6/08/2022

நம்ம ஊர் தபால் பெட்டியும் தபால்காரரும்!

அழகிய அந்த ஊரில் வசிக்கும் மனிதர்களுக்கு, வெளியுலகச் செய்திகளைக் கொண்டு சேர்ப்பதில் அந்த தபால் நிலையத்தின் பங்கு முக்கியமானது. முகவரிகளைத் தாங்கி வரும் தபால்களைக் கொண்டு சேர்ப்பதில் தபால்காரர் கெட்டிக்காரர். அந்தத் தபால் நிலையத்திற்கு, ஊரின் பெயரை மட்டும் முகவரியாகக் கொண்ட கடிதம் ஒன்று வந்தது.. யாரிடம் இருந்து வந்ததெனும் தகவல் அதில் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் அது ஒரு  “மொட்டைக் கடுதாசி”.

கெட்டிக்காரத் தபால்காரருக்கு அதை என்ன செய்யலாமெனும் யோசனை கோலோச்சியது. அவர்தான் கெட்டிக்காரர் ஆயிற்றே?! ”தம்வேலைகடிதத்தைக் கொண்டு சேர்ப்பது மட்டும்தானே?” என்ற எண்ணம் கொண்டவராகத் தனது தலையை வலது புறம் திருப்பி, தபால் நிலையத்தின் மூலையைப் பார்த்தார். அப்போது அதனைக் கண்டதும் அவரின் மூளை வேகமாகச் சிந்தித்தது.

வலது மூலையில் இருக்கும் நகல் இயந்திரம்(Xerox photocopier machine)தான், அவரின் வலது மூளையைச் சிந்திக்க வைத்தது. அந்த மொட்டைக் கடிதாசியை உடனே ஊரில் உள்ள அனைவருக்கும் நகல் எடுத்துச் சென்று சேர்ப்பதாக முடிவெடுத்தார். அதன்படியும் செய்தார்.

முதன்முறையாக மொட்டக் கடுதாசியைக் கண்ட கிராமத்தவரும், அது தங்களுக்கு வந்த கடிதமாக பாவித்தனர். ஒருவரும் கேள்வி கேட்கவில்லை.

ஒரு நாள் வந்த மொட்டைக் கடுதாசி, வாரம் ஒன்றாக வந்தது. பின்னர்,  வாரம் ஒன்றாக வந்த மொட்டைக் கடுதாசி நாளுக்கு ஒன்றாக வந்தது. நம்ம கடமை தவறாத தபால்காரர், அந்த முகவரியற்ற மொட்டைக் கடுதாசியை நகலெடுப்பதும் அதனை அனைவர் வீட்டில் கொண்டு சேர்ப்பதுவுமாகத் தவறாது செய்தார். 

”இப்படி முகவரி அற்ற மொட்டை கடுதாசியை ஏன் அய்யா கொண்டு தருகிறீர்கள்?” என்று ஒருநாள் அந்த கிராமத்தில் உள்ள ஒருவர் கேட்டார். உடனே அந்தத் தபால்காரருக்கு வந்ததே கோபம்? ”உனக்கெல்லாம் ஒரு செய்தியை நகலெடுத்துக் கொண்டு வந்து சேர்க்கிறேன். அதனைப் பாராட்டாமல் என்னையா கேள்வி கேட்கிறாய்? மடையா, முட்டாள்!” எனக் கத்தலானார். ”உனக்கு வேண்டாமானால், அதனைப் புறந்தள்ளு, கிழித்து எறி. என்னைப்பார்த்து கேள்வி கேட்கிறாய், நீ ஒரு அடாவடி, பன்னாடை” என்றெல்லாம் இன்னும் ஆவேசமாகக் கத்தினார்.

சத்தம் கேட்டுக் கூடிய கூட்டத்தில் இருந்து ஒருவர் சொன்னார், நல்ல சண்டையென்று!  இன்னொருவர் சொன்னார், ஆமாம், இவன்களுக்கு வேறு வேலையே இல்லையென்று.

இப்படியான கதையில், மொட்டைக் கடுதாசியை எழுதுபவர் யாரென்று இன்று வரையிலும் கண்டு பிடிக்கவுமில்லை? மொட்டைக் கடுதாசியை நகலெடுப்பதைத் தவறெனச் சொல்லவும் யாரும் முன் வரவில்லை! அந்த மொட்டைக் கடுதாசியில் ஏன் ஒற்றைப் படையான, ஒருசார்புச் செய்திகளே வருகின்றதெனவும் எவரும் கேட்கவில்லை. ஆனால் தபால்காருக்கு ஒரு விருது தருவார்கள் என்பது மட்டும் நிதர்சனம். பொறுத்திருந்து பார்த்தால் அதுவும் நடக்கும். இப்படியான கதையை எழுதியவர் சிந்தனை உணர்வாளர் சிக்காகோ சரவணன் என்பார். இதைச் சொல்லாவிட்டால், எனக்கும் ஃபார்வர்டு பத்மநாபன்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்தானே?!


No comments: