அமெரிக்காவின் தலையாய செவ்வியல்த் திரைப்படம் ஒன்று உள்ளது. ஒவ்வோர் ஆண்டு நத்தார்நாள் (Christmas) விடுமுறைக்காலத்தின் போதும், உலகெங்கும் கோடிக்கணக்கானோரால் பார்க்கப்படுகின்ற படம். குடும்பம் குடும்பமாக உட்கார்ந்து, ஆண்டுதோறும், திரும்பத் திரும்பப் பார்க்கப்படுகின்ற படம். அதுதான் It's a Wonderful Life (1946). ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அது நமக்குள் ஒரு பாடத்தை விதைத்துச் செல்லும் வன்மை கொண்டது.
ஜார்ஜ் பெய்லி என்ற ஒரு நல்லெண்ணம் கொண்ட, தன்னலமற்ற மனிதனின் கதையைச் சொல்கிறது இந்தப்படம். அவர் பெட்ஃபோர்ட் ஃபால்ஸ் என்ற சிறிய நகரத்தில் வாழ்கிறார். தன் வாழ்நாள் முழுவதும், ஜார்ஜ் தன் பெரிய கனவுகளான உலகைச் சுற்றுவது, கல்லூரிக்குச் செல்வது போன்றவற்றைத் தியாகம் செய்து, குடும்பத் தொழிலான பெய்லி பிரதர்ஸ் பில்டிங் அன்ட் லோன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் அவர் மலிவு விலையில் வீடுகளை வழங்குகின்றார். அதேநேரம், பேராசை கொண்டவரும் கொள்ளை கொள்பவருமான வங்கியாளர் மிஸ்டர். பாட்டருக்கு எதிரான தன் கிளர்ச்சியையும் மேற்கொள்கின்றார்.
கதை 1945 ஆம் ஆண்டு நத்தார்நாள் முன்மாலையில் தொடங்குகிறது. ஜார்ஜ் தற்கொலை பற்றி யோசிக்கிறார். ஏனெனில், அவரது மறதி பிடித்த மாமா பில்லி, நிறுவனத்தின் $8,000 பணத்தைக் கோட்டை விட்டுவிட, அந்தப் பணத்தை மிஸ்டர். பாட்டர் எடுத்து வைத்துக்கொள்கிறார். நிதி அழிவு, குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஜார்ஜ், தன் வாழ்க்கை தோல்வி அடைந்துவிட்டதாக நம்பி ஒரு பாலத்தில் இருந்து குதிக்கத் தயாராகிறார். குடும்பத்தினர், நண்பர்களின் வேண்டுதல்கள் விண்ணை அடைந்தவுடன், அவரைக் காப்பாற்ற பூமிக்கு தேவலோகதேவதை ஒருவர் அனுப்பப்படுகிறார்.
ஜார்ஜ் பிறந்திருக்காவிட்டால் பெட்ஃபோர்ட் ஃபால்ஸில் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை தேவலோகதேவதை ஜார்ஜுக்குக் காட்டுகிறார். இந்த மாற்று யதார்த்தத்தில், ஜார்ஜின் தம்பி ஹாரி குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிடுகிறான், ஏனெனில் அவனைக் காப்பாற்ற ஜார்ஜ் அங்கு இல்லை. இதன் விளைவாக, போரில் ஒரு கப்பலைக் காப்பாற்றுவதற்காக ஹாரி அங்கில்லை. இப்படியாக அடுத்தடுத்துக் காட்சிகள் விரிகின்றன.
பெயர்கள் பெரும்பாலும் அடையாளம், வரலாறு, பண்பாடு முதலானவற்றைத் தாங்கி நிற்கின்றன. பெயரிடும் செயல் ஒரு படைப்புச் செயல் ஆகும். கொடுக்கப்படும் பெயரானது, அதன் வளர்ச்சி, மதிப்பு, எதிர்கால வெற்றியைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த கருவியாகும். ’மேன்மை அணி’, ‘வட அமெரிக்க வாகை சூடி’, ‘கலைத்தேனீ, படைப்புத்தேனீ, அறிவியற்தேனீ’ எனப் பெயர்கள் சூட்டியதிலிருந்து, இயக்கமாக மாறியது வரையிலும் நாம் மனமார்ந்து கொள்ள நிறைய இருக்கின்றன.
பாராட்டுகளுக்காகவும் அங்கீகாரத்துக்காகவும் தன்னார்வத் தொண்டர்கள் சோர்வடையத் தேவையில்லை. ஒவ்வொருவருக்கும், பிறந்திருப்பதற்கான காரணங்கள் ஆயிரமாயிரம் உண்டு. நீங்கள் இதைச் செய்திராவிட்டால், அதன் விளைவுகள் வேறுமாதிரியாக ஆகியிருந்திருக்கக் கூடும். தங்கள் பிறப்புக்குப் பயன் உண்டு, விழுமியம் உண்டு, நோக்கம் உண்டு. தன்னார்வலரைப் பற்றி எழுதுகின்றோம். யாரோ ஒருவர் அதனை அவரின் ஊரில் இருக்கும் அம்மாவுக்கு, அப்பாவுக்கு அனுப்பி வைக்கின்றார்கள். அந்த உள்ளம் மகிழ்ந்து ஆற்றுப்படுகின்றது. அந்த உவப்பினூடாக அவர் நல்லதாக இன்னொன்றைச் செய்வார். உலகு இயங்குவது இப்படித்தான்!
மேற்கூறப்பட்ட திரைப்படமேவும் ஓர் எடுத்துக்காட்டு. 1946ஆம் ஆண்டு வெளியாகி, தயாரிப்புத் தொகையான 6 மில்லியன் டாலர்களில் பாதி அளவுக்குக்கூட வருவாய் பெறவில்லை. தோல்விப்படமாக அமைந்தது. நிறுவனம் அடுத்தடுத்துப் படங்களைத் தயாரிக்க முடியவில்லை. 1974ஆம் ஆண்டு காப்பீட்டு உரிமை காலாவதி ஆகிவிடுகின்றது. மனித அறிவு நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டே வருகின்றது. படைப்பின் விழுமியமும் நாளுக்கு நாள் உலகுக்குப் புலப்படத் துவங்குகின்றது. அந்த நேரத்தில் அது தோல்விப்படம். இன்றைக்கு அது அமெரிக்காவின் தலையாய செவ்வியல்ப்படம். செய்வது நன்றெனின் வென்றேதீரும் என்றாவது!
(தொடரும்)
வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.
-பழமைபேசி.

No comments:
Post a Comment