1/02/2011

பள்ளயம் 01/02/2011

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில், மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

-----------------------

பதிவுலகத்தில் காலடி எடுத்த வைத்ததின் வழியாக, நிறைய அனுகூலங்கள். ஆம், இதன் மூலம் பொருளீட்டுவது என்பதைத் தவிர்த்து, மனநிறைவானவை நிறைய! தெரியாதன தெரிந்து கொளல், அறியாதன அறிந்து கொளல், நட்பும் பேணுதலும், சகிப்புத்தன்மைப் பெருக்கம், எழுத்துப் பயிற்சி, சமூக ஈடுபாடு முதலானவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அதன் தொடர்ச்சியாக, 2011ம் அதேவிதமாய்க் கழிய வேண்டும் என்பதில் ஆவலுடன் இருக்கிறேன்.

-----------------------

துவையல்? தொவையல் எனப் பேச்சு வழக்கில் குறிப்பிடுவது உண்டு. துவைத்து எடுப்பதால் துவையலா? தொகுத்து வழங்குவது, தொகையல் என ஆகிப் பின், தொவையல் ஆகிற்றா? வினா எழுப்பியவர், அண்ணன் சீமாச்சு அவர்கள். விடையை அனுமானித்தாலும், உறுதிப்படுத்தாமல் சொல்வதில் வழு நேர்ந்திடுமென வாளாதிருந்தோம்.

கூடவே..... முனையில் நீளும் கரம் என்னுடையது அல்ல; எங்கள் ஆருயிர் அண்ணனுடைய கையா என்பதும் எனக்குத் தெரியாது. விருந்தை நல்கிய மருத்துவர் அசோக் மற்றும் குடும்பத்தாருக்கு உளம்கனிந்த நன்றிகள்!

நேற்றைய இரவுக்கான விடை இதோ மறுநாள் விடியலில்....

தொகுத்து வழங்கும் எதுவும் தொகையல். வெற்றிலை பாக்கு முதலானவற்றைத் தொகுத்துக் கொடுப்பது, வெற்றிலைத் தொவையல். தேங்காய், கடலைப் பருப்பு, மிளகாய், வெங்காயம் முதலானவற்றைத் தொகுத்துக் கொடுப்பது தேங்காய்த் தொவையல். Salad எனச் சொல்லும் இலை, தழை மற்றும் பழச்சீவல்கள் முதலானவற்றைக் கொண்டு தொகுத்து அளிப்பது, எலக்கூட்டுத் தொவையல்! ஆக, தொவையல் என்பதும் துவையல் என்பதும் ஒன்றே! மேலும் இது ஒரு வினையாகு பெயராகும்.

துவைத்து, துவைத்தல் என்பது, இருக்கும் எதோ ஒன்றை மொத்தமாய்க் கூட்டி அதன்மேல் சக்தியைப் பிரயோகம் செய்திடுவதாகும். இது ஒரு வினைச்சொல். பெயர்ச் சொல் அன்று!

-----------------------

சென்ற ஆண்டின் இறுதியில் பனிச்சுமை காரணமாக, பதிவில் இடுகைகள் இடுவதில் தொய்வு ஏற்பட்டமை அனைவரும் அறிந்ததே. அதன் விளைவாய், தொடர்கள் எனும் பாங்கில் எழுதப்பட்டு வந்த, “கனவில் கவி காளமேகம்”, “பள்ளயம்”, ”கவி காளமேகத்தின் தாக்கம்” ஆகியனவை மீண்டும் உயிர்ப்பிக்கப்படும்.

”கவி காளமேகத்தின் தாக்கம்” எனும் தலைப்பின் கீழ், சித்திரகவி வகையில் சில படைப்புகள் இடம் பெற்றன. அவற்றோடு, கீழ்க்கண்ட கவி வகைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில், வகைக்கு ஒரு பாடல் இடம் பெறும்
.
சாதகம், பிள்ளைக்கவி, பரணி, கலம்பகம், அகப்பொருட் கோவை, ஐந்திணைச் செய்யுள், வருக்கக் கோவை, மும்மணிக் கோவை, அங்கமாலை, அட்டமங்கலம், அனுராகமாலை, இரட்டைமணிமாலை, இணைமணி மாலை, நவமணிமாலை, நான்மணிமாலை, நாமமாலை, பல்சந்தமாலை, பன்மணி மாலை, மணி மாலை, புகழ்ச்சி மாலை, பெருமகிழ்ச்சிமாலை, வருக்கமாலை, மெய்க் கீர்த்திமாலை, காப்புமாலை, வேனின் மாலை, வசந்த மாலை, தாரகைமாலை, உற்பவமாலை, தானைமாலை, மும் மணிமாலை, தண்டகமாலை, வீரவெட்சிமாலை, வெற் றிக்கரந்தைமஞ்சரி, போர்க்கெழுவஞ்சி, வரலாற்று வஞ்சி, செருக்களவஞ்சி, காஞ்சிமாலை, நொச்சிமாலை, உழிஞைமாலை, தும்பைமாலை, வாகைமாலை, ஆதோரணமஞ்சரி, எண்செய்யுள், தொகைநிலைச்செய்யுள், ஒலியலந்தாதி, பதிற்றந்தாதி, நூற்றந்தாதி, உலா, உலா மடல், வளமடல், ஒருபாவொருபஃது, இருபாவிரு பஃது, ஆற்றுப்படை, கண்படைநிலை, துயிலெடை நிலை, பெயரின்னிசை, ஊரின்னிசை, பெயர்நேரிசை, ஊர்நேரிசை, ஊர்வெண்பா, விளக்குநிலை, புறநிலை, கடைநிலை, கையறுநிலை, தசாங்கப்பத்து, தசாங்கத் தியல், அரசன்விருத்தம், நயனப்பத்து, பயோதரப் பத்து, பாதாதிகேசம், கேசாதிபாதம், அலங்கார பஞ்சகம், கைக்கிளை, மங்கலவெள்ளை, தூது, நாற் பது, குழமகன், தாண்டகம், பதிகம், சதகம், செவி யறிவுறூஉ, வாயுறைவாழ்த்து, புறநிலைவாழ்த்து, பவ னிக்காதல், குறத்திப்பாட்டு, உழத்திப்பாட்டு, ஊசல், எழுகூற்றிருக்கை, கடிகைவெண்பா, சின்னப்பூ, விருத்தவிலக்கணம், முதுகாஞ்சி, இயன்மொழி வாழ்த்து, பெருமங்கலம், பெருங்காப்பியம், சிறுகாப்பியம்

தொண்ணூற்று ஆறு வகையான செய்யுள்கள் கொண்டது, தமிழ்ப் பிரபந்தம். இலக்கணப் பிழையின்றிக் கட்டுவதென்பது இந்தச் சாமன்யனுக்கு இயலாத காரியம். எனினும், இயன்றவரை முயற்சி செய்வோம்!

-----------------------

நனவுகள்” எனும் தொடரும் கிடப்பிலேயே கிடக்கிறது. அதையும் மீளக் கொண்டு வர வேண்டும். டோண்டு ஐயா மற்றும் பாலாண்ணன் ஆகியோரது விருப்பங்கள் அவை. அத்தோடு புதிதாய்த் தொடரவிருக்கும் தொடரின் ஈடானது, அறிவியலைச் சார்ந்த புனைவாக இருக்கும். Specturm என்பதையொட்டி, Humatrum (ஃக்யூமேட்ரம்) என்பதுதான் கதையின் ஈடு.

திறம்மிக்க வெள்ளொளியை ஊடகத்தின் வழியாகச் செலுத்தினால், வெள்ளொளியானது, வீரியத்துக்கொப்ப ஏழு வணணங்களாப் பிரிந்து, ஒவ்வொரு வண்ணமும் தனித்தனியே நிற்கும். இதனை நிறப்பிரிகை என அழைக்கிறோம்.

நாகர்கோயில், வெட்டூர்னி மடத்தைச் சார்ந்த விஞ்ஞானி சுப்பையா வெனான்சியசு என்பார், திருமூர்த்திமலைச் சாரலை ஒட்டிய கிராமங்களான கொடுங்கியம், விளாமரத்துப்பட்டி, கரட்டுமடம் முதலான ஊர்களில் சுற்றித் திரிகிறார். அப்போது, வேடங்கோயில் எனும் இடத்தில் நல்லதொரு இடம் அமைய, தன் ஆய்வுக்கூடத்தை அங்கே நிறுவுகிறார்.

ஒரு மானுடன், தியானம் எனும் ஊடகத்தின் வழியாக தன்னுள் இருக்கும் பல்வேறு தரப்பட்ட குணங்களையும்,  குணப் பிரிகைக்கு ஆட்படுத்துகிறான். தியானம், அணுப்பிரதி(cloning), குணப்பிரிகை முதலானவற்றைக் கையாண்டு, தன்னுள் இருக்கும் ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு மானுடனை உருவாக்குகிறான்.

Character, Property, Attribute, அதாவது பண்பு, குணம், தன்மை முதலானவற்றின் வேறுபாடுகள் நன்கு ஆராயப்பட்டு, ஒவ்வொரு குணத்திற்கு ஒப்ப, ஒரு பிரதி(clone) மானிடனாக தயானந்த், மகிழானந்த், காமானந்த், சூரானந்த், கோபானந்த், வெகுளானந்த் முதலானவர்கள் பிறக்கிறார்கள்.

மானுடனை மகிழ்வின் ஆழ்நிலைக்குத் திருப்பி, அத்தருணத்தினாலான அவனது அணுக்களின் பிரதியைக் கொண்டு மகிழானந்த்தாவை உருவாக்குவார் விஞ்ஞானி வெனான்சியசு.

அப்படிப் படைக்கப்பட்ட பிரதி மானுடன் ஒவ்வொருவனும், சில பல காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டு, இந்திய சமூக நல்லுறவுக்குத் துணை போவான். இப்படியாக, ஒவ்வொரு குணத்தைக் கொண்டவனும் ஒவ்வொரு காரியத்துக்க்குப் பாவிக்கப்பட்டு, இந்தியா வல்லரசு ஆவதுதான் கதை!

(அப்பு, இப்படி ஒரு படம் இன்னும் வரலைன்னு நினைக்கிறேன்...)

-----------------------

முகமறியா உறவுகள் சிலர் உலகமெங்கும் இருக்கிறார்கள் என்பதை எண்ணும் போது அடையும் அகமகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பலநாளும் பக்கத்தார் ஆயினும் நெஞ்சில்
சில நாளும் ஒட்டாரோ ஒட்டார் - பலநாளும்
நீத்தார் எனக் கைவிடல் உண்டோ தன் நெஞ்சத்து
யாத்தாரோடு யாத்த தொடர்பு!

6 comments:

vasu balaji said...

/பலநாளும் பக்கத்தார் ஆயினும் நெஞ்சில்
சில நாளும் ஒட்டாரோ ஒட்டார் - பலநாளும்
நீத்தார் எனக் கைவிடல் உண்டோ தன் நெஞ்சத்து
யாத்தாரோடு யாத்த தொடர்பு!/

இது என்ன பாடல். ஒவ்வொருவரும் நெஞ்சில் செதுக்கிக் கொள்ள வேண்டிய ஒன்று. நனவுகள் மீள்வதில் மகிழ்ச்சி. ஹ்யூமேட்ரம், காளமேகம்,ம்ம்ம்..விருந்துகள் காத்திருக்கு. பசியோடு யாமிருக்கிறோம்.:)

a said...

//
தொண்ணூற்று ஆறு வகையான செய்யுள்கள்
//
தங்கள் தமிழுக்கு தலைவணங்குகிறேன்..

பழமைபேசி said...

@@வானம்பாடிகள்

நாலடியாருங்க பாலான்ணே!

@@வழிப்போக்கன் - யோகேஷ்

ம்ம்ம்

Anonymous said...

அண்ணா,எனக்கு மிகவும் பிடித்த "காளமேகம் அய்யா" திரும்ப வருவதில் மிக்க மகிழ்ச்சி.....

ஈரோடு கதிர் said...

||கரட்டுமடம்||

அட, நம்மூரு!!!

Anonymous said...

எச்சரிக்கை:
"குறட்டை" புலி உலா வருகிறது.
வலைப்பிரியர்கள் வாழ்த்துக்கள் சொல்லாவிட்டால்
உங்கள் வலைப்பூக்களில் பதுங்கும்.அது உங்கள் பதிவிற்கு ஆபத்தானது.
--- sleepingtiger007.blogspot.com