கார்த்திக் காவேரிச்செல்வன்
வட அமெரிக்க வாகை சூடி போட்டிகளுக்கான ஆவணங்கள், விதிமுறைகள், மக்களை எதிர்கொள்ள வேண்டிய பாங்கு, நேர ஒதுக்கீட்டில் முரண் களைதல் உள்ளிட்ட பலவற்றையும் குழுவினரிடம் முன்வைத்து அளவளாவிக் கொண்டிருந்தோம். முன்பின் பேசியதில்லை. ’தலைவரே’ என விளித்து, அருமை, அட்டகாசம், அது, இதென்றெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தவர், இதைச் செய்யாவிட்டால் நீங்கள் தமிழை வஞ்சிக்கின்றீர்களென்றே பொருள் என்றார்.
நமக்குத் தூக்கிவாரிப் போட்டது. முதலில் நீங்கள் யாரெனத் தெரிந்து கொள்ளலாமாயென்றேன். இஃகிஃகி. அவர் வேறு யாருமல்ல. திரு. கார்த்திக் காவேரிச்செல்வன், நியூசெர்சி தமிழ்ப்பேரவை, நியூசெர்சி தமிழ்ச்சங்கம், நியூயார்க் தமிழ்ச்சங்கமெனப் பலவற்றிலும் களமாடிவிட்டுத் தற்போது நியூயார்க் அல்பேனி மண்ணில் தமிழ்க்களமாடி வருபவர். படைப்புத்தேனீ குழுவின் துணைத்தலைவர்.
தமிழுக்காகத்தானே இத்தனையும்? பிறகென்ன பஞ்சாயத்து, வாய்க்காவரப்பு? ஒன்றுமில்லை தலைவரே தமிழின் ஆகப்பெரும் சொத்து என்பதே மரபுச்செய்யுள்கள்தான். அதற்காக ஒன்றுமே நம் போட்டிகளில் இல்லையேயென்று சொல்லி, மரபுச்செய்யுளுக்கும் ஒரு போட்டி வைக்கலாம், நாமே பயிற்சி அளித்து எழுதவும் வைக்கலாமெனச் சொன்னார். பொறுப்பினை ஏற்று நடத்த நீங்கள் இருக்கும் போது, கரும்பு தின்னக் கூலியா வேண்டுமென்றோம். அப்படியாகச் சேர்க்கப்பட்டதுதான் மரபுச்செய்யுள் எழுதும் போட்டி. அதில் பத்துக்கும் மேற்பட்டோர் பதிந்தனர் என்பதும் கூடுதல் செய்தி. 2018ஆம் ஆண்டில், தமிழ்ச்சங்க உறுப்பினர் சேர்க்கைக்காக நண்பர் கார்த்திக் அவர்கள், பறம்பு நாட்டான் எனும் புனைபெயரில் எழுதிய செய்யுள்கள்:
ஏன் சேர வேண்டும்? (Why should one join?)
ஊருவிட்டு ஊருபேர் ஒட்டாத ஊருவந்து
சேருமிடம் இல்லாம ஏங்கயில் - யாருயென்ன
பாக்காம நல்லதமிழ் பேசிவந்தா சேர்ப்பதனால்
ஏக்கமெல்லாம் தீர்ந்திடுமே இங்கு.
என்ன செய்கிறது தமிழ்ச்சங்கம்? (What does the Tamil Sangam do?)
ஆட்டமும் பாட்டமும் ஆண்டில் பலவோடு
ஊட்டம் குறையாதச் சிந்தனைக் - கூட்டமும்
வாட்டம் குறைத்திட வாரிக் கொடுத்தலும்
நாட்டமுடன் செய்வர் இணைந்து.
எப்போது சேர்ந்தால் நல்லது? (When is the best time to join?)
இருமுறை கொண்டாட ஏற்கும்செலவை
வருட தொடக்கம் வழங்கி - இருப்புக்
குறையாமல் ஆண்டெல்லாம் இன்புற இன்றே
முறையாகச் சேர்தல் சிறப்பு.
Legacy is fundamentally important because it represents the lasting impact and accumulated wisdom that extends beyond one's immediate presence. 𝐊𝐚𝐫𝐭𝐡𝐢𝐜𝐤'𝐬 𝐯𝐚𝐥𝐮𝐞 𝐥𝐢𝐤𝐞𝐥𝐲 𝐬𝐭𝐞𝐦𝐦𝐞𝐝 𝐟𝐫𝐨𝐦 𝐡𝐢𝐬 𝐤𝐞𝐲 𝐫𝐨𝐥𝐞 𝐢𝐧 𝐞𝐬𝐭𝐚𝐛𝐥𝐢𝐬𝐡𝐢𝐧𝐠 𝐭𝐡𝐚𝐭 𝐥𝐞𝐠𝐚𝐜𝐲, making contributions that were not ephemeral but enduring. நின்று வெல்லும் தமிழ்!
வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.
-பழமைபேசி.

No comments:
Post a Comment