பரணி இடைக்காடர் சேரன்
மாணவர்களுக்கான போட்டிகளை நடத்துவது ஏன்?
- திறமைகளை வளர்த்தல், கண்டறிதல்: போட்டிகள் மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளையும், தனிப்பட்ட பலங்களையும் கண்டறிய உதவுகின்றன. மேலும், அந்தத் திறன்களை மெருகூட்ட ஒரு தளத்தை வழங்குகின்றன.
- படிப்பைத் தாண்டிய கற்றல்: வகுப்பறையில் கற்பிக்கப்படும் பாடங்களைத் தாண்டி, மாணவர்கள் புதிய பற்றியங்கள் கற்றுக்கொள்ளவும், அவற்றை மெய்யார்வாழ்க்கைத் திறன்களாகப் பயன்படுத்தவும் வாய்ப்பளிக்கின்றன.
- போட்டி மனப்பான்மையை உருவாக்குதல்: ஆக்கப்பூர்வமான போட்டி மனப்பான்மை (Healthy Competition) மாணவர்களிடையே விடாமுயற்சி, கடின உழைப்பு, இலக்கை அடைவதற்கான உந்துதல் ஆகியவற்றைத் தூண்டுகிறது.
- தன்னம்பிக்கை, ஊக்கம்: போட்டியில் பங்கேற்பது அல்லது வெற்றி பெறுவது மாணவர்களுக்குப் பெரும் தன்னம்பிக்கையை அளிக்கிறது. தோல்வி அடைந்தாலும்கூட, அடுத்த முறை சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற ஊக்கத்தினை அளிக்கிறது.
- முடிவெடுக்கும், சிக்கலைத் தீர்க்கும் திறன்: வினாடி-வினா, கருத்தாடல் அல்லது திட்டப்பணி சார்ந்த போட்டிகளில், மாணவர்கள் விரைவாகவும், சரியாகவும் முடிவுகளை எடுக்கவும், சிக்கல்களைக் கூர்மையாகத் தீர்க்கவும் கற்றுக்கொள்கிறார்கள்.
- காலநிர்வாகம், குழுப்பணி: திட்டப்பணி போன்ற போட்டிகள் காலக்கெடுவுக்குள் வேலையை முடிக்கக் கற்றுக்கொடுக்கின்றன. குழுப்போட்டிகள் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுதல், கருத்துப் பரிமாற்றம் செய்தல், பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளுதல் போன்ற குழுப்பணித் திறன்களை மேம்படுத்துகின்றன.
- அச்சத்தைப் போக்கி மேடையில் பேசுதல்: பேச்சுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் முதலானவை, பொதுவெளியில் பேசும் அச்சத்தைப் போக்கி, கருத்துக்களைத் தெளிவாக வெளிப்படுத்தப் பயிற்சி அளிக்கின்றன.
சுருக்கமாகச் சொன்னால், போட்டிகள் என்பது வெறும் வெற்றி தோல்வி அல்ல, அது மாணவர்களின் சமூக, மனம், கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். பரிசுகளும் பெருமை கொள்தலும் முதன்மை பெறுதல் ஆகாது என்கின்ற அடிப்படையில், வட அமெரிக்க வாகை சூடி போட்டிகள் நடத்தப்பட வேண்டும். அதற்காக உள்ளூரைச் சார்ந்த பொருத்தமானவர், ஒருங்கிணைப்பாளராக இருத்தல் நன்றெனும் பார்வைக்கொப்ப நமக்கு வாய்க்கப்பெற்றவர்தாம் திருமிகு பரணி இடைக்காடர் சேரன் அவர்கள். வேக் மாவட்டத்தின் 39ஆவது ஆண்டிற்கான சிறந்த பயிற்றுநர் விருது பெற்றவர்.
பொறுப்பேற்றுக் கொண்ட நாள் துவக்கம், பேரவை விழா முடிவுறும் வரையிலும் முழு ஈடுபாட்டுடன் பல நூற்றுக்கணக்கான பெற்றோர்கள், மாணவர்கள், தமிழ்த்தேனீ, குறள்தேனீ, கலைத்தேனீ, படைப்புத்தேனீ, அறிவியற்தேனீ முதலான குழுக்கள், நடுவர்கள், இடம், சான்றிதழ், பரிசுப்பொருட்கள், நிகழ்ச்சிநிரல், உணவு உள்ளிட்ட பலவற்றோடும் தலையைக் கொடுத்துக் கொண்டு, அன்பும் அக்கறையும் பிறழாது செயற்படுவதென்பது எளிதான செயலன்று.
காட்டமாக மின்னஞ்சல்கள் வரும். முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவர். வேடிக்கையும் வியப்புமான செயற்பாடுகள், ஒருவரது பொறுமைக்கே அறைகூவல் விடுக்கும். “ஏங்க, ஒரு குழந்தை படைப்புத்தேனீ, கலைத்தேனீ பிரிவில் இரண்டு போட்டிகள்லதா பங்கேற்க முடியுமெனச் சொல்றீங்க. ஆனா அவுக வேறொரு மின்னஞ்சல் பாவிச்சு, கூடுதலாகப் பதிஞ்சிருக்காங்க. எங்களுக்கு மட்டும்?” “அப்படி செய்திருந்தா நாங்க என்னங்க செய்ய முடியும்? உங்களுக்கும் எதனா அப்படி பதியணும்னா நான் முயன்று பாக்குறன்” “இல்ல, அவுகள எடுத்து வுட்ற முடியுமா?”. “ஞேஞே”. இப்படியெல்லாம் நிகழ்வுகள் இடம் பெறும்.
எல்லாவற்றையும் பொறுமையுடன் கையாண்டு, கொதிப்பவர்களிடம் தன்மனம் பார்க்காமல் மன்னிப்புகள் கோரிக்கோரியே குதூகலம் குறையாமல் பார்த்துக் கொண்டவர் இவர்.
Ms. Parani Idaikaadar Cheran's leadership is a beacon, guiding national competitions with both fierce responsibility and profound empathy. Her success shows that true strength in a leader lies not just in achievement, but in the compassionate heart that motivates it.
-பழமைபேசி.

No comments:
Post a Comment