11/25/2025

அஷ்ரபி ஹனீபா அஹ்மது

அஷ்ரபி ஹனீபா அஹ்மது

தூரிகைப் போராளி ஓவியர் மருது வீட்டிற்கு வருகைதரும் பேறு கிட்டியது. கதைவயப்பட்டுக் கிடந்தோம். தமிழ்நாட்டில் தற்போதுதான் ஓவியத்தைப் புசிக்க மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைப்பட்டிருக்கின்றார்களெனச் சொன்னார். ஆமாம், எப்படியெல்லாம் ஓவியத்தை உள்வாங்கி உணர்வதென நாமும் பலவற்றையும் தின்னத்துவங்கினோம்.

ஓவியத்தைப் புரிந்து கொள்வதென்பது ஒரு பல அடுக்குச் செயல்முறையாகும். இது வெறுமனே, அதைப் பார்ப்பது மட்டுமல்ல; அதன் சூழல், நுட்பம், உள்ளடக்கம், அது நம் மீது ஏற்படுத்தும் தாக்கம், கண்டடையும் காலம் முதலானவற்றை உணர்ந்து உணர்ந்து நம்முள் உருக்கொள்ளும் பெருங்காதை என்பதேயாகும். நுண்ணுணர்வுகளின் தொகுப்பு.

கொசுவர்த்தி. யார்க் பல்கலைக்கழகத்தில் மாணவனாயிருந்த காலம். ரொறண்ரோ நகரமே ஒரு மாதகாலம் பதைபதைத்துக் கிடந்தது. மருத்துவர் ஒருவரின் மனைவியைக் காணவில்லை. அவர் எங்கே? துப்புதுலக்கலில் தேக்கமா? பரபரப்பு. பால்வாடியிலிருந்து துவக்கப்பள்ளி முடியும் வரையிலான மாணவர்கள் வரைந்த எல்லா ஓவியங்களையும் தம்முன்னால் கொட்டு வந்து கொட்டச் சொல்கின்றார் உயர் புலனாய்வு அலுவலர். பகுத்துப் பகுத்துச் சிலவற்றை ஆராயத்தலைப்படுகின்றார். அந்த ஒரு ஓவியம், நான்கு வயதுக்குழந்தை தீட்டியது. 

குழந்தையிடம் அந்த ஓவியத்தைப் புகழ்ந்து பேசுகின்றார். அப்பா இல்லாத குழந்தை. வேலைக்குச் செல்லும் அம்மா, துரிதகதியில் குழந்தையை வாரிப்போட்டுக் கொண்டு போய் பால்வாடியில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்று விடுகின்றார். செல்லும் வழியில் கண்களால் கண்ட காட்சியை வண்ணக்கோல்களால் தீட்டியிருக்கின்றது. குளக்கரையின் மீது ஏறி நின்று ஒரு பொட்டலத்தை ஏரியில் வீசிக்கொண்டிருக்கின்றார் ஒருவர். அவ்வளவுதான்! ஏரி தூர்வாரப்படுகின்றது. உள்ளே பல பொட்டலங்கள். நாளொரு பொட்டலம் வந்து விழுந்திருக்கின்றது. குழந்தை ஒன்றுக்கு மேற்பட்ட நாளில் அந்தக் காட்சியைப் பார்த்திருக்கின்றது. மருத்துவர் அகப்பட்டுக் கொண்டார்.

ஓவியம் உங்களுக்கு என்ன உணர்வை ஏற்படுத்துகிறது? அமைதி, மகிழ்ச்சி, குழப்பம், அல்லது துக்கம்? ஓவியத்திலுள்ள ஏதேனும் ஒன்று வாழ்க்கையில் உள்ள ஒரு பற்றியத்தை உங்களுக்கு நினைவுபடுத்துகிறதா? ஓவியத்திலுள்ள பொருள்கள் அல்லது வண்ணங்கள் எதைக் குறிக்கக்கூடும்? எடுத்துக்காட்டாக எரியும் மெழுகுவர்த்தியின் உயரம், துவக்ககாலம், பாதி எரிந்தநிலை என்பதாக இருக்கும் போது இடைக்காலம், தரைதொடும் நிலையில் இருப்பின் கடைசிக்காலமென்பதான குறியீடாக இருக்கலாம்.

வட அமெரிக்க வாகை சூடியின் படைப்புத்தேனீயில் உள்ள ஓவியப்போட்டிதாம் அதிகமான போட்டியாளர்களைக் கொண்டது. அந்த ஓவியங்களையெல்லாம் தீட்டச் செய்து கலையுணர்வில் வேள்வியை நடாத்திக் கொடுத்தவர்தாம் அஷ்ரபி ஹனீபா அஹ்மது அவர்கள். படைப்பாளியே ஒருவர் நமக்குக் கிடைக்கப் பெற்று, படபடப்புகளேதுமின்றி, விழுமியமீட்டுக் கொடுத்தமை சிறப்பு. சிறார் கதைகளைத் தீட்டுபவர், ஓவியக்கலையில் திளைப்பவர், தமிழார்வலர், ‘பாறை வீடு’ எனும் படப்புத்தகத்தைப் படைத்திருக்கின்றார். ‘சூடி’ எனும் குழந்தைதாம் பாறை வீட்டின் நாயகி. இப்படியான நூல்களுக்கு நாம் இடமளித்துப் போற்ற வேண்டும்.

We enjoyed your contribution, Ms. Ashrafi Hanifa Ahmed. As an author and a true painting fanatic, your involvement and help in conducting the painting competition brought creativity, passion, and inspiration to the event. 

வண்ணங்களைக் குழைத்து எண்ணங்களைப் படைப்பாக்கும் ஓவியப்போட்டி, குழந்தைகளின் திறத்துக்கு அழகானதொரு தளத்தை கொடுக்கின்றது.

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.


-பழமைபேசி.

 

No comments: