செளந்தர் ஜெயபால்
பொதுவாக ஒரு நிறுவனத்தின் தொழில்நுட்ப வழிகாட்டி என்பவர் என்னவெல்லாம் அறிந்திருக்க வேண்டும்? பல்வேறு தொழில் நுட்பங்கள், தளங்கள் , கருவிகள் பற்றிய பரந்த புரிதல் அவசியம். இதில் கிளவுட் கம்ப்யூட்டிங், தரவுத்தளங்கள், மின்வெளிப்பாதுகாப்பு (Cybersecurity) ஆகியவையும் அடங்கும். புதிய தொழில் நுட்பங்களின் வரவினை அப்போதைக்கப்போது அறிந்து பயன்பாடுகளின் சூழல்களை இனம் காணக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும். எல்லாருக்கும் ஒரு மனக்கண் இருக்குமாயின் இவருக்கோ பத்து மனக்கண்கள்.
தமிழ்க்கல்வி, இலக்கியம், ஊடகம், தொழில்நுட்பப்புலத்தில் தமிழ்மொழி வளர்ச்சி, தமிழிசை முதலான தளங்களில் சமகாலப்பயணியாக இருந்து கொண்டு, தமிழ்ப்பள்ளி நிர்வாகி, தமிழ்நாட்டு இணையக்கல்விக் கழக ஆலோசனைக்குழு உறுப்பினர், படைப்பாளிகளின் தொழில்நுட்பப் புரவலர் எனப் பங்காற்றி வருபவர்.
புத்தாக்கங்களை அறிமுகப்படுத்துவது, சீர்திருத்தங்களை வலியுறுத்துவது போன்றவற்றில் முன்னோடி. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையில் காசோலைகள் பெறுதல், பணமாகக் கொடுத்தல் போன்ற பரிவர்த்தனைகள் இடம் பெற்றிருந்த காலத்தில், எவ்வளவு நிர்வாகப் பணிகளின் சுமை இருந்திருக்குமென நினைக்குங்கால் மலைப்பாக இருக்கின்றது. அந்தச்சூழலில்தான் நம்மவர் இணையத்தினூடாகப் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்துகின்றார். அதிலிருந்து பல பணிகள்.
”மாப்ள அவரு; ஆனா சட்டை என்னுது” எனும் சொல்லாடல் நாமனைவரும் அறிந்ததே. அதையே மாற்றிச் சொல்ல வேண்டியிருக்கின்றது, “சட்டை அவருது, ஆனா மாப்ள நாங்க”. இஃகிஃகி. தொடர்ந்து புதுப்புது யோசனைகளைச் சொல்லிக் கொண்டே இருப்பார். எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு, வாய்ப்பமைகின்ற தருணத்தில் செயல்படுத்துவது மற்றவர்கள்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் இருக்கும். அப்போதேவும், “போட்டிகளை அப்படி நடத்த வேண்டும். இப்படி நடத்த வேண்டும். கேன்வா உள்ளார கொண்டு வரவேண்டும். இப்படியாகப் பலப்பல”. செய்யறிவு நுட்பங்கள் துவக்ககாலத்தில் சிற்சிறு வழங்கிகளாக(service) இடம்பெற்றன. அப்போதேவும் தமிழ்ப்பணிகளுக்கு அவற்றைப் பயன்படுத்துவதை நமக்கெலாம் அறிமுகப்படுத்தியவர். தற்போது இயக்கிகளாக(agent) பரிணாமம் கொண்டுள்ளன அவை. அதுகுறித்தெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் போதுதான், தொழில்நுட்பத் தளத்தில் மாணவர்கள், போட்டிகளெனச் சொல்லி, அறிவியற்தேனீ எனும் புதுப்பிரிவின் தேவையை உணர்த்தினார். உணர்த்தியதோடு மட்டுமல்லாமல், அதற்கான ஓர் அறிஞர் இருக்கின்றாரெனவும் அறிமுகப்படுத்தினார். அப்படி அமைந்ததுதான் அறிவியற்தேனீக்குழு. யோசனை அவருடையது, பெயர் சூட்டிக் கொண்டது நாங்கள், “சட்ட அவ்ருது, மாப்ள நாங்க”.
அதிரடிப் பேர்வழி. புதிய செயற்குழு அமைந்து, தன்னார்வலர்களைத் திரட்ட வேண்டும். அடையாளம் காணப்பட்ட 31 குழுக்களுக்கு, தலா பத்துப் பேர் என்றாலும், 310 பேர் போதுமானது. இவரின் செய்திறன், 450 பேருக்கும் மேலாக விண்ணப்பித்திருந்தனர். இஃகிஃகி. “விழான்னா, டீ, காப்பி, எப்ப வேணும்னாலும் புடிச்சிக் குடிக்கிறமாரி இருந்துட்டாப் போதும். பாதிப் பிரச்சினை இருக்காது”, இப்படியெல்லாம் அடுத்தடுத்து எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பார். அவற்றைக் கவ்விக் கொண்டால் நமக்கு நல்லது.
அறப்பணிகளில் ஈடுபடும்போது, நம் எண்ணங்கள் தன்நலத்தைத் தாண்டிப் பொதுநலத்தை நோக்கிச் செல்கின்றன. இது மனத்திலுள்ள பதற்றம், பேராசை, குறைபாடுகள் பற்றிய கவலைகளைக் குறைக்கின்றன. மாறாக, அறப்பணிகளுக்குச் சென்ற இடத்தில் தன்னலங்களை முன்னிறுத்துகின்றபோது, ஏதோவொரு வடிவில் அது நம்மையே பதம்பார்க்குமென்பார் செளந்தர் ஜெயபால் அவர்கள். அறப்பணிகள் மூலம் ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் இணைவது, நம் சமூகப் பிணைப்புகளை வலுப்படுத்துகிறது. ஒரு நல்ல சமூகத்தின் அங்கமாக இருப்பதன் மூலம் வாழ்வியல் சுகம் கிடைக்கிறது.
Soundar’s dedication to Tamil-related charity work shows how passion can transform communities. His constructive contributions remind us that 𝐞𝐯𝐞𝐧 𝐨𝐧𝐞 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧’𝐬 𝐜𝐨𝐦𝐦𝐢𝐭𝐦𝐞𝐧𝐭 𝐜𝐚𝐧 𝐬𝐩𝐚𝐫𝐤 𝐚 𝐰𝐚𝐯𝐞 𝐨𝐟 𝐩𝐨𝐬𝐢𝐭𝐢𝐯𝐞 𝐜𝐡𝐚𝐧𝐠𝐞.
வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.
-பழமைபேசி.

No comments:
Post a Comment