3/08/2011

எழுச்சி நாயகன் டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்)

துவக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலமது. பட்டி தொட்டி எங்கும் இரட்டை இலைச் சின்னமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டு, ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்த காலம்.

தேவனூர்புதூர் காளியம்மன் கோவில் திருவிழாவுக்குச் சென்ற எனக்கு எப்படியோ ஒரு உதயசூரியன் சின்னமிட்ட கொடி ஒன்று அகப்பட்டுவிட, இரவு பகல் என்றும் பாராது அதைக் கையிலே வைத்துக் கொண்டிருந்தேன். நித்திரையின் ஊடாகவெல்லாம் எழுந்து, அக்கொடியானது என்னிடத்திலே பத்திரமாக இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொண்ட இரவுகளும் உண்டு.

இந்த நேரத்திலேதான், என்னுடன் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்தவனும், எனது அண்டை வீட்டு நண்பனும், இரட்டை இலைச் சின்னத்தை அபிமானமாகக் கொண்டவனுமான பூராண்டாம் பாளையம் செல்வராசு என்பவன், என்னுடைய உதயசூரியனைக் கிழித்தெறிந்து விட்டான். எனக்கோ ஒரே அழுகை!!

அவனுடைய மாமாவும், சலவ்நாயக்கன் பட்டிப் புதூர் அதிமுக கிளைக் கழகச் செயலாளருமான அண்டை வீட்டு குப்புசாமி அண்ணன் அவர்கள், நான் உனக்கு உதயசூரியன் படம் போட்ட கொடியைத் தருகிறேன் என்று சொல்லி அலைந்து திரிந்தார். இருந்தும் அவரால் கொண்டு வந்து தர இயலவில்லை. மாறாக, ஒரு திமுக கொடியைக் கொணர்ந்து என்னை இணக்கப் படுத்தினார்.

சலவநாயக்கன் பட்டிப் புதூரில், எங்கள் வீட்டிற்கு முன்னே பெரிய மைதானம் போன்ற அளவுக்கு பெரிய வாசல் இருக்கும். உள்ளூர்க் கூட்டம் எதுவாயினும் எங்கள் வீட்டிற்கு முன்னால்தான் நடைபெறும். எனக்கு நினைவு தெரிந்து, பல அதிமுக கூட்டங்கள் நடைபெற்றிருக்கிறது. திமுக கூட்டங்களும் நடைபெற்று இருக்கிறது.

செஞ்சேரிமலையில் இருந்து பெதப்பம்பட்டி செல்லும் வழியில், பிரதான சாலையில் இருந்து உள்புறமாக வந்த விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யா நாராயணசாமி அவர்கள் கலந்து கொண்ட கூட்டம், மிகவும் குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும். அவர் பேசிச் சென்ற ஒரு சில வாரங்களில் பெரிய அளவில் விவசாயிகளின் போராட்டம் வெடித்தது. உடுமலைப் பேட்டையில் கிட்டத்தட்ட ஒன்பது விவசாயிகள் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியானார்கள். உள்ளூர்த் தலைவர்களை எல்லாம் சிறையில் அடைத்து வேடிக்கை பார்த்தது எம்ஜிஆர் அரசு.

நான் துவக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலே, மாலை ஏழு மணிக்கெல்லாம் இரவு உணவை உட்கொள்ளாமலேகூட நித்திரையாகிவிடுவது வழக்கம். என் அம்மா, தூக்கத்தோடு தூக்கமாக எனக்கு உணவு ஊட்டி விடுவார்கள். அன்றைக்கும் அப்படித்தான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். திடீரெனப் பார்த்தால், எங்கள் வீட்டு முன்னே ஒரே சத்தம். அது கண்டு எழுந்து முன்வாசலுக்கு வந்து பார்த்தால், ஆச்சரியம்! நிறைய மக்கள் குழுமி இருந்தார்கள்!!

ஆங்காங்கே திமுக கொடிகளோடு மிதிவண்டிகள். ஒரு வாகனத்தில் மட்டும், திமுக வேட்பாளர் உங்களை எல்லாம் காண வந்து கொண்டிருக்கிறார் என அறிவித்தவண்ணம் இருந்தார்கள். நான் எங்கள் வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டேன். எனது வகுப்புத் தோழன் செல்வராசும், பக்கத்து வீட்டுக் குமாரும் என் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்கள். நாங்கள் எல்லாம் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தோம்.

வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வர, உள்ளே இருந்தவர்கள் எல்லாம் வாகனத்தை விட்டிறங்கிய பின்னர் வாகனங்களைத் தொலைவில் கொண்டு போய் நிறுத்தினார்கள். ஊர்த் தலைவாசலில் இருந்து, கையைக் கூப்பியபடியே ஓட்டுச் சேகரித்தபடியே வந்து கொண்டிருந்தார் அவர். பசுமையாக நினைவிருக்கிறது. நல்ல உயரம். சிவந்த முகம். கேசப்பொலிவு கொள்ளை அழகாக இருந்தது. கரிய முடியானது, திடல் திடலாக மேலெடுத்துச் சீவிய தோற்றம். கதாநாயகத் தோற்றம் என்றால் அதுதான் கதாநாயகத் தோற்றம். பழைய படம் எதுவும் எனக்கு அகப்படவில்லை. ஆனால் என் மனக்கண் முன், இன்னும் அந்த சிகையழகுடன் கூடிய தோற்றம் நன்றாக நிழலாடுகிறது.

என் தகப்பனாரைத் தேடி வந்து வணக்கம் தெரிவித்தார் அவர். புன்முறுவல் பூத்துச் சிரித்தபடி வந்தவரை, எங்கள் வீட்டுத் திண்ணையில் அமரச் சொன்னார்கள். என் மூத்த சகோதரர் ஜமுக்காளத்தை விரித்தார். என் தாய், குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்கள். என் தாயின் பின்னாலே ஒளிந்து, ஒளிந்து சென்றவன் வாய் திறந்து சொன்னேன், “அண்ணா, அங்கிருக்கறாம் பாருங்க செலுவராசு. அவன் என்ற உதயசூரியன் கொடியக் கிழிச்சுப் போட்டானுங்”. உடனே என் கையைப் பிடித்து தன்னோடு இருத்திக் கொண்டவர், இந்தத் தம்பிக்கு வேணுங்றதைக் குடுங்க என்றார்.

யார் அவர்? கொஞ்சும் எழில் முகத் தோற்றம் கொண்டவரும், சிகை அழ்கு சிறப்புறக் கொண்டவரும், எங்கள் பகுதியில் இருக்கும் பூளவாடி எனும் ஊருக்கு அருகில் உள்ள மசக்கவுண்டர் புதூரைச் சார்ந்தவ்ரும், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருமான மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள்தான் அன்றைய நாளின் கதாநாயகன்.

இவர் எப்படித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரானார்? பொள்ளாச்சித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவருமான C.T.தண்டபாணி அவர்கள் நீலகிரித் தொகுதிக்கு மாற்றப்பட, பொள்ளாச்சித் தனித்தொகுதிக்கு ஒரு வேட்பாளர் தேவைப்பட்டிருக்கிறது. தீண்டாமை ஒழிப்பிலும், சமூக சேவையிலும் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த திராவிடர் கழக உறுப்பினரை, மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்புப் படித்துக் கொண்டிருந்த மாணவரை, அத் தேர்தலிலே நிற்க வைத்துவிட்டார்கள்.

சரி, ஏன் C.T.தண்டபாணி அவர்கள் நீலகிரித் தொகுதியில் போட்டியிட வேண்டும்? நீலகிரித் தொகுதியிலே, செல்வந்தரும் செல்வாக்கும் உடைய ஆர்.பிரபு அவர்கள் பேராயக் கட்சியின் சார்பிலே வேட்பாளர். அவருக்கு இணையாக்ப் போட்டியிட, வலுவான வேட்பாளர் தேவை இருந்தது.

கூடவே, பிரபுவின் குடும்பத்தில் பங்காளிச் சண்டைகளும் நடந்து கொண்டிருந்த நேரமது. அவரது தந்தையார், P.R.இராமகிருஷ்ணன். தந்தையோடு பிறந்தவர், R.வெங்கிடுசாமி. கோயம்பத்தூரில், இராதாகிருஷ்ணா மில், ஜெயலட்சுமி மில், நவ இந்தியா, மேட்டூர் மால்கோ அலுமினியத் தொழிற்சாலை, சிறுமுகை விஸ்கோஸ் முதலானவற்றுக்கு உரிமையாளர்கள். அதிலே ஒருவரான, ஆர்.வி.எஸ் அவர்களும் C.T.தண்டபாணியையே தன் சகோதரன் மகனை எதிர்க்க நிறுத்த வேண்டும் எனவும் விரும்பியதாகச் செய்திகள் உண்டு.

இச்சூழலில்தான், இளைஞரும் உத்வேகமும் கொண்ட டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் எங்கள் முன்னாலே திமுக வேட்பாளராகக் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார். ஒலி பெருக்கியைப் பிடித்ததும் மடை திறந்த வெள்ளம் போலத் தெளிவான உரை. இரட்டை இலைச் சின்னத்தையும், புர்ட்சித் தலைவரையும் நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த இளைஞர்கள் அப்படியே அவரது தோற்றத்திற்கும், பேச்சுக்கும் கட்டுண்டு உதயசூரியனுக்கு மாறிப் போனார்கள்.

அடுத்த நாள் வழக்கம் போலப் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றேன். ஆங்காங்கே இருக்கும் சுவர்களில், புதிதாக பல உதயசூரியன்கள் படர்ந்திருந்தன. துண்டு சுற்றப்பட்ட கழுத்து, திடலழகுடன் கூடிய சிகையழகன் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களது படத்துடன் கூடிய சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு இருந்தன. ஆச்சரியமாய் இருந்தது.

நாடாளுமன்றத்தின் பிரதான் எதிர்க்கட்சியாய் இருந்த திமுக படுதோல்வியுற்றது. டாக்டர் கிருஷ்ண்சாமியும் தோல்வியுற்றார். வட சென்னையில் N.V.N.சோமு, மத்திய சென்னையில் மற்றொரு மருத்துவர் அ.கலாநிதி என, இரண்டே இரண்டு இடங்களைத்தான் திமுகவால் கைப்பற்ற முடிந்தது.

அதற்குப் பிறகு டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களைக் காணக் கிடைக்கவே இல்லை. அவ்வப்போது நாளிதழ்களில் அவரைப் பற்றிய செய்திகள் வரும். குனியமுத்தூரில் மருத்துவமனை நடத்தி வருவதும், திமுக கட்சிக் கூட்டங்களில் பேசுவதுமான செய்திகளை வாசித்திருக்கிறேன். அதன் பின்னர் எனக்கும், வீதம்பட்டி வேலூரில் எட்டாம் வகுப்பு, பின்னர் இலட்சுமிநாயக்கன் பாளையத்தில் மேல்நிலை, கோவைத் தொழில் நுட்பக் கல்லூரியில் படிப்பு என நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.

அக்காலகட்டத்தில், எனக்கும் சம்காலத்து மாணவர்களுக்கும் ஒருவிதமான நாட்டம் இருந்தது. ஆம்; வாயைக் கட்டி வயித்தைக் கட்டி, பசி பட்டினியோடு இருந்தாலும் இருப்போமே ஒழிய, சிகை திருத்துவது என்பது கோவை குதிரைப் பந்தய சாலையில் இருக்கும் சூர்யா விடுதியின்(Surya International Hotel)கீழ்ப் புறம் உள்ள ஓப்ராய் முடித் திருத்தகத்தில்தான் முடி வெட்டுவது என்பதில் அதிக நாட்டமுடன் இருந்தோம். அன்றைய நாளில் ரூபாய் 70 என்பது மிகப் பெரிய கட்டணம்.

ஓப்ராய் கிட்டு(சரியான பெயர் நினைவில் இல்லை) என்பவர், கோவையில் எங்கும் பிரசித்தம். அவரிடம்தான் நாங்கள் முடி திருத்திக் கொள்வது வழக்கம். நானும் எனது நண்பன் கார்த்தியும் ஓப்ராய் சென்றிருந்தோம். அங்கேதான் மீண்டும் அவரைக் கண்டேன். அவரும், கிட்டுவும் இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகு நான் சிங்கப்பூர் சென்று, உலகஞ்சுற்றும் நாடோடி ஆகிவிட, அவரைக் காணும் வாய்ப்பு இதுவரையிலும் அமையப் பெறவில்லை.

சமீபத்தில், நண்பர் ஓசைச் செல்லா அவர்கள் அவருடைய படங்களை மற்றவர் பார்வைக்கு வைத்திருந்தார். பழைய நினைவுகளைக் கிளறுவதற்கு அது ஏதுவாய் அமைந்தது.

கிராமத்து இளைஞர்களை எல்லாம் தட்டி எழுப்பிய வசீகர இளைஞன், கல்வியாளர், சமூக சேவையாளர் இன்னும் வளர்ந்திருக்க வேண்டும். அரசியல் ஏனோ அவரை அரவணைக்கவில்லை?! அல்லது அவரேதும் தடுமாறி விட்டாரா என்பதும் தெரியவில்லை. என் நினைவுகளின் ஆழத்திற்கு ஏற்ற அங்கீகாரம், பொது வாழ்வில் அவருக்குக் கிடைக்காமல் போனதில் எமக்கு சிறிது ஏமாற்றமே!!


(தொடரும்)

(மக்கா, என் நினைவில் இருப்பதைப் புலம் பெயர்ந்து வாழும் சூழலில், அயல் மண்ணில் இருந்து எழுதுகிறேன். பிழைகள் இருப்பின் பொறுத்தருள்க!)

17 comments:

ஓலை said...

Nice narration. Dr.Krishnasami will be delighted to see this post.

This must be in late eighties or early ninty.

Chitra said...

எனக்கு இந்த பதிவிற்கு கருத்து சொல்லும் அளவுக்கு தெரியவில்லை.

செந்திலான் said...

அவர் தனி கடைய போட்டதால இன்னிக்கு தமிழ் நாடு முழுக்க தெரியறாரு.இல்லேன சி.டி தண்டபாணி கதை தான் கோவையைத் தாண்டி யாருக்கும் தெரியாது. இன்னைய தேதிக்கு ஒன்னரை கோடி(?) ஒடுக்கப் பட்டவர்களின் ஒப்பற்ற தலைவர் அவர். கழகம் ஒரு புளிய மரம் அதன் நிழலில் குடும்பத்தினரைத் தவிர யாரும் வளர முடியாதே

Naanjil Peter said...

இப்போது அம்மா கூட்டணியில்தானே இருக்கிறார்.
வெற்றி பெற வாய்ப்புள்ளது.
ந்ல்ல பதிவு. பழைய எண்ணங்களின் எதிரொலி.
அன்புடன்
நாஞ்சில் இ. பீற்றர்

Pranavam Ravikumar said...

பதிவிற்கு வாழ்த்துக்கள்!

பழமைபேசி said...

@@செந்திலான்

தம்பி, அதைவிட்டு வெளியில வந்து எதையும் சிந்திக்க முடியாதுங்களா?? ஒரு கல்வியாளர், அடித்தட்டு மக்களின் குறை நிறைகளை அறிந்தவரின் சேவை இன்னும் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பதுதானே ஒழிய வேறெதும் அல்ல!! தென்காசியோட அவரோட பங்களிப்பு நின்னு போச்சுன்னு எல்லாம் குண்டக்க மண்டக்க நான் சொல்ல விரும்பலை பாருங்க!!

ஜனநாயகக் கட்சி,குடியரசுக் கட்சின்னு பார்க்குறதுக்கு முன்னாடி, அந்த உறுப்பினரின் தகுதி, ஆற்றல், செயல்பாடு என்னன்னுதானே பார்க்கப்படுது? அது இன்னும் நம்ம நாட்டுல வரலையே அப்படிங்றதும்தான்!!!

tsekar said...

//அதன் பின்னர் எனக்கும், வீதம்பட்டி வேலூரில் எட்டாம் வகுப்பு, பின்னர் இலட்சுமிநாயக்கன் பாளையத்தில் மேல்நிலை, கோவைத் தொழில் நுட்பக் கல்லூரியில் படிப்பு என நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.

//

CIT -Which year?.Iam 1996-2000

-tsekar

tsekar said...

//அதன் பின்னர் எனக்கும், வீதம்பட்டி வேலூரில் எட்டாம் வகுப்பு, பின்னர் இலட்சுமிநாயக்கன் பாளையத்தில் மேல்நிலை, கோவைத் தொழில் நுட்பக் கல்லூரியில் படிப்பு என நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.//

CIT-Which year.Iam 1996-2000

பழமைபேசி said...

@@tsekar

pazamaipesi@gmail.com

செந்திலான் said...

மரு.கிருட்டிணசாமி மீது உங்களுக்கு ஒரு பொருந்தாத அனுதாபம் உள்ளது போலும்.
அவர் ஒன்றும் கல்வியாளர் அல்ல மருத்துவர்.மேலும் அடித்தட்டு மக்கள் குறை நிறைகளை அறிந்தவர் என்கிறீர்கள். அப்படி அறிந்திருந்தால் முதலில் அந்த மக்களின் கல்வி,பொருண்மியம் பற்றி சிந்தித்திருப்பார் அதன் வழியே செயல்பாடுகளை மேற்கொண்டிருப்பார் ஆனால் நடந்தது என்ன? ஒரு சீட்டுக்கும் இரண்டு சீட்டுக்கும் அலைந்து கொண்டிருக்கிறார். அவர் ஒட்டு மொத்த அடித்தள மக்களின் தலைவரும் அல்ல அவர் சார்ந்த சாதி மக்களின் தலைவர் மட்டுமே

பழமைபேசி said...

@@செந்திலான்

தம்பி, அதான் நான் முடிக்கும் போது சொல்லிட்டனே? தடம் மாறினாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால்?

அவர் ஒரு கல்விமான்தான். ஏழை, எளியவர்களுக்கு அவர் பாடுபடவில்லை என யார் சொன்னது??

அரசியலுக்கு வருவதற்கு முன், அவரது முழு நேரத் தொழிலே இலவச சேவைதான்... பூள்வாடிப் பகுதிகளில் இலவ்ச மருத்துவ சிகிச்சையளிப்பது... தீண்டாமை ஒழிப்பில் முனைப்பு.... தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கல்வியில் முனைப்பு... என அடுக்கிக் கொண்டே போகலாம்... மற்றவர்களைப் போல, அவர் விள்ம்பரம் செய்து கொள்ளவில்லை... மேலும், அவரை ஏற்றுக்கொள்ள 1980/1990களில் மேட்டுக்குடியினர்க்கு மனம் ஒப்பவில்லை என்பதும் வெள்ளிடைமலை...

பழமைபேசி said...

//அவர் ஒட்டு மொத்த அடித்தள மக்களின் தலைவரும் அல்ல //

இதற்கான எமது ஏமாற்றத்தையும் தெரிவித்தே இருக்கிறேன்... ஆனால் அவருக்கு அத்தகுதி அடிப்படையில் உண்டு!

குறும்பன் said...

1996ல் இவரு பரபரப்பா ஒட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்றதொட சரி. 2001 தேர்தலில் திமுக ஆதரவுடன் கூட வெற்றிபெறமுடியவில்லை.

தேவேந்திர குல வேளாளர்களின் பெரும் ஆதரவுடன் இருந்த இவர் (செய்திதாள்கள் மூலம் அப்படி தான் புரிந்துகொண்டேன்) கடும் வீழ்ச்சியை சந்தித்தது எப்படி என புரியவில்லை. 1996ல் வெற்றிபெற்றதும் அவர்களை(மக்களை) மறந்து இருந்தாரோ? இப்ப இவரை யாரும் கண்டிகொள்ளவில்லை என்பது நிசம். வடமாட்டங்களுக்கு திருமா போல தென் மாட்டங்களுக்கு இவர் வந்திருக்க வேண்டியது.

LinuxAddict said...

He might have followers in southern districts especially people from same community and he might have done something for them, but as far as Coimbatore he is no name. His wife runs Sangeetha Hospital in Kuniyamuthur. Dr. Krishnaswamy also used to treat patients, very nice person. Thats about it. The hospital is not known for any community service either. I don't think he has done enough to deserve any credit.

அரசூரான் said...

//அக்காலகட்டத்தில், எனக்கும் சம்காலத்து மாணவர்களுக்கும் ஒருவிதமான நாட்டம் இருந்தது. ஆம்; வாயைக் கட்டி வயித்தைக் கட்டி, பசி பட்டினியோடு இருந்தாலும் இருப்போமே ஒழிய, சிகை திருத்துவது என்பது கோவை குதிரைப் பந்தய சாலையில் இருக்கும் சூர்யா விடுதியின்(Surya International Hotel)கீழ்ப் புறம் உள்ள ஓப்ராய் முடித் திருத்தகத்தில்தான் முடி வெட்டுவது என்பதில் அதிக நாட்டமுடன் இருந்தோம்.//
இந்த பாழப் போன மனசு பழசை எல்லாம் ஏன் நினைக்குது?

தாராபுரத்தான் said...

உங்க காலத்திலே உருவான தலைவர்கள்..அவர்கள் உருவாகிய போது ஏற்படுத்திய தாக்கம்.. அழகா பதிவு செய்துள்ளீர்கள்.

Dhaarani said...

hmmmm... nice article anna............ i have hust read abt ur blog in ananda vikatan nd searched for it today.....