1/14/2011

பொங்கல்

”டே கருணாநிதி, நீயி பெரியபோது போயிருவியா? இல்ல இங்கதான் இருப்பியா??”

“ஆமாண்டா, நானும் எங்க அக்கா ஜோதிலட்சியுமு இன்னிக்கு ஆறுமணி வண்டிக்கு பொள்ளாச்சி போயி, மாமன் கடையச் சாத்துனவுட்டு ஆனைமலை வண்டி புடிச்சிப் போலாம்னு எங்கம்மா சொல்லுச்சு! ஆமா, நீயி”

“எங்க பெரீம்மா செத்துப் போச்சில்ல? அதுனால இந்த வருசம் எங்களுக்கு நோம்பி இல்லடா. ஆனா, நான் லட்சுமாவரம், எங்கமுச்சியவிங் ஊருக்குப் போறேன்!”.

“அப்பிடியா? ஆனைமலை மாசாணியாத்தா கோயலுக்கு வருவியாடா அப்ப?”

“பாப்பு வந்தா, கூடா நானுமு வருவேன்!”.

சலவநாயக்கன் பட்டிப் புதூர் மின்வாரிய ஊழியரான குப்புசாமி அண்ணனின் மகன் கருணாநிதியும் மணியனும் ஒரே பள்ளியில் படிப்பவர்கள். மணியன் எட்டாம் வகுப்பு, கருணாநிதி ஏழாம் வகுப்பு. இருவரும் பள்ளிக்குக் கிட்டத்தட்ட ஐந்து மைல்தூரம் ஒன்றாக இணைந்தே சென்று வருவது வழக்கம்.

“மணீ, இங்க வா கண்ணூ. ஊருக்குப் போகாத இராசா... இங்கியே இரு... நாம நாளைக்கு உங்க பெரியத்தையப் பாக்குறதுக்கு தாளக்கரை போய்ட்டு வர்லாம்”

“போ அப்பத்தா... நான் எங்கமுச்சி ஊருக்குப் போறேன்...”

”உங்கம்மா உனைய நல்லாக் கெடுத்து வெச்சிருக்கா... இந்தக் கெழவி சொல்றத யாரு கேப்பாங்க? உள்ளந் தீயெரிய ஒதடு பழஞ்சொரியன்னு, பேசுறது மட்டும் தேனொழுகப் பேசுவா அவ!”, சந்தடி சாக்கில் மருமகளை வறுத்தெடுத்தாள் கிழவி.

”தம்பி, டிக்கெட் எடுத்தாச்சா?”

“இல்லீங்ணா, உடுமலைப் பேட்டை ஒன்னு குடுங்ணா!”

“ஒர்ருவா பத்து பைசா... செரியாச் சில்லறை வேணும்”

“இந்தாங், டிக்கெட் கிழிக்காமக் குடுங்ணா!”

மணியனுக்கு, பேருந்துச் சிட்டுகளைச் சேர்த்து வைப்பது நெடுநாள் வழக்கம். மூன்றாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்து, ஐந்தாண்டுகளாகத் தொடர்ந்து சேகரம் செய்து, சேமித்து வருகிறான்.

உடுமலைப் பேட்டையில், தளி சாலையும் பழனி சாலையும் சங்கமிக்கும் இடத்தைப் பழைய பேருந்து நிலையம் என அழைக்கப்படுவது உண்டு. அங்கே ஒரு போக்குவரத்து நிழற்கூடையும் ஒன்று இருக்கும்.

பேருந்து நிலையத்தில் ஏறினால், அமருவதற்கு இடம் கிடைக்காது என்பதற்காக, வைத்தியநாதன் மருத்துவர் அலுவலகம் முன்பாக ஏறி பேருந்து நிலையம் சென்று, அங்கே அனைவரும் இறங்கியவுடன் அமர்ந்து கொள்வது மணியனின் வழக்கம். அப்படியாகப் பழைய பேருந்து நிலையத்திற்கும், நடப்புப் பேருந்து நிலையத்திற்குமான கட்டணம் இருபத்தி ஐந்து பைசா. அதுதான் குறைந்தபட்ச கட்டணுமும் கூட.

இப்படிப் போக்குவரத்துக் கட்டணமானது, குறைந்தபட்ச கட்டணமான இருபத்தி ஐந்து பைசாவில் இருந்து ஐந்து, ஐந்து பைசாவாகக் கூடிக் கொண்டே போகும். இருபத்தி ஐந்து பைசா டிக்கெட் துவக்கம், ஒரு ரூபாய் இருபது பைசா டிக்கெட் வரையில், அனைத்து டிக்கெட்டு வகைகளையும் கட்டுக் கட்டாகச் சேர்த்து வருகிறான் மணி.

சலவநாயக்கன் பட்டிப் புதூரில் புறப்பட்ட, UBT, Udumalpet Bus Transport, நான்காம் இலக்கமிட்ட பேருந்தானது, கொசவம்பாளையம், மூங்கில்தொழுவு, சிக்கநூத்து, சிந்திலுப்பு, இலுப்பநகரம், ஆலாமரத்தூர், மாலகோயில் பிரிவு, பெதப்பம்பட்டி, பொட்டையம் பாளையம் பிரிவு, குறிஞ்சேரி, புக்குளம், ஏரிப்பட்டி கடந்து உடுமலை பழனிப் பாதையை அடைந்ததும் ஆயத்தமானான் மணி.

“பழைய பஸ்டேண்டு எல்லாம் எறங்கு!”, தன் அம்மா கொடுத்த பையில் இவனது பொருட்களும் இருக்கின்றனவா எனச் சரிபார்த்துக் கொண்டே இறங்க எத்தனித்தான்.

“டே மணீ... ஊருக்குப் போறயா கண்ணூ?”, ஏற்கனவே இறங்கியிருந்த சரசக்கா.

“ஆமாங் சின்னம்மா!”

”உடுக்கம் பாளையத்து வண்டிக்கு இன்னுமு நேரமிருக்குது... வா, மணி விலாசுல காப்பி வாங்கித் தாறேன்!”

“வேண்டாங் சின்னம்மா... எங்கம்மாவுக்குத் தெரிஞ்சா வையும்!”

“நாஞ்சொல்லிக்கிறேன் வா”, பயந்து பயந்து போய், மணி விலாசில் காப்பியைக் குடித்துவிட்டு, மூன்றாம் இலக்கமிட்ட வண்டியைப் பிடித்து லெட்சுமாபுரம் நோக்கிப் பயணிக்கலானான்.

RSR Bus Transports, இலக்கம் 3, பேருந்தானது பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பொரிக்கடை, தங்கம்மாள் ஓடை, சுடுகாட்டு நிறுத்தம், இராகலபாவிப் பிரிவு, கள்ளப்பாளையம் பிரிவு, முக்கோணம், மில்கேட்டு, பூலாங்கிணறு, சடையபாளையம் கடந்து, அந்த வளைவில் திரும்பிக் கொண்டிருக்கையில், மணியன் எதேச்சையாக வெளியே பார்த்தான்.

மெய் சிலிர்த்தது அவனுக்கு. ஆம், அவன் பிறந்த வீடான, அந்தியூர் அம்முலு அம்மா வீடு கண்ணில்பட்டது. தற்போது வேறொரு ஊரில் வசித்து வந்தாலும், அந்தியூர்தான் இவனுடைய பிறப்பிடம். தன் ஊர் அருகில், இரு மருங்கிலும் இருக்கும் புளியமரங்களை இவன் இரசித்துக் கொண்டிருந்தான். பேருந்தானது, கோமங்கலம், கெடிமேடு, கூளநாயக்கன்பட்டி, குழியூர் கடந்து லெட்சுமாபுரத்துக்குள் நுழைந்தது.

ஊர் முழுதும் காப்புக் கட்டுவதற்காக, பூளைப்பூவும், வேப்பிலையும், மாவிலையும் பெருவேகத்தில், துரித கதியில் இடம் மாறிக் கொண்டிருந்தது. பேருந்தை விட்டு இறங்கியதில் இருந்து, வினாயகர் கோவில் சமீபம் இருக்கும் தன் அமுச்சியின் வீட்டை அடையும் வரையிலும், “வா கண்ணூ.. ஊர்ல அம்மா நல்லா இருக்காங்ளா? உங்காத்தா நல்லா இருக்குதா? மழையா கண்ணூ? வா, ஒரு லோட்டாக் காப்பித் தண்ணி குடிச்சிட்டு போவியாமா... வா கண்ணூ, தெனைமாவு தின்னுட்டுப் போ...”, வரவேற்பும், விருதோம்பலும் இவனை வாரி அணைத்தது.

இருந்தாலும் இவனுள், அமுச்சியைப் பார்க்க வேண்டும்; அதற்கும் மேலாக வீட்டில் இருப்பவர்களைப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் மேலோங்கி இருந்தது.

எல்லா வீட்டு முற்றமும் சாணத்தால் மொழுகி, இளம் பெண்கள் ஆங்காங்கே நின்று மாவுக் கோலமும், அச்சுக் கோலமும் இட்டுக் கொண்டிருந்தார்கள். தெருமுனைகளில், பொங்கல் வாழ்த்து அட்டைகளோடு விடலையர் கூட்டம் சிலாகித்துக் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள்.

“டே மணீ... உங்கண்ணன் பிரவாகரன் வர்லியாடா?”, அதில் ஒரு வாலிபம் அவனது சகோதரனைக் கேட்டது.

“வல்லீங்ணா!”

லெட்சுமாபுரம் துவக்கப் பள்ளியருகே இருக்கும் பாறைக்காட்டுக்காரர் வீட்டருகே சென்று கொண்டிருந்தான் அவன். தபதபவென நான்கைந்து பேர் அவனைப் பார்த்ததும் ஓடோடி வந்தார்கள். சின்னபாப்பக்கா மகள் வடிவு, ஜெயமணியக்கா மகள் பத்து, டெய்லர் பழனிச்சாமியண்ணன் மகள் சரசுவதி.. அவர்களுடன் பாப்புவும்.

“மாமா, ஏன் நேத்தே வர்லே?”

“பள்ளிக்கூடம் இன்னிக்கித்தான் பாப்பு வுட்டாங்க?”

“செரி, எனக்கு என்ன கொண்டாந்தீங்க?”

உடுமலைப் பேட்டை, ஜாஸ்மின் சில்க் அவுசு மஞ்சப் பையை விரித்துக் காண்பித்தான்; அம்மா கொடுத்த அனுப்பிய கைமுறுக்கும், அதிரசமும் இருந்தன. பழனியப்பா பிரதர்சு கோழிப் பையைக் காண்பித்தான்; அவ்னது துணிமணிகள் இருந்தன.

“போங் மாமா, நீங்க என்ன கொண்டாந்தீங்க?”, எனப் பாப்பு கேட்கவும், உடன் இருந்த பெட்டைகள் ஆவலோடு அவனைப் பார்த்தன.

கால்ச்சட்டைப் பையில் கையை நுழைத்து, சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த 90 பைசா பச்சை நிறப் பேருந்துச் சீட்டுக் கட்டு ஒன்றும், கொடுமுடி தீர்த்தம் எடுக்கப் போயிருக்கையில் எடுத்து வந்த பண்ணாங்கல் விளையாடுவதற்கான வெங்கச்சாங்கல் ஐந்தையும் எடுத்துக் கொடுத்ததுதான் தாமதம், “ப்ச்க்”, பாப்பு ஓடிப் போனாள்.

ஏஏஏ... இத பாருங்டா... இங்க மாமன் மவளுக்கும் அத்தை பையனுக்குமு இப்பவே பொங்கல் பொங்கிடுச்சிடோய்! தெருமுனையில் இருந்த வாலிபங்கள் சிரித்துக் கூக்குரலிட்டுக் கொண்டாடின.

12 comments:

Unknown said...

பொங்கலுக்கு ஊர் போனா மாதிரியிருக்கு. பொங்கலோ பொங்கல் நல்வாழ்த்துகள்.

பழமைபேசி said...

வாழ்த்துகள் அனைவருக்கும்!

கவி அழகன் said...

பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணாத்த

நசரேயன் said...

பொங்கல் வாழ்த்துக்கள்

vasu balaji said...

பொங்கல் வாழ்த்துகள்.

பழமைபேசி said...

@@யாதவன்
@@நசரேயன்
@@வானம்பாடிகள்

பொ.ந.வா!

தமிழ் said...

புத்தாண்டு,பொங்கல் வாழ்த்துகள்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ம்ம்..

அப்படியே நம்மூருக்கு கூட்டீட்டுப் போயிட்டீங்க... ஜாஸ்மின் சில்க் அவுசு எல்லாம் நான் கேள்விப்பட்டதே இல்லீங்களே..

ஆர்.எஸ்.ஆர் எல்லாம் இன்னமும் ஓடீட்டு இருக்கு..

கடைசியா பாப்பு கொடுத்த 'ப்ச்க்' அழகு.

பொங்கல் நல்வாழ்த்துகள்

குறும்பன் said...

பொங்கலோ பொங்கல்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பொங்கல் வாழ்த்துகள்.

ஈரோடு கதிர் said...

பாப்புக்கு பொங்கல் வாழ்த்து அனுப்னீங்ளா மாப்பு!

தெய்வசுகந்தி said...

பொங்கல் வாழ்த்துக்கள்!