1/01/2011

2011:இல்லாத சாவுக்கு, வேண்டாத எழவு எதுக்கு?

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே!

ஆக்கலும், காத்தலும், அழித்தலும் என மூன்றையும் சரிசமமாய் நடாத்தி வருகிற இயற்கைக்குச் சரண் நாங்கள். எனினும், அந்த இயற்கையே அதன் பாதையிலிருந்து பிறழ்ந்து செல்கிறதோ எனும் ஐயம் ஏற்ப்டத் துவங்கி இருப்பதுதான் 2011ன் சிறப்பம்சம்.

ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு, ஆர்கன்சாசில் நிகழும் சுழற்காற்றைப் பற்றிக் கவலைப் படுகிறான் ஒருவன். ஓடக்கல் பாளையத்தில் இருந்து கொண்டு, ஒகாயோவில் வீசும் பனிப்புயலைப் பற்றி வர்ணிக்கிறான் மற்றொருவன். ஆனால், சொந்த ஊரில் இருக்கும் மாடசாமியும், முனியம்மாளும் என்னவானார்கள் எனக் கவலைப்பட அவனுக்கு நேரமும் இல்லை; பிரஞ்ஞையும் இல்லை.

பணத்தை அள்ளி வீசுகிறான். ”வீச முடிகிறது, வீசுகிறான்; அதில் என்ன பிழை கண்டீர்?” எனக் கொக்கரிக்கிறது மேட்டிமைக் கூட்டம். தட்டுமுட்டு சாமானெல்லாம் தரக்கூடாத விலை; ஓடுகிற ஓடையிலே அள்ளிக் குடித்துக் கொண்டிருந்த குடிநீருக்கு விலை; இருக்கும் இலையைக் கிள்ளிச் செய்த மருத்துவத்துக்கு விலை; கடமையே எனக் கற்றுக் கொடுத்த கல்விக்கு விலை. இயற்கையின் இச்சை, அன்பின் அச்சாணி, மனிதனின் மாண்பு என இருந்து வந்த கலவியும் விலைக்கு!

”ச்சீச்சீ... இது ஒரு உலோக அஃறிணை!” என நினைத்து விட்டால் அதற்கேது விலை? ஆனாலும் பவுனு பதினைந்தாயிரம். இல்லாத வெங்காயத்துக்கு விலை அறுபது உரூபாய். துணை இல்லாத மணவாளனுக்கு, கொடுக்கப் பெண் இல்லை. இருக்கிற பெண்ணுக்கு உரிமை இல்லை.

2011 தேர்தல்... தேர்தல்... தேர்தல்... தேர்ச்சியடையா மக்களுக்குத் தேறுதல் உண்டோ? இவன் அவனைச் சொல்வான். அவன் இவனைச் சொல்வான். சாதி என்பான். மதம் என்பான். இலக்கு என்பான். வாக்கு என்பான். பணம் என்பான். வாழ்க்கையைப் பிளந்து, நெருப்பு மூட்டுவான். அடுத்தவன் வாழ்க்கை எரிவிப்பில் குளிரும் காய்வான். ”தேர்தல் ஆண்டு, மக்கள் கொண்டாட்டம்! தலைவர்கள் பதட்டம்!!” எனச் செய்தியும் வெளியிடுவான் ஊடகப் பிச்சைக்காரன்!

கணம் பொருந்திய மேட்டிமைக்காரன் காற்றை அடைப்பான். அடைத்துச் சந்தையிலே வண்ண வண்ணப் போத்தலில், அங்க அவயங்கள் காட்டி விற்கச் சொல்வான். ”இடுப்பழகில் மயங்கிப் போனேனே, கன்னக் குழியழகில் கிறங்கிப் போனேனே... இதோ, வாங்குகிற மூச்சுக் காற்றுக்கும் விலை கொடுக்க நாம்போறேனே!!”, என்பான் இவன்.

வானவில்லை வளைக்க வந்தோம் நாங்கள். வானில் இருக்கும் விண்மீனையெல்லாம் பறிக்க வந்தோம் நாங்கள். சமூகத்தைச் சீர்திருத்த வந்தோம் நாங்கள். யோகாவைக் கொண்டு மோகாவை வீழ்த்த வந்தோம் நாங்கள். கடவுள் இல்லை என்றுச் சொன்ன கடவுள் வந்தார்பாரு. வாழ்வதற்க்குக் கூட கட்டணம் வசூலிப்பாரு அவரு!! கூடக் கொடுத்தா, கூடவும் கூட்டிக் கொடுப்பாரு அவுரு

... என்னங்கையா வாழ்க்கை? இருக்கிற எடத்துல இருந்து நாலடி கீழ இறங்குவோம்... இன்னைக்கு செத்தா, நாளைக்குப் பாலு! மனுசனுக்கு மனுசனா, ஒன்னுமொன்னுமா இருந்துட்டுச் சாகலாம் வாங்க. இருக்கிற மனுசனுக்கு, இல்லாத போட்டி எதுக்கு? இல்லாத சாவுக்கு, வேண்டாத எழவு எதுக்கு??

Let's make, year 2011 be a good start!!!

11 comments:

vasu balaji said...

ம்கும். ந்தா போய்ட்டே இருங்க பின்னாடியே வாரமுன்னு எங்க எலவசம்னு நிப்பாய்ங்க. வெங்காயம் விலையப் பத்தி பேசுறானா. பெட்ரோல ஏத்து. பெட்ரோல பத்தி பேசுரானா. காஸ் விலைய ஏத்து. இது போருன்னு நினைச்சானா எதிர் கட்சி ஊழல்னு கத்து. அவன் பதிலுக்கு கத்துவான்னு ஓடிட்டிருக்கு. எழவுக்கே சுடுகாட்டுல எலவசம்னு போர்டு வச்சிட்டு 500ரூ குடுத்தாதான் கரண்டு ஆன் பண்ரான்.அவ்வ்வ்.

a said...

நாமெல்லாம் பழக்கப்பட்ட அறிவினங்கள்.......................

பழமைபேசி said...

@@வழிப்போக்கன் - யோகே

தம்பி, தெளிவாத்தான் இருக்காரு!!

Unknown said...

"இன்னைக்கு செத்தா, நாளைக்குப் பாலு! மனுசனுக்கு மனுசனா, ஒன்னுமொன்னுமா இருந்துட்டுச் சாகலாம் வாங்க."

உண்மை. இன்னிக்கு என் சிந்தனையும் இதே மாதிரி தான் ஓடிக்கிட்டு இருந்தது.

நசரேயன் said...

நீங்க சொன்னா சரிதேன்

சின்ன அம்மிணி said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள்

//////சின்ன அம்மிணி s//

வலையில இருக்கீங்களா?//

புது வலைப்பதிவு துவங்கியிருக்கிறேன் மணியண்ணே. பணிச்சுமை அதிகம் தமிழ்மணம் பக்கம் வர முடியலை.

Thekkikattan|தெகா said...

ம்ம்ம்...

மாதேவி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Prasanna said...

நண்பா... கேக்க நல்லா இருக்கு... ஆனா நிசம் அது தானே .... வாங்க அமெரிக்க வேலை வேண்டாம் ... நம்ம ஊருக்கு போயி மக்களை திருத்துவோம் .....

பழமைபேசி said...

//prasanna said...
. வாங்க அமெரிக்க வேலை வேண்டாம் ... நம்ம ஊருக்கு போயி மக்களை திருத்துவோம் .//

அருமை... அழகா மடக்குனீங்க!!

Unknown said...

மயங்கி, சாகக் கிடக்ககின்ற மனித நேயத்துக்கு உணர்வூட்டி, உரமேற்றி மீண்டும் புதுப்பொலிவுடன் உலா வரச் செய்வோம். தேவையுடையோர் எவராயினும் அவருக்கு இயன்றவரை உதவியெனும் அன்புக்கரம் நீட்டுதலே மனித மாண்பெனக் கொள்வோம்.