7/30/2011

இஃகி இஃகி - 1

கோடி
விண்மீன்கள்
ஒன்று கூடி
நின்றாலும்
ஒரு கதிரவன்
ஆக இயலாது!

#அமெரிக்க வெள்ளி

--------------------

புதைத்த குழந்தைக்காய்
அழுகின்றார்
பெற்றோர்!

புதைத்த
கூலிக்காய்
அழுகின்றான்
வெட்டியான்!!

இடையில்
புகுந்து
ஆட்டையைப்
போட்டது
எவரோ?!

#அரசியல்

-----------------------

கங்கையில்
மூழ்காமலே
கோட்டான்
அன்னமானது

இருந்த
காகம்
இறைத்தன
பொறுக்கப் போய்விட்டதால்!!

#வாசகர் சிந்தனைக்கு

----------------------------

புயலிடம்
ஓங்கி வளர்ந்த
மரங்களுக்கு அச்சம்!

தரைப்புல்லுக்கு
ஒருபோதும்
அச்சமென்பது
கிடையாதே!!

#திமுக தொண்டன்

----------------------------
முடியாது
என்பதும்
இயலாது
என்பதும்
வேறு வேறு!
ஒத்தன அல்ல!!

#தமிழ்

7/29/2011

முனைவர் மு.இளங்கோவன் சொல்வீச்சு

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் -என்றன்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் -வாழ்வு

கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நிலை யுற்றாலும் -மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மக ளின்துயர்
துடைக்க மறப்பேனா?

நோயில் இருந்து மயங்கி வளைந்து
நுடங்கி விழுந்தாலும் -ஓலைப்
பாயில் நெளிந்து மரண மடைந்து
பாடையில் ஊர்ந்தாலும் -காட்டுத்

தீயில் அவிந்து புனலில் அழிந்து
சிதைந்து முடிந்தாலும் -என்றன்
தாயின் இனிய தமிழ்மொழி யின்துயர்
தாங்க மறப்பேனா?

பட்ட மளித்துப் பதவி கொடுத்தொரு
பக்கம் இழுத்தாலும் -ஆள்வோர்
கட்டி அணைத்தொரு முத்த மளித்துக்
கால்கை பிடித்தாலும் -எனைத்

தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்
தோழமை கொண்டாலும் -அந்த
வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை
வீழ்த்த மறப்பேனா?

--கவிஞர் காசி ஆனந்தன்.

7/25/2011

இடை வளையாட்டம்

இன்றைய மாலை, ஒரு மகிழ்வான மாலை. காலியர்வில் (Collierville, TN) ஏரியைச் சுற்றி கிட்டத்தட்ட இரண்டு மைல் தூரம் நல்ல ஓட்டம். ஓடி முடிந்ததும் கிடைக்குற சுகமே சுகம்!!

பிறகு வீட்டுக்கு வந்தா, மகளுக்கு ஒரே கொண்டாட்டம். பிடிபடாம இருந்த, இடையைப் பருதியால் சுற்றும் நயம் பிடிபட்டிடுச்சுன்னு அவங்களுக்கு ஒரே மகிழ்ச்சி! மகிழ்ச்சி!! மகிழ்ச்சி!!!



இடையில் வளையமிட்டு, இடையில் பரிதியோ என வியக்கும் வண்ணம் இலாவகமாக ஆடும் ஆட்டம், Hula Hoop எனப்படுகிறது. நீங்களும் நயம் பிடிபடப் பயிற்சி செய்ய வேண்டுமா? இதோ, இக்காணொலியைக் காணுங்கள்.


பயிற்சிக்குப் படியாதது பாழ்!!!

7/20/2011

பில்ட்மோர் பண்ணையகம் - எழில் கொஞ்சும் படங்கள்

அரசி நகராம் சார்லட் நகரில் இருந்து, மிசிசிபி ஆற்றங்கரையாரத்திற்கு இடப்பெயர்வு நிகழும் தருவாயில், வட கரொலைனா மாகாணத்தின் பில்ட்மோர் காடுகளில் இருக்கும் பில்ட்மோர் பண்ணையகத்திற்குச் சென்று தங்கும் ஒரு வாய்ப்புக் கிட்டியது.

இந்த பண்ணையகமானது, George Washington Vanderbilt II என்பாரால் 1889க்கும் 1895க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட, தனியாருக்குச் சொந்தமான, அமெரிக்காவின் மிகப்பெரிய வீடாகும். 250 அறைகளும், கிட்டத்தட்ட 70 கூடங்களும், நீச்சல் குளம் உள்ளிட்ட சகல வசதிகள், கிட்டத்தட்ட 8000 ஏக்கர் பரப்பளவிலான சோலை வனங்கள் கொண்டதாகும் இப்பண்ணை வீடு.

இரு நாட்கள் தங்கி இருந்து பெற்ற அனுபவத்தை அடுத்தடுத்த இடுகைகளில் காணலாம். இப்போதைக்கு, கீழ்க்கண்ட கவின்மிகு காட்சிப் படங்களைக் கண்டு களியுங்கள்!!

நகர்ச்சில்லுகளைச் சொடுக்கி, பெரிய அளவில் காணவும்!!



7/11/2011

பேரவைத் திருவிழா - கூடுதல் படங்கள்











சுட்டிகளைச் சொடுக்கி, படங்களைப் பெரிய அளவில் பாருங்கள்!!

படங்கள் உதவி

திரு.கண்ணன் அவர்கள், பனைநில தமிழ்ச்சங்கம், தென்கரோலைனா.

7/10/2011

சினேகம்


கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ
கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ

நெல்லி மரமே நெல்லி மரமே
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்து கூடுகட்ட
இடம் தராயோ நீ?

நான் தரலை நான் தரலை
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்துக்கு கூடுகட்ட
இடம் தரலை நான்

கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ
கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ

தேக்கு மரமே தேக்கு மரமே
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்து கூடுகட்ட
இடம் தராயோ நீ?

நான் தரலை நான் தரலை
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்துக்கு கூடுகட்ட
இடம் தரலை நான்

கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ
கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ

பலா மரமே பலா மரமே
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்து கூடுகட்ட
இடம் தராயோ நீ?

நான் தரலை நான் தரலை
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்து கூடுகட்ட
இடம் தரலை நான்

கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ
கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ

வாழை மரமே வாழை மரமே
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்து கூடுகட்ட
இடம் தராயோ நீ?

நான் தருகிறேன் நான் தருகிறேன்
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்து கூடுகட்ட
இடம் தருகிறேன் நான்

காற்றும் வந்து இடியும் இடித்து
மழையும் பெயததே
அய்யோ பாவம் நெல்லி மரம்
முறிந்து வீழ்ந்ததோ

காற்றும் வந்து இடியும் இடித்து
மழையும் பெயததே
அய்யோ பாவம் தேக்கு மரமும்
முறிந்து வீழ்ந்ததோ

காற்றும் வந்து இடியும் இடித்து
மழையும் பெயததே
அய்யோ பாவம் பலா மரமும்
முறிந்து வீழ்ந்ததோ

காற்றும் போயி
இடியும் போயி
மழையும் போனதே
சினேகம் உள்ள வாழைமரத்தை
தெய்வம் காத்ததே!

சினேகம் உள்ள வாழைமரத்தை
தெய்வம் காத்ததே!!

தமிழாக்கம்: பழமைபேசி
பாடியது: திருமகள் பழமைபேசிக்காக, திருமதி பழமைபேசி.


இனிமைத் தமிழ்மொழி

வாழ்வில் எப்போதும் இன்புற்றிருக்க முடிகிறதா? என்னதான் நாம் அகம் காத்து இனிமை போற்றினாலும் கூட, அவ்வப்போது வேண்டாத அல்லனவை நம்மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. அப்படித்தான் யானும் ஏதோ ஒரு காரணத்தால் அகத்தாக்குதலுக்கு ஆட்பட்டு இருந்த வேளையது.

“இந்தாங்க, இதுல இருக்குற பாடல்களைக் கேளுங்க.. எல்லாம் தெளியும்” எனச் சொல்லி நகர்ந்தாள். மனையாள் சொல்லி, அதற்கு உடனே செவிமடுத்தால் என்னாவது?! கிருதா எகிறியது. சிறிது நேரங்கழித்தே அவள் கொடுத்த குறுவட்டுப் பேழையை அவதானிக்கலானேன்.

இனிமைத் தமிழிமொழி எனும் முகப்பு மொழியுடன் கூடிய அழகான அட்டைப்படக் காட்சியானது எம்முள் ஒருவித மலர்ச்சியை உண்டு செய்தது. பேழையின் பின்பக்கத்தை நோக்கினேன். இன்ப அதிர்ச்சியில் மெய்மறந்தேன்.

ஆம், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் இலச்சினை இருப்பதன் மூலம், இக்குறுவட்டானது பேரவையின் விழாவில் கையளிக்கப்பட்டிருக்கிறது எனத் தெரியவருகிறது. திருவிழாவின் போழ்து, மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, இணைய வர்ணனை அளிப்பது, இணையரங்குகளில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது, விருந்தினரைக் கவனிப்பது என அங்குமிங்குமாய் இருந்தநிலையில் இக்குறுவட்டினைக் கவனிக்க இயலாது போய்விட்டிருக்கிறது போலும்.

பேழையைத் திறந்ததும், அதனுள் கையடக்க குறுநூல் ஒன்று சொருகப்பட்டு இருக்கக் கண்டேன். தரம்மிகு, நயம்மிகு நூலது. உள்ளீடாக, தெளிதமிழில் தமிழிசைத் தேனமுதத்திற்கான முன்னுரை. அதைத் தொடர்ந்து முத்தான தமிழ்ப் பாடல்கள் பத்து.

ஒவ்வொரு பாடலுக்கும் அமிழ்தாய்த் தலைப்பு, இணைப்புரை, தீந்தமிழ்ப்பாடல், ஆங்கிலத்தில் சுருக்கவுரை என மிக நேர்த்தியாக தொகுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பாடற்பகுதியையும் ஓரிரு முறை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். பிறகு பதினைந்தாம் இலக்கம் இட்ட பகுதிக்குள் வாசிப்பின் மூலம் நுழைகிறேன்.

மீண்டும் பேரின்ப அதிர்ச்சி எம்முள். இந்த அரிய படைப்பினை நமக்களித்திருப்பது கெழுமைமிகு நண்பர் பொற்செழியன் அவர்கள் எனத் தெரிய வருகிறது. உற்சாகமிகுதியுடன் குறுவட்டினைக் கணினியில் இட்டு இசைக்கச் செய்கிறேன்.

சென்ற ஆண்டு தமிழ்விழாவில் கேட்டு இன்புற்ற அதே குரல். அறவாழி இராமசாமி அய்யா அவர்களின் தமிழ்வீச்சு தேனாய்ப் பாய்கிறது. முன்னுரை கேட்ட ஒரு மணித்துளியில், இயற்கையைச் சிலாகித்தபடியே இணைப்புரை. கேட்ட தெளிதமிழில் சொக்கிப் போகிறேன்.

ஈரோடிலிருந்து கிட்டத்தட்ட எட்டு கல் தொலைவில் இருக்கும் திருநணா(கூடுதுறை)வில் இருக்கும் காயத்திரிமடுவின் அண்மையில், அந்த படித்துறையில் நின்று நோக்கின் பொன்னியானவள் எழிலாய் ஒருபக்கம் வளைந்து நெளிந்து வருவாள். மறுபக்கம் பார்த்தால், பவானி ஒயிலாய் வந்து உடன் சேர்வாள். நிலத்தடியில் இருந்து அமுதநதி சுரந்து வந்து பொன்னியோடு கலப்பாள். பார்க்கப் பார்க்க பரவசமாய் இருக்கும். கொங்குக்கு அமைந்த ஒரு சிறப்பு அது.

அதைப் போல எம் தமிழும், இன்னிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்களது இசையும், நம்மவர்கள் அமுதயாழினி, நம்பி பொற்செழியன் குரலும் முக்கூடலாய்க் கலந்து கற்கண்டொடு கலந்த தேனாய்ப் பாய்கிறது நம் செவியுள். ஞாயிறு, திங்கள், மாமழை, பூம்புகார் என இயற்கையின் கூறுகளான நீர், நெருப்பு, காற்று, மண் முதலானவற்றைப் போற்றிப் பாடும் செந்தமிழ்ப்பாடல் ஒன்று. மெய்மறந்தேன். செந்தமிழால் தேனிசைக் கடலில் முக்கிக் குளித்தவனாயினேன்.

ஐந்து பாடல்களைக் கேட்டு முடிக்கும் வரையில், என்னைச் சுற்றி நடப்பது யாதொன்றும் யானறிந்திருக்கவில்லை. மெல்ல என்நிலை அறிந்தேன். செய்த முதற்செயல், அன்பர் பொற்செழியனை அழைத்துப் பாராட்டியதுதான். மனதாரப் பாராட்டி உவப்பெய்தினேன்.

எஞ்சிய பாடல்களையும் பலமுறை கேட்டு மகிழ்ந்தேன். அனைத்துமே முத்தான பாடல்கள். அகத்திற்குச் சுகமும், சிந்தனைக்கு விருந்துமாய் அமைந்திருக்கின்றன. அதன் தாக்கத்தில் இருந்து விடுபட நெடுநேரமானது. அவர்களுடைய அனுமதியின்றியே ஒருபாடலை வலையேற்றி இருக்கிறேன். ஆர்வமிகுதியால் நேர்ந்த அத்துமீறலை நண்பர் பொற்செழியன் ஏற்றுக்கொள்வார் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதோ அந்தப் பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.
நண்பர் பொற்செழியன், இன்னிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன், பாடகர்கள் அமுதயாழினி மற்றும் நம்பி பொற்செழியன், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.

எனக்கு இன்னும் சில படிகள் வேண்டுமென யாத்திருக்கிறேன். வாழ்க தமிழ்! வளர்க அவர்தம் தொண்டு!!