாதே!

(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

என்ன கொடுமை இது?

கறக்கிறதென்னவோ நாழிப்பால்;
உதைக்கிறது பல்லுப் போக!!

பார்த்தீங்கன்னா உருப்படியா பேசுறது நாலே நாலு பழமயாத்தான் இருக்கும். ஆனா நம்ம பேச்சாளருங்க செய்யுற அலட்டல் என்ன? உருட்டல் என்ன? உணர்ச்சிப் பிரவாகங்கள் என்ன? ச்சும்மா ஆய் ஊய்ன்னு கத்தி ஊரைக் கூட்டுவாங்க... உடனே பேச்சாளர் பேச்சுல மடங்கின நம்மாள், அடுத்தாள் கிட்டக் கேப்பான், ‘என்ன கொடுமை இது?’. அடுத்தாள் என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம அசடு வழியுவான்....

மேல சொன்னா மாதர நீங்களும் என்ன கொடுமை சரவணன் இது?ன்னு கேட்டும் இருப்பீங்க. அதே போலத்தான் நம்ம நண்பர் ஒருத்தர் என்னையுங் கேட்டாரு. நான் விடுவேனா, நீ இருக்குற கொடுமைகளோட பேரெல்லாஞ் சொல்லு, நான் அதுல எதுன்னு பாத்துச் சொல்லுறேன்னேன். ஆளுக்கு மூஞ்சியில ஈ ஆடலை! இஃகிஃகி!!

ஆமா, இந்த மூஞ்சியில ஈ ஆடக் காணோம், அப்படீன்னு சொல்றாங்களே? உங்களுக்கு அதுக்குண்டான விளக்கம் தெரியுமா? அஃகஃகா! இதென்னடா தலைவலி போயித் திருகுவலி வந்திடுச்சேன்னு யோசிக்கிறீங்களா? கொடுமைகளோட பேரே தெரியாது, இதுல நான் முகத்துல ஈ ஆடுறதுக்குண்டான விளக்கத்துக்கு எங்க போவேன்னு நீங்க மண்டையப் போட்டு நெம்ப படுத்தாதீங்க.... நாம இப்ப கொடுமைகளைப் பார்க்கலாம் வாங்க!

இட்டேற்றிக் கொடுமை: ஒருத்தர் மேல இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி கெட்ட பெயர் வாங்கித் தந்து கொடுமைப் படுத்துறது.

உக்கிரக் கொடுமை: உக்கிரம்ன்ன உடனே, பாடாப் போட்டு அடிச்சுக் கொடுமைப் படுத்துறதுன்னு நினைக்காதீங்க. இது அப்படியல்ல... அளவுகடந்த பாசத்தைப் பொழியுறது. எங்க கோயமுத்தூர்ப் பக்கம் அடிக்கடி இது நடக்கும். வட்டல் நெறைய சோத்தைப் போட்டு, முருங்கக்கா சாம்பாரையும் ஊத்தி, தின்னூ, தின்னூனுவாங்க.... அவ்வ்வ்....

உறைப்புக் கொடுமை: ஒன்னு ரெண்டு வார்த்தை பேசுனாலும், அதுல சுருக்குன்னு மனசைத் தெக்கிறமாதிரி உறைப்பைக் காட்டிக் கொடுமைப் படுத்துறது.

கடூரக்(வன்) கொடுமை: கடுமையான துயரத்துல கெடந்து தவிக்கிறதுதான் கடூரக் கொடுமை.

கிறாளிக் கொடுமை: சுத்தி விடறதுன்னு ஈழத் தமிழர்கள் சொல்வாங்க. அதாவது உங்களுக்கு ஒரு வேலையக் கொடுத்து, அதைச் செய்ய முடியாதபடிக்கு தவறான தகவல்களைக் கொடுத்து குழப்பி விட்டுட்டு, இன்னும் வேலை முடியுலான்னு கேட்டுக் கேட்டே கொடுமைப் படுத்துறது.

குரூரக் கொடுமை: விகாரமா, பயங்கரமான துன்பங்களைக் காமிச்சோ, கொடுத்தோ கொடுமைப் படுத்துறது.

குழைவுக் கொடுமை: இது குரூரக் கொடுமைக்கு நேர் எதிரானது. ஒருத்தர்கிட்ட அடுத்தவர் குழைஞ்சி, குழைஞ்சி(நாய் வாலை ஆட்டி ஆட்டி வர்ற மாதிரி) வர்றது. அந்தக் குழைவுல தான் அகப்பட்டு ஏமாந்து போற கொடுமைதான் குழைவுக் கொடுமை.

குள்ளக் கொடுமை: தந்திரத்தால கொடுமைப் படுத்துறது.

கூரக் கொடுமை: கூரமின்னா பொறாமை. பொறாமையால மனசை நோகடிச்சு, துயரங்களைக் கொடுத்து மறைமுகமாச் சித்திரவதை செய்யுறது.

கோரக் கொடுமை: பயமுறுத்துச் சித்திரவதை செய்யுறது. கிலி பிடிச்சு அலறி, பயந்து அதுனால துன்பத்தை அனுபவிக்கிற கொடுமைதான் இது.

விகாரக் கொடுமை: குரூரக் கொடுமையும் இதுவும் ஒன்னு போலவே இருக்கும். ஆனா, குரூரம்ங்றதுல ஆழம் அதிகம்.

சடக் கொடுமை: சோம்பேறித்தனத்தால வர்ற இடைஞ்சல்களை சடக் கொடுமைன்னு சொல்றது.

சண்டக் கொடுமை: சண்டம்... வலிமைய எதிர்கொள்ள முடியாம அந்த வலிமைக்கு ஆட்பட்டு துயரங்களை அனுபவிக்கிற கொடுமை.

பிணிக் கொடுமை: நோய் நொடியால வர்ற கொடுமை.

தீனக் கொடுமை: வறுமையால வர்ற துயரங்கள் தீனக் கொடுமை.

நேரக் கொடுமை: எல்லாம் சரியா இருக்கும். ஆனாலும் நினைச்சது நடக்காம, எதிர்பாராம வர்ற இடைஞ்சல்கள் நேரக் கொடுமையால வர்றது.

தெரியாக் கொடுமை: தனக்கு சரிவரத் தெரியாததால நேருகிற இடைஞ்சல்கள், துன்பங்கள் தெரியாக் கொடுமை.

இல்லாக் கொடுமை: வறுமையில இருந்து கொஞ்சம் மாறுபட்டது இது. அந்த கணத்துல அது தன்னிடம் இல்லாமத் தவிக்கிற கொடுமை இது.

நீசக் கொடுமை: அசுத்தம் காரணமாவும், ஒவ்வாச் சூழ்நிலை காரணமாவும் நேருகிற கொடுமைகள் இது.

பசலிக் கொடுமை: காதலன் - காதலி, தலைவன் - தலைவி, இப்படி மற்றவர்களுடனான பிரிவால் வரும் கொடுமை.

முரண் கொடுமை: பிணக்குகளால் நேரும் கொடுமைதான் முரண் கொடுமை.

வக்கிரக் கொடுமை: வக்கிர எண்ணங்களால் நேருகிற கொடுமை.

வஞ்சகக் கொடுமை: ஏமாத்திச் சித்திரவதை செய்யுற கொடுமைதான் இது.

புரியுது... இதையெல்லாம் படிக்கணும்ன்னு என் தலைவிதி இன்னைக்குன்னு நீங்க புலம்புறதும் புரியுது இராசா... அதான் நேரக் கொடுமைங்கறது.... இஃகிஃகி!!


இந்த இடுகை அன்புத் தம்பி அப்பாவி முரு அவர்களுக்காக.....

7/25/2009

FeTNA: தலைமை குறித்த ஓர் நையாண்டி!

ஓட்டி ஓட்டி மிளகு அரைக்க பாட்டி வந்தாளாம்!
பையனுக்குச் சோறு போட குட்டி வந்தாளாம்!!

ஆமாங்க மக்களே! காலம் முச்சூடும் பேரவையைக் கட்டிக் காப்பாத்தி, திட்டம் போட்டு, காசு பணம் செலவழிச்சு, ஓய்வு ஒழிவில்லாம வேலை பார்த்து ஒரு நிகழ்ச்சிய நடத்திக் காட்டுறது முன்னணியில இருக்கிற தலைவர்களும் பெரியவங்களும். ச்சும்மா ஒரு சம்பிரதாயத்துக்கு 75 வெள்ளியக் குடுத்துட்டு, நிகழ்ச்சிகளை எல்லாம் ஒன்னு விடாமப் பாக்குறது இவங்க. அதுல இவனுக்கு இதழியல் பிரதிநிதிங்ற பேர்ல வியாக்கியானம் வேற?

இப்படியெல்லாம் நீங்க கேக்குலாம்... சரிதான்... அதுக்காக எங்க வேலைய நாங்க செய்யாம உட்ற முடியுமா? என்ன நாஞ் சொல்றது?? இஃகிஃகி!

நான் நெம்ப முசுவா தமிழ்த் திருவிழா குறிச்சு இடுகைகளை இட்டுட்டு இருந்தம் பாருங்க.. அப்ப, tamil, thamizhங்ற பேர்ல ரெண்டு ஒறம்பரைங்க (உறவின் முறை), தலைவர் வேட்டி சட்டையில வரலை, தலைவர் வேட்டி சட்டையில வரலைன்னு ஒரே குமுறல்... கூச்சல், கலாய்ப்பு... பழைய இடுகைகள்ல நீங்க அதுகளை இப்பக் கூடப் பாக்குலாம்.


//thamizh said...
ennyaa, adhu ennaiyya safe-a americaavil coattuum soottum anindhukkittu ezham pattriyum periyaar pattriyum pesikkondu...//

வாங்க வாங்க.... ஆனா, நீங்க அந்த வேட்டி சட்டைய மட்டும் வுட மாட்டேங்குறீங்க இன்னும்... இஃகிஃகி...

ராமராஜ் வேட்டி துண்டு கடைக்காரர் உங்களுக்கு வேட்டி துண்டு தராம இராமயணத் தட்டு மட்டும் கொடுத்துட்டு போயிட்டாருன்னுதான நீங்க இப்படியெல்லாம் பேசுறீங்க.... இஃகிஃகி!

தவறாம வந்து மறுமொழி இடுவதற்கு நன்றி
...

மேல சொன்ன மறுமொழி அவிங்க இட்டதுல ஒன்னுதாங்க... அப்புறந்தான் எனக்கே உறைச்சது? ஆமாங்க, நானும் ஒரு வேட்டி கூட வெச்சி இல்லை! சரி வேட்டி கட்டுறது எப்படின்னு தெரிஞ்சிக்கலாம்ன்னு பார்த்தா, இந்த இடு காணொளி கிடைச்சது... ஐயகோ, அதுவும் ஒரு வேற்று நாட்டவன் வேட்டி கட்டுதலை விவரணப் படுத்துகிறான்.... அவ்வ்வ்வ்......




(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

தலைவர்களே, அடுத்த வருசம் மறக்காம வேட்டி சட்டையில ஒரு தடவையாவது மேடையில் காட்சி தந்திடுங்க... அல்லாங்காட்டி, எம்பாடு அந்தலை சிந்தலை ஆயிடும்... என்ன இருந்தாலும் அது நம்ம உடை, நாம அதை உடுக்க வேணும்ங்றது சரிதானுங்களே?!

FeTNA: தமிழ்த் திருவிழா, கிராமத்து நையாண்டி

வணக்கம் தமிழ் மக்காள்! இயல், இசை, நாடகம் எனத் தமிழை மூன்றாக வகுத்து தம் வாழ்வில் நலம் பல கண்டனர் தமிழர். இயற்றமிழ் மெத்தப் படித்த அறிஞரிடையே வலம் வந்தது. நாடகமும் இசையும் படித்தவரிடையே பாமரரிடையேயும் உலா வந்தன. இசையால் மயங்காதவர் எவருமிலர்.

அதிலும் நாட்டுப்புற இசை என்றால் சொல்லவா வேண்டும்? அதனுடன் நகைச்சுவையும் நையாண்டியும் க்லந்துவிட்டால், சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி பெய்தது போலல்லவா இனிக்கும்?

பழம்பெரும்புலவர் தொல்காப்பியர் சுவைகளில் நகைச் சுவைக்கே முதலிடம் கொடுக்கின்றார். கிண்டலும் கேலியும் இசையும் கலந்த கலவையே நாட்டுப்புறப் பாடல்களில் ஓர் அங்கமாகிய நையாண்டிப் பாடல். இத்தகைய பாடல்கள் கிராமங்களின் சொத்து. பயிரிட்டுக் களைத்த பாமரர் சுவைக்கும் பல்சுவை விருந்து.

கற்பனை, காதிற்கினிய சந்தம், கண்ணுக்கினிய ஆடல் அடங்கிய ஒரு கலை விருந்தைத்தான் வட அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவில் படைத்தார் திருமதி. உமா முரளிதர் அவர்கள். பார்த்தவர்கள் மகிழவும், பார்க்காதவர் ‘அய்யோ! நல்லதொரு நிகழ்ச்சியைத் தவற விட்டோமே?’ என அங்கலாய்க்கும் படியானதாக இருந்தது இந்நிகழ்ச்சி.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்கள் தோய்ந்து கிடக்கிறார்களே எனும் தனது ஆதங்கத்தின் பிரதிபலிப்பே இந்த நையாண்டி நிகழ்ச்சி. நலிந்துவரும் நல்லதோர் கலையை அமெரிக்கத் தமிழருக்கு அளித்த பெருமை திருமதி. உமா முரளிதரையே சாரும்.

ஒரு கிராமத்துச் சூழலை விழாவில் கலந்து கொண்டவர் கண் முன் நிறுத்திய பெருமைக்கு அவரும், பாராட்டுதலுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்த கலைஞர்கள் அனைவரும் உரியவர் ஆவர்.

நன்றி: முனைவர். K. கோவிந்தசாமி, புவனா சுகுமார் அவர்கள்

(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

7/23/2009

தமிழை ஒழிக்கிறானா பழமைபேசி?!

அன்பர்களே கீழ்க்கண்ட சொற்களைக் கண்டு எழுதுகிறேன்:

"ஓ அப்படீங்களா? சரி அப்ப, அடுத்த புத்தகத்தையும் இப்பவே அனுப்பி விடுங்க... எதுக்கு கடைசி நேரத்துல அவசர அவசரமா? என்ன நாஞ்சொல்றது?!"

இது தொடர்பாக ஏற்கனவே சொல்லியுள்ளதை மீண்டும் சொல்கிறேன். இதைப் போல் தமிழ்மொழியை ஒழிக்கும் வழி வேறில்லை. வேடிக்கைக்காகவும் இப்படி எழுத உள்ளம் துணிவது மிக வருத்தமானது. முன்பெல்லாம் இப்படி யாரும் எழுதமாட்டார்கள். மேடையில் பேசக்கூட மாட்டார்கள். நானும் நினைத்ததும் இல்லை. இப்பொழுதுதான் இது பெருகிவருகிறது.

இந்த நுணுக்கமான உணர்வுகள் எல்லாம் போனதால்தான் ஈழப் போராட்டத்திற்கு வேண்டிய நுணுக்கமான உணர்வுகளும் காணாமற் போயினவோ?

உணர்வினால் இயற்கையாகத்தோன்றாவிடில் அறிவியல் முறையில் அறிய மேலே இணைத்துள்ள கட்டுரையை வாசிக்கவும். இந்த மாதிரிச் சிதைந்த மொழியில் எழுதாமல் இருந்தாலே பெரிய சேவை. அது கடமை. யாரும் எந்த இலக்கியமும் கற்கவேண்டாம்.

"இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்."

------------------------------------------------------


மடலாடலில் நான் குறிப்பிட்ட வாசகங்களுக்கு மறுமொழியாகக் கிடைக்கப் பெற்ற, எனது கெழுதகை நண்பரொருவரின் அறிவுறுத்தலைத்தான் மேலே காண்கிறீர்கள்.

முதலில் அவருக்கு மனமார்ந்த நன்றியைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். அவர் அளித்திருந்த கட்டுரையானது வெகு ஆழமான கட்டுரை, பல நூல்களை மேற்கோள் காண்பித்து பல அரிய தகவல்களுடன் தனது வாதத்தை முன் வைத்திருக்கிறார். அனைவரும் படித்தறிய வேண்டிய படைப்பு அது! மொழி சிதைவதில் யாருக்கும் உடன்பாடு இருக்காது, இருக்கவும் கூடாது என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஆனால் அவரது கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் சில கருத்துகள், ஏற்றுக் கொள்ள முடியாது. தமிங்கிலத்திலே பேசுவதை, எழுதுவதைக் காட்டிலும், நூல் மற்றும் உரை தவிர்த்த மற்ற நான்கு இலக்கியங்களிலும் வரும் தமிழானது தீங்கானது என்கிறார்.

பேச்சு வழக்கில் பாவிக்கும் சொற்கள் கொண்டு எழுதுவதை வருந்தக் கூடியது என்கிறார். அதுவும் இப்பழக்கமானது இப்போதுதான் பெருகி வருகிறது என்றும் கூறுகிறார்.

அப்படியானால் நாடோடி இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், நாட்டுப்புறப் பாடல்கள் எல்லாம் பல்கலைக் கழங்களிலே இடம் பெற்றது எப்படி? மேலை நாடுகளிலும் Folklore என்ற பாமரர் இலக்கியம் தோன்றி இருக்காதே?!

பேசுவதை எழுதாதே! எழுதுவதைப் பேசு!! என்று கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் கூறியதை மேற்கோள் காண்பிக்கிறார். ஏற்றுக் கொள்கிறேன். அதே வேளையில், கி.மு 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்று சொல்லப்படுகிற தொல்காப்பியர் உரைத்ததை நான் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

”எழு நிலத்து எழுந்த செய்யுள் தெரியின
அடிவரை இல்லன ஆறென மொழிப;
அவைதாம் நூலிலான, உரையிலான
நொடியொடு புணர்ந்த பிசியினான
ஏது நுதலிய முதுமொழியான
மறைமொழி கிளந்த மந்திரத் தான
கூற்றிடை வைத்த குறிப்பினான”

இந்தச் சூத்திரத்தில் அவர் கூறுவதென்ன? புலவர்களால் எழுதப்படுகிற நூல் மற்றும் உரை தவிர்த்து, பொதுமக்களால் லெளகீகத்தில் இடம் பெறும் பிசி எனப்படுகிற விடுகதை/புதிர், மந்திரம், முதுமொழி என்கிற பழமொழி மற்றும் குறிப்பு மொழி (body language) என்பன மற்ற இலக்கியங்கள். மொழிப என்று குறிப்பிட்டு இருப்பதின் மூலம் பண்டைய காலத்திலே கூட இவ்வகையான வழக்கு மொழிகள் இருந்தது நிரூபணம் ஆகிறது.

தத்தக்கா புத்தக்கா
தவலைச் சோறு
நெற்றிமா நெருங்கமா
பச்சை மரத்திலே பதவலை கட்டப்
பன்றி வந்து சீராடப்
பண்ணாடை வந்து நெல்லுக் குத்தக்
குண்டுமணி சோறாக்கக்
குருவி வந்து கூப்பிடுது!

இப்பாடல் இடம் பெற்றது மலையருவி எனும் நூலில். இதை, தமிழை ஒழிக்க வந்த பாடல் என்பது சரியா?

தமிழார்வலர்களே, தமிழின் மீதான உங்கள் ஆர்வம் மற்றும் அதீத பற்றினை மதிக்கிறோம், வணங்குகிறோம்! ஆர்வலர் என்பதும், வெறியார்வலர் என்பதும் நூலிழைதான் இடைப்பட்டு நிற்கிறது. ஆர்வலராகவே தொடருங்கள், அதில் வெறியைக் கூட்டுவது நலம் பயக்காது. இதை நான், மேற்கூறிய பதிலுரை அளித்த கெழுதகை நண்பருக்காகச் சொல்வதல்ல!

தமிழ்நாட்டிலும் சரி, புலம் பெயர்ந்த மண்ணிலும் சரி, நிறைய ஆர்வலர்களின் அதிகப் படியான ஆர்வத்தால் தமிழன்னையின் மக்களே ஒதுங்குவதைக் கண்டிருக்கிறேன் நான்!

உணர்ச்சிக் கொந்தளிப்பில் தமிழ், தமிழன் என்று உரக்கப் பேசுவதால் ஆவதென்ன கண்டோம்? இன்றைய சூழலில் வழக்கு மொழியையும், எளிமையையும் போற்றுவதால் மட்டுமே ஓங்கி வரும் தமிங்கிலத்தை ஓரளவாவது கட்டுப் படுத்த முடியும். ஒருவனை தமிழின்பால் ஈர்த்துவிடும் பட்சத்தில், செந்தமிழ் என்பது அவனையறியாமலே அவனுள் புகும் என்பது சொல்லித் தெரிவதுண்டோ?

உரக்கப் பேசி, அறச் சீற்றம் எனும் பெயரில் தனிமனிதன் ஓங்குவதைத் தவிர்த்தல் நலம் பெயர்க்கும். வட அமெரிக்காவிலே, கற்றுத் தேர்ந்த முனைவர்கள், ஆன்றோர் சான்றோர் பலர் தமிழின்பால் பற்றுக் கொண்டு ஆக்கப்பூர்வமான வழிகளிலே முன்னெடுத்துச் செல்கிறார்கள். அவர்கள் வழியில், மற்றவர்களும் சென்று மொழியைக் காத்திடுவோமாக!

கருப்பட்டி வட்டே
கிட்டவந்து ஒட்டேய்!

7/22/2009

FeTNA: பொன்னாடையும் சாமியாரும்!!







இலக்கிய வட்ட நிகழ்ச்சியில் கவிஞர் ஜெயபாசுகரன் அவ்ர்கள்

(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

7/21/2009

FeTNA: நாட்டுப்புறப் பாட்டு பாக்கலாம் வாங்க....





(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

7/20/2009

நயம்மிகு பதிவர்கள்

இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ளஇடம் போல் பெரிதுவந்து - மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு.

பாராட்டுதலும் ஈகையும் இருக்குறவங்களுக்கு சொர்க்கத்தின் கதவுகள் அடைபடாதுன்னு பதினென்கீழ்க் கணக்கு நூல்கள்ல ஒன்றான நாலடியார்ல சொல்லி இருக்காங்க பெரியவங்க. அது போல பாராட்டி விருது குடுக்குறவங்க நல்லா இருக்க வாழ்த்துகள்.

அதே ரீதியில பாராட்டுப் பெற்றவர்கள், விருது பெற்றவர்கள் நன்றி செலுத்தணுமா வேண்டாமா? அதே பதினென்கீழ்க் கணக்கு நூல்கள்ல ஒன்றான இனியவை நாற்பதுல நன்றி நவில்தலை என்ன சொல்றாங்க பெரியவங்க?


நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே;
மன்றக் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே;
'அன்று அறிவார் யார்?' என்று அடைக்கலம் வெளவாத
நன்றியின் நன்கு இனியது இல்.

நன்றி மனப்பான்மையோட, பொது இடத்துல மாண்பு கெடாத மாதிரி, யாருக்கு என்ன தெரியும்ன்னு சொல்லாமக் கொள்ளாம நன்றி செலுத்துவது இனிமைன்னு சொல்றாங்க இந்தப் பாட்டுல. ஆக, விருது கொடுத்தவங்களுக்கு நன்றியச் சொல்லிட்டு நாமளும் நாலு பேர்க்கு நயம்மிகு பதிவர் விருது கொடுக்கலாம் வாங்க!

ஆமாங்க, திறந்தமனத்தோன் செந்தழல் இரவி, அப்பாவி முரு, அன்பு அக்பர் இவங்கெல்லாம் நமக்கு விருது கொடுத்தவங்க. அவங்களுக்கும், என்னோட கவனத்திற்கு வராமலே இனியும் யாராவது கொடுத்திருந்தா அவங்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும். நாம பாராட்டி பாசத்தோட விருது கொடுக்குறது யாருக்குன்னு பார்க்கலாம் இப்ப.

ச.செந்தில்வேலன்

நம்மூர் அன்புத் தம்பி இவர், கொஞ்சு தமிழுக்கு புகழ் சேர்த்துட்டு இருக்கார்.

கதிர்

நம்ம மாப்பிள்ளை, கவிதைகள் நயம்பட எழுதிட்டு இருக்கார்.


சின்ன அம்மிணி

நம்ம ஊர் அம்மணி, கலந்து கட்டி எழுதுறவங்க. அவுசுதிரேலியாவுல குடித்தனம்.

எம்.எம்.அப்துல்லா

ஊர்க் கிணத்துக்கு தடம் சொல்லணுமா? ஊர்க் கெணறு மாதிரியே என்னத்தச் சொன்னாலும் பண்பா நடந்துக்குற ஒருத்தர், பண்பா எழுதுறவரும் கூட.

பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா! இது இன்னா நாற்பதுல வர்றது. அதாவது அறிவார்ந்த சக மனிதர்களின் தொடர்பை விட்டு விடுவது இனியதல்ல. ஆகவே, பதிவுலகில் இருக்கிற சக பதிவர்கள், வாச்கர்கள் எல்லாருக்கும் வாழ்த்துகளும் நன்றியும் சொல்லி இந்த இடுகையை இட்டு முடித்துக் கொள்ளும்,

பணிவுடன்,
பழமைபேசி
.

7/19/2009

யாது உம்மூரே? யாவர் உம் கேளிர்??

"அடேய் இது புது யுகம்டா... பொருளாதாரமயமாக்கல், தாராளமயமாக்கல்ன்னு படிப்படியா வந்து உலகமயமாக்கல்ல வந்து நிக்கிறோம்ல... அதனால, கனியன் பூங்குன்றனார் சொன்னா மாதிரி யாதும் ஊரே, யாவரும் கேளிர்ன்னு சொல்ணும்டா....”

“அட ச்சீ நிறுத்து... ஊடகங்களுக்கு பல் இளிச்சி, பல் இளிச்சி, யாது உம்மூரே? யாவர் உம் கேளிர்??ன்னு கேக்குற நெலமைக்கு கொண்டு வந்து நிறுத்திட்டமேடா?!”

”ப்ச், ஆமா இல்லை?”

“ஆமாம் மட்டுந்தான்டா மாப்பு!”

“இவனுங்களை இன்னும் நம்பிக் குதிரை ஏறினமுன்ன வெச்சுக்க, பாரி மகளிர் பாடின பாட்டை நாம அல்லாரும் பாட வேண்டி வருமுடோய்....”

“அதென்னடா பாரி மகளிர் பாட்டு?”

”அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
வென்று ஏறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!”


”என்ன இழவுடா இது?”

“உன்னோட தமிழை வெச்சு ஒன்னு கெடக்க ஒன்னு எழுதி உனக்கே அதை வித்து, நம்ப வெச்சுக் கழுத்தறுத்து, உன்னோட கோவணத்தைக் கூட உருவிட்டு அப்பனாத்தா யாரும் இல்லாம நடுத்தெருவுல உட்ருவாங்கன்னு 2000 வருசங்களுக்கு முன்னாடியே சொல்லிட்டு போயிருக்காங்கன்னாப் பார்த்துக்கோவேன்...”

“ஓ அப்பிடியா.... செரி வா, மொதல்ல போயி ஒரு வாய்ச் சோறு உண்ட்டு வந்துறலாம்!”

படைப்பின் மூலம்: தமிழ்த் திருவிழா

7/18/2009

சொல்லாமற் செய்யும் பெரியோர் பலா!

வணக்கம்! பாருங்க, ஒரு சில நண்பர்கள் வார இறுதிங்றதால அலைபேசில அழைச்சுப் பேசிட்டு இருந்தாங்க. என்ன பழம, இன்னும் தமிழ்த் திருவிழாவுல இருந்து விடுபடலை போலிருக்குன்னு கேள்வியும் கேட்டாங்க. அவ்வளவு சுலுவுல விடுபடுற மாதிரியாங்க திருவிழா இருந்துச்சு?

பெரியவங்க வாழ்க்கைய நல்லா அனுபவிச்சி, பிற்பாடு இலக்கியங்கள் படைச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். ஆமாங்க, அதனாலதானே சிற்றின்பம், பேரின்பம்ன்னெல்லாம் சொற்களைக் கண்டு, பின் விபரமா படைப்புகளைப் படைச்சிட்டுப் போயிருக்காங்க?! நுகரும் நேரத்துக்கு மட்டுமே இன்பமளிப்பது சிற்றின்பம். நுகர்ந்தபின்னும் நெடுங்காலம், அல்ல, நினைத்து நினைத்து இன்பம் கொள்வதெல்லாம் பேரின்பம். அதுபோல 2009 தமிழ்த் திருவிழான்னு சொன்னா, அது ஒரு பேரின்பம்! அந்தக் கடலில் மூழ்கிப் பயனுறக் காரணமாயிருந்த பச்சைநாயகி நடராசன் அவர்களுக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

எங்க இலக்கியக் குழுத் தலைவர் குழந்தைவேல் இராமசாமி இருக்காரு பாருங்க, மிகவும் நகைச்சுவை கூடிய பண்பாளர். அவரைக் கலாய்க்குறதுல நமக்கொரு பேரின்பம். நல்ல மனிதர்! இலக்கிய வினாடி வினாவுக்கு குழுவை நல்லபடியா வழிநடத்தினாரு. தினமும் பல்வழி அழைப்புகள் என்ன? தனித்த அழைப்புகள் என்ன?? குழுவை நல்லா புடம் போட்டு செயல்படுத்தினாரு.

அப்படிப்பட்டவர்கிட்ட இருந்து ஒரு ரெண்டு நாள் அழைப்பு வரலைன்னாலே எதோ ஒன்னு விடுபட்டுப் போனா மாதிரியா இருக்கு இப்பெல்லாம்! இந்த சூழ்நிலையிலதாங்க நானே அழைச்சு, என்னங்க ஐயா நீங்க ரெண்டு மூனு நாளா..... கேள்வியக் கேட்டுக் கூட முடிக்கலை, மறுபக்கத்துல இருந்து....

”ஆஈன, மழைபொழிய, இல்லம்வீழ,
அகத்தடியாள் மெய்நோவ, அடிமைசாக,
மாஈரம் போகுதென்று விதைகொண்டோட,
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள,
சாவோலை கொண்டொருவன் எதிரேசெல்ல,
தள்ளஒண்ணா விருந்துவர, சர்ப்பம் தீண்ட,
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க,
குருக்கள் வந்து தட்சணைகள் கொடு என்றாரே!”

”அகோ, நிறுத்துங்க, நிறுத்துங்க! என்ன இது? ரெண்டு மூனு நாளா அழைப்பு கிழைப்பு ஒன்னும் காணலையேன்னு கேட்டா, நீங்கபாட்டுக்கு பேசிட்டே இருக்கீங்க?”

“பாருங்க பழம, பாட்டு என்ன சொல்லுதுன்னா, மாடு கன்னுப் போட, மழை பெய்ய, இருந்த வீடு இடிஞ்சு விழ, வீட்டு வேலைக்காரர் சுகமில்லாமப் போக, பண்ணையாள் இறந்து போய்விட, மழை நின்னு நெலத்துல இருக்குற ஈரம் காஞ்சிடுமோங்ற கவலையில இருக்குற கொஞ்ச நஞ்ச நெல்லையும் எடுத்துட்டு வயலுக்குப் போகுற வழியில கடன்காரன் மறிச்சு நிக்க, அதே நேரத்துல இறப்புச் சேதியக் கொண்டுட்டு ஒருத்தர் எதிருல வர, தள்ளாடிட்டு விருந்தாளி வீட்டை நோக்கி வர, வழியில இருந்த பாம்பும் ஒரு போடு போட்டுத் தள்ள, நிலத்துக்கு கந்தாயம் கேட்டு அரசாள் வர, குருக்கள் வந்து தனக்கு தட்சிணை எதும் தர முடியுமான்னு கேட்டாராம்.

அந்த மாதிரி இருக்கு நீங்க கேட்குறது. ஏஞ்சொல்றேன்னா எனக்கு அவ்வளவு வேலைகள் ஒரே நேரத்துல....”

”ஐயா அந்த பாட்டைத் திரும்பி ஒருக்கா சொல்லுங்க, நான் எழுதிக்கிறேன்...”

“இருக்குற வேலைகள்ல இப்ப இது வேறயா? தட்சிணையோட போக மாட்டீங்க போல இருக்கு?”

“இதான வேண்டாமுங்றது?! தட்சிணை கேட்டவனுக்கு கல்கண்டு தின்னா இனிக்கும்ன்னு சொல்வீங்க. அதைக் கேட்டுட்டு சரி கொடுங்க தின்னு பாக்குறேன்னு சொல்றது தப்பா? தப்பா??”

“யெப்பா சரி, நான் அந்த பாட்டையே சொல்லிடுறேன்.....”

இப்படி எதுக்கும் இலக்கியச் சுவையோட நயம்மிக்க பாடல்களையும் துணுக்குகளையும் அள்ளி வீசுவாருங்க தலைவரு. இந்த நேரத்துல எனக்கு அவர் சொன்ன இன்னொரு பாடலும் அரைகுறையா நினைவுக்கு வருதுங்க...

சொல்லாமற் செய்யும் பெரியார் பலா,
சொல்லிச் செய்யும் சிறியர் மா,
சொல்லியும் செய்யாக் கயவர் பாதிரி
............

ஆமாங்க, பூக்காமலே காய்ப்பது பலா மரம். அதைப் போல சொல்லாமலே உணர்ந்து தன் கடமையைச் செய்பவர்கள் பலா மரம் மாதிரி உத்தமர்களாம். பூத்துக் காய்ப்பது மாமரம். அதைப் போல சொல்லிச் செய்பவர் மத்திமர். பூத்தும் காய்க்காத பாதிரியைப் போல, எடுத்துச் சொல்லியும் உணராதவர்கள் கயவர்கள்... இப்படிப் போகுதுங்க அந்த ஒளவையாரோட பாடல்.

இப்ப எதுக்கு இந்த பாடலைச் சொல்றேன்னு நீங்க கேட்கலாம். விசயம் இருக்குது இராசா, விசயம் இருக்குது! விழாவுல நாலஞ்சி இளவட்டங்கள் எனக்குப் பின்னாடி உட்கார்ந்து இருந்தாங்க. அரங்கத்துல கடைசிப் பகுதியிலதாங்க நமக்கு இருக்கை கிடைச்சது.... அவ்வ்வ்... அதைவிடுங்க அது ஒரு அற்பமான விசயம். பெரிய பற்றியத்தைப் பாக்குலாம் இப்ப.

இந்த இளவட்டங்க அமைதின்னா அமைதி அப்படி ஒரு அமைதி. பெரியவங்க வந்து அவங்களை முன்வரிசைல உட்காரச் சொல்றாங்க, அதுக்கு இவங்க மறுப்புச் சொல்லி அனுப்புறாங்க.... இதுக்கிடையில பேச்சுவாக்குல எதோ அவங்களுக்குள்ளார பேசிகிட்டது காதுல விழுந்தது.... இங்கொக்க மக்கா, உலகத்துல உருப்படியா இருக்குற சில பல தமிழ் இலக்கிய வலைதளங்களை உண்டு பண்ணி, பராமரிக்கிறதே இவங்கதானாமுங்க... தூக்கிவாரிப் போட்டுச்சு....

சப்பையா, அதுவும் ஒத்தைப் பைசா செலவு செய்யாம ஒரு வலைப்பூவை வெச்சிகிட்டு, பழமைபேசின்னு கொட்டை எழுத்துல எழுதிக் கழுத்துல தொங்கவுட்டுட்டு இருக்குற நான் எங்கே? நேரங்காலம், பொருள் செலவழிச்சு செயலாத்துற, ஒன்னுமே தெரியாத புள்ளைப்பூச்சிங்க மாதிரி அமைதியா இருக்குற இவங்க எங்கே? எனக்கு மனசாட்சி உறுத்த ஆரம்பிச்சது... இன்னமுந்தான் உறுத்திகிட்டு இருக்கு....

ஆமாங்க, எந்தவிதமான பிரதிபலன், விளம்பரத்தையும் எதிர்பார்க்காம தமிழுக்காக, தமிழர் நலனுக்காக, அந்த பலா மரம் மாதிரி தானே மனமுவந்து காய்க்கிற செளந்தர பாண்டியன்(sjeyabal@gmail.com), விஜய் மணிவேல்(vijay.manivel@gmail.com), பொற்செழியன், உமேசு ஆகிய இளைஞர்கள்தாங்க அந்த இளவட்டங்கள். அவங்க செய்த, செய்துகிட்டு இருக்குற பணிகள் குறிச்சு பெரியவங்க சொல்லக் கேள்விப்பட்டு வெகு ஆச்சரியத்துல மூழ்கிப் போனேன்.

தமிழ்ச் சங்கப் பேரவைக்கு இந்த மாதிரி இளைஞர்கள் மேலும் மேலும் போயி வலுச் சேர்த்து, பெருமை சேர்க்கணும். அப்படிச் சேர்க்கிற பட்சத்துல, தமிழ்ச் சங்கம் என்பது ஒரு மனமகிழ் மன்றம்ங்ற தவறான புரிதல், தானாவே மரித்துப் போகும்ங்றது சொல்லித் தெரியணுமா என்ன?!

(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

7/17/2009

தமிழ்நாட்டு கலைஞர்கள்!

(படத்தைச் சொடுக்கி, பெரிய வடிவில் பார்த்துப் படிக்கவும்) படைப்பு: செல்வகுமார் அவர்கள்

(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

7/16/2009

மல்லிகையே மல்லிகையே...

//Pazamai pesi the latest blog is bit misleading to what Anuradha sriram was really trying to say;


Since we have a legacy of our top stars such as people such as TMS, SPB, Jesudoss, Janaki susheela.. are from non tamil origins, anuradhas attack is really and only on the singers who mess up the tamil words and language while singing which I term it as "kadithu kodharal" . I am a fan of udit narayan he has lots of great hits and some tamil hits as well, but can never approve his bad tamil pronounications and it hurts to hear his tamil numbers.


Please get this clarification right in your blog that the attack is not on non-tamilians but on people who can not pronounce tamil properly yet patronized by our leading music directors such as ARR and Harris jeyaraj//

//fetna2009 said...
Yenga,

The young girl and Raja have Telugu as their languages but have roots in TamilNadu. Let us not overstate the facts!!!!!
//

7/15/2009

அண்ணன் அப்துல்லாவுக்கு சூடான மடல்!

அண்ணே,

வணக்கம்! என்ன? எங்க அக்கா, எங்க அக்கான்னு நெம்பத்தான் பாசத்தைப் பொழியுறீங்க? வாங்கடீ வாங்க, நீங்களே வந்து மாட்டிகிட்டீங்க இப்ப! உங்க அக்காவுக்கு தமிழே வராதா? என்னவோ எங்களுக்கு எல்லாம் பேசத்தெரியாத மாதிரி வார்த்தைக்கு வார்த்தை நுனி நாக்குல பேசித்தள்ளுறாங்க? நல்லாவே இல்லை!

//எம்.எம்.அப்துல்லா said...
ஆமா..எங்க அனுராதாக்கா எல்லாரையும் ஆட வச்சுச்சுன்னு கேட்டேன்..இன்னும் பதிலே சொல்லல நீங்க.
//


சரி, யாரோ ஒருத்தர் தமிழ்ல பேசலாமேன்னு குரல் குடுத்துட்டாரு. அதுக்கு ஏன் கோபம் வருது? வந்தாலும் பரவாயில்லை, எதிர்மறையா எங்ககிட்ட கேள்வி கேக்குறாங்க??


சென்னையில யாருமே தமிழ்ப் பாட்டுக்காரங்களுக்கு வாய்ப்பு தர்றதில்லையாம்... புலவருங்க யாரும் ஒன்னுமே சொல்லுறதில்லையாம்.... நீங்க தமிழ்ல பேசிப் பாடினா, அவங்க ஏன் வெளியூரு ஆட்களைக் கூட்டியாந்து பாட வைக்கணும்? சரி, அது ஊர்ப் பிரச்சினை... அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்?

அமெரிக்காவுலயே பிறந்து வளர்ந்த ஆந்திரக் குழந்தை அழகா வந்து தமிழ்ல பேசிப் பாடுச்சே? அமெரிக்காவுலயே இருக்குற, நிகழ்ச்சியை வழங்கின தெலுங்கு இசை இயக்குனர் கான்சாசு இராசா தமிழ்ல உச்சரிப்புப் பிழை இல்லாமப் பேசி பாடினாரே? அவங்களும் பார்த்துகிட்டுதான இருந்தாங்க?? தமிழை ஒழிக்கிறவங்க வெளியூர் ஆட்கள் கிடையாது அண்ணே, நம்ம கூட இருக்குறவங்கதான். எருமைக்குப் புல் புடுங்கலாம்! பெருமைக்குப் புல புடுங்கலாமாண்ணே?

G.U.போப், கால்டுவெல், வீரமாமுனிவர், பெர்சிவல், எல்லிஸ், தாவூத் அலி, ரேனியஜ், கிராப், ஆர்டன் இந்த மாதிரி ஆட்கள் அந்த காலத்துல தமிழைக் காப்பாற்றினாங்க. அதுபோல அமெரிக்காவுலயும், ஐரோப்பாவுலயும் இருக்குற புலம் பெயர்ந்த மக்கள்தான் எதிர்வரும் காலத்துலயும் தமிழைக் காப்பாத்துவாங்க போலத் தெரியுது....

மத்தபடி நல்லாவே பாடினாங்க, மக்களும் ஆடினாங்க. நிச்சயம் உங்களை நாங்க எப்பவும் வரவேற்போம்... தங்கமனசுக்காரரை வரவேற்கறதைத் தவிர வேற எங்களுக்கு என்ன வேலை??



சரி, சரி, அந்தச் சிறுமி எப்படி பாடுறாங்கன்னு சித்த பாத்துட்டு போங்க....





(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)



//Pazamai pesi the latest blog is bit misleading to what Anuradha sriram was really trying to say;


Since we have a legacy of our top stars such as people such as TMS, SPB, Jesudoss, Janaki susheela.. are from non tamil origins, anuradhas attack is really and only on the singers who mess up the tamil words and language while singing which I term it as "kadithu kodharal" . I am a fan of udit narayan he has lots of great hits and some tamil hits as well, but can never approve his bad tamil pronounications and it hurts to hear his tamil numbers.


Please get this clarification right in your blog that the attack is not on non-tamilians but on people who can not pronounce tamil properly yet patronized by our leading music directors such as ARR and Harris jeyaraj//

//fetna2009 said...
Yenga,

The young girl and Raja have Telugu as their languages but have roots in TamilNadu. Let us not overstate the facts!!!!!
//

அரங்கம் மெய்சிலிர்த்த தெருக்கூத்து!




(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

Fetna .. தமிழ்த் திருவிழாச் சிதறல்கள் - 4

கடுமையான வேலைப் பளு! அதான் இடுகை இடுறதுல தொய்வு.... சரி, நினைவுக்கு வந்ததுல ஒன்னு ரெண்டை சொல்லிட்டுப் போலாம்ன்னு....இஃகிஃகி!

வாழ்க்கையில சோதனையான நேரம் வரும்போது, கீழ கீழ போறமேன்னு நினைச்சு வருத்தப்படக்கூடாது. ஆழ்ந்து போகிறோம், அதாவது வாழ்க்கையில் ஆழ்ந்து போகிறோம், வாழ்க்கையின் மறுபக்கத்தையும் கண்டு கொண்டிருக்கிறோம், அதுவே சாதனைக்கு வழிகாட்டுதலாக அமையப் போகிறதுன்னு நினைக்கணும். (கவிஞர் செயபாசுகர்)


ஒருத்தன், அய், என்னோட கோவணம் கோபுரத்துல பறக்குது, அய் என்னோட கோவணம் கோபுரத்துல பறக்குதுன்னு ஊரைக் கூட்டிச் சொல்லி மகிழ்ந்தானாம் அவன் அம்மணமா நிக்கிறது தெரியாம! விழா மலரில் பாவேந்தர் தெறித்த நறுக்குகளின் ஒன்றான இது இடம் பெற்றுள்ளது.

சரி, இடுகைக்கு வந்தீங்க, இந்த படங்களையும் பார்த்திட்டுப் போங்க மக்கா!

(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

7/13/2009

Fetna .. தமிழ்த் திருவிழாச் சிதறல்கள் - 3

1950-60களில் இந்தியாவுக்கு இரண்டு மொழியே போதும்ன்னு வெகு பிரமாதமா பிரச்சாரம் நடந்திட்டு இருந்துச்சாம். அப்பத்தான் பேரறிஞர் அண்ணா சட்டசபைத் தேர்தல்ல தோத்துப்போய் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகிப் போயிருந்தாராம். மாநில மொழிகள் தேவையில்லைன்னு வாதம் வெற்றிய நோக்கிப் போயிட்டு இருந்துச்சாம்.

காரணம் மத்த மாநில உறுப்பினர்கள் அந்த வாதத்தை எதிர்த்து பேச முடியாததுதான். அண்ணா எழுந்து அது எப்படின்னு கேட்டாராம். அதுக்கு வடவர்கள் சொன்னது, அதிக மக்களால தேர்ந்தெடுக்கப்பட்டவர் சட்டசபை உறுப்பினர். அதிக உறுப்பினர்களால தேர்வு செய்யப்படுபவர் முதல்வர்.


அதே போல பெரும்பான்மை மக்களால தேர்வு செய்யப்படுபவர் பாராளுமன்ற உறுப்பினர். அதில் அதிக உறுப்பினர்களால தேர்வு செய்யப்படுபவர் பிரதமர். நாடு தழுவிய அதிக உறுப்பினர்களால தேர்வு செய்யப்படுபவர் குடியரசுத் தலைவர். அதே போல நாடு தழுவிய அளவுல அதிக மக்களால பேசப்படும் மொழி நாட்டின் மொழி. அதுவே எல்லா நிலையிலும் இருக்கணும்ன்னு வாதம்.

மத்த மத்த மாநில உறுப்பினர்கள் செய்வதறியாம முழிச்சிகினு இருந்தாங்களாம். நான் அந்த நாட்டுல படிச்சவன், இங்க இதைச் செஞ்சவன்னு அறிமுகம் செய்யுறவங்க மத்தியில நம்மாள் தன்னை அறிமுகம் செய்துகிட்டாராம், I am the representative of the man in STREETன்னு.

அறிமுகம் செய்துகிட்டுக் கேட்டாராம், நாட்டுல எந்த பறவைங்க அதிக எண்ணிக்கையில இருக்குன்னு. பதில் வந்துச்சாம், காக்கான்னு. இவர் கேட்டாராம், அப்புறம் ஏன் காக்காயை தேசியப் பறவையா வைக்காம மயிலத் தேசியப் பறவையா வெச்சு இருக்கீங்கன்னு. அப்புறம் என்ன, பஞ்சாப்காரன், ஆந்திராக்காரன் அவன் இவன் எல்லாம் புத்துயிர் கிடைச்சு ஆர்ப்பரிச்சு, இந்த ஒத்தையாளோட பேச்சால மசோதா தோத்திடுச்சாம்.

தமிழ்த் திருவிழாவில அண்ணா அவர்களோடப் பணியாற்றிய VIT பல்கலைக் கழக வேந்தர் கோ.விசுவநாதன் அவர்கள் சொன்னதுதாங்க இது. ஆகவே அதிக எண்ணிக்கையால் கவரப்படுவதெல்லாம் சிறப்பல்ல... சிறப்பானதை மட்டுமே அதிக எண்ணிக்கையால் கவர வைக்கப்படும் கடமை நம் அனைவருக்கும் உண்டு!


(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

7/12/2009

முதல் பத்து(top ten)!

வணக்கம் மக்களே வணக்கம்! மானாவாரித் தோட்டம், வாய்க்காத் தோட்டம்ன்னு ரெண்டு தோட்டங்க எங்க அப்பிச்சிக்கு. தை மாசத்துல வாய்க்காத் தோட்டத்து வேலை முசுவா இருக்கும். அது அறுவடை, இது களத்து மேட்டுல இருக்கு, அது புடுங்க ஆள் கிடைக்க மாட்டேங்குதுன்னு ஒரே பரபரப்பு, பரபரப்பு...

சரி அதெல்லாம் ஒரு வழியா ஓர்சலுக்கு வந்தாச்சுன்னு சிறு மூச்சு பெரு மூச்சு வுடுறதுக்குள்ள, அந்தப் பொறத்துல மறு வேலை ஆரமிச்சிரும். ஆமாங்க, மானாவாரி மேட்டாங் காட்டுல அறுவடை வந்துரும். அதாங்க மானம் பார்த்த பூமி, அதைத்தான் மானாவாரின்னுஞ் சொல்றது. கொத்தமல்லி புடுங்கோணும், கடலைக் காய் புடுங்கோணும், கோதுமை அடிக்கோணும்ன்னு மறுக்காவும் பரபரப்பு....


இப்பிடி ரெண்டு பொறத்தாலயும் எல்லா வேலையும் முடிஞ்சதுக்கப்புறம் அப்பாடன்னு ஆசுவாசப்படுத்துறதுக்குள்ள சித்திரை மாசமே வந்துரும். உப்புசம் வேற பாடாப்படுத்தும். சித்திரைக் கழுவுக்கு பழனிமலை போயிட்டு, சண்முக நதியில குளிச்சிட்டு வருவோம். இந்த வேலையெல்லாம் முடிஞ்சவுட்டுத்தான், ஆற அமர ஒக்காந்து நடந்து முடிஞ்சதையெல்லாம் நெனைச்சுப் பாக்குறது உண்டு.

அந்த மாதர, வட அமெரிக்கத் தமிழ்த் திருவிழாதான் முடிஞ்சு போச்சே? வாங்க, நெனைச்சுப் பாத்து முதல்பத்து(top ten) போடுலாம்... அட, சும்மா வந்து உங்க கருத்துகளையுஞ் சொல்ட்டுப் போங்க மக்கா... இஃகிஃகி!

நிறைகள்

(என் பார்வையில் விழா வெற்றி பெற்றதின் காரணிகள்)

10. வலையகம் ( web portal)

09. விழாமலர் (souvenir handbook)

08. காலம் (date & time)

07. இடம் (venue)

06. நிகழ்ச்சிகள் (events)

05. அணுக்கம் (nearness)

04. நிமித்தம் (cause)

03. உணவு (food)

02. விருந்தோம்பல் (hospitality)

01. மனப்பக்குவம்(maturity)

குறைகள்

10. -------------------------

09. ------------

08. சிறிய அரங்கம் (more audience?)

07. நேரடி ஒளிபரப்பு (live telecast)

06. தகவல் தொடர்பு (media)

05. குழந்தைகளை ஆற்றுப்படுத்த ஒரு அறை (room for kids)

04. செய்தி (setting expectation)

03. இலக்கியம், பண்பாட்டுக்கான முன்னுரிமை (promote culture)

02. மரபு போற்றுதலில் மேன்மை (improvement in maintaining protocol)

01. சமச்சீர் முக்கியத்துவம்(balanced trait)

இதெல்லாம் நெம்ப அதிகமா இல்லை? எழுபத்தி அஞ்சு வெள்ளி குடுத்து மூனு நாளும் நல்லா ஒக்காந்து எல்லாம் குதூகலமாக் கொண்டாடிட்டு, அது நல்லா இருக்கு, அது நொல்லை, இது நொல்லைன்னு மேதாவித்தனமா செய்யுறேன்னும், படுவா ராசுகோலுன்னும் நீங்க வையலாம்... ஆனாலும், இதழியல் அறம்ன்னு ஒன்னு இருக்கு பாருங்க?! அஃகஃகா...

மக்கா, விழா வளாகத்துல நீங்களும் இருந்திருந்தீங்கன்னா, உங்க கருத்தையும் சொல்ட்டு போங்க சித்த... கனெக்டிக்கெட்காரவுங்க இப்பவே கதி கலங்கிப் போயிருப்பாங்க... நாம சொல்லுற பழமையிக அவுங்களுக்கு ஒதவியா இருக்கும் பாருங்க.... இஃகிஃகி!

(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

7/11/2009

திரும்பிப் பார்த்து மகிழ்வதில் இருக்கும் சுகமே சுகம்!


கடுமையாக உழைத்து ஒன்றை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நிகழ்ச்சி எதுவானாலும் சரி, அதைத் திரும்பப் பார்க்கும் போது கிடைக்கிற மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அது உடன்பிறந்தோரின் திருமணமாக இருக்கலாம், ஒரு விளையாட்டு நிகழ்ச்சியாக இருக்கலாம், ஒரு சுற்றுலாப் பயணமாக இருக்கலாம், எத்வாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அந்த வகையில அட்லாண்டாவில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 22வது ஆண்டு தமிழ்த் திருவிழா என்பது என்னுடைய வாழ்க்கையில மறக்க முடியாத அந்த மூன்று நாட்கள். அதுவும் ஒவ்வொரு மணித் துளியையும் இதழியலாளனாக, அவதானித்து, உள்வாங்கி உலகெங்கும் வியாபித்திருக்கிற வாசகர்களுக்கு அளித்ததென்பது ஒரு நல்ல அனுபவம்.

பார்வையாளனாக இருந்து, நடந்தவற்றை கண்டு எழுதிய எனக்கே இவ்வளவு பெருமிதம் என்றால், விழாவை நல்லதொரு விருந்தோம்பலுடன் ஒருங்கிணைத்து நடத்தி முடித்தவர்களுக்கு எப்படி இருக்கும்? அவர்கள் சொன்னதைச் செய்து காட்டியவர்கள், இதோ அதற்கு இந்தக் காணொளியே சான்று!



நிழல்படங்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்-1:


(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

7/10/2009

Fetna .. தமிழ்த் திருவிழா.... அரங்கம் அசந்த காட்சிகள்!





(விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச்(label) சுட்டியைச் சொடுக்கவும்!)

Fetna .. தமிழ்த் திருவிழா.... 12 வயது அக்சயா!





(விழா பற்றின மற்றைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் (label) சுட்டியைச் சொடுக்கவும்!)

7/09/2009

Fetna .. தமிழ்த் திருவிழா....நாஞ்சில் பீற்றர் ஐயாவின் புதுமை!

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்ச ளழகும் அழகல்ல - நெஞ்சகத்து
நல்லம்யா மென்னும் நடுவு நிலைமையாற்
கல்வி யழகே யழகு!

அறிவுடையோன் வழி அரசு செல்லும்! இது பெரியவர்கள் சொன்ன மொழி. அறிவைப் பெறுவதற்கான வழிகள் இரண்டு. ஒன்று அனுபவத்தின் வாயிலாகப் பெறும் அறிவு. மற்றொன்று அறிவுள்ள சான்றோர்கள் எழுதி வைத்துள்ள நூல்களைக் கற்றுப் பெறும் அறிவு.

அனுபவ அறிவு என்பது நடப்புக்கால பற்றியங்களையும், திறத்தையும் அடைவதில் முதன்மையாக இருக்கும். ஆனால், மூலம், ஆதி என்பனவற்றைக் கற்றுக் கொள்ள நூல்கள் இன்றியமையாதது. இன்றைக்கு நம்முள் எத்தனை பேர் நூல்களை வாசிக்கிறோம்? அப்படியே வாசித்தாலும், இலக்கிய நூல்களையும் அறிவு சார்ந்த நூல்களையும் தவிர இன்னபிற நூல்களையே வாசிக்க நேரிடுகிறது.

’உன் நண்பன் யார் என்று சொல்! நீ யார் என்று சொல்கிறேன்!!’ என்பது பழமொழி! இன்றைக்கு உன் நண்பன் என்ன நிகழ்ச்சி நடத்துகிறான் என்று சொல்! நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்கிறார்கள் படைப்பாளிகள். ’வணிக ரீதியாக வெற்றி பெறுவதாகவும், பிரபலம் அடையக் கூடியதாகவும் படைப்புகள் படைப்பவனின் நண்பன் நீ என்றால், நீயும் பிரபலமானவனே!!’ என்கிற மனோபாவம் சமூகத்தில் மேலோங்கி இருப்பதைக் காண்கிறோம்.

இந்தச் சூழலில்தான் அன்பு ஐயா நாஞ்சில் பீற்றர் அவர்கள், தமிழனைத் தட்டி எழுப்புகிற வகையிலே, இலக்கிய ஞானம் பெறுகிற வகையிலே, பண்பாடு கற்றுத் தேறுவதை ஊக்குவிக்கும் வகையிலே, புதுமையாக, பல்லூடக விநாடி வினா நிகழ்ச்சியை நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

பின்னணியில் தமிழிசை தவழ்ந்து வர, திரையில் பலதரப்பட்ட சுவாரசியமிக்க வினாக்கள் பளிச்சிட நோக்கர்களைக் கவரும் வகையில் பல்லூடக(multi-media) நிகழ்ச்சியாக இதை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.



வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மாநாட்டிலே அவர் நடத்திய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எமக்குக் கிட்டியது. இலக்கிய வரலாறு நூலை வாசித்து பல பற்றியங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். அமரர் முனைவர் ஐயா திருமுருகன் அவர்கள் படைப்பில் உருவான குறுவட்டுகள் மூன்றை இன்னமும் கூட கேட்டு முத்தமிழையும் கற்கும் பேறு பெற்றவனானேன்.

தலைவர் மட்டுமே அணிக்கு தலைமை தாங்குவது என்றில்லாமல், அணியில் இருந்த 12 பேரையும் பல தரப்பட்ட நூல்களை வாசிக்கச் செய்து, உற்சாகமூட்டினார் எங்கள் தலைவர் குழந்தைவேல் இராமசாமி அவர்கள். அவருடன் இணைந்து செயலாற்றியது ஒரு சுவையான அனுபவம். ஆங்கிலத்தில் win - win situtation என்பார்களே அதைப் போல, அணியினரின் வாசிப்புத் திறனை முடுக்கிவிட்டதில் அவருக்கும் வெற்றி! வாசித்த எங்களுக்கும் வெற்றி!! நிகழ்ச்சியைக் கண்டு களித்த நோக்கர்களுக்கும் வெற்றி!!!

அரங்கில் அமர்ந்திருந்த அத்துனை பேரும் ஒவ்வொரு வினாவின் போதும், ஆவலுடன் தன்னையும் அதில் ஆழ்த்திப் பரவசமடைந்ததைக் காண முடிந்தது. பழையதைக் கழித்து விட்டு, மாறுபட்டதை அறிமுகப்படுத்திப் புதுமை என்று சொல்லி வணிகம் வெற்றி பெறுகிற இக்கால கட்டத்தில், முன்னோர் விட்டுச் சென்றதை உள்ளதை உள்ளபடியே மேம்பட்ட பாங்கில் காண்பிக்கிற யுக்தியில் நாஞ்சில் பீற்றர் ஐயா ஒளிர்கிறார் என்றுச் சொன்னால் அது மிகையாகாது.

பல்வேறு துறைகளிலும் பல மாற்றங்கள் வந்து குவிந்துள்ள போதிலும், கலை, பண்பாடு காக்கும் தகுதியுள்ளவை நிலைத்து நிற்கக் கூடியவையே. அழிந்து போனது போலக் காணப்பட்டாலும், அவை மீண்டும் வேறொரு ரூபத்தில் புதுயுகம் எடுக்கத்தான் செய்யும்.

தனிமனிதப் போக்கைக் கட்டுடைக்கவும், பொதுப்பண்பு காத்திடவும், முற்போக்கு சிந்தனைகள் பெருகிப் பேரின்பம் பொங்கிட நாஞ்சில் பீற்றர் ஐயாவின் நிகழ்ச்சிகள் போன்று நிறைய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவது, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் சீரிய கடமை! பேரவை அக்கடமையைச் செய்யுமா? செய்ய வேண்டுமாயின், பேரவைக்கு வலு சேர்க்க வேண்டிய கட்டாயம் ந்ம் அனைவருக்கும் உண்டு அன்றோ?!


(விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச்(label) சுட்டியைச் சொடுக்கவும்!)

7/08/2009

Fetna .. தமிழ்த் திருவிழா.... மேலதிகப் படங்கள்!




பழமைபேசி கவிதை எழுதுறாருங்கோய்...






குடுகுடுப்பையார் விருப்பம்!


(விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச்(label) சுட்டியைச் சொடுக்கவும்!)

Fetna... தமிழ் விழா மலர்! ஒரு கண்ணோட்டம்!!

வணக்கம்! கருத்துச் செறிவான ஆக்கங்களைக் கொண்டு, கலை, பண்பாடு, கலாசாரம் போற்றக்கூடிய வகையில் ஒரு விழா மலரைப் படைப்பதென்பது எளிதான காரியமன்று! வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 22வது தமிழ் விழா மலருக்குப் பின்னால் கடும் உழைப்பு தென்படுகிறது. செறிவான கட்டுரைகள் நிறைய இடம் பெற்றிருக்கிறது.

வடிவமைப்பு மற்றும் தாளின் தரம் என்பன உச்சத்தில் இருக்கும்படியாகப் படைத்து இருக்கிறார்கள். விழா மலரின் ஆசிரியர், நண்பர் பா. சுந்தரவடிவேல் மற்றும் மலர்க் குழுவினருக்கு வாழ்த்துகளும், நன்றியும்! தமிழர்கள் நன்கொடை கொடுத்தாவது வாங்கிப் படிக்க வேண்டிய நூல் அது!

விமர்சனம் என்று, மேதாவித்தனமாக எதையாவது சொல்லியாக வேண்டுமே? ஆகவே, நாமும் நமது பங்குக்கு மனதில் தோன்றியதைச் சொல்லி வைப்போம்! விழாக் குழுவினர் அதை ஒரு எளியவனின் கருத்தாக மட்டுமே எடுத்துக் கொள்வார்கள் எனப் பெரிதும் நம்புகிறேன்.

செம்மொழியாம் எம்தமிழ் எந்த உணர்வையும், உள்ளது உள்ளபடியே பிரதிபலிப்பதில் உச்சமொழி என்று நாம் அடிக்கடி குறிப்பிடுவது உண்டு. அவ்வகையிலே, முனைப்பு(proactive) மற்றும் தீவிரம்(aggressive) என்ற இரு சொற்களை நாம் கவனமாக அலசியாக வேண்டும்.

முனைப்பு என்றால், எதோ ஒன்றில் முனைந்து செயல்படுவது. தீவிரம் என்றால், எதோ ஒன்றில் வீரியத்துடன் செயல்படுவது. இரண்டுக்கும் இடையில் மெல்லிய கண்களுக்கு புலப்படாத ஒரு உளவியல்க் கீற்றுதான் மாறுபாட்டை உண்டு செய்கிறது.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், தமிழ்த் திருவிழா குறித்துக் குறிப்பிடலாம். தமிழகத்திலே, தமிழனின் கட்டமைப்பு வலுவிழந்து வரும் இக்கால கட்டத்திலே, புலம்பெயர்ந்த மண்ணில் ஒரு இனக் கட்டமைப்புக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதென்பது ஒரு வருத்தமான உண்மை.

அவ்வேளையில், வட அமெரிக்கத் தமிழ்ப் பேரவையானது நேர்த்தியுடன் ஒரு பெரும் விழாவை நடத்தி முடித்துள்ளது, அதுவும் ஆக்கப்பூர்வமான முறையில்! அதன் தாக்கத்தில், ஒரு விழிப்புணர்வை உண்டு செய்யும் நோக்கில், தானாகவே தன் உழைப்பில் ஆற்றும் பணிகள் முனைப்பானது என்று சொல்லலாம்.

அதுவே, மக்களை வற்புறுத்துவதும், அவர்களைத் தொடர்பு கொண்டு அங்கலாய்ப்பதும், திணிப்பதும் அவர்களிடத்தே ஒருவிதமான சலிப்பை உண்டு செய்யக்கூடும். சில வேளைகளில், ஆர்வத்தின் மிகுதியால் எவரும் அத்தகைய செயல்களைச் செய்வது உண்டு. ஆகவேதான் குறிப்பிட்டேன், சிறு உளவியல்க் கீற்றுதான் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்று.

கிராமத்திலே மிக அழகாகச் சொல்வார்கள் நம் முன்னோர், போக்குல விட்டுத்தான் திருப்பணும்டா கண்ணூ என்று! அவர்கள் அனுபவித்துச் சொன்ன சொலவடை அது!! அது போல, ஒரு சிலவற்றை காலமறிந்து செயல்படுத்த வேண்டும். புரதம், மாவு, நார்ச்சத்து உள்ளிட்ட சமச்சீர் உணவு போல, பலதரப்பட்ட பற்றியங்களும் காலத்திற்கேற்ப சமச்சீராகத் தருவது இன்றியமையாதது. எது ஒன்று அதிகமாயினும், அது அதற்கான விளைவுகளை ஏற்படுத்திவிடும்! குறையத் தருவதும் நலம் பயக்காது!!

அந்த மனநிலையோடு, மலரில் எனக்குப் பிடித்த ஒரு கட்டுரை; அட்லாண்டா உதயகுமார் அவர்கள் தொகுத்தளித்த தொல்காப்பியப் பாடல் அடங்கிய கட்டுரையின் சாராம்சம் உங்கள் கவனத்திற்கு:

நூலின் குற்றங்கள் எனக் குறிப்பிட்டு இருக்கிறார் ஆசிரியர். ஆனால், அது இடும் இடுகைகளுக்கும் கூட பொருந்தக் கூடியதுதான். இதோ தொல்காப்பியரின் வழிகாட்டுதல்:


சிதைவெனப் படுபவை வசையற நாடில்
கூறியது கூறல், மாறுகொளக் கூறல்,
குன்றக் கூறல், மிகைபடக் கூறல்,
பொருள் இல மொழிதல், மயங்கக் கூறல்,
கேட்போர்க் கின்னா யாப்பிற் றாதல்,
பழித்த மொழியான் இழுக்கக் கூறல்,
நன்னா நொருபொருள் கருதிக் கூறல்,
என்ன வகையினும் மனங்கோ ளின்மை
அன்ன பிறவும் அவற்றுவிரி யாகும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர் சொல்லி வைத்தது இன்றளவும் சரியான வழிமுறையாக இருப்பதைத்தான் இந்த செய்யுளில் காண்கிறோம். நூலின் குற்றங்கள் என அவர் சொல்வது யாதெனில்,

1. மீண்டும் மீண்டும் ஒன்றைத் திரும்பச் சொல்தல் (Repetition)

2. முன்னுக்குப் பின் முரணாகச் சொல்தல் (Contradiction)

3. அரை குறையாகச் சொல்தல் (Reduction)

4. மிதமிஞ்சி ஏற்றிச் சொல்தல் (Exaggeration)

5. உள்ளீடின்றிச் சொல்தல் (No Substance)

6. குழப்புதல் (மயக்கம், Confusion)

7. சோர்வுறச் சொல்தல் (Unpleasant)

8. காழ்ப்புடன் சொல்தல் (Abusive)

9. விருப்பு வெறுப்பு ஏற்றிச் சொல்தல் (Prejudice)

10. ஒவ்வா நடையில் சொல்தல் (Unimpressive)


மீண்டும் ஒருமுறை மலர்க் குழுவினருக்கு வாழ்த்துகளும் நன்றியும்! சுவாரசியம் மிக்க விழா மலர் கண்டிப்பாக பாராட்டிய வேண்டிய, அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய இதழ்!!


(விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச்(label) சுட்டியைச் சொடுக்கவும்!)

Fetna .. தமிழ்த் திருவிழா.... பெட்டிக் கடை!

அனைவரையும் கவர்ந்த பெட்டிக்கடை!
கண்டாங்கியுந்தான், இஃகிஃகி!





(விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச்(label) சுட்டியைச் சொடுக்கவும்!)


Fetna .. தமிழ்த் திருவிழா.... நண்ணலுரை!

முத்தமிழ் மேல் நான் கொண்ட ஆர்வம் தன்னை,
முதலீடாய் வைத்து, வினா-விடையில் முதல் வர
முடிவு செய்து,"வெகுளியாய்" கலந்து கொண்ட என்னை,

ஆதரித்து,அரவணைத்து ,என் "அச்சத்தை" போக்கி- ஒரு
குழந்தையை போல் எனை அன்புடன் வழிநடத்திய அணித் தலைவர்
'குழந்தை' ராமசாமி அய்யாவையும்,

ஊக்கமளித்து,உற்சாகாப்படுத்தி - உயரிய எண்ணங்களையும்
உன்னத அனுபவங்களயும் பகிர்ந்து கொண்ட என் அணி
உறுப்பினர்களயும் கண்டு "வியப்பு" கொண்டேன்.

மேடையில் பேசிய பேச்சாளர்களின் பேச்சிலும் சரி,
நடனம் ஆடிய நங்கையரின் நடன அசைவிலும் சரி,
"அருவருப்பு" ஏதும் இல்லாதது கண்டு "உவகை" உற்றேன்.

அற்புதமாய் நடித்து காட்டப்பட்ட ஈழ அவலம்-நம்
அனைவரின் மனதுக்குள் "அழுகையை" வரவழைத்தாலும் ,கவிஞர்களின்
நகைச்சுவை பேச்சு இடைஇடையே நம்மை "நகைக்கவும்" வைத்தது.

இப்படி எண் சுவைகளையும்,
அல்ல அல்ல எட்டு "மெய்ப்பாடுகள்"
அனைத்தயும் ஒருங்கே வெளிப்படுத்த
ஏதுவாக அமைந்த ஃபெட்னா விழாவுக்கும், இதை ஏற்படுத்திய
தமிழ் ஆர்வலர்களுக்கும் நண்ணுவது நானாவேன்!!!!


இப்படிக்கு
செந்தாமரை பிரபாகர்,
எழில் தமிழ் பண்பாட்டு குழு,
சார்லத், வட கரோலினா.

Fetna .. தமிழ்த் திருவிழாச் சிதறல்கள் - 2

வெறும்வெளியில இருந்து
தங்கச் சங்கிலி எடுத்தாரு!
வாயில இருந்து
லிங்கமெல்லாம்
எடுத்தாரு!
மண்டையச் சொரிஞ்சி
அதுல திருநீறு
எடுத்தாரு!


ஒன்னுமில்லாத வீட்ல
இருந்து தங்கப் பொதையல்
எடுத்தாரு!
வெத்துச் சொம்புக்குள்ள
இருந்து புள்ளையாரு
எடுத்தாரு!
உடைக்காத முட்டையில
இருந்து எலுமிச்சம்பழம்
எடுத்தாரு!

உரிக்காத தேங்காயில
மாங்கா கூட
எடுத்தாரு!
அந்த மாங்காக் கொட்டையில
காந்தி நோட்டு
எடுத்தாரு!


அடப் புள்ளையக்

குடுத்துபிட்டு ரூபாநோட்டு
எடுத்தாரு! ஆனா
அவரைப் பிணையில எடுக்க
யாருமில்லையே?
அய்யோபாவம்
அவரைப் பிணையில எடுக்க
யாரும் இல்லையே??



திருக்குவளை இருக்கு! ஆமா,
இருகுவளையா இருக்கு!!


இலக்கிய வட்டச் சொற்பொழிவில் கவிஞர் செயபாசுகரன்.

(விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச்(label) சுட்டியைச் சொடுக்கவும்!)

7/07/2009

Fetna... தமிழ்த் திருவிழா... இது புதுசுங்க!

நண்பர் பதி அவர்களுக்கு நன்றி!

(விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச்(label) சுட்டியைச் சொடுக்கவும்!)

7/06/2009

Fetna தமிழ்த் திருவிழாச் சிதறல்கள் - 1

வணக்கம் மக்களே வணக்கம்! இப்பெல்லாம் ஒக்காந்து எழுத ஆரம்பிச்சாலே, ஒரே செந்தமிழாக் கொட்டுது. கடினப்பட்டு இப்ப பழைய நடைக்கு திரும்பிட்டு இருக்கேன். ஏன்னு கேக்குறீங்களா? ஆமா, கொடுந்தமிழுக்குத் திரும்பாட்டி கடை காத்து வாங்க ஆரம்பிச்சுடுமே?! இஃகிஃகி!

ரெண்டரை நாள் திருவிழாங்க, மொத நாள் 15 மணி நேரம், ரெண்டா நாள் 18 மணி நேரம், மூனா நாள் ஒரு 4 மணி நேரம், ஆக மொத்தம் 37 மணி நேரத் திருவிழால எக்கச் சக்கமான விசயம் கெடைச்சிருக்கு போங்க. இன்னும் ஒரு மாசத்துக்கு சிந்திக்கத் தேவையே இல்லை. குறிப்பைப் பாத்தாச்சுதுன்னா இடுகைதான்.... இஃகிஃகி!!

ஒரு நாள் அந்த திரைப்பட இயக்குனரு வந்து, மே மாசத்துக்குள்ள படம் முடிக்கணுமே, என்னையா செய்துட்டு இருக்கீங்க? இன்னும் பாட்டே எழுதி முடிக்கலை. மே மொதல் வாரத்துல எல்லாப் பாட்டும் பதிஞ்சி, வெளிப்பொறம் போயாணுமே... மே ரெண்டாவது வாரத்துல மொத சுத்துப் பாட்டுகளை எல்லாம் படம் புடிச்சிரோணுமே... இப்படி ’மே’, ‘மே’ன்னு கத்திக் கத்திக் பொறுமை இழந்து வெறியாட்டம் போட்டாராம் அந்த அவன்தான் மனிதன் பட இயக்குனர்.

இதையெல்லாம் பார்த்த கவியரசு கண்ணதாசன், ‘யோவ், அந்த ஆள் என்னையா, மே மேன்னு கத்திகிட்டே இருக்காரு. இந்தா இந்தப் பாட்டை எடுத்துட்டுப் போயி இசை போடுங்க போயி’ன்னு சொல்லி, மே மேன்னே முடியற மாதர எழுத ஆரம்பிச்சாராம். அதாங்க இந்த பாட்டு:

அன்பு நடமாடும் கலை கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னி தமிழ் மன்றமே

மாதவி கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்ட மணியாரமே
பாடும் புது ராகமே

வெள்ளலைக் கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம்தோறும் புகழ் சேர்க்கும் மனமே
தென்னர் குல மன்னனே
இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே

மானிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே
காணும் நிலம் எங்கும் கவி பாடும் மனமே
உலகம் நமதாகுமே
அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே

அன்பு நடமாடும் கலை கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னி தமிழ் மன்றமே

மாதவி கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்ட மணியாரமே
பாடும் புது ராகமே

வெள்ளலைக் கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம்தோறும் புகழ் சேர்க்கும் மனமே
தென்னர் குல மன்னனே
இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே

மானிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே
காணும் நிலம் எங்கும் கவி பாடும் மனமே
உலகம் நமதாகுமே
அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே

உபயம்: கவிஞர் செயபாசுகரன்

நாலா பொறத்துல இருந்தும் காத்து வீசுது. தெக்க இருந்து வீசுறது தென்றல்ன்னு தெரியும். மத்ததெல்லாம்?

வடக்கு - வாடை
தெற்கு - தென்றல்
மேற்கு - கோடை
கிழக்கு - கொண்டல்


உபயம்: கவிப்பேரரசு வைரமுத்து

(விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச்(label) சுட்டியைச் சொடுக்கவும்!)

Fetna....தமிழ்த் திருவிழா...சில காணொளிகள்!



சாந்தி நிலவ வேண்டும் - ராஜஸ்ரீ மற்றும் மாணவர்கள்

இந்துமதி இரமேசு - தமிழிசை - வீணை - என்ன தவம் செய்தனை


(விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச்(label) சுட்டியைச் சொடுக்கவும்!)

Fetna: வட அமெரிக்கத் தமிழ்த் திருவிழா.... ஏனிந்தச் செருக்கு?!

வணக்கம் நண்பர்களே! தமிழனின் தனித்தனமை போற்றும் விருந்தோம்பலுக்கு இலக்கணமான அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தாரே, மூன்று நாட்களும் செறிவான நிகழ்ச்சிகளைத் தந்து அமெரிக்க மண்ணில் தமிழ் வளர்க்கும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தாரே, விருந்தூட்டி, களிப்பூட்டி, தமிழூட்டி, இறுதியில் நோக்கர் கருத்துக்கான படிவமும் கையளித்தீர்கள். அது உங்கள் மாண்பை மெய்ப்பிக்கிறது.

என்றாலும், படிவம் கையளிக்கப்பட்ட இரண்டாம் நாள் நிகழ்ச்சி நடுநிசியையும் கடந்து நிறைவுற்றதின் காரணமாய் எம்மால் படிவத்தை நிரப்பி எமது கருத்துகளைத் தெரிவிக்க இயலவில்லை.

பதிவனே ஆயினும், இதுகாறும் நடுநிலை இதழியலாளனாகவே நான் நிகழ்ச்சிகளைப் பற்றி இடுகைகள் இட்டு வருகிறேன். அதை ஒட்டியே இந்த இடுகையும். நல்ல மனதோடு இதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் சங்கத்தாருக்கு உண்டு என்பதை நானறிவேன்.

தமிழனுக்கு சில பல நேரங்களில் தலைவலியாய் அமைவது, ஆங்கிலத்திலே body language என்று சொல்லப்படுகிற அங்க மொழி. குரல் உயர்த்திப் பேசுவதும், முறையற்ற செய்கைகள் செய்வதுமாய்.... அவற்றை நான் அறவே சங்கத்தின் தன்னார்வத் தொண்டர்களிடத்து கிஞ்சித்தும் காணவில்லை. மகிழ்ச்சி!

வென்றாக வேண்டும் தமிழ்! இது கொடுக்கப்பட்ட தலைப்பு. இதிலே பங்கேற்ற கவிஞர் ஒருவர், தன் உள்ளக் குமுறல்களை வெளியிட்டார். அதிலே நியாயம் இருக்கிறது. ஆனால் ஒருவரை விழா மேடையில் வசை பாடுவதென்பது கவியாகுமா? நியாயம் கேளுங்கள், அநியாயம் தேடிக் கொள்ளாதீர்கள்!! அந்த முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களை அவைக் குறிப்பிலே இருந்து நீக்குவதாக அறிவித்த கவியரங்கின் தலைவர் கவிஞர் செய பாசுகரன் பாராட்டப்பட வேண்டியவர். எனவேதான் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டவற்றை நான் இங்கே குறிப்பிடவில்லை.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி... அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்ததில் அதிக முன்னேற்றம் கண்டவர் ஆண்களா? பெண்களா?? இது நீயா, நானா நிகழ்ச்சிக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு. சுவையாக நேர்த்தியாக நிகழ்ந்த நிகழ்ச்சி! பாராட்டுகள்!! ஆனால், தமிழனுக்கு ஒரு செயலலிதா போதாதா என்கிற வாசகம் இடம் பெற்றது விரும்பத்தக்கது அல்ல. எனக்குத் தெரியும், அது ஒரு tongue slip, விவாதத்தின் இடையே தடுமாற்றத்தில் வந்து விழுந்த வாச்கம் என்பதை நானறிவேன்.

என்றாலும், பெண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிற ஒரு சமூகத்தில் இது போன்ற வாசகங்கள், அதுவும் ஒரு கண்ணியமான மேடையிலே கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை. பெண்களை ஊக்குவியுங்கள், தன்னம்பிக்கையை ஊட்டுவது ந்ம் கடமை. நகரத்திலே, மேட்டுக்குடியிலே பிறழும் நிகழ்வுகளே சமூகம் என்பது சரியாகாது.

இன்னும் கிராமங்களிலே பாராமுகமாய், கண்டுங் காணாததுமாய் பெண்கள் ஏராளம், ஏராளம். ஆகவே பெண்களுக்கென சிறப்பு நிகழ்ச்சிகளை எதிர்வரும் தமிழ் விழாக்களிலே சங்கத்தார் இடம் பெறச் செய்ய வேண்டும். அதற்காக மேலதிக நாட்டியங்களை வைத்து வெறுப்பேற்ற வேண்டாம், சிந்தனை, நம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சிகள் தந்தாக வேண்டும்.

இரண்டாம் நாள் பின்னேர நிகழ்ச்சிகள்.... அமெரிக்க வெள்ளைக்கார மருத்துவர், பெருமாட்டி சாண்டா அவர்கள் ஈழம் பற்றிப் பேசி உரையை நிறைவு செய்கிறார். அரங்கம் எழுந்து நின்று, standing ovation மரியாதை அளிக்கிறது. சென்னையிலே இருந்து வந்த விருந்தினருக்கு எழுந்து நின்று மரியாதை செய்வதில் என்ன தயக்கம்? ஏன், தனக்கு முக்கியத்துவம் கிடைக்காதோ என்ற உறுத்தலா??

பெரியார் மண்ணில் இருந்துதானே Dr. Martin Luther King அவர்களின் மண்ணுக்கு வந்து இருக்கிறீர்கள்?? கேள்வி எழுகிறதே?! பிறகு வேறு வழியின்றி எழுந்து நின்று தமிழனின் மானத்தைக் காப்பாற்றினீர்கள், நன்றி!!

சங்கத்தாரே, இதுகாறும் நேரிடையாக உங்களைச் சுட்டவில்லை. ஆனால் அதற்கும் வேலை வந்து விட்டது. எம்மைப் பொறுத்தவரையில் நிலவு மன்னன், தாய்மொழியின் மகத்துவம் உரைத்த எளிய மனதுக்குச் சொந்தக்காரன் மயில்சாமி அண்ணாதுரைதான் முதன்மை விருந்தினன். சரி, விட்டுத் தள்ளுங்கள். அனைவருமே முக்கிய முதன்மை விருந்தினர்கள் என்றே ஏற்றுக் கொள்கிறேன்.

பிறகு ஏன் எவருக்குமில்லாத சிறப்பு மரபு, special protocol, வைரமுத்து அவர்களுக்கு மட்டும்? ஒருவர் சிரம் தாழ்த்தி அவரை மேடைக்கு அழைத்துச் செல்கிறார். அவர் மேடையை அடைந்ததும் தலைவரும், உபதலைவரும் பிரத்தியேகச் சிறப்பு செய்கிறார். நல்லது!

ஏன் நிலவு மன்னனுக்கும், தமிழருவிக்கும், அண்ணாவின் தம்பி விசுவநாதனுக்கும், மூத்த தமிழ் ஆசான் சிலம்பொலி ஐயாவுக்கும் இன்னபிற முக்கிய விருந்தினருக்கும் அது இல்லை? புலம்பெயர்ந்து வாழும் மண்ணில், இம்மாதிரியான யதார்த்தமற்ற மரபுகளைக் கட்டுடைத்துச் செயலாற்றுங்கள். அடுத்த தலைமுறைக்கு நல்லதொரு முறையைக் கற்றுத் தருவோமாக!

கவிப் பேரரசு அவர்களே நல்ல இலக்கியச் செறிவு மிக்க தகவல்களை அளித்தீர்கள். தமிழ்ச் சமூகம் உங்களிடம் எதிர்பார்ப்பதும் அதுவே! நன்றாகப் பேசுவதற்கும், சரியாகப் பேசுவதற்கும் விளக்கவுரை அளித்த தாங்கள், தாங்கள் நன்றாகப் பேசினீர்களா, சரியாகப் பேசினீர்களா எனப் பட்டிமன்றம் வைத்து விவாதிக்கும்படி செய்துவிட்டீர்களே ஐயா?!

தாங்கள் பிறந்த நாள் கொண்டாடுவீர்களா, மாட்டீர்களா என்று எந்த ஈழத் தமிழன் அழுகிறான் இந்தப் புவியில்? மேதாவிலாசம் பற்றிப் பரப்புரை ஆற்றிய நீங்கள், இந்த ஆண்டு நான் பிறந்த நாள் கொண்டாடப் போவதில்லை என்று சொல்லி மேதாவிலாசம் தேடுகிறீர்களே? இதற்கு மாற்றாய் நான்கு பட்டி தொட்டிகளுக்குச் சென்று ஈழத்தில் மனிதாபிமானம் சின்னாபின்னம் ஆவதைப் பற்றிப் பேசுங்கள். உலகமே உங்களுக்கு விழா எடுக்கும்.

புறம் பேசுதலும், மறதியும் தமிழனுக்கு நேர்ந்த சாபக் கேடு என்றீர்கள். ஆனால் தாங்கள் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவது புலம் பெயர்ந்த தமிழனுக்குத் தெரியாது என்று நம்புகிறீர்கள்தானே? ஏன் ஐயா, தமிழில் தலைசிறந்த உங்களுக்கு, அதுவும் வயோதிகம் வாசற்படியில் நிற்கும் இந்தப் பருவத்தில் இந்த வேலை?? உங்களிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய தமிழ் கடலளவு. அவற்றை அடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்லுங்கள். மேலும் மேலும் உங்கள் புகழ் ஓங்கும்!

எவனொருவன் சமூகத்தின் அங்கமாய் இருந்து, சமூகத்தின் யாதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறானோ அவன் கவிஞன் என்றார் சக கவிஞர் செய பாசுகரன் அவர்கள். உண்மை! இலக்கியவாதியான தாங்கள், இலக்கியத்தின் பேராலே அழைக்கப்பட்டு இருக்கிறீர்கள். இருந்தும், இலக்கிய வட்டச் சொற்பொழிவுக்கு வந்து தமிழனொடு தமிழனாய்ச் சங்கமிக்க மனம் வரவில்லையே தமிழ்க் கடலே? ஏன்?? தங்களின் தமிழ் நுகரக் கிடைக்காத வருத்தமுடன்,

சாமான்யத் தமிழன்,
பழமைபேசி.

(விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச்(label) சுட்டியைச் சொடுக்கவும்!)