11/26/2025

வித்யா சுரகண்டர்

 

வித்யா சுரகண்டர்

அமெரிக்காவில் தன்னார்வத் தொண்டு (Volunteering) ஒரு பிரிக்க முடியாத பண்பாட்டுப் பகுதியாக மாறியதற்கு, வரலாற்று, சமூக அரசியல் காரணங்கள் உள்ளன. துவக்ககால அமெரிக்காவில்,  ஊர்களும் குடியேற்றங்களும் வளர்ந்தபோது, மக்கள் நெருக்கமான சமூகங்களாக வாழத்தலைப்பட்டனர். அரசாங்கத்தின் உதவிகள் குறைவாக இருந்ததால், அண்டை வீட்டாரைச் சார்ந்து வாழ்வது அத்தியாவசியமாக இருந்தது. ஒருவருக்கொருவர் உதவ, மக்கள் குழுக்களாக இணைந்தனர். 1736-ஆம் ஆண்டில், பெஞ்சமின் ஃபிராங்க்ளின் பிலடெல்பியாவில் முதல் தன்னார்வத் தீயணைப்பு நிலையத்தைத் தொடங்கினார். இது, "பொது நன்மைக்காக" தனிநபர்கள் இணைந்து, ஒரு அமைப்பை உருவாக்குவதன் முதல் பெரிய எடுத்துக்காட்டாகும்.

1830-களில் அமெரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரெஞ்சு தத்துவஞானியான ’அலெக்சிஸ் டி டாக்வில்லே’ என்பவர் அமெரிக்கச் சமூகத்தை உற்று நோக்கினார். அவர், அமெரிக்கர்கள் எல்லாத் தேவைகளுக்காகவும்,  தேவாலயங்கள் கட்டுவது முதல் மருத்துவமனைகள் உருவாக்குவது வரை, தாங்களாகவே பல தன்னார்வ அமைப்புகளை அமைக்கும் அரிதான பழக்கத்தைக் கண்டு வியப்புற்றார். ”அமெரிக்கர்கள் தன்னார்வத் தொண்டு அமைப்புகளின் வாயிலாகத் திருவிழாக்களை நடத்துகிறார்கள், கருத்தரங்குகளைத் தோற்றுவிக்கிறார்கள், புத்தகங்களைப் பரப்புகின்றனர்" என்று குறிப்பிட்டார். இதுதான் அமெரிக்காவில் இரண்டறக் கலந்த, ஒரு பண்பாடாகவே தன்னார்வத் தொண்டு ஆனதற்கான அடிப்படை.

உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பட்டப்படிப்பை நிறைவு செய்ய மாணவர்களுக்குக் குறிப்பிட்ட மணிநேரம் சமூகத் தொண்டு செய்வதை கட்டாயமாக்குகின்றன. இத்தகு பண்பாடானது, தலைமைப்பண்பு, தகவல் தொடர்பு, ஒரு குழுவில் பணிபுரியும் திறன் போன்றவற்றை வளர்க்கிறது. ஒரு நோக்கத்தில் ஈடுபடுவது மனம் முழுமை கொள்வதையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது; மன அழுத்தத்தைக் குறைத்து நமக்காகப் பலர் இருக்கின்றனர் எனும் பாதுகாப்புணர்வையும் ஈட்டித் தருகின்றது.

எங்கள் வளவில் ஒரு பரபரப்பு. பலவாறான வினாக்கள். நிறைய பாதுகாப்பு அலுவலர்கள் அந்த வீட்டின் முன் குவிந்திருக்கின்றனர் என்பது செய்தி. ஒருவர், ’குடியேற்ற அலுவலர்களாக இருக்கக் கூடும்’. அடுத்தவர், ’துப்பாக்கிச்சூடு’ என நினைக்கின்றேன். அடுத்தவர், ‘உடல் சுகவீனம், ஏனென்றால் மருத்துவ வண்டி நிற்கின்றது’. இப்படிப் பலவும். ஒரு மணி நேரம் கடந்து, ஒருவர், ‘எங்கள் வீட்டுக்கு அடுத்த வீடுதான். தற்கொலை’. அடுத்த விநாடியேவும் ஒருவர் பதிந்தார், Whatever the situation, we should respect their privacy. Still, we’re always ready to help in any way we can". அவ்வளவுதான், ஒட்டுமொத்த வாட்சாப் குரூப்பும் அதனை வழிமொழிந்தும், இன்னின்ன உதவிகள் செய்யலாம், யாராவது ஒருவர் மட்டும் ஒருங்கிணைப்புச் செய்யட்டுமெனச் சொல்ல, பக்கத்து வீட்டுக்காரரேவும் பொறுப்பேற்றுக் கொண்டு, உதவிப்பணிகளும் இடம் பெற்றன. இதே அந்த முதல்நபரின் கருத்து வேறாக இருந்திருந்தால்? என்ன, ஏது, எப்படி, எதற்காக என்றெல்லாம் திசைமாறிப் போயிருக்கக் கூடும்தானே? அப்படி மாறாமல் இருக்க, சட்டென அவர் உரைத்த கருத்துத்தான் அமெரிக்கப் பண்பாடு.

திருமிகு. வித்யா சுரகண்டர் அவர்கள் சிகாகோ தமிழ்ச்சங்கத்தில் தன்னார்வலராக இருந்தவர். மருத்துவப் பின்னணியைக் கொண்டவர். எப்போதும் மக்களோடு மக்களாக இருந்து தன்னார்வத் தொண்டு புரிவதில் ஆவல்கொண்டவர். தற்போது கேரொலைனா தமிழ்ச்சங்கப் பகுதியில் வசிப்பவர். பல்வேறு குழுக்களின் வாயிலாகப் பணிபுரிபவர். வட அமெரிக்க வாகை சூடியின் கலைத்தேனீ பிரிவில், இசை சார்ந்த போட்டிகளின் செயல்தலைவர். ஒவ்வொரு கூட்டங்களிலும் தவறாது கலந்து கொண்டு, விழாவிலும் போட்டிகளை நடத்திக் கொடுத்ததோடு மட்டுமன்றி இதரப்பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். இசை, நாட்டியம், மருத்துவம் முதலான துறைகளில் தாம் பெற்றிருக்கும் அனுபவத்தைச் சமூகத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் ஆவல் மிக்கவர்.

𝐕𝐢𝐝𝐲𝐚 𝐒𝐮𝐫𝐚𝐤𝐚𝐧𝐝𝐚 𝐍𝐚𝐭𝐚𝐫𝐚𝐣 𝐌𝐨𝐡𝐚𝐧𝐚𝐦 𝐫𝐞𝐦𝐢𝐧𝐝𝐬 𝐮𝐬 𝐭𝐡𝐚𝐭 𝐭𝐫𝐮𝐞 𝐬𝐞𝐫𝐯𝐢𝐜𝐞 𝐛𝐞𝐠𝐢𝐧𝐬 𝐰𝐢𝐭𝐡 𝐞𝐦𝐩𝐚𝐭𝐡𝐲, 𝐫𝐞𝐚𝐜𝐡𝐢𝐧𝐠 𝐨𝐮𝐭 𝐰𝐢𝐭𝐡 𝐤𝐢𝐧𝐝𝐧𝐞𝐬𝐬, 𝐮𝐧𝐝𝐞𝐫𝐬𝐭𝐚𝐧𝐝𝐢𝐧𝐠, 𝐚𝐧𝐝 𝐡𝐨𝐩𝐞.

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி. 


No comments: