10/29/2008

அம்மினியும் பொன்னானும்......

கொங்குநாட்டுப் பிள்ளை, அன்பர் ராஜ நடராஜன் அவிங்களுக்கான வாசகர் விருப்பந்தானுங்க இன்னைக்கு நாம போடுற‌ பதிவு.

ஒரு நாள் பாருங்க, இராசக்கா பாளையம், இராச வாய்க்கால் போற வழில இருக்குற ஓட்டாங் குச்சிப் பள்ளத்துல ஒழிஞ்சிருந்து கஞ்சாக் குடிக்கறதுக்காக‌ ஒரு வயசுப் பொன்னான், பேரு தங்கவேலு, அங்க நின்னுட்டு இருக்குறான். அந்த சமயத்துல, வாய்க்காத் தண்ணி எடுத்துட்டுப் போறதுக்கு ஒரு வயசுப் பொண்ணு, பேரு சிவகாமி, அந்த வழியாப் போறா.

சிவகாமியப் பாத்த தங்கவேலுக்கு, இருப்பு கொள்ளல. சிவகாமி, நல்ல எடுப்பா, லட்சணமா இருக்குற பதனாறு வயசு அம்மினி. அப்படியே பேச்சுக் குடுத்து மடிக்கலாம்னு, தாகத்துக்கு தண்ணி கேக்குற மாதிரி வேலைய ஆரம்பிக்குறான் தங்கவேலு.

சிவகாமிக்கும், தங்கவேலன் மேல கொஞ்சம் இதுதான். அவனும் ஆள் நல்லா வாட்ட சாட்டமா இருப்பான். அவ மொகத்த நேராப் பாக்க முடியாம, ஒரு வெக்கத்துல குறுஞ் சிரிப்போட, வீட்டுக்கு வந்தியானா நல்ல குளுந்தண்ணி நாந்தாரேன்னு சொல்லி இராத்திரிக்கு வீட்டுப் பக்கம் வரச் சொல்லி கேட்டுக்குறா.

அவனும் இராத்திரி ஒம்பது, ஒம்பதரை வாக்குல அவுங்க வீடு இருக்குற வீதியில போயி காத்துகிட்டு இருக்குறான். சிவகாமிகூடப் பொறந்தது மொத்தம் ஏழு பேரு. இவதான் மூத்தவ. இவிங்க அம்மா இப்பவும் புள்ளத்தாச்சிதான், இப்ப பிரசவத்துக்காக அவிங்க அமுச்சி ஊரான சமுத்தூர்ல இருக்குறாங்க. இங்க இவதான் வீட்டப் பாத்துகுறது. இப்ப, ரெண்டு வயசான தன்னோட தம்பியத் தூங்க வெச்சிகிட்டு இருக்கா. ஆனா, அவந்தூங்குறான் இல்ல. இத‌ அவ‌னுக்குச் சொல்லுற‌துக்கு, அவ‌னைத் தூங்க‌ வெக்க‌ தாலாட்டுப் பாடுற‌ மாதிரி பாடி, அதுல‌ விச‌ய‌த்த‌ பொண்ணானுக்கு சொல்லுறா சிவ‌காமி.

இந்த சூழ்நிலையில தங்கவேலுவும், காதல் மயக்குத்துல வீதியில கெடந்து தவிக்குறான். இப்படியே வெடிஞ்சும் போகுது. இப்படி அவிங்களுக்குள்ள நடந்த பழமைகதான், இன்னைக்கு நாம சொல்லுற பாட்டு.


தங்கவேலு: ஓடற ஓட்டத்துல‌
ஓட்டாங்குச்சிப் பள்ளத்துல‌
கஞ்சாக் குடிக்கையில‌
கையூனி நிக்கையிலே
தங்கக் குடங்கொண்டு
தண்ணிக்குப் போற பொண்ணே
தங்கக் கையினாலே
தண்ணீருதான் குடுத்தா
ஆகாதோ?

சிவகாமி: வாய்க்காத் தண்ணியிலே
வண்டு வரும் தூசு வரும்
வீட்டுக்கு வந்தா நல்ல குளுந்
தண்ணியும் நாந்தருவேனே!

தங்கவேலு: வீடுந் தெரியாது வாசலுந் தெரியாது
வழியெனக்குத் தெரியாது, நான் அங்கயெப்படி
வருவேனடி வஞ்சிமலரே, வண்ணமயிலே?

சிவகாமி: ஒரு பத்தாஞ் செட்டி வீட்டோரம்
ரெண்டு தென்னம்பிள்ளை அடையாளம்
அதுக்கடியிலே ஒக்காந்திரு நான்வாரேன்!

தங்கவேலன் வந்த பொறகு:
பாலும் அடுப்புலதான்
பாலகனும் தொட்டிலிலேதான்
பால‌க‌னைப் பெத்தெடுத்த‌ எங்
க‌ப்ப‌னும் க‌ட்டிலிலேதான்
உன்ன‌ப் போக‌ச்சொன்னாப் பொல்லாப்பு
இருக்க‌ச் சொன்னா நிட்டூர‌ம்! (நிட்டூரம் - இடையூறு)

வெடிஞ்சதும் தங்கவேலன்:
கெழ‌க்கு வெளுத்தாச்சு
கீழ்வானம் கூடிப் போச்சு
க‌ண்ணாத்தா வாச‌லுலே
காத்திருந்து வீணாச்சு
இன்னாரு ம‌வ‌ளே!


அன்னைக்கு இதுதாங்க நடந்தது. அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் ஒன்னு சேந்து இருப்பாங்கன்னும் நம்புவோம். சிறு வயசுப் புள்ளைக எங்கயோ நல்லா இருந்தாச் சரிதான். நாஞ்சொல்லுறதும் சரிதானுங்களே?!

ஆத்துத்தண்ணி வந்து சேரும், காலமும் கூடி வரும்

அந்த ஓட்டு மக்களே?!

16 comments:

கூடுதுறை said...

நல்லாயிருக்குங்க...கதையோட கலந்த கவிதை...குறளோவியத்தை போல

Mahesh said...

அவிங்க கண்ணாலத்துக்கு உங்களுக்கு பத்திரிக்கை வெக்கலியா? நான் போய் மொய்யும் வெச்சுட்டு வந்தனே !!!

பழமைபேசி said...

//கூடுதுறை said...
நல்லாயிருக்குங்க...கதையோட கலந்த கவிதை...குறளோவியத்தை போல
//

வாங்க கூடுதுறையார், வணக்கம், நன்றி!

http://urupudaathathu.blogspot.com/ said...

ஏனுங்க எனக்கு ஏத்த மாதிரி எதுனா பாட்டு இருகுங்களா??

பழமைபேசி said...

//Mahesh said...
அவிங்க கண்ணாலத்துக்கு உங்களுக்கு பத்திரிக்கை வெக்கலியா? நான் போய் மொய்யும் வெச்சுட்டு வந்தனே !!!
//

ஆமாங்....போன வாரந்தான் மேட்டுக்கடை பாப்பாத்திய ஒரு தெரட்டில வச்சிப் பாத்தேன், அவ சொன்னா எல்லா வெபரமும்.... அவிங்களுக்கு ஒரு பையனாமா...எங்கயோ சீமைல இருக்கானுமுங்....என்னவோ பேரு சொன்னாளே....ஆங்....முருகேசனாமுங்க.....

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
ஏனுங்க எனக்கு ஏத்த மாதிரி எதுனா பாட்டு இருகுங்களா??
//
வாங்க உருப்புடாதது_அணிமா, வணக்கம், நன்றி!

ஆக, அடுத்த வாசகர் விருப்பம் வரணும்ங்றீங்க..... உங்களுக்கும் ஒன்னு ரெண்டொரு நாள்ல போட்டுட்டாப் போச்சு......

http://urupudaathathu.blogspot.com/ said...

வேகம்னா வேகம்.. எங்க பழமைபேசி வேகம் யாருக்கும் வராதுங்கன்னா

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

// ஏனுங்க எனக்கு ஏத்த மாதிரி எதுனா பாட்டு இருகுங்களா??//

அப்ப அங்க கஞ்சா குடிச்சது நீங்க இல்லயா

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...

// ஏனுங்க எனக்கு ஏத்த மாதிரி எதுனா பாட்டு இருகுங்களா??//

அப்ப அங்க கஞ்சா குடிச்சது நீங்க இல்லயா//

ஆகா, ஆகா, ஆகா.....

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
வேகம்னா வேகம்.. எங்க பழமைபேசி வேகம் யாருக்கும் வராதுங்கன்னா
//

ஆகா, ஆகா, ஆகா.....

Anonymous said...

இராவுல அவனும் அவளும் படித்தேன்.

// அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் ஒன்னு சேந்து இருப்பாங்கன்னும் நம்புவோம்.//

நம்பிக்கைதானே வாழ்க்கை.

வாழ்க வளமுடன் என வாழ்த்துவோமாக. கடைசி டச் இந்த வரிகள் தான்.
// ஆத்துத்தண்ணி வந்து சேரும், காலமும் கூடி வரும் //

நசரேயன் said...

கடைசி வரைக்கும் பொன்னன் கஞ்சியும் குடிக்கலை கஞ்சாவும் குடிக்கலை.
ரெம்ப சோகம்

பழமைபேசி said...

// நசரேயன் said...
கடைசி வரைக்கும் பொன்னன் கஞ்சியும் குடிக்கலை கஞ்சாவும் குடிக்கலை.
ரெம்ப சோகம்
//

இது நல்லா இருக்கு....

ராஜ நடராஜன் said...

பழம வணக்கமுங்கோ!உங்க கிட்ட பாட்டக் கேட்டா பாட்டோட சேத்து எனக்குப் பதிவும் போட்டிட்டீங்களாக்கும்:)

இம்புட்டுச் சரக்கத் தலைக்குள்ள வச்சிகிட்டு அம்புட்டுத் தூரம் ஏன்தான் போனீங்களோ.பக்கத்துலதானே கோடம்பாக்கம் இருந்துச்சு.1 மணி கோயம்புத்தூர் ட்ரெயினப் புடிச்சிருந்தா ராவுல டவுனுக்குப் போயி சேந்து காத்தால இளயராசாவப் பாத்திருக்கலாமுல்ல.

(பழம பாட்டுகளையெல்லாம் காப்புரிமை செய்து வையுங்க.இல்லாட்டி யாராவது சினிமாவுக்கு களவாடிட்டுப் போயிடுவாங்க)

ராஜ நடராஜன் said...

//உன்ன‌ப் போக‌ச்சொன்னாப் பொல்லாப்பு
இருக்க‌ச் சொன்னா நிட்டூர‌ம்! (நிட்டூரம் - இடையூறு)//

ஆகா!ஆகா! பழசுக்கெல்லாம் மனம் பரபரக்குதே:)

இன்று தமிழில் கற்றுக்கொண்ட புதிய வார்த்தை நிட்டூரம்.

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
பழம வணக்கமுங்கோ!உங்க கிட்ட பாட்டக் கேட்டா பாட்டோட சேத்து எனக்குப் பதிவும் போட்டிட்டீங்களாக்கும்:)
//

ஆமா, நீங்க சொன்னதுக்கப்புறம் விட்டுட முடியுமா?