11/22/2025

சசிகுமார் ரங்கநாதன்


 சசிகுமார் ரங்கநாதன்

குறள்தேனீ எனும் போட்டியைச் செவ்வனே வடிவமைத்து, அதற்கோர் செயலியைப் படைத்து, அச்செயலிக்குள் பல்வேறு செயல்களுக்கான கூறுகளையும் இடம்பெறச் செய்து, பாடத்திட்டத்தினை முறையே வகுத்து, ஒரு போட்டி எப்படி இருக்க வேண்டும், அதற்கான தானியக்க வசதிகள், இணையதளம், தகவற்பகிர்வு என ஒவ்வொன்றையும் அழகுறச் செய்திருக்கின்ற குறள்தேனீயின் தலைவர், 15 ஆண்டுகால நண்பர். https://kuraltheni.com/

வட அமெரிக்க வாகை சூடியில் தமிழ்த்தேனீ, குறள்தேனீ என்பன இருப்பினும் கூட, இவையிரண்டும் தனித்து இயங்கும் போட்டிகள். குறள்தேனீக்கான கூடுதல் தேவைகளுக்காகக் குழுவினரே புரவலர்களைக் கண்டடைந்து தேவைகளை நிறைவேற்றிக் கொண்டதெல்லாம் மிகுபாராட்டுதலுக்குரிய பற்றியம்.

குறள்தேனீயின் செயலியைப் போலவே, வட அமெரிக்க வாகை சூடிக்கும் செயலி அமையப் பெறுமேயானால் அது போட்டிகளை நடத்துவோருக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். போட்டிகளின் தொடர்ச்சி, மறுபயனாக்கம், தானியக்கம் முதலானவை சீருற வழிவகுக்கும்.

நிறைய உரைகளைப் பார்த்திருக்கின்றோம். காலத்துக்கேற்ற மேம்பாடுகளை அவை கொண்டிருக்கவில்லை. பயணித்த பாதையிலேயே மீண்டும் மீண்டும் பயணிக்கின்ற தேய்வழக்கினையே அவை கொண்டிருக்கின்றன. குறள்தேனீயின் இணையதளத்தில் 150 குறள்களும் அதற்கான உரையும் இடம்பெற்றுள்ளன. நேர்த்தியாகவும் சிறப்பாகவும் உள்ளன. இன்னும் கூட அவற்றை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம்.

o0o0o0o

இடுக்கண் அழியாமை

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு. (௬௱௩௰ - 630)

துன்பமே தனக்கு இன்பமானது என்று கருதித் தொழிலைச் செய்பவன், அவன் எதிரிகளும் அவன் முயற்சியை விரும்பும் சிறந்த நிலைமையை அடைவான் (௬௱௩௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும். (௬௱௩௰)
—மு. வரதராசன்

ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும். (௬௱௩௰)
—சாலமன் பாப்பையா

துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும் (௬௱௩௰)
—மு. கருணாநிதி

o0o0o0o

இடுக்கண் என்றால் துன்பம். இன்னாமை என்றால் துன்பம். இப்படியாக ஒரு சொல்லுக்கு இன்ன பொருளெனத் தீர்மானமாக வரையறுத்துக் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றது தமிழ்கூறும் நல்லுலகில். இது, காலத்தின் வளர்ச்சிக்கொப்ப மாறுதல் கொள்ளவில்லை. இடுக்கி, இடுக்கண் போன்றவற்றுக்கு வேராக இருப்பது இடுக்குதல். இடுக்குதல் என்றால் விரிவாக இருப்பதை நெருக்கி விடுதல் ஆகும். ஆக, இடுக்கண் என்பதற்கு நெருக்கடி என்பதே சரியாக இருக்கும். அதுபோலவே, அல்லாததைக் குறிக்கும் பொருட்டு, ‘ஆமை’ எனும் பின்னொட்டு பாவிப்பது தமிழின் மரபு. கூறாமை, சொல்லாமை, கோணாமை இப்படியாக; அதன்வழி வழங்குவதுதான் இன்னாமை. இனியது அல்லாமை.

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும் தன் ஒன்னார் விழையும் சிறப்பு. இனியதல்லாத நெருக்கடிகளையும் இனியதற்கொப்பாகவே கொள்ளும் போது ஆகும், தமக்கு ஒத்துவராதவர்களும் தம்மை நாடுகின்ற சிறப்பு.

இப்படியாக எளிமையுடன் சொல்லின், பொருளை அவ்வண்ணமே கொடுக்கும் போது, மாணவர்களுக்குக் குழப்பம் நேராது. மனப்பாடம் செய்து ஒப்பித்துவிட்டு மறந்து போகலும் நிகழாது. புரிந்து செயற்படவும் காலத்துக்கொப்ப புதுவுருக்கொள்ளவும் வழிவகுக்கும்.

இன்னா நாற்பது எனும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதிலும், துன்பம், துன்பம், துன்பம் என்றே பொருளுரைத்துச் செல்வது இன்றைய காலத்தில் நமக்குப் பெரும் துன்பமாக உளது. இஃகிஃகி.  எடுத்துக்காட்டு: ”நறிய மலர் பெரிது நாறாமை இன்னா” என்பதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உரை: “வாசனை இல்லாத நல்ல மலர் துன்பமாகும்”. அஃது அப்படியன்று. மாறாக, ”மணம் கொடுக்கவல்ல(நறிய) மலர், மணம் கொடுக்காமலிருப்பது இனியதாக இராது”.

o0o0o0o

𝐒𝐚𝐬𝐢 𝐞𝐦𝐛𝐨𝐝𝐢𝐞𝐬 𝐭𝐡𝐞 𝐬𝐩𝐢𝐫𝐢𝐭 𝐨𝐟 𝐞𝐥𝐞𝐯𝐚𝐭𝐢𝐧𝐠 𝐞𝐯𝐞𝐫𝐲𝐝𝐚𝐲 𝐥𝐢𝐟𝐞 𝐭𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐭𝐫𝐚𝐧𝐬𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐯𝐞 𝐢𝐝𝐞𝐚𝐬. 𝐖𝐢𝐬𝐡𝐢𝐧𝐠 𝐡𝐢𝐦 𝐜𝐨𝐧𝐭𝐢𝐧𝐮𝐞𝐝 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬 𝐨𝐧 𝐡𝐢𝐬 𝐣𝐨𝐮𝐫𝐧𝐞𝐲.

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி. 

No comments: