வட அமெரிக்க வாகை சூடிப் போட்டிகளில் நேரடியாக வந்திருந்து கலந்து கொண்டோர் 655 பேர் எனில், பதிந்தோர் தோராயமாக 2000+ பேர் இருக்கும். 22 விதமான போட்டிகள், ஒவ்வொன்றிலும் 5 பிரிவுகள், ஆக மொத்தம் 110 தனிப்போட்டிகள். 85+ நடுவர்கள். இவை போக, தமிழ்த்தேனீ, குறள்தேனீக்கான தனிப்பதிவுகள்.
“build for change, nothing is harder" என்பதில் நமக்கு எப்போதும் தீராத காதல் உண்டு. எந்தவொன்றும் எளிதில் மாற்றம் செய்யக்கூடியதாக, புதுமையைப் புகுத்துவதாக இருத்தல் வேண்டும். கூடவே எளிமையாகவும் இருக்க வேண்டும். யாராவது, நான் மணிக்கணக்கில் உழைக்கிறேனெனும் பல்லவியையெடுத்தால், அங்கு கூர்திறன் வறட்சி என்று பொருள். கிடைக்கப் பெற்ற தரவுகளைச் சல்லி சல்லியாகப் பிரித்து, சீர்படுத்தி, முறைப்படுத்தி வரிசைப்படுத்திக் கொடுத்தவர்தாம் திரு. கருப்பையா கணேசன்(KG) அவர்கள்.
முதற்கட்டமாக, மின்னஞ்சல் அறுவடை செய்யப்பட்டது. கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல்களைக் கொண்டு, vavs@fetna.org துவக்கப்பட்டது. காரணம், எளிய தகவற்பரிமாற்றம் என்பதோடு, அடுத்த ஆண்டு போட்டிகளுக்கும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த 2000+ பேரிலிருந்து கூடுதலான மாணவர்களை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும். ஒவ்வோரு ஆண்டும், கணக்கினைச் சுழியத்திலிருந்து துவக்க வேண்டியதில்லைதானே? 2010ஆம் ஆண்டு, ஆண்டுதோறும் விழாவுக்கு வரக்கூடியவர்கள் 400 பேர் எனில், அது இன்று 1500 பேராக உயர்ந்திருக்க வேண்டும் அறுவடைகள் செவ்வனே நிகழ்ந்திருந்தால். இன்று அவரேவும், இணை ஒருங்கிணைப்பாளர் என்பதால் அந்த 2000+ பேரிலிருந்து கணக்கினைத் துவக்கி 4000 பேராக்கிக் காட்டுவாரென நம்பலாம். இஃகிஃகி.
போட்டிகளுக்கான கூட்டங்கள் நிகழும். சூம் லைசென்சுகள், கூட்ட ஏற்பாடுகளென எதற்கும் அழைத்த நேரத்துக்கு வருவார். திருவள்ளுவர் சிலை 25ஆவது ஆண்டுவிழா நிகழ்வு என நினைக்கின்றேன். நாங்களாகவே ஒரு விளம்பரக் காணொலியை உருவாக்கினோம். அது, பல மறுவேலைகளை(revisions) வாங்கியபடி இருந்தது. ஒரு கட்டத்தில், இது நல்லா இருக்குங்க கேஜி, நாம வெளியிட்டுவிடலாமெனச் சொல்ல, ’இல்லங்க, தரப்பரிசோதகர், ஊட்டு அம்மா இன்னும் எடிட் செய்யணும்னு சொல்லிட்டாங்க’. ‘அடங்கொன்னியா, இப்படித்தா எல்லாமும் நடந்துட்டு இருக்குதா இவ்ளோ நாளுமு?’ [கவுண்டமணி ஒயிலில் வாசிக்கவும்].
விழாவில் இன்னின்னவற்றைக் கவனிக்க வேண்டுமென அலைபேசியில் குறிப்புகள் கோக்கப்பட்டிருந்தது. அதன்படிக்கு இதுவுமொன்று. விழாவுக்காகக் களமாடியவர்களில் சிலர் விழாவுக்கு வரமுடியவில்லை. நம் கவனத்துக்கெட்டியதில் சில பேரைக் குறித்து வைத்திருந்தோம். திருமிகு அல்லி தாஸ் அவர்களும் திரு இராஜா வேணுகோபால் அவர்களும்தான் 2011ஆம் ஆண்டு போட்டிகளைச் சிறப்பாக நடத்திக் கொடுத்தனர். அப்படியாக நல்ல அறிமுகம் உண்டு. திருமிகு அல்லி அவர்களிடம் சென்று, இப்படியாகச் சிலருக்குப் பரிசில்பொதி வேண்டுமென்றேன். ஒருங்கிணைப்பாளர்களுக்குக் கணக்குத் தர வேண்டும், ஆகவே, பெயர், அவர்களின் பொறுப்பு முதலானவற்றைக் கொடுத்து பெற்றுச் செல்லுங்களெனச் சொன்னார். அவருக்குப் பெரிதும் நன்றியுடையவனாகின்றேன்.
கேள்விப்பட்ட தம்பி ஒருவர், அண்ணா நீங்க எனக்குத் தரலையென வருத்தப்பட்டார். “தம்பி, நீங்க விழாவுக்கு வந்திருந்தீங்க, குழுக்களின் சங்கமம், தன்னார்வலர் சிறப்பு நேரம்னு ஃப்ளையர் அடிச்சி, கூகுள் ஃபார்ம் போட்டு, அறை ஒதுக்கி, விளம்பரமெல்லாம் கூட நடந்திச்சி. கூட்டம் நடந்ததா, இல்லையா, கூட்டம் நடந்து நீங்க அதில கலந்துக்காம வுட்டடிச்சிட்டீங்ளான்னு தெரியலை” என அவர் மீதே திருப்பிவிட்டோம். ஆள், கப்சிப். எப்பூடி? அதைவிடுங்க, அப்படியான பரிசில்பொதி அனுப்பி வைக்கப்பட்டவர்களுள் KGயும் ஒருவர். ஏன்னா, Quality Controller, Content Approver Mrs.KG முக்கியம்லா பேரவைக்கூ?! 😍
𝐖𝐨𝐫𝐤𝐢𝐧𝐠 𝐬𝐦𝐚𝐫𝐭 𝐦𝐞𝐚𝐧𝐬 𝐮𝐬𝐢𝐧𝐠 𝐬𝐭𝐫𝐚𝐭𝐞𝐠𝐲, 𝐧𝐨𝐭 𝐣𝐮𝐬𝐭 𝐬𝐭𝐫𝐞𝐧𝐠𝐭𝐡, 𝐭𝐨 𝐦𝐨𝐯𝐞 𝐟𝐨𝐫𝐰𝐚𝐫𝐝.
வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.
-பழமைபேசி.

No comments:
Post a Comment