6/02/2022

FeTNA:தேர்தல் முடிவுகள் கண்ணோட்டம்

வட அமெரிக்காவெங்கும் இருக்கின்ற தமிழர்களின் படியாட்கள் பங்குபெற்ற ஒரு தேர்தல் இது. இலாபநோக்கற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் மிக நேரத்தியாக நடத்தப்பட்ட தேர்தல் என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.

நடத்தப்பட்டதில் இருந்த நேர்த்தி, பங்கு கொண்டவர்களிடத்தில் இருந்ததாயென்றால், இல்லை என்பதுதான் நம் பார்வையாக இருக்கின்றது. ஏன்? பங்குபெற்ற இரு அணிகளுக்கு வாக்களித்தவர்களும், தத்தம் விருப்பு வெறுப்புகள், வேட்பாளர்களின் தற்குறிப்பு, விளம்பரங்கள், பரிந்துரைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுதாம் வாக்களித்திருக்கின்றனர். அதை எப்படி உறுதிபடச் சொல்லமுடியும்? கலந்துரையாடற்கூட்டங்கள் நடக்கின்றன. அமைப்பின் பணிகளை, கடந்தகாலத்தை, எதிர்காலத்திட்டங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு நாடி வந்தவர்கள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. 

தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தன? மொத்தம் பதிவான வாக்குகள் 238. பேரவை காப்போம் அணிக்குப் பதிவான ஆகக்குறைந்த ஓட்டுகள் 102. பேரவை வளர்ச்சி அணிக்குப் பதிவான ஆகக்குறைந்த ஓட்டுகள் 108. இரு அணி வேட்பாளர்களுக்கும் கலந்து வாக்களித்தவர்கள் 28. ஆக இரு அணிகளும் சமபலத்தில் இருந்தன என்பதுதாம் என் புரிதல். மிகவும் அணுக்கமான தேர்தல்.

https://drive.google.com/file/d/1vauenlGZScDsMUKThi2wrcCDUcE-wbXo/view?usp=sharing

அன்றாடமும் அமெரிக்காவின் ஏதோவொரு மூலையில் ஏதோவொரு தேர்தல் நடந்து கொண்டேயிருக்கும். இது ஒரு தேர்தல்நாடு. மக்களாட்சியின் உயிர்மூச்சு என்பதே தேர்தல்தாம். வீட்டு உரிமையாளர் சங்கங்களுக்கான தேர்தல், இலாபநோக்கற்ற தொண்டமைப்புகளின் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல், மாநிலத் தேர்தல், ஒன்றியத்தேர்தலென தேர்தல்கள் இடம் பெற்றுக் கொண்டே இருக்கும். அப்படியான ஒரு நாட்டில் இருக்கும் நாம், தேர்தல்களை எதிர்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, நான் ஒரு தமிழ்ச்சங்கத்தின் பேராளன்(delegate). இந்தத் தேர்தலில் கலந்து கொள்கின்றேன். செயலாளர் பொறுப்புக்கு இரு வேட்பாளர்கள். இருவரும் வாக்குறுதிகள் அளிக்கின்றனர். ஏதோவொன்றின் அடிப்படையில் வாக்களிக்கின்றேன். ஒருவர் தெரிவாகின்றார். அவர் அவரது வாக்குறுதிக்கொப்ப நடந்து கொள்கின்றாரா? கவனிக்க வேண்டியது என் கடமை. இந்த இரண்டு ஆண்டுகளில் நான் பேராளர் பொறுப்பிலிருந்து விடுபட்டுக் கொள்கின்றேன். அடுத்த பேராளரிடம் என்னிடம் இருக்கும் தகவல், விபரங்களை முறைப்படி கையளிக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான், அவர் மீண்டும் தேர்தலில் பங்கு கொள்கின்ற போது, எடை போட்டுப் பார்க்க இயலும்.

தேர்தல்கள் இடம் பெறுவதும் பங்கு கொள்வதும் முன்னேற்றத்துக்கான அறிகுறி; ஆனால் அது முதற்படி. அடுத்ததாக அதை முறைப்படி பயன்படுத்திக் கொள்வதுதாம் உயர்வுக்கு இட்டுச் செல்லும். இப்படித்தான் நண்பர் ஒருவர் ஆவேசமாகப் பேசினார். பேரவையில் இருக்கும் ஆயுள் உறுப்பினர்களுக்கான ஓட்டுரிமையைப் பறிக்க வேண்டுமென்றார். அப்படியானால், பேரவையின் தொடர்ச்சியை, கட்டமைப்பின் இருப்பை, இயக்கத்தைப் பேணுவது யார் என்றேன். தமிழ்ச்சங்கங்கள் பார்த்துக் கொள்ளும் என்றார். அவர்கள் ஆண்டுக்கொருமுறை, ஈராண்டுகளுக்கொருமுறை மாறிக்கொண்டே இருப்பரேயென்றேன். செயலாக்கமுறையை(process)க் கட்டமைத்து விட்டால், அதன்படி அது இயங்கிக் கொண்டிருக்குமென்றார். அப்படியான முறைமையைக் கட்டமைப்பதும், கட்டமைத்தபின் அதிலிருந்து பிறழ்வதைக் கண்காணிப்பதும் யாரென்றேன். தமிழ்ச்சங்கம், பேரவைப் பொதுக்குழுக் கூட்டங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை எப்படியாக இருக்கின்றதென்றேன். பதிலில்லை. கூட்டங்களுக்கு இயன்றவரை வரப்பழக வேண்டும்; அல்லாவிடில் பொறுப்பைக் கைவிடுதல் நன்றாம்.

கேளிக்கையாகத் தேர்தலில் பங்கு கொண்டுவிட்டு, பேரவையின்பால் நாட்டம் கொண்டு வினாத் தொடுப்பவர்களைக் கண்டு முகஞ்சுழிப்பதெல்லாம் நல்ல பண்பாக இருக்காது. மாறாக, அதனின்று கற்றுக் கொள்ள முயலவேண்டும். செயலாக்கங்கள் நிமித்தம் தத்தம் கருத்துகளை முன்வைத்துப் போட்டியிட முன்வர வேண்டும். அல்லாவிடில், ’அண்ணஞ்சொல்றார் தம்பி செய்கின்றான்’ எனும் போக்குத்தான் மிகும். வெற்றிக்கான களம் மட்டுமேயல்ல தேர்தல்கள். மாற்றுச்சிந்தனைகளை விதைப்பதற்கான களமும்தான் தேர்தல்கள்.

பேரவை என்பது ஒரு பண்பாட்டியக்கம். தமிழ் கொண்டு புழங்குவதுதாம் அதன் அடிப்படை. தமிழ் என்றால் அதனுள் எல்லாமும் அடக்கம்; தமிழ்க்கலை, இலக்கியம், மரபு, தொன்மை எல்லாமும். தேர்தல் நிமித்தம் மின்னஞ்சல்கள் வருவதும் போவதுமாக இருக்கின்றன. அதனை எதிர்மறையாகப் பார்க்கத் தேவையில்லை. அவற்றுள் கற்றுக்கொள்வதற்கு ஏராளமாக இருக்கின்றன. தனிமனிதத் தாக்குதல்கள், நெகடிவ் என்றெல்லாம் சொல்லி அகங்கலாய்த்துக் கொள்கின்றனர். இருக்கட்டுமே? அப்படியான செயலை நாம் செய்யக் கூடாதென உணர்வதும்கூட ஒரு படிப்பினைதானே? என் மீது காழ்ப்புக் கொள்வதையெல்லாம் நான் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. அது அவரின் குறைபாடு. இஃகிஃகி. 

ஒருவர் மடல் இடுகின்றார். மற்றொருவர் பதிலுரைக்கின்றார். நீங்கள் ஏன் பதிலுரைக்கின்றீர்களென வினவுகின்றார் மடலிட்டவர். பதிலுரைத்தவர் சொன்னதைக் குடும்பத்தினரிடம் சொல்லிக் காண்பிக்கின்றேன். தமிழை நுகர்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு. மேலும் அந்த பதிலில் இருந்த சொல்நயமும் கருத்துநயமும் அவர்களை வியப்பில் ஆழ்த்துகின்றது.

இக்கடிதம்

எனக்கு வந்தது

எனக்கும் வந்தது

அதனால் இந்த பதில்!

இல்லையென்றால்

இல்லை என் பதில்!!

பேரவை விழாக்களின் வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும். விழா முடிந்து வீடு திரும்பும் தருணத்தில், மனத்தில் பாரமேகிப் போகும். அழுகை அழுகையாக வரும். ஏன்? புலம்பெயர்ந்த மண்ணில் தாய்பிள்ளைகளோடு இருக்கும் அணுக்கத்தை ஊட்டும்படியாக விழாக்களும் பேரவையும் இருந்தன என்பதுதான் காரணம். அதுதான் பேரவையின் விழுமியம். பொருளார்ந்த விளம்பரங்களும் பகட்டுகளும் மட்டுமே அத்தகைய விழுமியத்துக்குப் போதுமானதாக இருந்துவிட முடியாது. அன்பும் அறனும் மேலோங்குகின்ற இடத்திலே பண்பும் பயனும் மிகும். வாழ்க தமிழ்! வளர்க பேரவை!!

[காலத்தின் சான்றுகளாக இருக்கும் நம் பதிவுகள். இத்துடன் தேர்தற்காலக் கட்டுரைத் தொடர் நிறைவு பெறுகின்றது! Cheers! Bye!!]


No comments: