7/28/2008
வீடு வழிக்லீங்களா?
எங்கம்மா கூட பொறந்தது மொத்தம் எட்டு பேரு. பெரிய வீடு. இந்த தெருவுக்கும் அந்த தெருவுக்கும் இருக்கும். வீட்டுக்குள்ளயே சின்ன கெணறு. பத்து அடிலயே தண்ணி இருக்கும். சமயக்கட்டுல இருந்து ரெண்டு எட்டு வெச்சா கெணறு. பெரிய கொட்டம் பூரா சிமிட்டித்தரை. அப்புறம், வீடு முச்சூடும் சாணித்தரைதான். தண்ணி கொட்டிப் போனாலும் கவலை இல்லை. உடனே அந்த தண்ணி தரையில இறங்கி, காஞ்சி போயிரும். பத்து நாளைக்கு ஒருவாட்டி, வீடு பூரா சாணி போட்டு வழிப்பாங்க. அடுப்படி மட்டும் தினமும். எங்க சின்ன சித்திதான் வீடு வழிச்சு கோலம் போட்டு உடும். மொதல்ல வீட்டை நல்லா விளக்குமாரு வச்சுப் பெருக்கணும். அப்புறம் சாணிக்கரைச்சல்ல ஒரு துணியை முக்கி மெழுகிகிட்டே பின்னால வரணும். உக்காந்தவாக்குல கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து நகர்ந்து வரணும். மெழுகி முடிச்ச உடனெ இன்னும் ஒருக்கா வீட்டைப் பெருக்கணும். இப்ப கூடுதலா இருக்கற சாணித்தூள் மெத்துமெத்துன்னு சீமாருலே சுலபமாப் பெருக்க வரும். ஆனா தரையிலே இன்னும் ஈரம் கொஞ்சம் இருக்கும். அந்த சமயம் கோலமாவு எடுத்து நல்லதா அழகாக் கோலம் போட்டுருவாங்க எங்க சித்தி. அந்த ஈரத்துலெ அது ஒட்டிப் பிடிச்சு அழியாம மூணு நாள் அப்படியே இருக்கும். நாங்க ஒரு பத்து பதினஞ்சு வாண்டுக, குறுக்க போவோம்.... அங்க போவோம்... இங்க போவோம்.... சினிமா கொட்டாய்காரன், புது படத்துக்கு கூட்டு வண்டில நோட்டீசு குடுக்க வந்தா வாங்குறதுக்கு ஓடுவோம். ஒரே குதூகலமா இருக்கும்.
ம்ம்... இப்ப அந்த வீடும் இல்ல, சாணியும் இல்ல, மாடு கன்னுகளும் இல்ல, எங்க பாட்டியும் இல்ல, அந்த கூட்டு குடும்பமும் இல்ல, எங்கம்மா ஒரு பக்கம்... எங்க சித்தி ஒரு பக்கம்.... நாங்க அண்ணன் தம்பிக ஒரு பக்கம்.... என்னத்த சொல்ல?! அட, "ஆத்தோட விழுந்த எலை ஆத்தோட போகும். நீ பட்ட இன்ப துன்பம் உன்னோட வரும்"னு சொல்லுறது இதானோ?? கண்ணக் கட்டுதுடா சாமீ.... நீங்க போயி உங்க வேலைகள பாருங்க! எதோ உங்ககிட்ட சொல்லி, மனச ஆத்திக்கலாம்னு நெனச்சேன். நீங்க போயி, உங்க வேலைகள பாருங்க!!
7/27/2008
விவசாயம்: சிந்தனைக்கு!
பிரிட்டீசார் இந்தியாவை ஆண்டபோது 1880-85ல் இந்தியாவில் சுமார் 2 கோடி மக்கள் இறந்தனர். இந்தியாவில் பஞ்சம் எனவே இறந்தனர் எனும் பொய்யைப் பரப்பினர். இப்பஞ்சம் விளைச்சல் இல்லாததால் அல்ல. விளைந்ததை வேறு இடத்திற்கு அனுப்பியதால்தான். இந்தியாவில் புதுமை விவசாயம் செய்ய உழவியல் நிபுணரை இலண்டனிலிருந்து வரவழைத்தனர். அவர் ஆறுமாத காலம் இந்தியாவைச் சுற்றி வந்தபின் இங்கிலாந்திற்கு எழுதிய கடிதச் செய்தி: 'இந்திய விவசாயிகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க எதுவுமே இல்லை. இந்திய விவசாயிகளுக்கு எல்லாமே தெரியும். அவர்களிடமிருந்து நான்தான் கற்றுக்கொண்டேன்'.
செய்தி:2
ஒன்று வரலாற்றில் ரசாயன உரங்களை இடுவது எப்படிப் புழக்கத்தில் வந்தது? இரண்டாவது ரசாயனங்களை இடவேண்டுமா? உலகப்போர் முடிவடைந்த தருவாயில் வெடி மருந்து தயாரித்த வியாபாரிகள் கவலைப்பட்டார்கள். போர் முடிவடைந்து விட்டதே இனி நம் வியாபாரத்திற்கு வழி என்ன என்று இப்பொழுது விஞ்ஞானிகள் புதிய வழிகாட்டினார்கள். செடிகளுக்கு அமோனியா தேவை. உப்புத் தொழிற்சாலையை உர உற்பத்திக்காக மாற்றி விடலாம் என்றார்கள். 1925-ல் அமோனியம் சல்பேட் அமெரிக்காவில் புழக்கத்தில் வந்தது. அப்போதே அங்கு எதிர்ப்புக் கிளம்பியது. எதிர்காலத்தில் இது தீங்காக அமையும் என்றார்கள். இந்தப் போக்கிற்கு எதிரான ஆராய்ச்சிகளும் ஐரோப்பாவில் நடந்தது. ஆனால் இட்லர் தலை தூக்கிய காலத்தில் இந்த ஆராய்ச்சிகளை அழித்து விட்டனர். 2-ம் உலகப்போர் முடிவடைந்த காலத்தில் வெடி உப்புத் தொழிற்சாலைகள் உர உற்பத்தில் ஈடுபட்டன. ஐரோப்பாவில் அடக்க முடியவில்லை. உலகம் முழுதும் பரவலாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
--வேளாண்துறை நிபுணர் கோ.நம்மாழ்வார்
7/26/2008
ஒளவையின் பதிலடி
எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது.
தமிழில் 'அ' என்ற எழுத்து 'எட்டு' என்ற எண்ணை குறிக்கும். அதேபோல் 'வ' என்பது '1/4'ஐ குறிக்கும். ஆகவே 'எட்டேகால்' என்பது 'அவ' என்றாகிறது. ஆக, முதல் சொற்றொடர் 'அவ லட்சணமே' என்று பொருள் தருகிறது.
எமன் ஏவும் பரி என்பது 'எருமை'.
பெரியம்மை என்பது லட்சுமியின் தமக்கையான 'மூதேவி'.
மூதேவியின் வாகனம் கழுதை.
முட்டமுட்ட கூரையில்லா வீடு என்பது 'குட்டிச்சுவர்'.
குலராமன் தூதுவன் 'குரங்கு'.
ஆரை என்ற பூண்டிற்கு ஒரு தண்டும்(கால்), நான்கு இலையுமுண்டு.
ககரத்தில் கவி காளமேகம்
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைகா கா!"
இதனைப் பிரித்துப் படிக்கவேண்டும்.
காக்கைக்காகா கூகை = காக்கைக்கு ஆகா கூகை = கூகை(ஒரு வகை ஆந்தை) இரவில் வெல்லுவது காக்கையால் ஆகாது.
கூகைக்காகா காக்கை = கூகைக்கு ஆகா காக்கை = பகலில் கூகையால் காக்கையை வெல்வதற்கு முடியாது. ஆகாத காரியம்.
கோக்கு கூ காக்கைக்கு
கோ = மன்னன்;
கோக்கு = மன்னனுக்கு
கூ = புவி
காக்கைக்கு = காப்பதற்கு
கொக்கொக்க = கொக்கு ஒக்க = கொக்கைப் போன்று தகுந்த சமயம் வரும் வரை காத்திருக்கவேண்டும்.
கைக்கைக்கு = பகையை எதிர்த்து
காக்கைக்கு = காப்பாற்றுதல்
கைக்கைக்காகா = கைக்கு ஆகா=(தகுந்த சமயமில்லாது போனால்) திறமைமிக்க தலைவனுக்கும் கைக்கு எட்டாது போய்விடும்.
பாடலின் பொருள்: தகுந்த சமயமும் வாய்ப்பும் பார்த்து, வாய்ப்புகளை நழுவ விடாது செயலாற்ற வேண்டும்.
நன்றி:- அகத்தியர் தொடுப்பு
கவி காளமேகப் புலவரின் பாடல் ஒன்று
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி"
தாதி - தோழியின்(அடிமைப் பெண்ணின்)
தூதோ- மூலமாக அனுப்பும் தூது
தீது - நன்மை பயக்காது!
தத்தை- (நான் வளர்க்கும்) கிளியோ
தூது - தூதுப் பணியில் தூதை
ஓதாது - (திறம்பட) ஓதாது!
தூதி தூது - தோழியின் தூதோ
ஒத்தித்த தூததே - நாளைக் கடத்திக் கொண்டே போகும்.
தேதுதித்த - தெய்வத்தை வழிபட்டுத்
தொத்து - தொடர்தலும்
தீது - தீதாகும்
தித்தித்தது _ தித்திப்பு நல்கும் என் காதலனின் பெயரை
ஓதித் திதி - ஓதிக் கொண்டிருப்பதையே செய்வேனாக!
கவிஞர் கண்ணதாசன் 'வானம்பாடி' திரைப்படத்துல, இதே பாடலை:
நடுவர்- உன்னுடைய கேள்விக்கெல்லாம் அவங்க பதில் சொல்லிட்டாங்க இனிமேல் அவங்க கேள்வி கேக்கலாமில்லே?
ஆண்- கேக்க சொல்லுங்க....
பெண்-
தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது..
தூதி துது ஒத்தித்தது தூது செல்லாது..
தேது தித்தித் தொத்து தீது தெய்வம் வராது - இங்கு
துத்தி தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது..
ஆண்- கேள்வியா இது ? என்ன உளர்றாங்க ?
நடுவர்- அவங்க ஒண்ணும் உளறலே.. நீதான் திணர்றே
ஆண்- நான் திணர்றேனாவது..
நடுவர்- பின்ன என்ன? வேணும்னா நீ தோல்விய ஒப்புக்க.. அவங்களே அர்த்தம் சொல்றாங்க
ஆண்- முதல்ல அர்த்தத்தை சொல்ல சொல்லுங்க.. அப்புறம் பேசலாம்
நடுவர்- சரி சொல்லுங்க..
பெண்-
அடிமைத் தூது பயன்படாது கிளிகள் பேசாது
அன்புத் தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது
தெய்வத்தையே தொழுது நின்றால் பயனிருக்காது - இளம்
தேமல் கொண்ட கன்னி வாழ இனியது கூறு.
7/24/2008
விகடம்
கடைசில, 'மாணவன் குருவுக்கு நூறு பொற்காசுகள் தர வேணும்'னு சொன்னாங்க. மாணவன் யோசிச்சு பாத்துட்டு நீதிசபைல சொன்னான், 'நல்ல தீர்ப்பு சொன்னீங்க. அப்ப, அந்த நூறு பொற்காசுகல நான் தர தேவை இல்ல'னு. குழம்பிப்போன நீதி அரசர், 'மாணவனே, என்ன சொல்லுற?, அதான் நீ தர வேணும்னு தீர்ப்பு சொல்லி ஆச்சே'னு கேட்டாரு. அவன் சொன்னான், 'அதான் நான் இந்த வழக்குலயும் தோல்வி கண்டுட்டேன், ஆக பேசின ஒப்பந்தப்படி, எந்த வழக்குலயும் வெல்லாத நான் தர தேவை இல்ல'னு. குருவோ, 'தீர்ப்பின் படி எனக்கு நூறு பொற்காசுக வேணும்'னு கேட்டாரு.
குழம்பின நீதி அரசர், தீர்ப்ப மாத்தி, 'மாணவன் காசு தர தேவை இல்ல'னு சொன்னாரு. மாணவனுக்கு மகிழ்ச்சி! ஆனா பாருங்க, குரு மாணவன பாராட்டிட்டு கேட்டாரு, 'இப்ப நீ வழக்குல வெற்றி அடஞ்சுட்ட, ஆக பேசின ஒப்பந்தப்படி நீ காசுகளை தர வேணும்'னு. நீதி அரசர்கிட்டயும் இத சொல்லி முறையிட்டாரு. நீதி அரசர் என்ன தீர்ப்பு சொல்லி இருப்பாரு?
எனக்கு இதை யோசிச்சு யோசிச்சு மண்டை வெடிச்சிரும் போல இருக்கு. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன். தயவு செஞ்சி யோசிங்க... சொல்லுங்க....
7/19/2008
நவநிதிகள்
- சங்கநிதி (சங்கின் வடிவில் இருப்பது),
- பதுமநிதி (தாமரை வடிவில் இருப்பது),
- மகரநிதி (சுறாமீன் வடிவில் இருப்பது),
- கச்சபநிதி (ஆமை வடிவில் இருப்பது),
- முகுட நிதி (தலையணி - மகுட வடிவில் இருப்பது),
- நந்த நிதி (இன்பமளிப்பது),
- நீல நிதி (நீல நிறத்தில் இருப்பது),
- கர்வ (karva - not Gharva) நிதி (குறளன் வடிவில் இருப்பது) மற்றும்
- மஹாபதும நிதி (பெருந்தாமரை வடிவில் இருப்பது).
கிராமியக் கணக்கு
நந்தவனத்தில் பறித்த பூக்களை எடுத்துக் கொண்டு ஒரு கோயிலுக்குச் சென்றான். அக்கோயிலின் மூலவருக்குச் சில பூக்களைச் சார்த்துவதற்கு முன், அக்கோயிலில் உள்ள குளத்தில், நந்தவனத்தில் பறித்த பூக்களை ஒரு மந்திரத்தைச் சொல்லி முனகினான். எனவே மாந்திரிகன் பறித்துக் கொண்டு வந்த பூக்கள் இரண்டு மடங்கானது.
இப்போது முதலாவது கோயிலில் கொஞ்சம் பூக்களைச் சாத்தினான். அங்கிருந்து அந்த மாந்திரிகன், இன்னொரு கோயிலுக்குச் சென்றான். தற்போது மீதமாக தன் கையில் இருந்த பூக்களை, ரெண்டாவது கோயிலின் அருகில் உள்ள குளத்தில் ஒரு மந்திரத்தைச் சொல்லி அமிழ்த்தினான். இப்போதும் மாந்திரிகன் கையிலிருந்த பூக்கள் ரெட்டித்தது. அப்பூக்களில் சிலவற்றை ரெண்டாவது கோயிலில் உள்ள சாமிக்குச் சாத்தி விட்டு, பிறகு மூன்றாவது ஒரு கோயிலுக்குச் சென்றான், அந்த மாந்திரிகன்.
இப்போதும் தன் கையில் இருந்த பூக்களை மூன்றாவது கோயிலின் அருகில் உள்ள குளத்தில் ஒரு மந்திரத்தைச் சொல்லி முனகினான். இப்போதும் மாந்திரிகன் கையில் இருந்த பூக்கள் இரட்டித்தது. இரட்டித்த பூக்களை எல்லாம் மாந்திரிகன் மூன்றாவது கோயிலில் சாத்தி விட்டு வீசிய கையும், வெறும் கையுமாகத் தன் வீட்டைப் பார்த்து நடந்து சென்றான்.
மாந்திரிகன் மூன்று கோயிலுக்கும் சாத்திய பூக்களின் எண்ணிக்கை சமமானது என்பது சிறப்பு. மாந்திரிகன் முதலில் நந்தவனத்தில் பறித்துக் கொண்டு வந்த பூக்கள் எத்தனை? ஒவ்வொரு கோயிலிலும் சாத்திய பூக்கள் எத்தனை??
கணக்கின் விடை பின்னூட்டத்தில் விரைவில்...
நீ எதை உண்டு மயங்கினாய் தமிழா?
நீர் சுமந்த மண்குடம் எங்கே?
தாகம் தணித்த தாழி எங்கே?
கஞ்சி சுண்டிய சுட்டிப்பானை எங்கே?
கீரை கடைந்த வாய்ச்சட்டி எங்கே??
சோறு பொங்கிய பொங்கற்பானை எங்கே??புளியும் உப்பும் அடுக்கிய அடுக்குப்பானைகள் எங்கே??
காய்கறிகள் சுமந்த நார்க்கூடைகள் எங்கே?
சிந்தாக், காகிதக் கூடைகள் எங்கே?
நவதானியமும் கொண்ட சணல்பைகள் எங்கே?
உடுப்பு சுமந்த நூற்பைகள் எங்கே?
தேநீர் உண்டு மகிழ்ந்த குவளைகள் எங்கே? மேனாட்டு,
நெகிழிப்(plastic) பொருளுக்கு, மயங்கிவிட்டாயேடா தமிழா?
வாருங்கள்! மயக்கம் தெளிந்து,திரும்புவோம் பழமைக்கு!!வாருங்கள்! மயக்கம் தெளிந்து,திரும்புவோம் பழமைக்கு!!
7/17/2008
'கூப்பிடு தூரம்' என்றால் என்ன?
அணு 8 கொண்டது = கதிரெழுதுகள்
கதிரெழுதுகள் 8 கொண்டது = பஞ்சுத்துகள்
பஞ்சித்துகள் 8 கொண்டது = மயிர்முனை
மயிர்முனை 8 கொண்டது = நுண்மணல்
நுண்மணல் 8 கொண்டது = வெண்சிறு கடுகு
வெண்சிறு கடுகு 8 கொண்டது = எள்ளு
எள்ளு 8 கொண்டது = நெல்லு
நெல்லு 8 கொண்டது = விரல்
விரல் 12 கொண்டது = சாண்
சாண் 2 கொண்டது = முழம்
முழம் 2 கொண்டது = சிறுகோல்
சிறுகோல் 4 கொண்டது = பெருங்கோல்
500 பெருங்கோல் = கூப்பிடு தூரம்
4 கூப்பிடு தூரம் = ஒரு காத தூரம்
7/12/2008
சாட்சி
album தொகுப்பு
algorithm வழிமுறை
alphanumeric எண்ணெழுத்து
animation அசைவூட்டம்
anti virus நச்சுநிரற் கொல்லி
application செயலி செயல்
architecture கட்டமைப்பு கட்டமைவு
archive பெட்டகம்
audio ஒலி
backspace பின்னழிக்க, பின்வெளி
blog வலைப்பதிவு
boot தொடக்கு
browser உலாவி
cache memory பதுக்கு நினைவகம்
compact disc (CD) இறுவட்டு குறுவட்டு
CD player இறுவட்டு இயக்கி
character வரியுரு
clear துடை
click சொடுக்கு
client வாங்கி (?)
code நிரற்தொடர்
column நிரல், நெடுவரிசை
configuration அமைவடிவம்
console முனையம்
cookie நினைவி
copy படி எடுக்க, படி (பெயர்ச்சொல்)
cordless தொடுப்பில்லா
cut வெட்டுக
cyber மின்வெளி
data தரவு
delete அழிக்க
design வடிவமைப்பு
digital எண்ம (பதின்ம)
discovery கண்டறிதல்
driver இயக்கி
edit தொகுக்க
firewall தீஅரண்
floppy நெகிழ்வட்டு, சிறுவட்டு
format வடிவூட்டம், வடிவூட்டு
function செயற்பாடு
gallery காட்சியகம்
graphics வரைகலை
guest வருனர்
home முகப்பு, அகம்
homepage வலையகம், வலைமனை
icon படவுரு
information தகவல்
interface இடைமுகப்பு
interpreter (computing) வரிமொழிமாற்றி
invention கண்டுபிடிப்பு
IRC இணையத் தொடர் அரட்டை
LAN உள்ளகப் பிணையம்
license உரிமம்
link இணைப்பு, தொடுப்பு, சுட்டி
live cd நிகழ் வட்டு
log in புகுபதிகை, புகுபதி
log off விடுபதிகை, விடுபதி
media player ஊடக இயக்கி
menu பட்டியல்
microphone ஒலிவாங்கி
network பிணையம், வலையம்
object பொருள்
offline இணைப்பறு இணைப்பில்லாநிலை
online இணைப்பில்
package பொதி
password கடவுச்சொல்
paste ஒட்டுக
patch பொருத்துக
plugin சொருகு, சொருகி
pointer சுட்டி
portal வலை வாசல்
preferences விருப்பத்தேர்வுகள்
preview முன்தோற்றம்
processor முறைவழியாக்கி
program நிரல்
proprietary தனியுரிம
RAM நினைவகம்
refresh மீளேற்றுக
redo திரும்பச்செய்க
release வெளியீடு
repository களஞ்சியம்
row நிரை, குறுக்குவரிசை , கிடை
screensaver திரைக்காப்பு
server வழங்கி
shortcut குறுக்குவழி
settings அமைப்பு
shutdown அணை (மூடுக)
sign in புகுபதிகை, புகுபதி
sign off விடுபதிகை, விடுபதி
skin (software) ஆடை
space வெளி, இடைவெளி
speaker ஒலிபெருக்கி
spreadsheet விரி தாள்
subtitle உரைத்துணை, துணையுரை (துணைத்தலைப்பு)
system அமையம் / கணினி
tab தத்தல்
table அட்டவணை
terminal முனையம்
theme கருத்தோற்றம், தோற்றக்கரு (கரு)
thumbnail சிறுபடம் (நகப்படம்)
undo திரும்பப்பெறுக
update இற்றைப்படுத்தல், இற்றைப்படுத்து
upgrade மேம்படுத்து, மேம்படுத்தல்
URL இணையமுகவரி
version பதிப்பு
video நிகழ்படம்
view பார்க்க
virus (computers) நச்சுநிரல்
volume ஒலியளவு
wallpaper மேசைப்பின்னணி
window சாளரம்
wireless கம்பியில்லா
wizard வழிகாட்டி
worksheet பணித் தாள்
add-on - சேர்ப்பு
animation - அசைகலை
back end - பின்னகம்
bookmark - புத்தகக் குறி
buddy - நண்பர்
constant - மாறிலி
checkbox - தேர்வுப் பெட்டி
default - இயல்பிருப்பு
destination - சேருமிடம், அடையுமிடம்
diagram - விளக்கப்படம்
front end - முன்னகம்
field - புலம்
index - சுட்டெண்
graph - வரைபடம்
mouse - சொடுக்கி
netizen - வலைஜ்னர்
presentation - அளிக்கை
rap music - சொல்லிசை
root - மூலம்
root directory - மூல அடைவு
root user - முதற் பயனர், முதன்மைப் பயனர்
source code - மூலச்செயல்நிரல்
sudo user - பொறுப்புப் பயனர்
spam - எரிதம்
trash - குப்பை
toolbar - கருவிப்பட்டை
variable - மாறி
zoom lens - உருப்பெருக்க வில்லை
zero - சுழி சுழியம்
பிறழ்ந்த பழமொழிகள்-2
எந்த சோதிடத்துலயும், பெரும்பாலான சனங்க நினைக்கிற மாதிரி, 'பூராட நட்சத்திர பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நெலைக்காது'னு சொல்லலையாம். மாறா, நேர் எதிரா சொல்லி இருக்காங்களாம். ஆமாங்க, பூராட நட்சத்திர பொம்பளைக கழுத்துல இருக்குற தாலி ஆட்டம் காணாதுங்றதுதான் 'இந்த பூராடத்தாள் கழுத்துல நூல் ஆடாது'ன்னு சொல்லுறது.
அடி ஒதவுற மாதிரி, அண்ணன் தம்பி ஒதவ மாட்டாங்க!
அடின்னா கை காலால எத்துறது இல்லைங்க. அவங்க போற அடிய( வழியை)தொடர்ந்து போய் வாழ்க்கைல முன்னேறுறதக் காட்டிலும் அண்ணன் தம்பி ஒதவி செய்யுறதுல சிறப்பு, பலன் குறைவு தான். அதுதான், 'அடி ஒதவுற மாதிரி அண்ணன் தம்பி ஒதவ மாட்டாங்க'.
களவும் கற்று, மற!
ஏங்க, 'கடினப்பட்டு வித்தையக் கத்து, அப்புறம் மறந்துரு'ன்னு யாராவது சொல்லுவாங்களா? அது அப்படி இல்லீங்க. களவும் கத்தும் அற! களவாடுறதும் கத்துவதும்(மத்தவங்களை ஏசுறதும் புறம் பேசுறதும்) விட்டொழி (அற).
அடிமைச்சங்கிலி
உகந்த பாறைகளைத் தெரிவுகொண்டு
பொருளாதாரமயமாக்கல், தாராளமயமாக்கல் உலகமயமாக்கல் சங்கிலியில் தன்னைப் பார்க்கிறான் இந்நாள் தமிழ்ச்செல்வன்!! பாறையில் சங்கிலி அன்று! சங்கிலியில் பாறை இன்று!!
7/06/2008
கீரைகள்
அகத்திக்கீரை
அறுகீரை
கரிசலாங்கண்ணி
கறிவேப்பிலை
குத்துப்பசலை
குப்பை கீரை
கொடிப்பசலை கீரை
கொத்துமல்லிக்கீரை
சக்ரவர்த்திக்கீரை
சிறு கீரை
சிலோன் கீரை
சுக்காங் கீரை
தண்டுக் கீரை
பண்ணக் கீரை
பருப்புக் கீரை
புதினாக் கீரை
புளிச்ச கீரை
புளியாரை
பொன்னாங்கண்ணி
மணல் தக்காளி
ஆரைக்கீரை
முருங்கைக்கீரை
முளைக்கீரை
முல்லுக்கீரை
வல்லாரை
வெந்தயக்கீரை
வேளைக்கீரை
நச்சுக்கொட்டை கீரை
புண்ணாக்கு கீரை
பாலக்கீரை
கோங்குரா கீரை
தூதுவளை
முடக்கத்தான்
புதினா
முள்ளங்கிக்கீரை
வாழைப்பூ கீரை
சண்டிக் கீரை
.......
புண்ணாக்கு கீரை
கூறுகள், பாகம்-2
இது சம்பந்தமா ரெண்டு விளக்கம் சொல்லுறாங்க. முதலாவது, நம்ப ஊர்ல கோழி, சேவல அந்திசாயும் நேரத்துல அடைக்கப் போனா, நாலும் நாலு திசைல ஓடி, வேலை வாங்குமாம். அந்த அளவுக்கு சாதுரியமானது அதுக. ஆனா, ஒரு வாத்தப் புடிச்சு சாக்குப் பைல போட்டா, அடுத்தடுத்த வாத்துக, தானா வந்து கோணிப்பை (சாக்குப்பை)ல விழுமாம். அந்த அளவுக்கு மடம் கொண்டதாம் வாத்து. அதனால, புத்திக்கூர்மை இல்லாதவங்களை வாத்து மடையன்னு சொல்லுவாங்களாம்.
ரெண்டாவது விளக்கம், தங்க முட்டை இடும் வாத்தை, பேராசைப்பட்டு வயித்த அறுத்த மடையனை ஒப்பிட்டு சொல்லுற மாதிரி, வாத்தை அறுத்த மடையன் வாத்து மடையன்னும் சொல்லுறாங்க.
2. மாங்கா மடையன் - விளக்கம் என்ன?சிவன் கோயில் பெரிய பூசாரி, உச்சி நேர பூசைக்கு முக்கனிகளை வெச்சி பூசை செய்யணும்னு பிரயத்தனப்பட்டு, அது குறிச்சு மடத்துல இருந்த திருவாத்தான்கிட்ட சொன்னாரு, 'டேய் திரு, பலாவும் வாழையும் இருக்கு. மாங்காய் தான் இல்ல. போயி, மாங்கா பறிச்சிட்டு அப்படியே அதுல கொஞ்சம் இலையும் பறிச்சிட்டு வா' னு சொன்னாரு. கொஞ்ச நேரத்துல மாங்காய்களோட திருவாத்தானும் வந்தான். 'எங்கடா, மாவிலையக் காணோம்'னு பூசாரி கேக்க, திருவாத்தான் சொன்னான்,'நீங்க காய்களப் பறிச்சிட்டு, அதுல கொஞ்சம் இலையும் பறிச்சிட்டு வர சொன்னீங்க. ஆனா, எந்தக் காய்லயும் இலைக இல்லை'னு சொன்னான். உடனே பூசாரி திருவாத்தானை கடுமையா திட்டிகினு இருந்தாரு.
அந்த நேரம் கோயிலுக்கு வந்த ஜமீன் (ஊர்த் தலைவர்), என்ன பூசாரி திருவாத்தானை திட்டிகினு இருக்கீங்கன்னு கேக்க, 'அவன் மாங்காய்ல இலை தேடுன மாங்கா மடையன்'னு சொல்லிட்டு, நடந்ததை ஜமீன் கிட்ட சொன்னாரு பூசாரி. இப்படித்தாங்க, 'மாங்கா மடையன்'ங்ற அடை சொல்லு பொழக்கத்துக்கு வந்தது. குறிப்பா, 'மாங்கா மடையன், திருவாத்தான்'ங்ற வார்த்தைகள கொங்குச் சீமைல அடிக்கடி பொழங்குவாங்க.
ரெண்டாவது விளக்கம்: மாங்கா மடையன் என்ற சொற்றொடருக்கு நன்னன் அவர்கள் ஒருமுறை மக்கள் தொலைக்காட்சியில் விளக்கம் அளித்தார். மாங்காயை மா என்றும் அழைப்போம் அல்லவா, அதனால் மாங்காய் மடையன் என்றால் மாமடையன் என்று பொருள் என்றார். நன்றி: பாலராஜன்கீதா
3. மடச்சாம்பிராணி - விளக்கம் என்ன?
அந்தக் காலத்துல மடம், கோயில் கூடம், சத்திரம்னு சனங்க கூடுற பொது இடங்கள்ல பெரிய சாம்பிராணிக் கட்டிய வெச்சிருப்பாங்களாம். இது தணல்ல போட்டு தூபம் போடுற சாம்பிராணி இல்லங்க. இருந்த இடத்துல இருந்து நல்ல வாசம் குடுத்து, காத்துல இருக்குற கிருமிகளநீக்குற சாம்பிராணி. இருந்த இடத்துல இருந்து, காத்துல கரைஞ்சு உருமாறி, நாளடைவுல இது அரை குறையா ஆயிடுமாம். அத வெச்சி, அரை குறையா புத்திக்கூறு இல்லாம இருக்கறவங்கள 'மடச்சாம்பிராணி'னு திட்ற பழக்கம் பொழக்கத்துல வந்தது. மடையன் சாம்பிராணினு ஒரு செடி இருக்குதுங்க. ஆனா, அதுக்கும் இந்த சொல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்களாம். அது ஒரு மூலிக மருந்தாம்.
4.பல வண்ணங்கள் இருக்க, நம் ஊர்களில் சுவர்களுக்கு வெண்மை நிறம் அடிப்பதேன்?
வீடு குளிர்ச்சியா இருக்கவும், கூட வெளிசசமா இருக்கவும் பெரியவங்க வெண்மை நெறத்தை தேர்வு செஞ்சாங்க. அதே சமயம், கரியும் சில தாவரங்களும் கலந்து பூசின கருப்பு நெற வீடுகளும், கட்டிடங்களும் இருந்ததாம். இனப் பெருக்கம் சம்பந்தப்பட்ட இடங்களான கோழிப் பண்ணை, கால்நடைக் கொத்தளங்கள், பட்டுப்பூச்சி வளர்ப்புனு கொஞ்ச இடங்கள், அப்புறம் பார்வைக்கு எட்டக் கூடாத இடங்கலான கோட்டை, பதுங்கு குழிகள், அமைதி வேண்டிய இடங்கள்னு இருக்குற இடங்கள, கருப்பு நெறத்துல பூச்சு பூசி இருப்பாங்களாம்.
5.பல வண்ணங்கள் இருக்க, குடைகள் கருப்பு நிறத்தில் இருப்பதேன்?
குடைகள் கருப்பு நெறம்னு சொன்ன உடனே, கருப்பு நெறம் ஒளி வீச்சுக் கதிர்களை கவரக் கூடியதுனு சரியா சொல்லுவாங்க. அப்ப, பெரியவங்க ஏன் ஒளி வீச்சுக் கதிர்களை உடனே திருப்பி அனுப்புற வெள்ளை நெறத்தை தெரிவு செய்யல? பெருசு சொன்னது, 'கொடை தலைக்கு மேல அரை அடி ஒசரத்துல கருப்பு துணியோட இருக்கும். ஆனா, ஆறு அடி மனுசனை சுத்தி இருக்குற சூட்டையும் உறிஞ்சீரும்'னு. அதே சமயத்துல வயசுல மூத்தவங்க, கௌரவத்துல மூத்தவங்க, வெள்ளை நெற கொடைகள வெச்சிக்கறதும் பழக்கத்துல இருந்ததாம். இந்தப் பழக்கம் தன்னை தனிச்சுக் காமிக்கறதுக்காக இருந்து இருக்கலாம். இன்னைக்கும் நூறு வருசப் பழமையான லக்ஷ்மாபுரம் விநாயகர் கோயில் கல்வெட்டுல, 'மிராசுதார் வெண்குடை சுப்பையா'னு தான் போட்டிருக்கு.
6.பரிணாம வளர்ச்சி என்று கூறினாலும்,இறைவனின் ஒவ்வொரு படைப்புக்கு பின்னும் ஒரு அர்த்தம் பொதிந்து இருக்கிறது என்று நம்புகிறேன். நீங்களும் அதே கட்சியா? அப்படியானால், பிறப்பில் தலை மயிர் கருப்பாகவும் பின் (சிலருக்கு)வெள்ளை நிறமாகவும் மாறுகிறது. அது ஏன்?
கிட்டத்தட்ட மேல சொன்ன பதில் தான் இதுக்கும். ஆனா, ஒரு சிறு வித்தியாசம். அடர்ந்து இருக்குற கருப்பு நிற தலை முடி, சூட்டை உறிஞ்சி மேல் புறமாத்தான் வெச்சு இருக்கும். தலைக்கு உள்ள விடாதாம். ஆக, வெப்பம் நெறஞ்ச பூமியில உடலை சுத்தி இருக்குற சூட்டை கிரகிச்சு, அதைத்தணிக்க கருப்புத் தலை முடி ஒதவுது. வயசான காலத்துல தலையில் மயிரின் அடர்த்தி கொறயக் கொறய, ஒளி வீச்ச திருப்பி அனுப்புற மாதிரி வெள்ளை நெறமா நரைக்க ஆரம்பிக்கும், மண்டைல சூடு உள்ள போகக் கூடாதுன்னு. ஆனா, இந்த வயசுல உடல சுத்தி இருக்குற சூட்டை தணிக்க தலை முடி ஒதவறதது இல்ல. அதான் சூட்டை உறிஞ்சுற கருப்பு நெறம் இல்லையே?!
வாக்களியுங்கள் மக்களே!
7/04/2008
அபிசேகங்களும் அதன் பயன்களும்
பதினெட்டு அபிசேகங்கள்
- தீர்த்த அபிஷேகம் - மனசுத்தம்
- எண்ணெய் - பக்தி
- நெல்லிப்பொடி - நோய் நிவாரண்ம்
- பால் அபிஷேகம் - சாந்தம்
- மஞ்சள் பொடி - மங்கலம்
- தயிர் - உடல் நலம்
- நெய் - நல்வாழ்வு
- பன்னீர் - புகழ்
- நாட்டு சர்க்கரை - சோதிடம்
- விபூதி - ஞானம்
- சந்தனம் - சொர்க்க லோகம்
- தேன் - குரல் வளமை, ஆயுள்
- பழச்சாறு - ஜனவசீகரம்
- பஞ்சாமிர்தம் - நீண்ட ஆயுள்
- பஞ்ச கவ்யம் - பாவம் நீக்கல்
- இளநீர் - புத்திரப் பேறு
- அன்னம் - அரசு உதவி
- மாப்பொடி - குபேர சம்பத்து
பஞ்ச கவ்யம் (பசு கொடுக்குற அஞ்சு பொருளுக) - பால், தயிர், நெய், சிறுநீர் (கோமியம்), சாணம். 'பஞ்ச கவ்யம்'னா சரி. 'பஞ்ச கோமயம்'னா அது தப்பு. கோமியம், அஞ்சுல ஒண்ணு.
(எதையும் தெரிஞ்சு செய்வோம்! அப்படியே அதை நாலு பேர்க்கும் சொல்லி வெப்போம்!! நாஞ்சொல்லுறது சரி தானே?!)
7/03/2008
நவபாசாணம்
- லிங்க பாசாணம் (இருதய வலிமை)
- குதிரைபல் பாசாணம் (நரம்புத் தளர்ச்சி)
- கார்முகில் பாசாணம் (சூடு தணிக்க)
- ரச செந்தூரம் (தோல் வியாதிகளுக்கு)
- வெள்ளை பாசாணம் (தாது குறைய நீக்கும்)
- ரத்த பாசாணம் (கண் கோளாறு)
- கம்பி நவாசரம் (உடலிலுள்ள துர் நீரை வெளியேற்ற)
- கவுரி (பொதுவான மருத்துவ குணம்)
- சீதை (அனைத்து பாசாணங்களையும் வேலை செய்ய வைக்கும் தன்மை)
ஆயகலைகள் அறுபத்து நான்கு
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)
2. எழுத்தாற்றல் (லிகிதம்)
3. கணிதம்
4. மறைநூல் (வேதம்)
5. தொன்மம் (புராணம்)
6. இலக்கணம் (வியாகரணம்)
7. நயனூல் (நீதி சாத்திரம்)
8. கணியம் (சோதிட சாத்திரம்)
9. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடனம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்)
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்)
நன்றி:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (A Comprehensive Etymological Dictionary of the Tamil Language )
பிறழ்ந்த பழமொழிகள்
பந்திக்கு முந்தணும்! படைக்கு பிந்தணும்!!
பந்தினா, ஒன்று கூடல். அது ஊர்க் கூட்டமாவும் இருக்கலாம். போருக்கான ஆயத்தக் கூட்டமாவும் இருக்கலாம். சமபந்தினா, எல்லாரும் ஒரே அணியா ஏற்றத்தாழ்வு இல்லாம கூடுறது. அப்படிப்பட்ட ஒன்றுகூடல் எதுவானாலும் உடனடியா போகணும்.
படை அப்படீன்னா படைப்பது. படைப்பாளி, படையல், படையப்பன் இதெல்லாம் 'படை'யிலிருந்து வந்த சொற்கள். ஆக, குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் வழி விட்டு, படையலுக்கு பிந்தணும். இதுதான் இந்த பழமொழியோட சாராம்சம். அது மருவி, நேர் எதிர் அர்த்தம் தர்ற மாதிரி நாம பாவிக்க கூடாது.
வீட்டுக்கு வீடு வாசப்படி
'மேன்மையான வாழ்க்கை'ங்ற வீட்டுக்கு 'ஆன்மீகம்'ங்ற வீடு வாசற்ப்படி. அடுத்த வீட்டு பிரச்சினைகள் மாதிரி தான் நம்ம வீட்டு பிரச்சினைகளும்னு அர்த்தம் இல்லை.
கல்லைக் கண்டா, நாயைக் காணோம்! நாயைக் கண்டா, கல்லைக் காணோம்!!
செதுக்கி வச்சிருக்கும் நாய் போன்ற சிலையை, கலை கண்ணோட்டத்துல பாத்தா,நாய் தோற்றம் தெரியும்.கல்லா நினைச்சுப்பாத்தா நாய் தெரியாது. அதான்,'கல்லைக் கண்டா நாயைக் காணோம்.நாயைக் கண்டா கல்லைக் காணோம்'ங்றது. தெருவில் இருக்கிற நாயையும் கல்லையும் இணைச்சி அர்த்தம் கொள்ளக்கூடாது நாம. இதையே தான் திருமூலர் சொல்கிறார்:
மரத்தில் மறைந்தது மாமதயானை; மரத்தை
மறைத்தது மாமதயானை!
மரத்தை கண் கொண்டு பார்த்தால், யானை தெரியாது. யானையை மனதில் இருத்தி பார்த்தால்,யானையின் பின் இருக்கும் பெரிய மரம் தெரியாது.
பெண் புத்தி, பின் புத்தி
சலிப்பின் காரணமாகவும் அலுப்பு காரணமாகவும் பெண்களை வசை பாடுறதுக்குன்னே சிலர் இந்த பழமொழிய பயன்படுத்துவாங்க. ஆனா, பொருள் அதுவல்ல. பாட்டி, தாய், அக்கா, தங்கை, மனையாள்னு எல்லாருமே பின் வருவன அறிந்து செயல்படும் ஆற்றல் இருப்பதால், ஒட்டுமொத்த பெண் குலத்தின் புத்தியும் பின் வருவன தெரியும் புத்தி உடையவர்கள் என்றார்கள் தமிழ்ச்சான்றோர்.
பசிக்கு பனங்காயத் தின்னு
பசி எடுத்தால் பனங்காய தின்னுவது என்பது மட்டும் பொருள் அல்ல. பசி எடுத்தால் பனங்காயை வேண்டுமானாலும் தின்னலாம், ஆனால் யாசித்துச் சாப்பிடுவது சுயமரியாதைக்கு இழுக்கு.
புண்பட்ட மனத்தை, புக விட்டு ஆத்து
'ஏண்டா பீடி சிகரெட் குடிச்சே சாவறே'னு கேட்டா, நம்மாளு சொல்லுவான், 'வள்ளுவர் என்னா சொல்லி இருக்கார்? புண்பட்ட மனத்தை, புக விட்டு ஆத்துனு சொல்லி இருக்காருல்லே? அதான்'. நாம புகைப் பிடிக்கிறதுக்கு இந்த பழமொழி தானா கிடைச்சுது? ஆனா, விசயம் அதுவல்ல. புண்பட்ட தன் மனத்தை பிடித்த வேறொன்றில் புக விட்டு ஆற்றிக்கொள் என்பது அர்த்தம்.
விருந்தும் மருந்தும் மூணு நாள்
வழக்கத்தில சொல்லுறது பெரும்பாலும் என்னன்னா,
உபசரிப்பு குறுகிய காலத்துக்குதான்னு. அத சுட்டி
காட்டுறதுக்கு இத சொல்லுவாங்க. ஆனா, இந்த பழமொழி
என்ன சொல்லுதுன்னு பாத்தீங்கன்னா,குளிர்ந்த நாட்களான
திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகள் விருந்து
படைப்பதற்கும், ஞாயிறு செவ்வாய் வியாழன் ஆகிய
வெப்ப நாட்கள் மருந்து உட்கொள்வதற்கும் சரியான நாட்கள்.
அந்த நாட்களில உணவைக் கொறச்சி கூட சாப்பிடலாம்.
அதான் இந்த மூணு நாட்கள விரதம் இருக்க
தேர்ந்தெடுப்பாங்க. அது போக,சனிக்கிழமைய நீராடுவதற்கு
தலைக்கு எண்ணை வெச்சு). தேர்ந்தெடுத்தாங்க. அதான்
விருந்து மூணு நாள்,மருந்து மூணு நாள்!!!
இடத்தக் குடுத்தா, மடத்தப் புடுங்குவான்
ஒரு ஆள இருக்கவிட்டா, நம்ம கிட்ட இருக்குறத புடுங்கிகிட்டு போய்டுவாங்கங்ற அர்த்தத்தில இந்த பழமொழிய பாவிப்பாங்க. ஆனா, பழமொழி சொல்லுது பாருங்க "அறிவூட்டுற 'குரு'க்கு நம்ம மனசுல இடத்தக் குடுத்தா, மடமைங்ற அறிவின்மைய அவர் பிடுங்கிவிடுவாரு"ன்னு.
(அப்பாட, இனியும் நிறைய பழமொழி இருக்கு. ரெண்டு நாளா தட்டச்சு அடிச்சுகினே இருக்கேன். முடியல... கையே வலிக்குது. அடுத்த வாரம் பாப்போம். அஞ்சலை, அந்த நீலகிரி தைலத்த எடுத்துட்டு வாடி அம்மா, அக்கா பெத்த மவராசி.......)
மாங்கல்ய மகிமை
நீங்க கொற சொல்லணும்னா, எங்க முதலாளியத்தான் கொற சொல்லோணும். ஆமாங்க, நமக்கு இந்த வாரம் வீட்டுல இருந்து வேலை. வீட்டுல இருந்து வேலைனா, நமக்கு இதான் வேலை. என்ன நாஞ்சொல்லுறது, சரிதானுங்களே? சரி, விசயத்த மேல பாப்போம்.
அந்த காலத்துல எல்லாம்,கல்யாணத்தின் போது கட்டுற மாங்கல்யத்துல ஒம்பது இதழ் இருக்குமாம். அதுல, ஒண்ணு ஒண்ணுக்கும் ஒரு அர்த்தத்த பெரியவங்க சொல்லி வெச்சாங்க. அதான் இந்த மாங்கல்ய மகிமை:
மாங்கல்ய மகிமை
- வாழ்க்கையைப் புரிந்து கொள்வது
- மேன்மை
- ஆற்றல்
- தூய்மை
- தெய்வீக எண்ணம்
- நற்குணங்கள்
- விவேகம்
- தன்னடக்கம்
- தொண்டு
மூணு முடிச்சு தெரிஞ்சது தானே,
- பிறந்த வீட்டிற்கு அனுசரிப்பு
- புகுந்த வீட்டிற்கு அனுசரிப்பு
- ஊருக்கு, தெய்வத்திற்குக் கட்டுப்படுதல்
7/02/2008
மேலதிகத் தகவல்
சிதம்பர ரகசியம்
நான் சிதம்பரம் கோயிலுக்கு தரிசனம் சென்ற போது, மூலவருக்கு பக்கத்து அறையில் தங்க இலைகள் சூழ்ந்த ஒரு திரை போன்ற அமைப்பு இருந்தது. தீட்சிதர், மணியார் சொன்ன தத்துவத்தைத் தான் விளக்கினார்.
சமீபத்தில் சிதம்பர ரகசியம் குறித்து வேறு சில தகவல்களையும்(கொஞ்சம் சங்கடமான மற்றும் வேறுபாடான தகவல்கள்) அறிய நேர்ந்தது. அவை,
1. நந்தனார் கோயிலுக்குள் புகுந்ததை விரும்பாத தீட்சிதர்கள் அவரை எரித்து அந்த உண்மையை ஊருக்கு மறைத்த விஷயம் 'சிதம்பர ரகசியம்'. ஆதாரம்: சிதம்பரம் கோவிலில் இன்றும் ஒரு வாசல்(நந்தனார் நுழைந்ததாக கருதப் படும் வாசல்) நிரந்தரமாக பூட்டியிருக்கும்.
2. திருஞான சம்பந்தரும், அப்பரும் சம காலத்திய சிவனடியார்கள். அவர்களுக்குள் சில தத்துவ கருத்து வேறுபாடுகள் உண்டு. ஒரு முறை, திருஞான சம்பந்தர் தீட்சிதர்களுடன் சேர்ந்து கொண்டு அப்பரை சிதம்பரம் கோவிலுக்கு விவாதத்திற்கு (ஒரு சதி திட்டத்துடன்) அழைத்தார். அப்பரை கோவிலுக்குள் வைத்து அக்னி பகவானுக்கு அளி(ழி)த்து விட்டு,வெளியே வந்து மக்களிடம், 'அப்பரை இறைவன் வந்து கூட அழைத்து சென்று விட்டார்' என்று கூறி விட்டார்கள். அது ஒரு 'சிதம்பர ரகசியம்'.
எல்லாம் அந்த எம்பெருமானுக்கே வெளிச்சம்!!!
சிங்'கை' பாண்டியன்
(ஒரு பாண்டியனும் இல்ல. விவ(கா)ரமான எல்லா விசயங்களும் தெரிஞ்சி வெச்சு இருக்குறதால, இவரு ஒரு விவ(கா)ரப் பாண்டியன்)
7/01/2008
பங்களிப்பு
நன்றாக வரிசைப்படுத்தி இருக்கீங்க, எனக்கு தெரிந்து ஒரு செடி விட்டு விட்டீர்கள். தொட்டாஞ்சிணிங்கி என்று ஒரு செடி, தொட்டவுடன் அந்த கிளையில் உள்ள அனைத்து சின்ன சின்ன இலைகளும் மூடிக்கொள்ளும், சின்ன வயதில் மணிக்க்கணக்கில் ஒரு அதிசயம் மாதிரி பார்த்துக் கொண்டு இருப்போம். This is the mimosa, also commonly known as 'touch-me-not'.
இன்னொரு செடி எனக்குப் பெயர் சரியாக தெரியவில்லை, ஆனால் அதனுடைய தண்டைக் கிள்ளி அதில் வரும் சற்றே வெள்ளை நிறத்தில் இருக்கும் அதன் சாற்றை பிண்ணூசி (Safety Pin) பின் புறத்தில் உள்ள சிறு துளையில் விட்டு ஊதினால் bubbles நன்றாக வரும். அதுவும் சிறு வயது விளையாட்டு மறக்க முடியாதது..
-- இரமேசு தியாகராசன்
சரியா சொன்னீங்க இரமேசு. நம்ப இட்டேரீலதான் எவ்வளவு சமாச்சாரம் இருக்கு?! அந்த பால்க்கொழுந்து தண்டு ஒடச்சி, பின்னூசில மொட்டு(குமிழி) விடறது சொன்னீங்க பாருங்க, அது அபாரம். ஓடி ஓடி, ஒடச்சி ஒடச்சி மொட்டு விடுவோம்... என்ன ஒரு சந்தோசம்?!
தும்பக்கொடி ஒடச்சி மூக்குல விட்டு, தும்மல் வர வெப்போம். பூவரச இலைய சுருட்டி, சீட்டி அடிப்போம். கத்தாழைல மணி-இந்துனு எழுதி அதுல சொகம் காணுவோம். இட்டேரீல நெறம் மாறற பச்சோந்திய பாக்குறதுல ஒரு சந்தோசம். தேன் எடுப்போம். சூரிப்பழம், கத்தாழைப்பழம், கள்ளிப்பழம், பிறண்டைப்பழம், கோவைப்பழம்னு பல ரகங்களப் பறிச்சு திம்போம். மொத்தத்துல இட்டேரீல ஓடித் திரிஞ்ச காலம், ஒரு வசந்த காலம்.