6/17/2022

FeTNA: சிறுகதைப் போட்டியும் வாழ்த்துகளும்

வட அமெரிக்கத் தமிழர்களின் அடையாளமான, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையானது சிறுகதைப் போட்டி நடத்தியிருப்பது பெரும் போற்றுதலுக்குரிய செயல். அதனை மிக நேர்மையாக, உண்மையாக நடத்திய இலக்கியக்குழுவுக்குப் பாராட்டுகள். பங்கு கொண்டோர் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்; அல்லாவிடில், முன்னெடுப்பு வெற்றி பெற்றிருக்காதுதானே?

கதைகளைத் தெரிவு செய்யும் பணியில் எனக்கும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி!  hope I was not too hard. கிட்டத்தட்ட 100 மணி நேர வேலையது. இப்போது, வழமையான நம் பணியைத் தொடர்வோம். கடந்த 2 மாதங்களுக்கும் முன்பே, 2010ஆம் ஆண்டுக்கான விழாநறுக்கினை(flyer) அனுப்பி, இப்படியாக விளம்பரப் பணிகளைச் செய்ய வேண்டுமென அறிவுறுத்திச் செயற்குழுவுக்கு மடல் அனுப்பினேன். முகமன் கருதி ஒரு பெறுகை(acknowledgement) கூடக் கிடைக்கப் பெறவில்லை. விழாவுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் நடந்த தமிழ்ச்சங்கத் தலைவர்கள் /ஆயுள் உறுப்பினர்கள் கூட்டத்தில் ஃப்ளையர் வடிவமைப்பு குறித்து மயிர் பிளக்கும் விவாதம் நடக்கின்றது. ஆவ். எனவேதான், சிறுகதைப் போட்டிப் பணிகளின் போது இடம் பெற்ற என் நயாப்பைசாக் கருத்துகளைத் தற்போது பொதுவில் வைக்கின்றேன். இனி வரும் காலங்களில் வருவோர், சரியெனக் கருதினால் பயன்படுத்திக் கொள்வார்களாக. Please take it as constructive feedback.

o0o0o0o0o0o

வணக்கம்.  சிறுகதை இப்படித்தான் அமையப் பெற வேண்டுமெனத் திட்டவட்டமாக வரையறுத்துவிட முடியுமாயெனத் தெரியவில்லை. அப்படி வரையறுத்து விட்டால், புதுமுறையில் முயன்று பார்ப்பதென்பது இல்லாமலே போய்விடும்தானே? அப்படியொன்று பிறந்து, அது வெற்றி பெறாது என்பதற்கும் எந்த உறுதியும் இல்லை. ஆனாலும் கூட, அவரவர் வாசிப்பு, எழுத்தனுபவம், புரிதலுக்கொப்ப சிலவற்றைப் பொதுப்படையாகச் சொல்ல முடியும். அவற்றுள், முக்கியமாகத் தெரிவன கீழேவருமாறு:

சிறுகதைக் கூறுகள்

1.முழுமை/விழுமியம்

சிந்தனையைக் கிளறுவதாக இருக்கலாம். அனுபவத்தைக் கொடுப்பதாக இருக்கலாம். சுட்டிக் காண்பிப்பதாக இருக்கலாம். புதிய திறப்புக்கு வழிகோலுவதாக இருக்கலாம். என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நோக்குநிலை என்னவோ, அது முழுமையாகப் படைக்கப்பட்டிருக்க வேண்டும். நிறைவுத்தன்மை கொண்டிருக்காவிடில், கதையின் மற்றைய கூறுகளுக்கு ஒரு பொருளுமில்லை.

2. எழுத்துநடை

எளியதும் நுண்ணியதுமானதுமான தமிழ்ச் சொற்கள் கொண்டு, சொல்ல வரும் கருத்தினைக் கடத்துவதும் வாசகரைக் கதைக்குள் ஒன்றச் செய்வதுமான போக்கினைக் கொண்டிருப்பது.

3.கதைக்கரு

தனித்துவமானதும் பொதுப்புத்திக்கு எளிதில் அகப்படாததுமான ஏதொவொன்றைப் படம் பிடித்துக் காண்பிப்பது, இடித்துரைப்பது, போற்றுவது, சுட்டிக்காட்டுவதென்பதாக இருத்தல்.

4.கதைவடிவம்

சிறுகதை உத்திகளில் பலவுண்டு. தன்னிலையில் சொல்வது,  வட்டாரவழக்கில் சொல்வது,  உரையாடல், நனவோடை, இயல்புவாதம், தலைப்பு,  கருக்கதை, கதைமாந்தர், உணர்வு முதலானவற்றைத் தேவைக்கேற்றாற்போல செவ்வனே கொண்டிருத்தல்.

[இந்த நான்கு கூறுகளின் அடிப்படையிலேயே கதைகளுக்கான மதிப்பீடுகள் வழங்கப்பட்டிருந்தன]

o0o0o0o0o0o

வணக்கம். எல்லாக் கதைகளையும் வாசித்து விட்டேன். ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதுதான். தமிழில் கதை எழுத ஆசைப்பட்டு முயன்றிருக்கின்றனர். பாராட்டத்தக்கது. ஆனால், அமெரிக்கா வந்து சேர்ந்த நம்மால் ஒரு கதையை வாய்வழக்காகக் கூடச் சொல்ல முடியாதா? தொடர்ந்து எழுதாவிடினும், ’அவ்வப்போது கூடத் தமிழில் எழுதுவதில்லை’ என்பது முக்கியமாகப்படுகின்றது. அடுத்தமுறை இப்படியான போட்டிகள் வைக்கும் போது, தொடர்போட்டியாக அமைத்தல் நலம் பயக்குமெனக் கருதுகின்றேன். எப்படி?

மாதாமாதம் போட்டியாளர்கள் கதை எழுதி அனுப்ப வேண்டும். அந்தந்த மாதத்தில் எவை சிறந்த மூன்று கதைகளோ அவற்றுக்கு $50 பரிசு. இப்படித் தொடர்ந்து 12 மாதங்களும் எழுதி வருகின்ற போது, அவர்களுக்குப் போதிய பயிற்சி அமையும். மேலும், கதைகளை வாசிக்கத் தலைப்படுவர். கதை நேர்த்திகளைக் கற்றுக் கொள்ள விழைவர். கடைசியாக 36 கதைகளில் சிறந்த ஐந்து கதைகளுக்கு பெரும்பரிசுகளை அறிவிக்கலாம்.

பெரும்பாலானவற்றில் ஊர்ப் பெயர்கள் அமெரிக்க நகரங்களாக இருக்கின்றனவேவொழிய, உள்ளீடு தமிழ்நாட்டைச் சார்ந்தவையாகவே உள்ளன. அமெரிக்க விழுமியங்கள் ஆயிரமாயிரம் கொட்டிக் கிடக்கின்றன. மரம் பேணுவதினின்று, தற்பணிகள்(do it yourself), மருத்துவ ஒழுங்குகள், காப்பீட்டுப் பணிகள், பன்னாட்டுப் பண்பாட்டுப் பற்றியங்களென ஏராளமான விதைகள் உள்ளன. ஓரிரு கதைகளில் ஓரிரு பற்றியங்கள் உள்ளூர் சார்ந்தனவாக அமைந்திருக்கின்றன.

இலக்கணம், எழுத்துப்பிழை, கதைக்குத் தலைப்பிடல், கதைக்கரு ஆகியனவற்றின் அடிப்படையில் 29 கதைகளுக்கு விலக்கம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இடம் பெறுவதில், ஒருசில கதைகள் முன்பின் இருக்கலாம்; தவிர்க்க இயலாதது. எஞ்சி இருக்கும் இருபது கதைகளைக் குழுவின் பார்வைக்குத் தருவது உசிதமாய் இருக்குமெனக் கருதப்படுகின்றது.

o0o0o0o0o0o

வணக்கம். முதற்சுற்றில் தெரிவான 20 கதைகளை மீண்டும் சில முறை வாசிக்க வேண்டியிருந்தது. கதைக்கும் கதைக்கும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டி இருந்தது. ஏற்கனவே சொல்லப்பட்டதுதான். ஒரு கதை கூட அமெரிக்கக் கதையாகவோ, கனடியக் கதையாகவே இருந்திருக்கவில்லை. மாறாக, அமெரிக்காவிலும் கனடாவிலும் எழுதப்பட்ட தமிழ்க் கதைகளாகவே இருக்கின்றன. எனினும், ஈழத்தமிழ் நடையில் இருக்கும்  சில   கதைகள் சற்று வேறுபட்டு இருந்தன.

நீட்டலும் மழித்தலும் எனத் தலைப்பிட்ட கதையானது, சிறுகதைக்கான முழுநேர்த்தியைக் கிட்டத்தட்ட தொட்டுவிட்டது. ஆனால் அது ஒரு அமெரிக்கக் கதை எனச் சொல்லிவிட முடியாது. குறியீட்டுக் கதை என்கின்ற அளவில், 'அவரவர் அவரவராய் இருத்தல் நன்றாம்' என்பதைச் சொல்லாமற்சொல்லும் கதை.

புதுவானம் எனத் தலைப்பிட்ட கதை, உள்ளூர் மனநிலையைக் காண்பிக்கின்ற கதையாகப்படுகின்றது. மேலும் கூடச் செம்மையாக்கியிருக்கலாம்.

ஒரு சதவிகித ஐயம் எனத் தலைப்பிட்ட கதை, நல்ல கதைக்கரு. ஆனால் எழுதப்பட்ட விதம் இன்னும் செம்மைப்படுத்தி இருக்க வேண்டும். எழுத்துப் பிழைகள் கூடத் திருத்தப்படவில்லை.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். மதிப்பீடுகள் கொடுத்தேவும் கூட, வரிசைப்படுத்துவது சிக்கலான வேலையாக இருந்தது. மற்ற திறனாய்வாளர்கள் இக்கதைகளை எதுகொண்டு, எப்படி வரிசைப்படுத்துவரோ? அவரவர் பார்வை, அவரவருக்கு. முடிவுகளைத் தெரிந்து கொள்ள ஆவல். வாய்ப்புக்கு நன்றி!

o0o0o0o0o0o

போட்டியின் அமைப்பாளர்கள் மிக நேர்மையாகத் தங்கள் பணிகளைச் செய்திருக்கின்றனர். எனவே என்னுடைய தனிப்பட்ட கருத்தாக இதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். போட்டி விதிமுறைகளின்படி ஒருவருக்கே இரு பரிசுகள் கிடைத்திருக்கின்றன. அடுத்தமுறை, ஒருவருக்கு ஒரு பரிசு என்கின்ற முறையில் அடுத்தவருக்கும் ஊக்கத்தொகை கிடைக்கச் செய்தல் நன்றாம். அதற்கொப்ப விதிமுறைகளில் மேம்பாட்டினைக் கூட்டிக் கொள்ளலாம்.

o0o0o0o0o0o

பேரவையின் சமூக வலைதளத்தில் காணப்பெற்ற ஒரு மறுமொழி. கதை, கவிதைகள் தேவையா? தேவைதாம். அமெரிக்காவில் தமிழ்ப்பள்ளிகளும், ஆசிரியர்களும் ஏராளமாக இருக்கின்றன(ர்). ஆனால், பிழையின்றி ஒரு பக்கம் எழுத, குறிப்பாகப் பேரவைக்கு எழுத ஆட்கள் கிடைப்பதில்லை. மேலும் கதைகள், கவிதைகள் என்பன வெறுமனே எழுத்துப் பயிற்சி அன்று. அது சிந்தனைப் பயிற்சி. தகவற்பரிமாற்றம்.  சோர்வின்றி, இன்னும் கூடுதல் ஊக்கமுடன் இலக்கியக் குழுவினர் செயற்பட வாழ்த்துகள், அமெரிக்க விழுமியங்களோடு!!


No comments: