3/31/2010

FeTNA: வேர்கள் தமிழில்! விழுதுகள் உலகெங்கும்!!

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழ்த் திருவிழா-2010, வெகுவிமரிசையாக எதிர்வரும் ஜூலை மாதம் 3 - 5 வரை வாட்டர்பரி, கனெக்டிகட் மாகாணத்தில் நடைபெற இருக்கிறது.

பேரவை பற்றிய சிறு குறிப்பு:

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையானது - வட அமெரிக்காவில் இருக்கும் பல்வேறு தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைக்கும் லாப நோக்கமற்ற ஒரு கூட்டமைப்பு ஆகும்.

1987ம் ஆண்டு 5 உறுப்பினர்களுடன் துவக்கப்பட்ட இந்த பேரவை, தற்போது அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் 40 தமிழ்ச் சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.

பேரவை ஆண்டு விழாவின் நோக்கமானது - தமிழ் மக்கள் தமது தமிழுணர்வை மேம்படுத்திக் கொள்ளவும், உரிமையை நிலை நாட்டுவதற்கும், தமிழின் வளர்ச்சிக்கு உதவுவதே ஆகும். இதே நோக்கங்களுடன் பேரவை விழாக்கள் 1987 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவையின் 23ம் ஆண்டு விழா, அமெரிக்கத் தமிழ் மக்களின் வரலாற்றிலேயே பெரியதொரு விழாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்திற்கு 2,000க்கும் அதிகமான தமிழர்கள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவை வெற்றியடையச் செய்யும் நோக்கத்துடன், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் - 20க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து சுமார் ஆறு மாத காலம் உழைக்கிறார்கள். இந்த ஆண்டு விழாவிற்கான வேலைகள் தற்போது முழுவீச்சில் துவங்கியிருக்கின்றது.


இணையதளம் :
http://www.fetna.org/

விழாவிற்கு முன்பதிவு செய்ய :
http://registration.fetna.org/

முன்பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு :
registration@fetna2010.org


விழாவில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், தங்கள் வருகையை மேற்கூறிய சுட்டியை அழுத்தி, இப்போதே முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏப்ரல் 15ம் தேதிக்கு முன், பதிவு செய்பவர்களுக்கு சிறப்புப் பரிசும் காத்திருக்கிறது. மேலதிகத் தகவல்களுக்கு பேரவை இணையதளத்தைப் பார்க்கவும்.

இலக்கிய வினாடி வினா மற்றும் கவியரங்கம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள....

சென்ற ஆண்டு நடந்த தமிழ்த் திருவிழாவில் இடம் பெற்ற இவ்விரு நிகழ்ச்சிகளிலும் நான் கலந்து கொண்டதன் வழியாக, நல்லதொரு அனுபவத்தைப் பெற்றவனானேன். குறிப்பாக இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் பயனாக, இலக்கிய வரலாறு குறித்த தகவல்களை அறியப் பெற்றேன்.

அதுபோலவே இவ்வாண்டும் இவ்விரு நிகழ்ச்சிகளும் இடம் பெற உள்ளன. அவற்றில் பங்கு பெற விரும்புவோர் எமது மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளுங்கள். கவியரங்கத்தின் தலைப்பு, வேர்கள் தமிழில்! விழுதுகள் உலகெங்கும்!! எனத் தெரிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. கவியரங்கின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், உங்களது பேராதரவினை நல்கிட வேண்டுகிறேன்.

FeTNA-2010 விழா மலருக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன...

சுமார் மூவாயிரம் தமிழர்கள் கூடும் இவ்விழாவில் 'விழா மலர்' ஒன்று வெளியிடப்படும். அம்மலரில் பிரசுரிக்க படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. படைப்புகளுக்கான விதிமுறைகளாக விழாக்குழுவினர் தெரிவிப்பது யாதெனில்:
  • கதை, கவிதை மற்றும் கட்டுரைப் படைப்புகள் தமிழில் இருக்கவேண்டும். சில ஆங்கிலப் படைப்புகள் தகுதி அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படும்.

  • சமர்ப்பிக்கப்படும் படைப்புகள் ஒரு குறுந்தலைப்பும், பொருளடக்கம் பற்றிய சிறு விவரிப்பும் கொண்டிருக்கவேண்டும்.

  • 500 வார்த்தைகளுக்கும் குறைவான, முழுப்பக்கப் படைப்புகளுக்கு முன்னுரிமை தரப்படும்.

  • இவ்வாண்டுத் தமிழ் விழாவின் மையக்கருத்தைப் (செந்தமிழால் சேர்ந்திணைவோம் - செயல்பட்டே இனம் காப்போம்) பிரதிபலிக்கும் படைப்புகளுக்கு முன்னுரிமை தரப்படும்.

  • படைப்புகள் பொருள் பொதிந்தவையாகவும், கருத்தூட்டமும் கல்வித்தரமும் கொண்டவையாகவும் இருக்கவேண்டும்.

  • முன்னால் பிரசுரிக்கப்படாத, தனித்தன்மை வாய்ந்த, அசலான படைப்புகளை ஊக்குவிக்கிறோம். பிறர் படைப்புகளின் பிரயோகம் ஊக்குவிக்கப்படாது. அப்படி அவற்றை மேற்கோள் காட்டும்போது தயவுசெய்து மூலப்படைப்பையும் அதன் ஆசிரியரையும் குறிப்பிடவேண்டும்.

  • படைப்புகள் கண்டிப்பாக எவ்விதத்திலும் தவறான கருத்துக்களையோ, அவமதிப்பையோ, அல்லது அநாகரிகத்தையோ பிரதிபலிக்கக்கூடாது.

  • அனைத்துப் படைப்புகளும் மின்னஞ்சல் வாயிலாக malar@fetna2010.org என்ற முகவரிக்கு MS Word (.doc) அல்லது PDF வடிவில் அனுப்பப்படவேண்டும். தேவையான புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வரைபடங்கள் அனைத்தும் .JPG வடிவில் இருக்கவேண்டும்.

  • அனைத்துப் படைப்புகளும் ஏப்ரல் 30, 2010 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் எமக்கு வந்து சேர வேண்டும்.

  • கெடு முடிந்தபின்னர் அனுப்பப்படும் படைப்புகள் பிரசுரிக்கப்படா.

  • எந்தப் படைப்பும் பிரசுரிப்புக்கேற்ப விழாமலர் ஆசிரியரால் மாற்றியமைக்கப்படலாம்.

  • வந்து சேரும் நுழைவுகளின் எண்ணிக்கையைப் பொறுத்துத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகளே விழா மலரில் பிரசுரிக்கப்படும்.

  • படைப்புகள் குறித்த ஆசிரியர் குழுவின் முடிவுகளே இறுதியானவை.

  • இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்படும் படைப்புகளிலிருந்து சிறந்த ஆறு தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றுக்கு விழாவில் கலந்துகொள்ளும் தமிழறிஞர் கையால் பரிசுகள் (ஒரு முதல் பரிசு, இரு இரண்டாம் பரிசுகள், மூன்று மூன்றாம் பரிசுகள்) விழாவின் இறுதி நாளன்று வழங்கப்படும்.

  • இந்த அறிவிப்புக் குறித்த கேள்விகள் ஏதேனும் இருப்பின் அவற்றை மின்னஞ்சல் வாயிலாக malar@fetna2010.org என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

    சென்ற ஆண்டுகளின் விழா மலர்களுக்கு இங்கே சுட்டவும்.

சென்று ஆண்டு நிகழ்ச்சிகள் பற்றிய விவரண இடுகைகளைக் கண்டிட, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்.

"செந்தமிழால் சேர்ந்திணைவோம்,
செயல்பட்டே இனம் காப்போம்!"

பணிவுடன்,
பழமைபேசி.

3/30/2010

செய்யும்படி!

உடைக்கப் போகும்
உண்மையான நாத்திகனையும்
இரசிக்க வைத்துத்தான்
உடைந்து போகிறது சிலை!
வாழ முயற்சிப்போம்
அழகு போல் அழகாய்!!


--சிவசு


நான் எழுதுகிற எழுத்துக்கும், பேசுகிற் பேச்சுக்கும், இடுகிற இடுகைக்கும் நானே பொறுப்பு. மாற்றுக் கருத்துகள் தென்படும் வேளையதில், சுருங்கக் கூறுவதாயின் தனிமனிதத் தாக்குதலற்ற மறுமொழியாய்த் தொடர்புடைய அவ்விடுகையிலேயே! விவரணம் ஆயின், தனியொரு இடுகையாய் எம்பதிவிலே!!

மாற்றுக் கருத்துகள் இருப்பின், அவ்விடுகையிலேயே மறுமொழி இடலாம். விமர்சன இடுகையாயின், அதன் சுட்டியை மறுமொழியாக இடலாம். இவை இரண்டுமன்றி, எங்கோ, எவரோ விமர்சனம் செய்வது குறித்தும், எள்ளி நகையாடுவது குறித்தும் யாதொரு பற்றியமும் எமக்கு இல! (எனக்கு எந்தவிதமான அக்கப்போரும் இப்போதைக்கு இல்லைங்க.... பொதுவான நடைமுறையச் சொல்லிக்கிறேன்... நீங்களா, எதுவும் யூகிச்சிக்காதீங்க இராசா!)




அண்மையில், ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி யாம் கதையின் பரிமாணத்தில் எழுதிய இடுகையொன்று மற்றொரு தளத்தில் இடம் பெற்றது. அதையும் வாசித்து, கத்தார் நாட்டு அனுபவத்தையும் அறிவீராக!!

இறந்து பிறப்பன நேரியனவை!

3/28/2010

பள்ளயம் 03/29/2010

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில், மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

===============================

ஏன்?
எதற்கு??
யோசனையெதுவுமின்றி
ஓயாமல் பாவிக்கிறோம்
இவ்விரண்டையும்!
இவ்விரண்டுக்குமான வேறுபாட்டை
என்றேனும் கண்டு கொண்டதுண்டா??
ஏன்?
எதற்கு??

ஆம்; இவ்விரண்டு வினவுச் சொற்களும் இடம் மாறிப் புழங்குகிற ஒரு நிகழ்வு சர்வ சாதாரணமாக நிகழ்வதுதான் நமது அன்றாட வாழ்க்கையில. ‘ஏன்’ (why)எனும் சொல், காரணத்தை அறிய பாவிக்கப்படுறது. ‘எதற்கு’ (for what)அல்லது ‘எதுக்கு’ எனும் சொல், நிமித்தம் அறிய அல்லது எதை ஒட்டி வினையாற்ற எனப் பொருள் தாங்கி வரக் கூடியது.

சக பதிவர்கள் பலர் இருக்கையில், பதிவரான உங்களை மட்டும் அவர் வினவும் போது நீவிர் கேட்க வேண்டிய வினா, ’ஏன் என்னை மட்டும் சாடுகிறாய்?’ என்பதுதான். அதை விடுத்து ’எதுக்கு என்னை மட்டும் டேமேஜ் செய்யுற’ எனக் கேட்பதில் பொருட்பிழை உள்ளது.

ஒருவர் மற்றவரோடு இணைந்து பணியாற்றும் போது, அல்லது எதை ஒட்டி வினா விடுக்கப்படுகிறது என அறியும் பொருட்டுப் பாவிக்கப்பட வேண்டியது, ‘எதுக்கு வரச் சொன்னீங்க? சொல்லுங்க செய்யுறேன்!’.

===============================

திருவள்ளுவரின் சூட்சுமக் குறள்கள்
அன்பளிப்புப் பிரதிகள் தவிர
மற்றன யாவும்
பத்திரமாய்க் கடை இருப்பில்!
அவையே
திருவள்ளுவரின் கள்ளத்தனக் குறள்கள் எனும்
நாமதேயம் சூடவும்
பறந்தன பஞ்சாய் நாலாபுறமும்!!

எதிர்மறை என்றதும்,
விட்டில்ப் பூச்சிகளாய் போய்விழும் காலம் மாறுவதெப்போ?
நல்லதே நினைத்து உயர்மறை நாடுவதெப்போ??

===============================

இரு சொல் அலங்காரம், இரு அடிகளுக்குமான ஒரு பொதுச் சொல். இதற்கான விடைகளைக் கண்டு பிடியுங்களேன்.

ஆலிழை பழுப்பதேன்?
இராவழி நடப்பதேன்??

எருக்கிலை பழுப்பதேன்?
எருமைக்கன்று சாவதேன்?

அச்சாணி வண்டி ஓடுவதேன்?
மச்சான் உறவாடுவதேன்?

பஞ்சாமிர்தம் மணப்பதேன்?
பலசொல் ஆட்டம் சுவைப்பதேன்?

பற்களெல்லாம் தெரிவதேன்?

பொற்கொல்லர் தட்டுவதேன்?

===============================

பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்!

===============================

மாசற்ற மனித சக்தி



3/27/2010

நத்தைகுத்தி நாராவே!



நாரா(நாரையே)வே நாராவே! நத்தை குத்தி நாராவே!!
ஏரிகுளம் தண்ணி வந்தா, எங்கிருப்ப நாராவே?
கல்லே துளைஞ்சிருவே
கரடேறி மொட்டிடுவே
இட்டெதெல்லாம் மூணு மொட்டு
பலிச்சதெல்லாம் ரெண்டு குஞ்சு
எளைய குஞ்சு எரை தேட
மூத்த குஞ்சு முக்காதம்
காணக்குறத்தி மக
கண்டிருந்து கண்ணிவெச்சா
காலிரண்டும் கண்ணியில
இறகு ரெண்டும் மாரடிக்க
நானழுத கண்ணீரு
குண்டுகுளம் நெம்பிப் போச்சு
ஏழைவெள்ளாளங் காட்டுல
ஒரு தெனங்கருது கண்டெடுத்தேன்
அடிச்சுப் பாக்கயிலே ஐநூறு பொதியாச்சு
தூத்திப் பாக்க்கையில தொன்னூறு பொதியாச்சு
அளந்து பாக்கையிலே அம்பது பொதியாச்சு
அணுசரணையா அதை விக்கப் போகயிலே
கொண்டுபோன வீரவண்டி பாழாப் போச்சு!

கிராமியப் பாடல் உதவி: ஆசான் குழந்தைவேல் இராமசாமி அவர்கள்

3/25/2010

அம்மணம்

நடையில
கரண்ட் ட்ரெண்ட்
கொண்டாரணும்!

பேர்லயே
ப்ராப்ளம்
அவுட்டேட்டடு ஃபீலிங்!!

மணீஷ்னு
வெச்சிக்க
நல்லாருக்கும்!

கதைகள்ல
அப்ராடு அட்ரேக்சனே
இல்லை!!

ஃபிக்சனோட
நேட்டிவிட்டிய
கலக்கணும்!

இதெல்லாம் செய்தா

நல்ல ரிசல்ட்
கிடைக்கும்பாரு!!

சொல்றது சரி,
ஊராம்புள்ளை வளரணுந்தான்;
அதுக்கு தம்புள்ளை
அம்மணமாகணுமா?!

3/23/2010

கூவுதல்



பழமை வேறு! பழசு(பழைமை) வேறு!! வேறுபாட்டை அறிஞ்சிக்கணும்!!!
புரட்சி எங்கே? மலர்ச்சி எங்கே?! புரிஞ்சு நீயும் நடந்துக்கணும்!!!


படம்: வண்டிச்சோலை சின்னராசு


பழமை பேசுதல் என்றால், அளவளாவல் எனும் பொருளில் கொங்குச் சீமையில் புழங்குவது வாடிக்கை! ”சித்த இரு, பாடு பழமையப் பேசிட்டு அப்பொறம் போலாம்”, “நெம்ப நல்லாத்தான் இருக்கு உன்ற பழமை”, “அவன் கோயத் திண்ணையில குக்கீட்டு வெட்டிப் பழமை பேசிட்டு இருப்பாம் போயிப் பாரு போ”, என்றெல்லாம் வெகு சரளமாக அன்றாட வாழ்க்கை முறையில் இடம்பெறக் கூடியதுதான் பழமை எனும் சொல்.

பழமை என்றால், பழையது, பழம் போன்றது, பழகப் பாவிப்பது எனப் பலவகையாகப் பாவிக்கலாம். அவ்வகையிலே, பழகப் பாவிக்கும் தனித்தன்மையோடு பேசுதல் என்கிற பாங்கில் கொண்ட புனைபெயரே பழமைபேசி!

3/22/2010

வினை!


அண்டப் பெருவெளியில்
அறிவியல்க் கண்டுபிடிப்புகளில்
அலையலையாய் மக்கள்
ஆர்ப்பரித்துத் திரிந்த
மற்றுமொரு மாலை நேரம்!

அமெரிக்க தேசத்தில்
இருந்து வந்து
ஊரெல்லாம் உறவுகளெனக்
கர்வமெனும் மமதையில்
ஊர்மீது உலாவந்த தருணமது!!

அரக்கப்பறக்க அங்குமிங்கும்
கல்நெய்யைக் குடித்துக்
கரும்புகையைக் கக்கியபடி
ஓலமிட்டுச் செல்வதையெலாம்
கண்டுங் காணாதபடிக்கு
கடை வாயிலில்
தெருவோரம்
கைக்குழந்தையுடன்
தாயானவள் கர்மமே கண்ணாக!

அருகிவரும் கைவினைகளில்
நிச்சயமாய் இதுவும் ஒன்று;
வெகு நேர்த்தியாய்
இடுக்குகளில் இணுக்குகளை
விட்டுவிட்டுச் செருகி வாங்குவதென,
விரல்கள் நாட்டியநர்த்தனமாட
முடையப்பட்டுப் பிறக்கின்றன
கூடைகள் கண்முன்னே!
கடையில் காற்று மட்டும்
ஒய்யாரமாய்
ஏகாதிபத்திய உலாத்தல்!!

சாமியண்ணே
நிறுத்திட்டுப் போயி
ரெண்டு கூடையா வாங்கிட்டு
மேல நூறு உருவாவும்
குடுத்திட்டு வந்திடுங்க!
சார்,
வீட்ல பெரியமேடம் திட்டுவாங்க சார்!!

3/21/2010

பூலவாக்கு!

நிமிர்ந்து மிடுக்காய் அமர்ந்தான். ’இம்’மெனச் செருமினான். என்ன இருக்கிறது எழுத? சொல்வதற்கு என்ன கிடக்கிறது இங்கே?? எனக்குள் எதுவுமே சொல்லத் தோணவில்லையே?? அதை எழுதலாமோ? அதிலே என்ன சுவராசியம் இருக்கிறது???

தினமும் எழுகிறோம். அடிப்படைக் காரியங்களை விரும்பியோ விரும்பாமலோ செய்து தொலைக்கிறோம். நாளும் கழிகிறது. இந்தக் கழிவுகளின் எச்சங்களை எழுதுவதிலே என்ன கிடக்கிறது??

புதுமையாய் எழுத வேண்டுமாம்! என்ன புதுமை வேண்டிக் கிடக்கிறது?? எப்படியும் எதையோ செய்யப்போய் அதிலே வழுக்கள் பல கண்டு அல்லலுறத்தான் போகிறோம். இதிலே என்ன புதுமை?? அதற்கான விதைகள் எழுத்திலே வர வேண்டுமாம். அப்படி எழுதி என்ன செய்து விடமுடியும் நம்மால்?

மலர் என்றால் அதன் வாசத்தை நுகர்ந்துதான் அறிந்து கொள்ள வேண்டும். அதை எழுத்தில் சொல்வதால் நுகர முடியுமா? அதையும் எழுத்தால் நுகர வைக்க முடியும் என்கிறார்கள் பைத்தியங்கள். அது எப்படி முடியும்??

எழுகதிரவன் எழ, அதன் பிம்பம் அருணவத்தில் பட்டுத் தெரியும் அழகை எழுத்திலே விரியச் செய்து காட்சிப்படுத்த முடியுமா என்ன? அதை நிர்வாணக் கண்களால் கண்டு மகிழ்வதை எப்படி எழுத்தால் காட்சிப்படுத்த முடியும்? அப்படி என்ன எழுதிக் கிழித்துவிட முடியும்??

கற்பனை வளம் பெருகினால் எழுதி விடலாமா? கற்பனை என்பதே ஒரு சோடிப்புதானே? சோடித்துச் சோடித்துச் செய்வதென்ன கண்டோம்? சோடித்து எழுத வேண்டுமாம். சோடிப்பது எதுவும் தோற்பதற்குக் கைச்சாத்திடுவது அன்றோ? இதைப்போய் எழுதி, என்ன கிழித்து விட முடியும்??

சுயசிந்தனை இருந்தால் எழுதலாமாம். சுயசிந்தனை? சிந்தனையில் எழுத்தைத் தருவிக்க இயலுமா? அப்படியானால் எழுதியே உண்ணுவதும், உறங்குவதும், உய்ப்பதுமென இருக்க வேண்டியதுதானே? உழைப்பது எதற்கு?? ஆக உழைப்பது இருக்க, இந்த எழுத்து எதற்கு??

ங்கொய்யால, யார்றா இவன்? இவனுக்கு எழுத்தூறு (writer's block) முத்திப் போச்சு போல.... அந்தப்பக்கமா இழுத்துட்டுப் போயி சரக்கு கிரக்கு வாங்கிக் கொடுத்து தேத்தி விடுங்க... இஃகிஃகி!!

ஆனால் அச்சில்; ஆகாவிட்டால் கொப்பரையில்!

3/18/2010

இலக்கியக் கூட்டம்

உணர்ச்சி பொங்கினாய்
உரிமைகூடி வினவினாய்
செய்திகள் அடுக்கினாய்
மறம் உரைத்தாய்
ஆசைகளை உரக்கச் சொன்னாய்
ஏனப்படி?
இலக்கு இதுவென
இயம்பும் கூட்டம்
இலக்கியக் கூட்டம்
என்பதாலா??
இலக்கு இதுவென
இயம்பும் கூட்டம்
இலக்கியக் கூட்டம்

என்பதாலா??


(நல்லதொரு வாய்ப்புக்கு மூலமான, அன்புச் சகோதரி
பச்சைநாயகி நடராசன் அவர்கட்கு மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கி, நிகழ்வை நினைவு கூறுகிறேன்!)

3/15/2010

தன்மானத் தமிழ் மறவர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா, ஒரு கண்ணோட்டம்!

வரலாறு காணாதபடி, பெரும் பனிப்பொழிவு ஆட்கொண்ட பூமியில், இளவேனிற் காலம் திரும்பியிருந்தது. கூடவே, மலையெனக் குவிக்கப்பட்ட பனிப்பொழிவும் முழுவதுமாய்க் கரைந்து விட்டிருந்தது. குளிரில்லாத இதமான காற்று தழுவிய நேரமது; பிற்பகல் சரியாக மணி இரண்டு!!

மேரிலாந்து மாகாணத்தில் இருக்கும் கொலம்பியா நகரம். அமெரிக்காவிலேயே முனைவர்கள் அதிகமாக வாழும் ஊர் இதுவாகத்தான் இருக்கும்! அந்நகரத்தின் மைய நூலகத்தில் தன்மானத் தமிழ் மறவர் சி.இலக்குவனாருக்கு நூற்றாண்டு விழாவும், புறநானூற்றுக் கருந்தரங்க நிகழ்ச்சியும்.


சிகாகோ நகரில் இருந்து முனைவர் ஃபிரான்சிஸ் முத்து அவர்களும், மருத்துவர் இளங்கோ அவர்களும் முன்னதாகவே வந்து குழுமி இருந்தார்கள். மருத்துவர் அவர்கள், கையோடு புத்தகங்களைக் கொண்ர்ந்து அங்கே பார்வையாளர்களுக்காக வைத்திருந்த காட்சி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. மனமுவந்த நன்கொடையோடு புத்தகங்கள் இடம் மாறிக் கொண்டு இருந்தன.

கண்மூடித் திறப்பதற்குள் அரங்கம் ஆயத்த நிலைக்கு வந்தது எப்படி என்றே புரியவில்லை. காலநேரம் தவறாமை என்பது முனைவர் பிரபாகர் அய்யா அவர்களின் தாரகமந்திரம் எனப் பலர், சிலாகித்துக் கொண்டு இருந்ததையும் காண முடிந்தது.

தமிழாசான் திரு.கொழந்தைவேல் இராமசாமி அவர்களுடன் இணைந்து மற்றவர்களும் தமிழ்வாழ்த்தைப் பாட, நிகழ்ச்சியானது துவங்கியது. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா அவர்கள் தலைமை உரையாற்றியும், விழாவைத் தொகுத்தும் வழங்கினார்கள்.


புறநானூறு காட்டும் சங்ககாலத் தமிழகம் எனும் தலைப்பில் உரையாற்ற, முனைவர் ஃபிரான்சிஸ் முத்து அவர்களுக்கு விழாத் தலைவர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அவர் மேடைக்கு வந்து சங்ககாலத்தை பாடற்சான்றுக்ளுடன், சமத்துவம் வாய்ந்த சமுதாயம் எப்படிச் சங்க்காலத்தில் சிறந்தோங்கியது என்பதை வெகு அழகாக விளக்கினார்.

அகம், புறம் என்பதற்கு அவர் அளித்த விளக்கம் அனைவரையும் கவர்ந்தது. கூடவே, அன்றைய காலத்தில் இலக்கிய வரம்பு என ஒன்று எவ்வாறெல்லாம் கடைபிடிக்கப்பட்டது என்பதையும் தெளிதமிழில் விளக்கிக் கூறினார்.

முனைவர் ஃபிரான்சிஸ் முத்து அவர்களுக்கு அடுத்தபடியாகப் பேச வந்தார், இலக்கிய வட்டத் தலைவர், முனைவர் திரு.இர,பிரபாகரன் அவர்கள். எப்படி வாழ வேண்டும் என்பதைச் சொல்கிறது திருக்குறள்; எப்படி வாழ்ந்தார்கள் என்பதைச் சொல்கிறது புறநானூறு என்று எவருக்கும் விளங்கும்படியாக, அடுக்கடுக்காக செறிவான இலக்கிய மேற்கோள்களைக் காண்பித்து, அனைவரையும் இலக்கிய மழையில் நனைய வைத்தார் இவர்.

கொடை எவ்வாறு போற்றப்பட்டது என்பதையும், புரவலர்களும் புலவர்களும் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் அங்கு கூடியவர்கள் கண்முன்னே, காட்சிகளாகக் கொண்டு வந்து நிறுத்தினார் என்று சொன்னால், அது மிகையாகாது. மொத்தத்தில், சங்ககாலமென்பது தமிழகத்தின் பொற்காலம் என, அவர் தனது சொற்பொழிவை முடிவுக்கு கொண்டு வந்த போது, குழுமியிருந்த அனைவரும் சங்ககாலத்திற்கே நாம் சென்றுவிடக் கூடாதா என ஏக்கப் பெருமூச்சு விட்டனர்.

அடுத்தபடியாக, கோவை மாவட்டத்தில் இருந்து வந்திருந்த நல்லாசிரியர் திரு. கு.பெ. வேலுச்சாமி அவர்களைப் பேச வருமாறு தலைவர் அவர்கள் அழைப்புவிட, தமிழ்க்கடலே வந்து அனைவர் முன்னும் தோன்றியது.

புறநானூறு கூறும் வாழ்வியல் கருத்துகள் என்ற தலைப்பில் பேச வந்த நல்லாசிரியர் அவர்கள், வாழ்வின் அகக்கூறுகளையும் புறக்கூறுகளையும் வெகு அழகாக, அற்புதமான சொல்லாடலில் விளக்கினார். அறம் என்பது பண்டமாற்று அல்ல என அவர் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியபோது, அரங்கத்தினர் ஞானோதயம் பெற்றது போன்ற ஒரு அகச்சூழலுக்கு ஆட்பட்டனர்.

நல்லாசிரியர் திரு.கு. பெ. வேலுச்சாமி அவர்களை அடுத்து, நூற்றாண்டு விழா நாயகர், தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் அவர்களின் புதல்வி, முனைவர்.இ. மதியழகி மனோகரன் அவர்களை, ஆசிரியர் தலைவர் என்ற வகையிலே, பல போராட்டங்களை முன்னின்று நடத்தியதில், ஐந்து முறை சிறை சென்ற்வர் இவர் என அறிமுகம் செய்து வைக்கப்பட்டதும், பலத்த கரவொலியோடு மேடைக்கு வந்தார் முனைவர். இ.மதியழகி மனோகரன் அவர்கள்.

புறநானூற்று நெறியில் தமிழறிஞர் இலக்குவனார் எனும் தலைப்பில் பேசிய, தமிழறிஞரின் புதல்வி, தன் தந்தையார் எப்படி எல்லாம் தமிழுக்காக, தமிழ் இனத்துக்காக உழைத்தார் என்பதையும், கொடைக் குணத்தை எப்படி எல்லாம் வெளிப்படுத்தினார் என்பதையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டார்.

இடைவேளை நேரம் அறிவிக்கப்பட்டு, வந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டி அளிக்கப்பட்டது. குறித்த நேரத்தில், நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்பதில் அனைவருமே திண்ணமாக இருந்தபடியால், அடுத்ததாகக் குறித்த நேரத்தில், செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் இலக்குவனார் எனும் தலைப்பில் பேச வந்தவர் முனைவர் அரசு செல்லய்யா அவர்கள்.

முனைவர் அரசு செல்லய்யா அவர்கள், பேராசிரியரின் பங்களிப்புகள் ஒவ்வொன்றையும் நேர்த்தியாக எடுத்துக் கூறி, அவர் எப்படியெல்லாம் போராடுவோரிடம் போராடி, இணக்கமாக இருக்க வேண்டியவரிடத்து இணக்கமாக இருந்து, தமிழுக்கும் தமிழனுக்கும் பங்காற்றினார் என்பதை விவரித்தார்.

சொற்பொழிவு என்ற முறையிலே, இறுதியாக, இவர் ஒரு செயல்வீரர் என்ற முன்னுரையோடு, தன்மானத் தமிழ் மறவர் இலக்குவனார் எனும் தலைப்பில் பேச வந்தார் பதிவர் பழமைபேசி.

வந்தவர், வந்த வேகத்திலேயே, தமிழையும் தமிழனையும் தமிழ்நாட்டிலேயே இரண்டாந்தரமாக நடத்தும் போது, தன்மானத் தமிழ் மறவர் வழியில் நின்று நாம் ஏன் போராடக் கூடாது என உணர்ச்சி வயப்படலானார். அதைத் தொடர்ந்து, தன்மானத் தமிழ் மறவர் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்ட பின்னர், வாய்ப்புக் கொடுத்த தமிழ்ச் சங்கப் பேரவைக்கு நன்றி ந்வில்ந்து தனது உரையை முடித்துக் கொண்டார் பழமைபேசி என்கிற மணிவாசகம்.

விழாத் தலைவர் அவர்களால் துடிப்பான உரை என வர்ணிக்கப்பட்ட பழமைபேசியின் உரையைத் தொடர்ந்து, அனைவரும் பேரார்வத்துடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்த, நாஞ்சில். திரு. பீற்றர் அய்யா அவர்களின் புறநானூறு - வினா விடை விளக்கம் எனும் பல்லூட நிகழ்ச்சி மிகுந்த எழுச்சியோடு உயிர்த்தது.

முனைவர். ஜெயந்தி சங்கர் அவர்கள் இலக்குவனார் அணிக்குத் தலைமை ஏற்றும், திரு. கொழந்தைவேல் இராமசாமி அவர்கள் பாவாணர் அணிக்குத் தலைமை ஏற்றும் இருந்தார்கள். இரு அணியினருமே, புறநானூற்றுப் பாடல்களை நன்கு கற்றாய்ந்து வந்திருந்தனர்.

வினாவுக்கு விடை என்பதோடு மட்டுமில்லாமல், மேலதிக விளக்கங்களை அளித்ததின் மூலம், வந்திருந்தோருக்கும் புறநானூற்றுச் சுவையை அளித்த பெருமை, நாஞ்சில் பீற்றர் அய்யா அவர்களையும், இலக்கிய வட்டத் தலைவர் முனைவர் பிரபாகர் அவர்களையும் சாருமென்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.

நிகழ்ச்சியானது முடிபை நெருங்கிவிட, நல்லதொரு நிகழ்ச்சி முடிபுக்கு வந்து விட்டதே என அனைவரும் அங்கலாய்த்துக் கொண்டனர்.

அரங்கம் நிறைந்து, இடவசதி நெருக்கமாக இருந்ததால், அடுத்த முறை பெரிய அரங்கில்தான் வைக்க வேண்டும் என அனைவரும் ஒருமித்த குரலில் கூறிக் கொண்டனர்.

இறுதியாக, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் தலைவி, திருமதி. கல்பனா மெய்யப்பன் அவர்கள் நன்றி நவில, விழா இனிதே முடிவுற்றது. கூடவே, மீண்டும் இந்நாள் எப்போது வாய்த்திடுமோ என்ற எண்ணத்தினூடே ஒருவொருக்கொருவர் பிரியா விடை பெறலாயினர்.






3/14/2010

அமெரிக்கா: தன்மானத் தமிழ் மறவர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழா நிழற்படங்கள்!


அமெரிக்கத் தலைநகரிலே, தன்மானத் தமிழ் மறவர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா மற்றும் நாஞ்சில் பீற்றர் அய்யா அவர்கள் தொகுத்து வழங்கிய புறநானூற்றுக் கருத்தரங்கமும் மிகச் சிறப்பாக நடந்தேறியது. நேரமினமை காரணமாக, தொகுப்புரையும் மேலதிகப்படங்களும் நாளை வெளியாகும்.

பதிவர் மயிலாடுதுறை சிவா அவர்கள்



முனைவர் அரசு செல்லய்யா அவர்கள் மற்றும்
முனைவர் பிரபாகர் அவர்கள்

பாவாணர் அணித்தலைவர் திரு.கொழந்தைவேல் இராமசாமி அவர்கள்
மற்றும் அணியினர்




முனைவர் ஃபிரான்சிஸ் முத்து அவர்கள்
நல்லாசிரியர் கு.ப.வேலுச்சாமி அவர்கள்
பதிவர் பழமைபேசி
முனைவர் அரசு செல்லய்யா அவர்கள்
தலைவர் திரு.கொழந்தைவேல் இராமசாமி அவர்கள்

இலக்குவனார் அணியினர்

3/13/2010

மச்சிதானந்தா!

வளையவரும் தென்றல்
நெளிந்து செல்லும் நதி
மச்சிதானந்தாவோ
மஞ்சிதாவைக் காண
பவித்ரமாய்ப் பெரியதொரு படகில்!
கண்டுங் காணமுடியாத
தூரத்தில் ஒரு
வண்ணப் பதாகை!
படிக்கத்தான் முயலுகிறார்
ஆனாலும் முடியவில்லை!
படகை அதனருகில் செலுத்த

ஆழமும் போதவில்லை!
எட்டிப்பாய்ந்து

தவளைப் பாய்ச்சலாய்
நீச்சலினூடே அதனருகே!!
பதாகையில் வாசகம் சொல்கிறது,
எச்சரிக்கையாய் இரு!
விழுங்கு முதலைகள் அதிகம் இங்கு!!

3/11/2010

டேய் மனோகரா...

நண்பகலுணவு உண்ட மயக்கம்! இருக்கும் வேலையைச் செய்வதா, அல்லது, சிறுக நித்திரை கொண்டு எழுவதா என இழுபறியாய் மனம் இழுத்துக் கொண்டிருந்த தருணமது. அந்த நேரம் பார்த்துச் சிணுங்கிய அலைபேசிச் சிணுங்கலுக்கு, மனதின் இழுபறி சலனமற்றுப் போனது.

“அகோ, யாருங்க?”

“மனோகரா, நான் மார்க் பேசுறேன்!”

“யே மார்க், என்ன?! சொல்லு!”

“ஒன்னும் இல்லை!”

“சரியப்ப.., வெச்சிடவா?”

“யே இருப்பா.., சொல்றதுக்குள்ள டபாய்க்குறியே?”

“அப்ப வெடுக்குனு சொல்லு!”

“நாளைக்கு நம்ம அலுவலகத்துல வேலைக்கு விண்ணப்பம் செய்தவங்களுக்கான நேர்காணல் இருக்கு!”

“சரி!”

“அதுல, விண்ணப்பதாரங்களோட தொழில்நுட்ப அனுபவத்தை ஆய்வு செய்யுறதுக்கு நீ உடனே கிளம்பி, போஸ்டன் வரணும்!”

“என்ன மார்க்? அங்க இருக்குறவங்கள்ல யாரையாவது வெச்சி முடிக்க வேண்டியதுதானே? சார்லட்ல இருந்து ஒரு ஆள் இதுக்கு வரணுமா??”

“புரியுது மனோகரா! ஆனா, நீதான் அந்த வேலையச் செய்யணும்னு நான்சி சொல்றாங்க!!”

“சரியப்ப, இன்னைக்கு சாயுங்காலம் ஆறு மணி விமானத்துக்கு வந்துடுறேன்!”

“சரி, காலையில 8 மணிக்கு பார்க்கலாம்!”

போஸ்டன்! இது ஒரு துறைமுக நகரம். அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களுள் ஒன்றான மாசச்சூசட்ஸின் தலைநகர். பிரித்தானியாவில் இருந்து வந்த குடியேறிகளில், ப்யூரிட்டன் எனும் பிரிவினர்களால், கி.பி 1630ம் ஆண்டு வாக்கில் உண்டாக்கப்பட்டதுதான் இந்நகரம். தலைசிறந்த பல்கலைக் கழகங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது இந்த போஸ்டன்.

போஸ்டனுக்குச் சென்று, வழமையாகத் தங்கும் மேரியாட் விடுதியிலேயே தங்கி, விடிந்ததும் எழுந்து அலுவலகத்துக்குச் சென்று, அலுவலில் மூழ்கிப் போகவே, மதிய உணவு இடைவேளையின் போதுதான் அவனுக்கு அவனுடைய அலைபேசி நினைவே வந்தது.

அலைபேசியை எடுத்துப் பார்த்ததில் மின்னஞ்சல் வந்திருப்பதற்கான சமிக்கை! தனது வலைப்பூவுக்கு வந்த, பட்டினத்துப்பிள்ளை எனும் வலைஞரின் மறுமொழி பற்றிய மின்னஞ்சல்தான் அது!!

கடுகதியில், மறுமொழியாளரின் விபரப்பட்டையில் இருக்கும் மின்னஞ்சலைத் தெரிந்து, பின்னதற்கு மின்னஞ்சலும் அனுப்பினான் மனோகரன்; மறுமொழியாளரை தனது அலைபேசிக்கு அழைக்கச் சொல்லி!

நெடுநேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது அவனுக்கு.

“அகோ, நான் மனோகரன் பேசுறேங்க? நல்லா இருக்கீங்களா??”

“நல்லா இருக்கேன்! உங்க வலைப்பதிவுல நேத்துப் பின்னேரம் நீங்க இட்ட இடுகையில, போஸ்டன் வந்திருக்கிறதாச் சொல்லி இருக்கீங்களே? இன்னும் இங்கதான் இருக்கீங்களா??”

“ஆமாங்க! இன்னைக்கு சாயுங்காலம் ஆறு மணிக்குத்தான் விமானம்!!”

“ஓ அப்படிங்களா?”

“ஆமா, நீங்க எங்க இருக்கீங்க இப்ப?”

“நான் போஸ்டனுக்குப் பக்கத்துல கேம்பிரிட்ஜ்னு ஒரு இடம், அங்க இருக்கேன்!”

“அட அப்படியா? நானும் அங்கதான் இருக்கேன்!”

“நீங்க எந்த இடத்துல?”

“மேரியாட் விடுதி வளாகமுங்க; அதையொட்டித்தான் எங்க அலுவலகம்!”

“அட, அதுல இருந்து ரெண்டு கட்டடம் தள்ளித்தான் நான் இருக்கேன்!”

“ஆகா, ரொம்ப நல்லதாப் போச்சி! நான் நாலுமணிக்கு வேலை முடிஞ்சி வந்து உங்களைப் பார்க்கட்டுமா?”

”சரிங்க, என்னோட தொலைபேசிக்கு ஒரு அழைப்பு அழைச்சிட்டு அப்புறமா வந்து, மேரியாட் வளாகத்துல நில்லுங்க, வந்திடுறேன்!”

சரியாக, மாலை நான்கு மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியேறினான் மனோகரன். தமிழனும், தமிழனும் தமிழால் குலவப் போகிறார்கள் என நினைத்து நெகிழ்ந்தாள் வானமகள். மகிழ்ச்சிப் பிரளயத்தில் பன்னீர்த் துளிகளாய்ச் சொரியவும் செய்தாள் அவள்; அதிற்ப் பரவசமாய் நனைந்தபடியே போனான் மனோகரனும்!

யாரென்று தெரியாது? இருந்தாலும் ஆவலுடன் காணச் சென்றான். சென்று பார்க்கின், வலப்புறமாய் யாரோ ஒரு இந்தியச் சாயல் கொண்ட இளைஞன் அலைபேசியினூடாக மும்முரகதியில்; இவனுக்குத் தெரிந்துவிட்டது அந்த நபர் அல்லவென்று!

எதேச்சையாய் இடப்புறம் திரும்ப, மகிழ்ச்சி ததும்ப, பொன்முகமாய் ஒரு முகம். பார்த்த அந்த கணத்திலேயே, நெடுநாட்களாகப் பார்த்துப் பழகியது போன்றதொரு உணர்வு. ஒருவருக்கொருவர், பெரிதாய் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆனாலும் நட்புக் கயிறு இறுகியது.

“நீங்க எப்ப ஊருக்குப் போயிருந்தீங்க?”

“நான் போன ஆண்டு போயிருந்தேன்!”

“நான் இப்பதான், சமீபத்துல போயிட்டு வந்தேன்!”

“தெரியும், தெரியும்! அதான் எல்லாம் படிச்சனே? ஆனா, வீட்ல ஏப்ரல் அல்லது மே மாசத்துல போனாப் போவாங்க!”

“அப்படிங்களா? அப்பறம் நீங்க அவசியம் பேரவை விழாவுக்கு, அதாங்க நம்ம FeTNA விழாவுக்கு வந்திடுங்க!”

“முயற்சி செய்யுறேனுங்க!”

“கண்டிப்பா வர்றீங்க!”

“இஃகிஃகி!”

நேரம் நெருக்கிக் கொண்டே இருந்தது. விட்டுப் பிரிய மனம் இல்லை! விமானம் மனோகரனுக்காகக் காத்திருக்குமா என்ன? ஆனாலும் பட்டினத்துப்பிள்ளை விடுவாரா?

“நானே உங்களைக் கொண்டு வந்து விமான நிலையத்துல விடுறேங்க?!”

“பரவாயில்ல; நான் வாடகை வாகனத்துல போயிடுறேங்க!”

“வேணாம்! நாம பேசிட்டே போலாம், அதுக்குத்தான் சொல்றேன்!”

“சரியப்ப, வண்டிய எடுத்துட்டு வாங்க; இன்னும் அரைமணி நேரத்துல விமான நிலையத்துல இருக்கணும்!!”

எப்படித்தான் காலதேவன் அந்த அரைமணி நேரத்தையும் அவர்களிடம் இருந்து அவ்வளவு கதியில் பறித்தான் எனத் தெரியவில்லை. அவர்களது வாகனம் விமான நிலையத்தில்!

“சரிங்க, நான் கிளம்புறேன்! நீங்க அவசியம் FeTNA விழாவுக்கு வந்திடுங்க!”

“சரிங்க, மிக்க மகிழ்ச்சி!”

வழமையான சம்பிரதாயங்களுக்குப் பிறகு, விமானம் ஓடுபாதையில் சீறியது. போஸ்டன் நகரம், சிறுத்துக் கொண்டே பின்னோக்கிச் சென்று, சாளரத்தில் இருந்த அவனது கண்களுக்குக் காணாமலே போய்விட்டது.


ப்ராவிடன்ஸ், நியூயார்க், ஜெர்ஸி நகரம், வாசிங்டன் நகரம், ரிச்மண்டு, ராலே, சேப்பல்ஹில், க்ரீன்ஸ்பரோ எனப் பல ஊர்களைத் தாண்டிச் சென்று கொண்டிருந்த அந்த விமானத்தின் கன்ணாடிச் சாளரத்தினூடாகக் கீழே பார்த்த மனோகரனுக்கு, மன ஊற்றில் உவகைப் பிரவாகம் பீறிட்டு, முகத்தில் பொன்னொளியாய்ச் சிந்தியது.

விமானம் கடந்து செல்லும் ஒவ்வொரு ஊரிலும், பட்டினத்துப்பிள்ளை போன்ற மகேசுகளும், இரமேசுகளும் நின்று புன்னகையோடு இவனுக்குக் கையசைத்துப் புன்முறுவல் பூத்துக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்துப் பார்த்து புளகாங்கிதம் கொண்டவனிடத்தே அசரீரி ஒன்று ஓங்கி அறைந்தது, “டேய் மனோகரா, உனக்கு ஊரெல்லாம் உறவுகடா!”


தமிழால் இணைந்தோம்!
தமிழராகவே இருந்திடுவோம்!!

3/10/2010

பள்ளயம் 03/10/2010

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில், மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.


=======================

இன்றைக்கு நாம போசுடன்(Boston) நகருக்குப் பயணமுங்க! அதை முன்னிட்டு, போசுடனில் பதிவர் சந்திப்பு அப்படின்னு ஒரு அறிவிப்பு போடலாம்னு இருந்தேன். மக்கள், கடுப்பாகிக் காந்தலாகிக் கிளர்ந்து எழுந்துடுவாங்கன்னுதான் போடலை! இஃகிஃகி!! நீங்க யாராவது அங்கிருந்தா ஒரு மடல் அனுப்புங்க இராசா! முடிஞ்சா சந்திப்போம்!!

=======================

பேனையும் பெருமாள் ஆக்குவாய்ங்க இந்த ஊடகத்துக்காரங்க. Toyota எவ்வளவு நல்ல நிறுவனம்? அந்தலை சிந்தலை ஆக்குறாங்களே?? சீருந்துல போனாங்களாம், வேகமுடுக்கியானது அகப்பட்டுச் சிக்கி மேற்கொண்டு வேலை செய்யலையாம். உடனே காவல்துறைக்கு அலைபேசில அழைச்சு பேசினாங்களாம். இருந்தும் ஒன்னுமே செய்ய முடியலையாம்!

அதனால வண்டி பெருவேகமெடுத்துப் போயி மோதிடுச்சாம்! உயிர்ப்பலி வேற? கேட்கவே பரிதாபமாத்தான் இருக்கு. ஆனா நாம கேக்குற கேள்வி ரெண்டே ரெண்டுதாங்க!!

உடனே வண்டியோட எந்திரந்த்தை அணைக்க முடியாதா? அணைக்கச் சொல்லிச் சொல்லக் கூடாதா?? கூடவே, வேகமாற்றிய சுழிநிலைக்கு(neutral) கொண்டு வரக் கூடாதா?? பெருவேகம் எடுத்து மைல் கணக்குல போறதுக்கு ஏம்ப்பா விட்டீங்க??

அந்த நிறுவனம் இருந்துட்டுப் போகட்டுமய்யா! இன்னும் கொஞ்சம் பேர் வேலைய எதுவும் இல்லாம அலையணுமா, என்ன??




===========================

தமிழ்ல இராமன், இரவி, உருசியா முதலான சொற்களுக்கு ஏன், அந்த, அ, இ, உ இதுகள்ல எதோ ஒரு எழுத்தைப் பாவிக்கிறோம்னு கேட்டு இருந்தாங்க மக்கள். தமிழ்ல மட்டும் அல்லங்க, ஆங்கிலத்திலயும் Wrong, Wright, Whole இந்த மாதிரியான் சொற்களுக்கு முன்னாடி ஒலிப்பில்லாத எழுத்துகள் இருக்கத்தான் செய்யுது.

வேற்று மொழிச் சொற்கள், ஒரு சொல்லில் இருந்து இதை வேறுபடுத்துக் கூறுதல், அல்லது வழமையான ஒலிப்பில் இருந்து மாறுபட்டுச் சொல்வதுன்னு பல காரணங்கள் இருக்கலாம். மரபைப் பின்பற்றுவதென்பது எங்கும் இருக்குற ஒன்னுதான். தொல்காப்பிய விதி எண் தெரிஞ்சவங்க சொல்லிட்டுப் போங்க மக்கா!

===========================

இந்திய நயாகரா அதிரப்பள்ளி











3/09/2010

வடகிழக்கு அமெரிக்கப் பதிவர் சந்திப்பு மற்றும் தமிழ்விழா அழைப்பு!

அழகிய, சோழ வள நாட்டின் எழில்மிகு ஊரான கோவூரில் வேளாண் தொழில் செய்பவர்தான் இக்கதையின் நாயகன். கோவூர்க் கிழார் என்றும் அழைக்கப்படுபவர் இவர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞரை எப்படி காவியக் கவிஞர் வாலி, தான் நினைத்த மாத்திரத்தில் சென்று சந்தித்து உரையாடுகிறாரோ அதைப் போல, இவரும் சோழ மன்னனை எந்த நேரத்திலும் சென்று சந்தித்து உரையாடக் கூடியவர், நேர்மையானவர் மற்றும் கண்டிப்பு மிகுந்தவர்.

போரில் தோற்றுவிட்ட சேர மன்னன் மலையமான் மகன்கள் மீது யானையை ஏவிக் கொல்லுமாறு உத்திரவிட்ட சோழன் குளமுற்றுத்துஞ்சிய கிள்ளி வளவனை, அவனது அவைக்கே சென்று கண்டித்தவர்தான் இந்த கோவூர்க் கிழார். அதே நேரத்தில், தன் சோழ நாட்டின் மீதும், சோழ மன்னன் மீதும் தீராத பற்றுக் கொண்டவர்.

சோழ நாட்டின் உயிர்நாடியான காவிரியின் தென்கரையில், கோவூர்க் கிழார் வந்து கொண்டிருக்கிறார். அப்போது தனக்குப் பரிச்சியமான வெளியூர்ப் பாணன் ஒருவன், சோர்ந்த முகத்தோடு தனது மனைவியுடன் செல்வதைக் காண்கிறார். சோழ நாட்டில் ஒருவன் சோர்வாக இருப்பதா என்று எண்ணியபடியே அந்தப் பாணனை நோக்கிப் பாடுகிறார்,

”தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண!
கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன
நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை
இனிய காண்க; இவண் தணிக எனக் கூறி;
வினவல் ஆனா முதுவாய் இரவல!


என்ன பாணரே, நான் பாடியது புரிகிறதுதானே? இருந்தாலும் சொல்கிறேன் கேள்!”

“சொல்லுங்கள் தேவரே!”

”தேன் போன்ற இனிய இசையை அளிக்கவல்ல சிறிய யாழ் வீற்றிருக்கும் இசைக்குளத்தில, அந்த இசையை நுகர்ந்து பின் வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்று வாழும் ஒரு ஆமையை எடுத்து, தெள்ளிய குச்சிகளால் கோர்த்து நோக்கின் எப்படித் தெரியுமோ, அது போன்றதொரு முரசு அல்லது உடுக்கையைக் கொண்டு இசையால் ஆற்றுப்படுத்தவல்ல முதுமையான இரவலனே!”

”தங்கள் பெருந்தன்மை! கேட்கிறேன், மேலே சொல்லுங்கள் தேவா!!”

“தைத் திங்கள் தண்கயம் போலக்,
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்,
அடுதீ அல்லது சுடுதீ அறியாது;
இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்,
கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி!


எங்கள் கிள்ளி வளவனின் நாடு, தை மாதத்தில் தெளிந்த குளிர்ந்த நீரையுடைய குளம் போல் கொள்ளக் கொள்ளக் குறையாத உணவுப் பொருட்களுடைய அகன்ற பெரிய நகரங்களுடையது.

எம்நாடு, பகைவர்களால் தீக்கிறையாக்கப்பட்டதில்லை. இங்கு சமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் தீயை மட்டுமே காணமுடியும். பசிப்பணியை நீக்குவதற்குத் தேவையான நீர் வளமும், நில வளமும் மிகுந்த நல்ல நாட்டுக்கு அரசன் எம் கிள்ளி வளவன்!!”

“அப்படியா தேவரே! மன்னனின் பெருமை கேட்டு அகமகிழ்கிறேன் தேவா!!”

“ஆமாம்! நீர் சோழ மன்னனைக் காணச் செல்லும் வழியில், மன்னனது நண்பனையும் கண்டு பேறு பல பெறுவாயாக!

நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை
சிறுவெள் ளாம்பல் ஞாங்கர்,ஊதும்
கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி, ஒண்ணுதல்,
இன்னகை விறலியடு மென்மெல இயலிச்
செல்வை ஆயின், செல்வை ஆகுவை!


நீர் கிள்ளி வளவனை நோக்கிச் செல்லும் வழியில், நறுமணத்தை விரும்பும் வண்டுகள் வெண்ணிற அல்லி மலர்களின் மேலே ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கும் சிறுகுடி என்ற ஊர் இருக்கும்.

கொடைக் கையை உடையவனும் ஈகையில் சிறந்தவனுமான பண்ணன் என்ற ஒருவன் அந்த ஊரில் உள்ளான். பாதிரி மணம் கமழக்கூடிய கூந்தலும், ஒளிபொருந்திய நெற்றியும் உடைய உன் இல்லாளுடன் மெல்ல நடந்து சிறுகுடிக்குச் செல்கிறபட்சத்தில், பண்ணனின் கொடையால் நீர் செல்வந்தன் ஆவாய்!”

”அப்படியா தேவரே? எங்கே இருக்கிறது இந்தச் சிறுகுடி?”

“மயிலாடுதுறை-திருவாரூர் சாலை வழியில், பேரளம் வழியாக பூந்தோட்டம் சென்று, அங்கிருக்கும் அரசலாற்றுப் பாலத்தைக் கடக்க வேண்டும். பிறகு, கும்பகோணம்-நாச்சியார் கோவில் சாலையில் சென்று கடகம்பாடி போய்ச் சேர்ந்து, அங்கிருந்து வலதுபுறமாக இருக்கும் சாலையில் சென்றால் சிறுகுடியை நீர் அடையலாம் பாணரே!”

“ஆகட்டும் தேவா! நான் அப்படியே செய்கிறேன்!!”

விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்,
தலைப்பாடு அன்று, அவன் ஈகை;
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!


அந்தச் சிறுகுடியில் வாழும் பண்ணன் உனக்குப் பரிசுகளை அளிப்பான். பண்ணனின் ஈகை, விறகு வெட்டப் போனவனுக்குப் பொன்கிடைத்ததைப்போல் தற்செயலாக நடைபெறும் நிகழ்ச்சி அல்ல; நீர் அவனிடம் பரிசில் பெறப் போவது உறுதி. பரிசு கிடைக்குமா என்று நீர் ஐயப்படத் தேவையில்லை. வாழ்க பண்ணனின் தாள்கள்!!”

“வாழ்க பண்ணன்! உமது ஆற்றுப்படுத்தலும் வளர்க!! தேவா, நான் சென்று பலன்கள் பல அடைய, தற்போது விடை பெறுகிறேன் தேவா!!!”

பாணருக்கு நல்வழியைக் காண்பித்த பெருமிதத்தில் கோவூர்க் கிழார் தனது வேளாண் வயல் நோக்கிச் செல்ல, பாணர் சிறுகுடியை நோக்கி முற்படுகிறார்.

இந்தச் சிறுகதையானது, புறநானூற்றுப் பாடல் 72ஐ அடிப்படையாகக் கொண்டது. கிள்ளிவளவனையும், சிறுகுடி வள்ளல் பண்ணனையும் புகழ்ந்து பாடுவதைப் பின்னணியாகக் கொண்டுள்ளதால், இப்பாடல் பாடாண் திணையில் இடம் பெற்றுள்ளது.

அருஞ்சொற்பொருள்

தேம்: தேன்
தீ: இனிமை
தொடை: யாழின் நரம்பு
கயம்: குளம்
காழ்: வலிய கம்பி
தெண்: தெளிந்த
ஆனாமை: நீங்காமை
முதுவாய்: முதிய வாய்மையுடைய
கூழ்: உணவு
வியல்: அகலம்
ஆம்பல்: அல்லி
ஞாங்கர்: மேலே
பாதிரி: ஒரு மரம்
ஓதி: பெண்களின் கூந்தல்.
இயலுதல்: நடத்தல்
ஓய்தல்: அழிந்து ஒழிதல் (வெட்டுதல்)
தலைப்பாடு: தற்செயல் நிகழ்ச்சி

===============================

Florida பதிவர் சந்திப்பு முடிச்ச கையோட, Washington D.C பதிவர் சந்திப்புக்கான ஆயத்த வேலைகள் மக்களே!

செந்தமிழ்க் காவலர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நிறையப் பதிவர்கள் விழா அரங்கில் குழும இருக்கிறார்கள். எனவே வர வாய்ப்பு இருப்போர், அவசியம் வந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்!

=====================================



புறநானூற்றுக் கருத்தரங்கம்
செந்தமிழ்க் காவலர் திரு.சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா


தமிழ் இலக்கிய ஆய்வுக்கூட்டம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் இரண்டாவது புறநானூற்றுக் கருத்தரங்கமும், செந்தமிழ்க் காவலர் திரு.சி.இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாவும், எதிர்வரும் மார்ச் 14, 2010, ஞாயிறு பிறபகல், கொலம்பியா, மேரிலாந்தில் உள்ள மைய நூலகத்தில் (10375, Little Patuxent Pkwy, Columbia, MD 21044) நடைபெற இருக்கிறது. அனைவரும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்

2.00-2.05
தமிழ்த்தாய் வாழ்த்து

2.05-2.10
வரவேற்புரை
முனைவர் முத்துவேல் செல்லையா அவர்கள்

2.10-2.35
புறநானூறு காட்டும் சங்க காலத் தமிழகம்
முனைவர் ஃப்ரான்சிஸ் முத்து அவர்கள், சிகாகோ

2.35-3.00
புறநானூறு கூறும் வாழ்வியல் கருத்துகள்
உயர்திரு. கு.பெ.வேலுச்சாமி அவர்கள், தமிழாசிரியர், கோவை.

3.00-3.25
புறநானூறு காலத்துப் புரவலரும் புலவரும்
முனைவர் இர.பிரபாகரன் அவர்கள்

3.25-3.45
தேனீர் இடைவேளை

3.45-4.05
செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் இலக்குவனார்
முனைவர் அரசு செல்லையா அவர்கள்

4.05-4.25
தன்மானத் தமிழ் மறவர் இலக்குவனார்
பதிவர் பழமைபேசி (எ) மெளன.மணிவாசகம் அவர்கள்

4.25-5.25
புறநானூறு - வினா விடை விளக்கம் (பல்லூடக நிகழ்ச்சி)

கருத்தாக்கம்
உயர்திரு. நாஞ்சில் பீற்றர் அவர்கள்

பாவாணர் அணி
தலைவர் உயர்திரு.கொழந்தைவேல் இராமசாமி அவர்கள்

இலக்குவனார் அணி
தலைவி முனைவர் ஜெயந்தி சங்கர் அவர்கள்

5.25-5.30
நன்றி நவிலல்
திருமதி. கல்பனா மெய்யப்பன் அவர்கள்


அனைவரும் வருக!
ஆதரவு தருக!!

தமிழால் இணைந்து
தமிழராய் வளர்ந்திடுவோம்!

Florida, NASA: பதிவர் சந்திப்பு படங்கள்



தமிழ் எழுதியைப் பற்றிய பயிற்சி

சீமாச்சானந்தா, பழமையானந்தா,சுவாமி பச்சானந்தா மற்றும் குலவுசனப்பிரியன்
நாளையபதிவருக்கான இன்றைய பதிவரின் பாலபாடம்





சீமாச்சானந்தா விண்வெளி வீரர்களை வாழ்த்துகிறார்



பதிவர் சந்திப்பு நிறைவுக்கு வந்திடுச்சே?
பச்சையானந்தாவுக்கு வந்த சோகத்தைப் பாருங்க!!

FLORIDA, Melbourne, பதிவர் சந்திப்பு மேலதிகப் படங்கள்!

3/08/2010

FLORIDA, Melbourne, பதிவர் சந்திப்பு மேலதிகப் படங்கள்!




பதிவர் சந்திப்பு நடந்த இடத்தில் சுவரோவியம்




பதிவர்கள் நாளையபதிவர் மற்றும் குலவுசனப்பிரியன்

பதிவர்கள் சுவாமி பச்சானந்தா, குலவுசனப்பிரியன் மற்றும் சீமாச்சானந்தா

சீமாச்சானந்தா சொகுசுந்துடன்















பழமையானந்தா!

பதிவர் சந்திப்புக்கான மூலகர்த்தா, மருத்துவ நிபுணர் அசோக் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி!

குறிப்பு: அடுத்த கட்டமாக, தேசிய விண்வெளி மற்றும் வான்கோள்கள் ஆராய்ச்சி மையத்(NASA)தில் பதிவர்கள் செய்த அட்டகாசங்கள் பற்றிய படங்கள் இடம் பெறும்.

அமெரிக்கத் தலைநகர் வட்டாரப் பதிவர் சந்திப்பு! அழைப்பு இடுகை!

FLORIDA, Melbourne, பதிவர் சந்திப்பு படங்கள் - முன்னைய இடுகை!