11/17/2025

வள்ளிக்கண்ணன் மருதப்பன்

 


வள்ளிக்கண்ணன் மருதப்பன்


அறியாத பல பற்றியங்களைத் தொடர்ந்து உள்வாங்க நேரிடும் போது ஒரு கட்டத்தில் அயர்ச்சிதான் தோன்றும். அப்படித்தான் எனக்கும் தோன்றியது. நான், நேரிடையாகவே சொல்லியும் விட்டேன், ஆக்கப்பூர்வமாக, இது வரையிலும் இல்லாத அளவுக்குப் பொருளாளர் பணிகளில் செயலாற்றுகின்றீர்கள். கூடவே, மென்திறன்களையும் பார்த்துக் கொள்ளுங்களென. அவர் செய்த பணிகளின் விழுமியங்களைக் காணும் போதுதான், சொல்லியது கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் துவங்கியது.

2018 துவக்கம் பேரவைப் பரிவர்த்தனைகளின் வீச்சு பெருமளவுக்குப் பெருகிவிட்டது. நடப்புச் செயற்குழு பொறுப்பேற்றுக் கொண்டபின் இடம் பெற்றிருக்கும் ஆவணமயமாக்கத்தின் (Bookkeeping) வீச்சு மெச்சத்தக்கது.

வெளியிலிருந்து பார்க்கும் பொதுப்பார்வையாளன் என்ற முறையில் நமக்குக் காணக்கிடைப்பவை கொஞ்சமே கொஞ்சம். அதன் அடிப்படையிலேயேகூட நாம் சொல்லிவிட முடியும், Generally Accepted Accounting Principles( GAAP ) தழுவிய செயற்பாடுகளில் மேம்பாட்டினை.

அமைப்பின் நிதிநிலை அறிக்கை (Statement of Financial Position), செயல்பாட்டு அறிக்கை (Statement of Activities), பணப்புழக்க (Cash Flow Statement) அறிக்கையெனப் பிரித்தாளுதல்; மின்னஞ்சல்/வாட்சாப் முதலானவற்றினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிராமல், மென்பொருளைப் பாவித்து உள்கட்டுப்பாடுகளை நிறுவி, அதற்காய்க் குரல் கொடுப்பது போன்றவற்றையெல்லாம் நாம் காண நேர்ந்தது.

பொறுப்பேற்றுக் கொண்ட சில மாதங்களிலேயே, பொதுவெளியிலேயே சொன்னார், “குறைவான விலையில், மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம். மிச்சமாகிவிட்டால், தொடர்ந்து அடுத்த வருசத்துக்கு யூஸ் செய்துக்கலாம், ப்ளா, பளா...”. பொறுப்புக்கிடைத்த குதூகலத்தில் சொல்கின்றார் போல இருக்கின்றதெனக் கடந்து போய்விட்டாயிற்று. 

பேரவையின் மதுரை மாநாடு முடிந்த ஓரிருநாள்களில், பல வடிவமைப்புகளையும் பலருக்கும் அனுப்பிக் கருத்துக் கோரி, இன்னின்னதுக்கு இவ்வளவு விலையெனச் சொன்னாரே பார்க்கலாம். திகைப்பாக இருந்தது. “நீங்க இறக்குங்க நண்பரே மொத்தமா” என மறுமொழியிட்டோம் மற்றவர்களுடன் சேர்ந்து நாமும். இஃகிஃகி. அப்படியாக, எல்லாரது ஒப்புதலையும் பெற்றுச் சேர்ந்ததுதான் பதக்கங்கள், கோப்பைகள், உறைகள், மற்ற மற்றவை. 

பல பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வந்துவிட்டார் பொருளாளர். வட அமெரிக்க வாகை சூடி போட்டிகளில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கென சிறப்புப்பதிவு முன்வரைவு.

  • கட்டணம் கூடுதல் என்பதால் மாணவர்கள் பாதிப்படையக் கூடாது.
  • சலுகைகள் அளிப்பதால் விழாவுக்குப் பொருளாதாரப் பின்னடைவு வந்து விடக் கூடாது.
  • கூடுதல் கூட்டம் கூட்டிவிடுவதால், வளாகத்தின் கூடுதல் கட்டணச்சிக்கல் (buy-out) நேர்ந்து விடக் கூடாது.
  • திருவிழாவின் பணப்புழக்கத்துக்கொப்ப சரியான நேரத்தில் செயற்படுத்த வேண்டும்.

இப்படியான கொக்கிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிலைமையை வீழ்த்தக் கூடியவை. அப்படியான நிலை நேராதபடிக்கு, ஒரு விழுமிய நிலையிலான(sweet spot)  முன்வரைவினை எல்லாருக்கும் முன்வைத்து விவரித்தவிதம் ஏற்புடையதாக இருந்தது. 

செயற்குழு, வழிகாட்டுதல்க்குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, பதிவுக்குழுத் தலைவர் முரளி , வட அமெரிக்க வாகை சூடி ஒருங்கிணைப்பாளர் பரணி ஆகியோருடன் சேர்ந்து பணியாற்றி, போட்டிகளில் இடம் பெற்றிருக்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கு, தனிப்பட்ட மின்னஞ்சல்(personal package delivery mail), இரவோடு இரவாக அனுப்பி வைத்தார். இப்படியாக, பொருளாளர் வள்ளிக்கண்ணன் அவர்களது உதவிகளும் வட அமெரிக்க வாகை சூடியின் வெற்றியில் தனியிடம் பிடிக்கின்றன.

𝐒𝐭𝐫𝐨𝐧𝐠 𝐟𝐢𝐧𝐚𝐧𝐜𝐢𝐚𝐥 𝐜𝐨𝐧𝐭𝐫𝐨𝐥𝐬 𝐭𝐮𝐫𝐧 𝐬𝐭𝐫𝐚𝐭𝐞𝐠𝐲 𝐢𝐧𝐭𝐨 𝐬𝐮𝐬𝐭𝐚𝐢𝐧𝐚𝐛𝐥𝐞 𝐩𝐞𝐫𝐟𝐨𝐫𝐦𝐚𝐧𝐜𝐞.

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி.

No comments: