வாசுதேவன் வரதராஜன்
போட்டிகள் நடத்தும் போதும் சரி, அல்லது, மக்கள் தொடர்பு வேலைகள் அது எதுவாக இருந்தாலும் சரி; எல்லாரும் செய்கின்றோம் நல்ல நோக்கத்துடன்தான். ஆனால், திறம்மிக்க வேலைகள், நயம்மிக்க வேலைகள் எப்பொழுது வெளிப்படுகின்றன? அது எண்ணுவது அல்ல. ஒவ்வொன்றையும் எண்ணிக்கைக்குள் கொண்டுவருதலாக வேலைகள் எங்கெல்லாம் நடக்கின்றனவோ, அங்கு தரம் மிளிர்ந்தே தீரும்.
கணக்குப் பராமரிப்பில் பேரவை பொருளாளர் வள்ளிக்கண்ணன் ஆவணமயமாக்கலைச் சிறப்பாக நிறுவிவருகின்றார். பெரும்பகுப்பு. அப்படியான பகுப்புகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு பகுப்பு. பகுப்புக்குள் சில பல பிரிவுகள். பிரிவுகளுக்குள் சில பல பேருறைகள். ஒவ்வொரு பேருறைக்குள்ளும் தனி உறைகள்(folders), உறைகளுக்குள் ஆவணங்கள். இது பரிவர்த்தனைகளை, அதாவது விழுமுதல், விற்பனை, கொள்முதல், பணம் செலுத்துதல், பெறுதல், பற்று, வரவு, செலவு, இருப்பு, இலாபநட்டம் போன்றவற்றை ஒரு முறையான வகையில் பதிவு செய்யும் கலையாகும். இப்படிச் செய்யும் போது, மொத்தமாக எண்ணுதல் என்பதல்லாமல், ஒவ்வொன்றையும் தவறவிடாமல் எண்ணுதல் வாய்க்கப் பெறும். அதையொத்ததுதான் வாசுதேவன் அவர்களது வேலைப்பாடுகளும்.
ஐக்கிய ராச்சியத்தில்(UK) உள்ள வட தமிழ்ச்சங்கம் எனும் அமைப்பு, மாணவர்களுக்கான தொடர் போட்டிகளை நடத்தினர். அமெரிக்காவில் இருந்து ஒரு நடுவர் இருந்தே ஆக வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதால், நானும் இசைந்து தொடர்ந்து வாராவாரம் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தேன். போட்டிகள் சிறப்பாக நடந்தன. ஐக்கிய ராச்சியம் குறித்த வாழ்வியலைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவும் அமைந்தது. ஆனாலும் பணிச்சுமையின் தாக்கம் இருந்தது. அந்த நேரத்தில்தான், திரு வாசுதேவன் வரதராஜன் அவர்கள், டெலாவர் பெருநிலத் தமிழ்ச்சங்கத்தின் போட்டிகளுக்கு நடுவராக இருக்கச்சொல்லி, தரவுகளை எல்லாம் அனுப்பி வைத்திருந்தார். தரவுகளில், பெயர் நீக்கம் செய்து, முறையாகப் பெயரிட்டு, போட்டிகளின் தன்மை, கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் எனக்குறிப்பிட்டுக் கூடுதலாக நுண்ணிய பற்றியங்களையும் கொடுத்திருந்தார். இவரை நான் முன் பின் அறிந்திலன். இருந்தாலும் கூட, பக்கச்சாய்வுகள், விருப்பு வெறுப்புகள், பிழைகள் இடம் பெறக்கூடாது என்பதில் அவர் காட்டியிருந்த தன்முனைப்பின் நிமித்தம், அவர்மீது ஒரு மதிப்பும் மரியாதையும் அதன்போக்கில் நமக்குள் இடம் பெற்றது.
அதிகார மையங்களும் அரசியல் மையங்களும் சாதி மேட்டிமைகளும் தற்காலிகமானவை. அவை அப்போதைக்குத் தன் வலிமையைக் காண்பித்து, வெற்றி கொண்டுவிட்டதான கூச்சலை இட்டுச் செல்லும். நேர்த்தியான வேலைகளைச் செய்கின்ற தன்னார்வலர் எவராயினும், அவருக்கான சிறப்பும் மதிப்பும் நிரந்தரமானவை. படைப்புத்தேனீயிலும் இடம் பெற்று, வட அமெரிக்க வாகை சூடி போட்டிகளுக்குப் பணியாற்றி உள்ளீர்கள். தமிழ்ச்சங்கத் தலைவராகவும் பொறுப்பினைப் பெற்றிருக்கின்றீர்கள். அதே ஒழுங்கோடும் முறையோடும் தங்கள் பணி சிறக்க வேண்டும்.
Unbiased accountability is the bedrock of trust; it ensures that principles and performance, not personal relationships, determine the outcome. 𝐈𝐭’𝐬 𝐭𝐡𝐞 𝐜𝐨𝐮𝐫𝐚𝐠𝐞 𝐭𝐨 𝐟𝐚𝐜𝐞 𝐟𝐚𝐜𝐭𝐬 𝐰𝐢𝐭𝐡𝐨𝐮𝐭 𝐟𝐞𝐚𝐫 𝐨𝐫 𝐟𝐚𝐯𝐨𝐫, making improvement possible for everyone involved.
வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.
-பழமைபேசி.

No comments:
Post a Comment