வீட்டு மாட்டுக்கு மூக்கணாங்கயறு வாங்குவதற்காய்ப் பாண்டியன் கடையில் நின்று கொண்டிருந்த எனக்கு தூக்கிவாரிப் போட்டது.
என் பள்ளி நாட்கள் தொட்டு, மானசீகமாய்க் காதலிக்கும் இராஜேசுவரி ஓடுகாலியாகிப் போனாளா? ஓட்டைப்பல்லு மாதவனெல்லாம் ஏசும்படி ஆகிப் போனாளா என் இராஜேசுவரி?? வீடு சென்றடையும் வரையிலும் மனம் புழுங்கித் தவித்தது.
“அம்மா, தவுட்டுக்கார இரங்கநாதன் வீட்ல எல்லார்த்துக்கும் கண்ணாலம் ஆய்டிச்சாமா?”, மிகுந்த கவனத்துடன் இராஜேசுவரி பெயரைத் தவிர்த்தேன்.
“இன்னும் இல்லியே? பெரியவ சுசீலாவைப் பண்ணைக் கிணத்து ஆறுச்சாமி பையனுக்குக் குடுத்திருக்கு. அவளுக்கு நேர் இளையவன் திருமூர்த்தி. கடைசிப் பொண்ணு இராஜிக்கு கண்ணாலம் ஆனவிட்டுத்தான அவனுக்கு ஆகும்?”, அம்மா வெள்ளந்தியாக அடுக்கினாள் தவுட்டுக்காரவீட்டு நிலவரத்தை. மனம் குதூகலித்தது.
”நாதாரி மாதவன் சொல்றது யாரை?”, குதூகலிப்பு நீடிக்காமல், கொழுகொம்பை நாடும் கொடி போல அல்லாடியது மனம்.
“பாண்டியன் கடை வாசல்ல ஓடுகாலி இராஜேசுவரின்னு சொல்லிச் சொன்னாங்ளேம்மா?”
“அதா? சென்னியப்பன் தங்கச்சி எண்ணெய்க்காரன் மகனோட ஓடிப் போனாளே?? அதைச் சொல்லி இருப்பாங்களாட்ட இருக்கு?”
“ஏன்டா, ஊரெல்லாம் இராஜேசுவரிங்ற பேரையே வெச்சித் தொலையுறீங்க??”, நான் கேட்காவிட்டாலும் என் மனம் வலிந்து கேட்டது. நாளும் கழியத் துவங்கியது. மற்றொரு நாளும் விடிந்தது.
“டே மணியா! போடா, ஊர்த்தலைவர் ஊட்ல போயி, இன்னத்து தினத்தந்திய நாங்கேட்டன்னு சொல்லி வாங்கியா போ!!”, விரட்டினார் ஊர்சோலி பார்க்கும் சித்தப்பா.
“இந்த சித்தப்பனுக்கு வேற வேலையே இல்லை. எப்பப் பார்த்தாலும், எனக்குக் காட்டம்பட்டிக் கந்தசாமியத் தெரியும். ஆலம்பாளையத்துக் கண்ணப்பனைத் தெரியும். ஆனைமலை ஆண்டுவைத் தெரியும்னு சொரபுருடை விட்டுகினு எனக்கு வேலை சொல்றதே பொழப்பாப் போச்சு!” எனப் புலம்பியபடியே ஊராட்சித் தலைவர் பாலு வீட்டுக்கு நடையைக் கட்டினேன்.
”சின்னமணியக்கா, என்ற சித்தப்பன் பேப்பர் வாங்கியாறச் சொல்லுச்சுங்க்கா!”
“கண்ணூ, மாமன் வடவரத்துத் திண்ணையில வெச்சிருப்பாரு பாரு. எடுத்துட்டுப் போயிட்டு கொண்டாந்து வெச்சிரு இராசா!”, பாலண்ணனின் ரெண்டாவது மனைவி சின்னமணியக்கா கனிந்து பேசினாள். சமுத்தூரில் இருந்து இவள் வந்த நேரம், மூத்தகுடி தெய்வாத்தாளுக்கு இரட்டைக் குழந்தைகள். ”அன்பன், ஆனந்தன்”, சாதிக்பாட்சா சூட்டிய பெயர்கள்.
நான் வீட்டுக்குச் செல்லும் வழியில், கையிலிருந்த தினத்தந்தியை மேயத் தலைப்பட்டேன். “ஆசிரியர் மாரிமுத்து படுகொலை. மடத்துக்குளம் வாலிபர் கைது!”, பரபரத்து ஓடினேன்.
“அம்மா, ஒனக்கு விசியந் தெரியுமா? மாரிமுத்து வாத்தியாரை யாரோ கொன்னு போட்டாங்களாம்!”
“டே, கேனக்காத்தானாட்ட உளறாதடா... அக்கம்பக்கம் யாரும் கேட்றப் போறாங்க!”, திண்ணையில் சட்டாம்பிள்ளத்தனம் பார்த்துக் கொண்டிருந்த சித்தப்பா அலற, சின்னம்மா ஓடி வந்து, “யேங்க, சின்னவனை எப்பப் பார்த்தாலும் வெய்யுறீங்க?”, என ஒத்தாசைக்கு வந்தாள்.
”பின்ன? வெய்யாம என்ன பண்றதாமா?? எங்கியோ, எதோ மாரிமுத்தை யாரோ கொன்னு போட்டாங்கன்னு போட்டிருக்கு... அதுக்கு இவன்...”, சித்தப்பா நீட்டி முழக்கினார்.
“ங்கொன்னியா.... ஏன்டா, உங்களுக்கு மாரிமுத்துங்ற பேரைத் தவிர வேறு எதுவுமே கிடைக்காதாடா?? இதுல வேற, ஆசிரியர் மாரிமுத்து... “, இம்முறையும் வலிந்து ஏசத் துவங்கியது என் மனம். சித்தப்பாவின் அலட்டலில் அன்றைய நாளும் கழிந்தது.
இதோ, மற்றொரு நாள்... மற்றொரு பொழுது... “அகில இந்திய வானொலி நிலையம்... மாலை மணி ஆறு முப்பது... மாநிலச் செய்திகள் வாசிப்பது ஆர்.செல்வராஜ்.... கோவை மாவட்டம் சுல்தான் பேட்டையில் அடையாளம் தெரியாத நபர்களால் செஞ்சேரி மணி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைக் காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகிறார்கள்....”.
முழுதாகக் கூட கேட்கவில்லை. பிடித்தேன் ஓட்டம் மந்திரியப்பர் வீட்டுக்கு... “டே கொமாரு... உங்க மாமனை ஆரோ சுல்தான் பேட்டையில வெச்சிக் கொன்னு போட்டாங்களாமாடா... ஆறரை மணிச் சேதில சொன்னாங்க கேட்டியா?....”
பின்மண்டையில் யாரோ தட்டவும், கோபம் சுர்ரென தலைக்கேறி கையை ஓங்கியபடியே பின்னால் திரும்பினேன். குமாரின் அண்டை வீட்டுத் திருமலைசாமி அண்ணன் கொலை வெறியோடு நின்று கொண்டிருந்தார்.
“மணியம் தியேட்டர் மணியனை ஆரோ போட்டுத் தள்ளுனதுக்கு, நம்ம சிவகாமி அக்காவோடப் பொறந்த மணியனைச் சொல்ற நீயி... இரு உங்கம்மாகிட்டச் சொல்லிச் சொல்றேன்...”, விகாரமாய் ஓங்கிப் பேசினார் திருமலையண்ணன்.
“ச்சே... உங்களுக்கு மணிங்ற பேரை உட்டுப் போட்டு வேற பேரே கெடைக்காதாடா?”, மனம் வலிந்து திட்டித் தீர்த்தது இன்றும்.
இதோ மற்றொரு நாள், மற்றொரு பொழுது. ”சித்தூரில் தெரசா கைது!”.
“என்ன எழவுடா இது? தெரசா கைதா??”, இரு எங்க சித்தப்பங்கிட்ட உடனே போய்ச் சொல்றன்.
“சித்தப்பா, பேப்பர் பாத்தீங்களா? தெரசா கைதுன்னு போட்டிருக்கு!”
“எதனாப் போராட்டம் நடத்தி இருப்பாங்களா இருக்கும். அந்தம்மா அப்படி எதும் செய்யாதே?” என்று சொல்லியபடியே வாசலுக்கு வந்தார் ஊர்சுத்தி சித்தப்பா.
“கொண்டாடா அந்த பேப்பரை...”, தோரணைக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.
“இருங் சித்தப்பா, போயி நாகராசண்ணன் டீக்கடையில இருந்து எடுத்தாறன்.”
நாகராசண்ணன் கடையில் இருந்து அன்றைய தினசரியை கேட்டு வாங்கிப் படித்தபடியே வந்து கொண்டிருந்தேன்.... "அடக் கெரகமே... இந்த இலடசணத்துல ஊட்டுக்குப் போனம்? சித்தப்பன் கொன்னு பொலி போட்ருவாரே?", உதறல் எடுக்கத் துவங்கியது எனக்கு.
”எழவு, ஏன்டா தலைவருக, நல்லவருக பேரையெல்லாம் வெச்சித் தொலையறீங்க? வெச்சாப் போச்சாது; நல்லபடியாவாவது இருந்து தொலையலாம்ல?”, மனம் வலிந்து கடிந்து நொந்து கொண்டது. மீண்டும் தலைப்பைக் கடந்து வாசித்தேன்.
தினசரி பல்லிளித்தது, “சட்டத்துக்கு விரோதமாகப் பெண்களை வைத்து பாலியல் தொழில் புரிந்த, ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த பெண்மணி தெரசா கைது செய்யப்பட்டு, 15 நாள் காவலில் அடைக்கப்பட்டு உள்ளார்!!”.
ஆண்டுகள் பல கடந்தோடின. செலாக்கு எடுப்பதில் கில்லாடியான செலாக்குச் சின்னதுரை ஒருவித பரபரப்புடன் வந்து சொன்னான், ”கருணாநிதி, தன் மனைவியுடன் கட்டிப் புரண்டு சண்டை! எதோ செய்தி போட்டு இருக்காங்டா!!”.
“ஓடிப் போயிரு நாயே... எந்த வட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர் அவம் பொண்டாட்டிகூட அக்கப் போர் செய்தா எனக்கென்னடா? நிக்காத, ஓடிப் போயிரு நாயே!!”
17 comments:
கதை சூப்பர்... பெயரில் இவ்வளவு பிரச்சனை..என்பதை விட கதை ஆழமாய் சொல்லும் கருத்து அற்புதம். வாழ்த்துக்கள்
அன்பின் பழமைபேசி
கதை நல்லாவே இருக்கு - இது மாதிரி ஊருக்கு ஒருத்தர் இருக்கத்தான் செய்யுறாங்க - என்ன செய்யுறது ....
பணிவுடன் பழமைபேசி ( இன்னிக்குத்தான் பாத்தேன் ) நல்ல குணம் .
நல்வாழ்த்துகள் பழமைபேசி
நட்புடன் சீனா
வடை பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
Pazhamai,
Super d duper.
நல்லா சிரித்தேன் . வாழ்த்துக்கள்
நான் நிக்கலை ..திரும்பியும் பார்க்கலை
கதை விறு விருப்பாக உள்ளது
இதற்காகதானா..நம்ம கதை
//ங்கொய்யால,ங்கொய்யா//
ஏனுங் மணீண்ணா
இந்தப்பழமையெல்லா இப்பத்தானுங் பழக்கத்துக்கு வந்துது.
சரி சரி,என்னமோ போங்.
"சொரபுருடை விட்டுகினு எனக்கு வேலை சொல்றதே பொழப்பாப் போச்சு!"
இதெல்லா நாஞ் சின்ன புள்ளாயிருந்த போது கேட்டது. ம்... ரொம்ப நாளாச்சு கண்ணு... இப்ப கேக்கும் போது சொகமா இருக்குது....
இதுக்கு நான் பின்னூட்டம் போடவா இல்ல ஓடிப் போயிரவா... இஃகி... இஃகி... ஏன்னா என் பேரு அப்படி... அவ்வ்வ்வ்வ்
ம்ம்ம்.....இயல்பா ரசிக்கும்படி இருக்கிறது. வட்டார வழக்கின் சுவை குறையாமல் எழுத்தாய் வடித்தமைக்கு வாழ்த்துக்கள்
“//ஓடிப் போயிரு நாயே... எந்த வட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர் அவம் பொண்டாட்டிகூட அக்கப் போர் செய்தா எனக்கென்னடா? நிக்காத, ஓடிப் போயிரு நாயே!!”///
இயல்பான நடை
:-))))))))))))
வழக்கம்போல் இயல்பான நடை நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை
அதுக்கு தான் பட்டப்பெயரோட அவங்க பெயரை பேசனுங்கிறது\சொல்லனுங்கிறது.
ஊர்ல பல மணி இருக்கலாம் ஆனா பழமைபேசி மணி ஒருத்தருதான இஃகி.
பட்டப்பேரு குறித்து இடுகை எழுதனும்னு பல பல காலமா நினைச்சுக்கிட்டுறுக்கேன். என்னைக்கி எழுதுவேன் என்பது தான் தெரியல :(
எனக்குக் காட்டம்பட்டிக் கந்தசாமியத் தெரியும். ஆலம்பாளையத்துக் கண்ணப்பனைத் தெரியும். ஆனைமலை ஆண்டுவைத் தெரியும்னு சொரபுருடை விட்டுகினு எனக்கு வேலை சொல்றதே பொழப்பாப் போச்சு!” எனப் புலம்பியபடியே ஊராட்சித் தலைவர் பாலு வீட்டுக்கு நடையைக் கட்டினேன்.
நல்ல தமாசு போங்கோ... இன்னும் நெரிய ஊர்சுத்தி மாமனுகளும், சிதாப்பகளும் இருகாங்க...
Post a Comment