11/20/2025

சங்கர் தங்கவேலு


சங்கர் தங்கவேலு

கதை, கவிதை, கட்டுரை, ஓவியம் முதலான படைப்பாக்கத் திறன்களுக்கான போட்டிகளை நடத்த, தமிழ்மொழி சார்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். சிந்தனைக்களத்தில் இருப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படியானவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டதுதான் படைப்புத்தேனீ குழுமம். அதற்கான தலைவர், தமிழுணர்வாளர் திரு சங்கர் தங்கவேலு அவர்கள்.

ஓரிருமுறை அழைத்திருப்போம். அவர் ஓரிருமுறை தொடர்பு கொண்டார். அவ்வளவுதான். குழுக்கள் தன்னாட்சியுடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் பணிகள் சிறக்குமென்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.  சில இடங்களில் வலுவான ஒற்றைத்தலைமை இருக்க வேண்டும். சில இடங்களில் தன்னாட்சியுள்ள கூட்டுத் தலைமைகள் இருக்க வேண்டும். வட அமெரிக்க வாகை சூடி, இயல், இசை, நாடகம், அறிவியல், நுட்பம், இவற்றுக்குள் பல பகுப்புகள், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான கலையுணர்வு அடிப்படை. அந்தந்த நுண்பிரிவுக்கொப்ப தலைவர் இருக்க வேண்டும். ஒருவருக்கே எல்லாமும் வாய்த்திருப்பதென்பது அரிது. எனவேதான் தன்னாட்சியுள்ள பலதலைவர்கள் இடம் பெற்றிருந்தனர்.

படைப்பின் நிமித்தம் விமர்சனங்களை முன்வைக்கலாம். 'எனக்கு அது பிடிக்கவில்லை. அதில் இன்னின்ன குறைபாடுகள் இருக்கின்றன. அதில் பிழை இருக்கின்றது', இப்படியாக. அது தனிமனித உரிமை. விமர்சனங்களை வரவேற்காத சமூகம் ஒரு வறட்டுச்சமூகம். காட்டமாகவும் சாடியும் எழுதி இருக்கின்றேன். என்னைச் சாடுவதையும் வரவேற்கின்றேன். ஆனால், ’இப்படி எழுது, அப்படி எழுது, அதை அப்படி செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டும்’ என்றெல்லாம் சொல்வது, அத்துமீறல்; மேட்டிமைத்தனத்தை நிறுவும் செயலாகவே கருதப்படும். ஆகவே, எந்தக் குழுவிலும் திருமிகு பரணி அவர்களோ, நானோ சென்று, எதிலும் குறுக்கிடவில்லை. திரு சங்கர்தான் தொடர்பு கொண்டு, கூடுதலாக புத்தாக்கம் எனும் தலைப்பில் ஒரு போட்டியைச் சேர்க்கின்றோம், சரியாயென வினவினார். ’அடித்து விளையாடுங்கள், உங்கள் களம், உங்கள் உரிமை’ என்பதுதான் நம் மறுமொழியாக இருந்தது.

புத்தாக்கம் (Innovation) – தமிழ்மொழியை மையமாகக் கொண்டு:

மொட்டு (வயது: 4-8)
குறிப்பு: தமிழ் எழுத்துகளை அடையாளம் காணவும், அவற்றை அழகாக வடிவமைக்கவும் சிறிய கைவினைகள் உருவாக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு: "உயிர் எழுத்துகள் வடிவில் காகித அலங்காரம்."

முகை (வயது: 9-12)
குறிப்பு: தமிழ் பாடல்களில் வரும் சொற்களைப் பயன்படுத்தி புதுமையான         சிறு விளக்கத் தொடர் (word collage) உருவாக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு: "தமிழ் ஆத்திசூடி சொற்களால் சுவர் அலங்காரம்."

மலர் (வயது: 13-17)
குறிப்பு: தமிழில் உள்ள பழமொழிகளை தனித்துவமான ஆவண வடிவில்             (mini poster or infographic) காட்சிப்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டு: "தமிழ்ப் பழமொழிகளைச் சித்திர வடிவத்தில் அறிமுகப்படுத்துதல்."

அலர் (வயது: 18 - 23)
குறிப்பு: தமிழ் எழுத்துக்கள் அல்லது இலக்கியங்களை மையமாகக்                         கொண்டு, தகுந்த தொழில்நுட்ப (mobile app, website, etc.) வடிவமைப்புகளை             உருவாக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு: "தமிழ் எழுத்துக்களை பயிற்சிக்க உதவும் கற்றல் செயலி."

இதற்குமேல் நாம் அவரையோ, அவர்தம் குழுவினைப் பற்றியோ சொல்வதற்கு என்ன இருக்கின்றது? அவர்கள் வகுத்திருந்த போட்டித்திட்ட விழுமியங்களே சான்று.

Commitment, dedication, and an innovative mindset form the foundation of meaningful and sustained success. Together, they drive individuals to take ownership, persevere through challenges, and continuously seek better ways of doing things.

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி. 

No comments: