3/07/2011

அஞ்சா நெஞ்சன், மாவீரன் T.இராஜேந்தர்

காலச் சக்கரம் சுழலச் சுழல, என்றோ இளந்தளிராய் இருந்தவை பழுத்துப் பட்டுப் போனவையாகக் காட்சி அளிக்கின்றன. வேடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இளக்காரமாய் இளப்பத்துக்கு ஆளாக நேரிடுகிறது. கேலிக்கு ஆளாகிறது. ஆனால்? சமகாலத்தில் வாழ்ந்தவனுக்குத்தானே அதன் அருமையும் பெருமையும் தெரிய வரும்?!

சிம்ம சொப்பனமாய், பெரும்புனலில் வீறு கொண்ட புரவியாய்ப் பறந்து திரிந்த சதாம் உசேன் கேலிக்கு ஆளானான். கொச்சைப் படுத்தப்பட்டான். ஆனாலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, வீடுதோறும் உண்ணச் சோறும், பருகப் பானமும் அனுப்பி வைத்த நாட்களை அவனுடன் சமகாலத்தில் வாழ்ந்த குடிமக்களால் மறந்துவிட முடியுமா? அல்லது மறக்கத்தான் முடியுமா??

இராமாவரம் தோட்டம் என்று சொன்ன மாத்திரத்தில், மெய் சிலிர்க்கும். கனிவானவனுக்கு நெஞ்சில் கருணை பிறக்கும். நல்லவனுக்கு கொடையுள்ளம் அருள் பாலிக்கும். கயவனுக்கு நெஞ்சு பதைபதைக்கும். இருபத்தி நான்கு மணி நேரமும், மாதம் பனிரெண்டும், நாட்கள் முன்னூற்று அறுபத்தி ஐந்தரை நாட்களும் மக்கள் வெள்ளம் அலைமோதும். நான் சென்ற முறை சென்னை சென்றிருந்த போது, சக பதிவர் இரம்யா அவர்கள் என்னை அந்த இராமாவரம் தோட்டத்து வழியாக அழைத்து வந்தார். ஆள் அரவமற்று வெறிச்சோடிக் கிடந்ததைப் பார்த்தேன். மற்றவர்களுக்கு வெறுமனே அது ஒரு காட்சிப் பொருள். எனக்கோ அது ஒரு நினைவுச் சரணாலயம்.

நான் துவக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலமது. தமிழ்நாட்டிலே கள்ளுக் கடைகள் திறந்திருந்த காலம். கேரள் எல்லையான கொழிஞ்சாம் பாறையிலிருந்து, கிழக்கே தாராபுரம், கரூர் வரையிலான கள்ளுக் கடைகள் அனைத்தும் இவருக்குத்தான் சொந்தம். இவர் அன்றி வேறு எவரும் எடுக்கலாகாது என்பது எழுதாத சட்டம். நெகமம் நெபோலியன், காளியம்பாளையத்துக் கட்டபொம்மன் K.V.K என்றால், கொங்கு மட்டுமல்ல, அந்த இராமாவரத்து இராமச்சந்திரனும் நடுங்கிய நாட்கள் அவை. நெகமம் மற்றும் அண்டியுள்ள சுத்துபத்து பதினெட்டுக் கிராமங்களிலும் திமுக என்ற சொல்லே உச்சரிக்கப்படக் கூடாது. தினகரன் வாசிக்கும் கண்கள் பொசுக்கப்படும்.

திரைப்பட விநியோகமா, சியாமளா மூவிஸ் வைத்ததுதான் சட்டம். அதிமுக மாவட்டச் செயலாளர் தேர்தலா?? நெகமம் வைத்ததுதான் சட்டம். மதர்லேண்டு மூவிஸ் சுருண்டது. அதன் உரிமையாளர் கோவைத் தம்பி நெகமத்துடன் தாக்குப் பிடிக்காது ஓடிப் போனார். நெகமம் நெபோலியன் மாவட்டச் செயலாளர் ஆனார்.

பொள்ளாச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் நான் என்ற மமதை அவருக்கு. காளியம்பாளையத்து கட்டபொம்மனிடமா உன் வேலையைக் காண்பிக்கிறாய் என உறுமியது நெகமம். உறுமலைக் கேட்டு அஞ்சிய பொள்ளாச்சி, இராமாவரத்திற்குப் புகலிடம் தேடிச் சென்றது. நெகமத்தார், பொள்ளாச்சியை மட்டுமல்லாது அந்த இராமச்சந்திரனையும் சேர்த்து மிரட்டிவிட்டு வந்தார்கள்.

ஆனைக்கும் அடி சறுக்கும்! எந்த ஒரு வில்லாளனுக்கும், ஒரு எதிர் வில்லாளன் உண்டல்லவா? இந்த வில்லாளன், மயிலாடுதுறை வில்லாளன், T.இராஜேந்தர் என்னும் பெயரில் ஒரு கட்டையான குட்டை உருவம், வெறும் ஒரு சில நூறு பேருடன் அவ்வூருக்குள் நுழைந்தது.

எந்த நெகமத்தில் கருப்பும் சிவப்பும் ஒட்டிக் காணக்கூடாதோ, அந்த நெகமத்துச் சந்தியில் வைத்து கருப்பு சிவப்புக் கொடியைப் பறக்கவிட்டுச சிம்மம் போலக் கர்ச்சித்துச் சென்றது அம்மானுடம். நாலரைக் கோடி மக்களின் நவநாயகன் என்றுக் கொப்பளிக்கக் கொப்பளிக்கக் கூக்குரலிடும் திமுக உடன்பிறப்புகளோடு, ஒட்டு மொத்த தமிழகமே வாய் மூடி அசந்து நின்றது.

நாட்கள் பெருவேகத்தில் நகர்கிறது. அந்த ஆறு ஆண்டுகளில், தமிழகத்தில் என்னவெல்லாமோ நடந்து விட்டது. நடக்கக் கூடாதது என்னவெல்லாம் இருக்கிறதோ, அத்துனையும் நடந்தது. தமிழுக்கும், தமிழனுக்கும் நேர்ந்த கறுப்பு வரலாறு அக்காலம். இதோ வந்துவிட்டது 1991 தேர்தல். ஆளுங்கட்சியோ பெருஞ்சோதனையில் கடலின் பெருங்காற்றில் சிக்கிய் பாய்மரக்கப்பலாய் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சிலிர்த்து எழுந்தான் மாவீரன்! தாயக மறுமலர்ச்சிக் கழகத்தை நிறுவி, அரிமாப் போல வலம் வந்தான்.

ஜெய்லலிதா என்னும் மாயத்தை எதிர்க்கத் திராணி இல்லாது இருந்தது தமிழக அரசியற்களம். பர்கூர், காங்கயம், பழனி எங்கும் சிக்குபுக்கு இரயிலை ஓட்டிக் காட்டினான். ஆளுங்கட்சியின் வேட்பாளரே போட்டியில் இருந்து விலக, இம்மாவீரன் பர்கூரில் ஒத்தையாளாகக் களம் கண்டான். எதிர்த்துப் போட்டி இட்டதே மாபெரும் வெற்றி என கன்னியாகுமரியில் இருந்து கைலாயமலை வரையிலுமிருந்த அரசியல் விற்பன்னர்கள் வெளிப்படையாக அறிவித்தார்கள்.

1991 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ஏறத்தாழ 150 இடங்களுக்கு மேலான இடங்களில் நின்ற திமுக பெற்ற இடங்கள் இரண்டே இரண்டுதான். துறைமுகத்தில் கலைஞர் மு.கருணாநிதி, எழும்பூரில் பரிதி இளம்வழுதி ஆகிய இருவர் மட்டுமே வெல்கிறார்கள். க.சுப்புவை விட முதல்வர் கருணாநிதி வெறும் 890 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வெல்கிறார்.

ஆனால், மாவீரன் தலைமையில், கூட்டணியினராக சு.திருநாவுக்கரசு, K.K.S.S.R.இராமச்சந்திரன், V.கருப்பசாமிப் பாண்டியன், S.D.உக்கம்சந்த் உள்ளிட்டோர் எட்டுத் தொகுதிகளில் போட்டியிட, மாவீரனின் கூட்டணியும் வெற்றி பெற்றுக் காட்டியது இரண்டு தொகுதிகளில்!! அறந்தாங்கியில் இருந்து திருநாவுக்கரசும், சாத்தூரில் இருந்து K.K.S.S.R. இராமச்சந்திரனும் தமிழக சட்டமன்றத்தினுள் நுழைந்தார்கள்.

ஐம்பெரும்படையுடன் களத்தில் நின்ற ஜெயலலிதா எனும் பெரும் சக்தியை எதிர்த்து நின்றவன் கணக்கில் தோற்றானே ஒழிய, வரலாற்றில் வெற்றி கண்டது என்னவோ அம்மாவீரனே!

(தொடரும்)

(மக்கா, என் நினைவில் இருப்பதைப் புலம் பெயர்ந்து வாழும் சூழலில், அயல் மண்ணில் இருந்து எழுதுகிறேன். பிழைகள் இருப்பின் பொறுத்தருள்க!)

11 comments:

ஓலை said...

Varalaaru avarukke maranthirukkum ippa. Yengap pazhamaiyin paasam .... Mmmmmm.

Chitra said...

அரசியல் வரலாற்றுக் குறிப்பேடு.... ம்ம்ம்ம்..... தொடருங்க... தெரிந்து கொள்கிறோம்.

பழமைபேசி said...

@@ஓலை

பழைய நினைவுகள்... அம்புட்டுதேனுங்க... இஃகி!

@@Chitra

நன்றிங்க!

ரஹீம் கஸ்ஸாலி said...

ஆனால், மாவீரன் தலைமையில், சு.திருநாவுக்கரசு, K.K.S.S.R.இராமச்சந்திரன், V.கருப்பசாமிப் பாண்டியன், S.D.உக்கம்சந்த் உள்ளிட்டோர் எட்டுத் தொகுதிகளில் போட்டியிட, மாவீரனின் கட்சியும் வெற்றி பெற்றுக் காட்டியது இரண்டு தொகுதிகளில்!! அறந்தாங்கியில் இருந்து திருநாவுக்கரசும், சாத்தூரில் இருந்து K.K.S.S.R. இராமச்சந்திரனும் தாயக மறுமலர்ச்சிக் கழக உறுப்பினர்களாக தமிழக சட்டமன்றத்தினுள் நுழைந்தார்கள். ////

இது தவறு, தாயக மறுமலர்ச்சி கழகம் சார்பில் டி.ராஜேந்தர் மட்டுமே போட்டியிட்டார். அதேநேரம் அண்ணா.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட திருநாவுக்கரசர், அண்ணா புரட்சித்தலைவர் தமிழக முன்னேற்ற கழகம் என்று ஒரு புதிய கட்சியை தோற்றுவித்தார்(அதுதான் பின்னாளில் எம்.ஜி.ஆர்.அண்ணா.தி.மு.க-வாக மாறியது). அந்த கட்சி சார்பில் தி.மு.க ஆதரவோடு அறந்தாங்கி தொகுதியிலிருந்து சட்ட சபைக்குள் நுழைந்தார். சாத்தூரார், கானா போன்றோர்கள் அக்கட்சி சார்பில் களம் கண்டவர்களே தவிர நீங்க குறிப்பிட்டது போல டி.ஆர்- கட்சி சார்பில் அல்ல......வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே....

பழமைபேசி said...

@@ரஹீம் கஸாலி

நன்றிங்க... எனக்குத் தெரிஞ்சு அவங்க தனியா நின்னது நினைவு இருக்கு... ஆனா கட்சிப் பெய்ர்...நான் உறுதிபடச் சொல்ல இயலாதுதான்!!

ஆனா, இந்த சுட்டிகளையும் ஒருக்காப் பார்த்திடுங்க...

http://en.wikipedia.org/wiki/Tamil_Nadu_legislative_assembly_election,_1991

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_1991

vasu balaji said...

அப்ப அம்மா வீரர்கள் தானா?

ராஜ நடராஜன் said...

ஆகா!பழமைண்ணா!இம்புட்டு வரலாறு சொல்றீங்க>இம்புட்டு நாளா எங்கே மறைச்சு வெச்சிருந்தீங்க சரக்கெல்லாம்!

குறும்பன் said...

அவர்கள் அண்ணா புரட்சித்தலைவர் தமிழக முன்னேற்ற கழகம் என்று ஒரு புதிய கட்சியை தோற்றுவித்திருந்தாலும் போட்டியிட்டது தாயக மறுமலர்ச்சி கழகம் மூலம் என்று தான் தேர்தல் ஆணையத்தின் குறிப்பில் உள்ளது. கட்சியை பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தாமக சார்பில் அவர்கள் போட்டியிட்டு இருக்கலாம்.

மாவீரனையும் சேர்த்தா தாமக சார்பில் போட்டியிட்டவர்கள் 11 பேர்.


\\பொள்ளாச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் நான் என்ற மமதை அவருக்கு. \\ யாருக்கு? -
யார் அப்ப பொள்ளாச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் - புரியவில்லை.

பழமைபேசி said...

@@குறும்பன்

அதேதானுங்க...
பொள்ளாச்சி - M.V.இரத்தினம்

Unknown said...

இந்த மாவீரன் எங்க பள்ளிக்கூடத்தில் தான் படிச்சாரு.. மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப்பள்ளி !! என்பதை பணிவுடனும் பெருமையுடனும் சொல்லிக் கொள்கிறேன்...!!

அரசூரான் said...

பழமை, ஏது தேர்தல் நேரத்தில் பழைய நினைவுகளை அசைபோடுகின்றீர் போல... உணமை டி.ஆர் மாவீரந்தான். சினிமாவில் அவரைப்போல் செட்டு போட முடியாது, அரசியலில் அவரைப்போல் திட்டு போட முடியாது. அனைத்து அரசியல் தலைவர்களின் கண்ணிலும் விரல் விட்டு ஆட்டு-வார்.