6/09/2026
வரலாறும் இயற்கையும் பிணைந்திருக்கும் சல்லிவன்தீவு
தென்கரோலினாவின் கீழைப் பகுதியில் (Lowcountry), அட்லாண்டிக் பெருங்கடலும் வரலாற்றுச்சிறப்புமிக்க சார்லஸ்டன் துறைமுகமும் இணையும் இடத்தில் சல்லிவன்தீவு அமைந்துள்ளது. சுமார் மூன்றரை சதுர மைல் பரப்பளவே கொண்ட இந்த சிறிய தீவுக்கடற்கரை, வணிகமயமாக்கப்பட்ட பிற சுற்றுலாத் தலங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, தனித்துவமான அமைதியுடன் திகழ்கிறது. சல்லிவன்தீவு கடற்கரை (Sullivan’s Island Beach) என்பது வெறும் பொழுதுபோக்குத் தலம் மட்டுமல்ல; அது இயற்கை எழில், இலக்கியத் தடம் , அமெரிக்க வரலாற்றின் ஆழமான பக்கங்களை உள்ளடக்கிய ஒரு வாழ்வியல் களமாகும்.
சல்லிவன்தீவு கடற்கரையின் முதன்மை ஈர்ப்பு, அதன் சிதையாத இயற்கை அழகுதான். 3.5 மைல் நீளமுள்ள இந்த கடற்கரையில் உயரமான அடுக்குமாடி விடுதிகளோ, வணிக வளாகங்களோ அல்லது பொழுதுபோக்கு மேடைகளோ கிடையாது. கடற்கரையோர கடல்க்காடுகள் (maritime forest), மணல் மேடுகள் , தாவரங்கள் அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உள்ளூர் நிர்வாகத்தின் தொலைநோக்கு சட்டங்களே இதற்குக் காரணம்.
இங்கு வரும் பார்வையாளர்கள் "ஸ்டேஷன்ஸ்" என்று அழைக்கப்படும் அழகிய பொதுப்பாதைகள் வழியாகவே கடற்கரையை அடைய முடியும். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கு இயங்கிய மின்சார டிராம் வண்டியின் நிறுத்தங்களை நினைவூட்டும் விதமாக இப்பெயர்கள் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. வணிக இரைச்சல்கள் இல்லாததால், அட்லாண்டிக் கடலின் அலை ஓசைக்கு நடுவே அமைதியான, தனிப்பட்ட கடற்கரையில் இருப்பது போன்ற உணர்வை இது தருகிறது. மேலும், இங்கு வீசும் தொடர்ச்சியான கடல்காற்று கைட்போர்டிங், படகோட்டம் போன்ற நீர்விளையாட்டுகளுக்கு மிகவும் உகந்ததாக உள்ளது.
இயற்கை எழிலைத் தாண்டி, அமெரிக்க வரலாற்றில் சல்லிவன்தீவிற்கு மிக முக்கிய இடமுண்டு. இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக, சார்லஸ்டன் துறைமுகத்தின் முதன்மைப் பாதுகாப்பு அரணாக இத்தீவு விளங்கியது. இக்கடற்கரையின் மேற்கு முனையில் புகழ்பெற்ற 'மவுல்ட்ரி கோட்டை ' அமைந்துள்ளது. 1776-ஆம் ஆண்டு அமெரிக்க புரட்சிப் போரின்போது, பனைமரக் கட்டைகளாலும் மணலாலும் அவசரமாகக் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, பிரிட்டிஷ் படைகளின் பீரங்கித் தாக்குதல்களைத் தாங்கி நின்று வியக்கத்தக்க வெற்றியைப் பெற்றது. இந்த வரலாற்று நிகழ்வே தென் கரோலினா மாநிலத்திற்கு "பனை மாநிலம்" என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.
அதே வேளையில், இக்கடற்கரை ஒரு சோகமான வரலாற்றுப் பக்கத்தையும் கொண்டுள்ளது. 18-ஆம் நூற்றாண்டில், ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட மனிதர்களுக்கான முதன்மைத் தனிமைப்படுத்தல் முகாம்களாக இத்தீவு செயல்பட்டது. வட அமெரிக்காவிற்குள் நுழைந்த ஆப்பிரிக்க அடிமைகளில் சுமார் 40 சதவீதத்தினர் இத்தீவின் வழியாகவே கொண்டு செல்லப்பட்டனர்ரென வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்தத் துயரத்தை நினைவுகூரும் வகையிலும், முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் டோனி மோரிசன் சங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு நினைவு இருக்கைப்பலகை இன்றும் கடற்கரையின் அருகே அமைந்துள்ளது. அதன் அருகே நின்றபோது, உணர்வுப் பெருக்கின் நிமித்தம் நம் உடலும் சற்று நடுக்கம் கண்டது.
இத்தீவின் தனித்துவமான சூழல், அமெரிக்க இலக்கிய உலகிலும் தடம் பதித்துள்ளது. 1820-களின் பிற்பகுதியில், புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் Edgar Allan Poe அவர்கள் இராணுவ வீரராக இக்கோட்டையில் பணியாற்றினார். இத்தீவின் அடர்ந்த காடுகளும் கடற்கரைச் சூழலும் அவரைப் பெரிதும் ஈர்த்தன. இதன் தாக்கத்தால், அவர் எழுதிய புகழ்பெற்ற The Gold Bug என்ற கதையின் பின்னணியாக சல்லிவன் தீவையே அமைத்தார். இன்றும் இத்தீவின் நூலகம் ஒரு பழைய இராணுவக் கிடங்கிற்குள் அமைந்திருப்பதுடன், அவரது இலக்கிய நினைவுகளைத் தாங்கி நிற்கிறது.
மாலை வேளையில் இக்கடற்கரையிலிருந்து பார்க்கும் வானம் ஒரு தூரிகை ஓவியம் போலக் காட்சியளிக்கும். தூரத்தில் தெரியும் வரலாற்றுச் சிறப்புமிக்க Fort Sumter, மாரிஸ்த்தீவு கலங்கரை விளக்கம் , நவீனப் பொறியியலின் சான்றாக விளங்கும் ஆர்தர் ரேவெனல் ஜூனியர் பாலம் ஆகியவை கண்கொள்ளாக் காட்சியாகும். கடற்கரையிலிருந்து சில அடிகள் தள்ளியுள்ள Middle Street பகுதியில் உள்ளூர் உணவகங்களும் கடைகளும் அமைந்துள்ளன.
சல்லிவன்தீவு கடற்கரை என்பது வணிகமயமாக்கலைத் தவிர்த்து, வரலாற்றையும் இயற்கையையும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு அரிய கடற்கரையாகும். புரட்சிப் போரின் வீரம், அடிமைத்துவத்தின் வலி, இலக்கியவாதிகளின் கற்பனை எனப் பல பரிமாணங்களைக் கொண்ட இந்த கடற்கரை, தன்னை நாடி வரும் பார்வையாளர்களுக்கு வெறும் மனமகிழ்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல், காலத்தைக் கடந்த ஒரு வரலாற்றுப் பயணத்தையும் வழங்குகிறது.
𝑺𝒐𝒎𝒆 𝒑𝒍𝒂𝒄𝒆𝒔 𝒅𝒐𝒏'𝒕 𝒋𝒖𝒔𝒕 𝒕𝒂𝒌𝒆 𝒚𝒐𝒖𝒓 𝒃𝒓𝒆𝒂𝒕𝒉 𝒂𝒘𝒂𝒚; 𝒕𝒉𝒆𝒚 𝒈𝒊𝒗𝒆 𝒊𝒕 𝒃𝒂𝒄𝒌. 𝑺𝒖𝒍𝒍𝒊𝒗𝒂𝒏'𝒔 𝑰𝒔𝒍𝒂𝒏𝒅 .
-பழமைபேசி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment