11/19/2025

இராஜேஷ் இராமசாமி

இராஜேஷ் இராமசாமி

அகவெழுச்சி (positive, uplifting) மிக்க இளம்வயதுக்காரர். அவரைச் சந்திக்கும் போது அவர் வெளிப்படுத்தும் துள்ளுமனம் சூழ்நிலையை இலகுவாக்கும் தன்மை கொண்டது. அவரின் இருப்பு, பதற்றத்தை அகற்றித் தணிவு மனத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

எத்தகைய சூழலிலும் தன் வசீகரச்சிரிப்பை வெளிப்படுத்தி நேர்மறையான கோணத்தில் பார்க்கும் தன்மை; பலருக்கும் தொற்றுபோல அதே ஊக்கத்தையும் இலகுதன்மையையும் ஊட்டக்கூடிய ஒரு பார்வை. பேசும் விதம், நடத்தை அனைத்தும் அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் இருந்தது.

அந்தந்தப் போட்டிகளுக்குத் தேவையான கலைநயம் மிக்கவர்கள் அல்லது நாட்டமும் ஈடுபாடும் கொண்டவர்கள், குழுக்களுக்குத் தலைவர்களாக அமைந்தது ஏதோ தன்னிச்சையாக நடந்தவொன்று அன்று. பேரவைக்கான குழுக்கள் அமைக்கும் போதேவும், பலரின் கருத்துகளையும் பெற்று, உகந்தவர்களாகவும் இருக்க வேண்டும், உழைப்பவர்களாகவும் இருக்க வேண்டுமின்கின்ற அடிப்படையில் ஆய்ந்து தெரிவு செய்ததே காரணம். அந்தவகையில் நாட்டிய நாடகக்கலையில் ஆவல்கொண்ட இராஜேஷ் அவர்கள் கலைத்தேனீக்கு அமைந்தது சாலப்பொருத்தமாக இருந்தது.

”எல்லாம் சூப்பராப் போய்ட்டு இருக்குங்ணா, நீங்க மத்த வேலையப் பாருங்க”

“என்னங்க பரணி, இராஜேஷ் நடத்தீருவார்தானே? எப்பக் கேட்டாலும், சூப்பர் சூப்பருன்னே சொல்றாரே?”

“ஆமாங்க பழமபேசி, எனுக்கும் அதே டவுட்டாத்தான் கெடக்கூ...”

“தம்பி, மூனாந்தேதி கேன்சல் செய்திட்டீங்க ஏன்?”

“அதுங்ணா, எல்லாரும் மூனாந்தேதி வரமாட்டாங், அதான் எல்லாத்தையும் நாலாம் தேதிக்கே மாத்தி வுட்டுட்டேன்”

“அய்யோ தம்பி, சிலருக்கு மத்த மத்த போட்டிகள்ல கான்ஃபிளிக்ட் வரும்னு சொன்னமே?”

“ஒன்னும் பிரச்சினை இல்லங்ணா, நான் பாத்துக்குறன்... மூனாந்தேதியும் வெச்சிக்கிலாம், நீங்க மத்த வேலைகளப் பாருங்க, இதப்பத்தி...”

ஒரே சிரிப்புதான். எதைச் சொன்னாலும் சிரிப்பு. போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சும்மா எட்டிப் பார்க்கலாமெனச் சொன்றோம். “வாங்க பரணி அக்கா, வாங்க பழமை அண்ணா. இவங்கதா ஹரிணி. எனுக்கு ஹெல்ப் செய்துட்டு இருக்காங்க. ஹரிணி, இவங்கெல்லா நம்மளச் செக் செய்ய வந்திருக்காங்க”

”அடப்பாவி, வேடிக்கை பார்க்க வந்தது ஒரு குத்தமா?” (நம்ம உள்மனம்)

அடுத்த நாள். “அண்ணா, குரூப் டேன்செல்லாம் லஞ்ச் நேரத்துக்குப் போட்டு வுட்டாச்சி. சாப்ட வர்றவுகளையும் சேர்த்துக் குத்தி எடுத்துறலாம் வுடுங்க”. அங்கு என்ன நடந்ததென்பதை நாம் அனைவருமே அறிவோம். இஃகிஃகி.

𝑻𝒐𝒖𝒄𝒉𝒆𝒅 𝒎𝒂𝒏𝒚 𝒉𝒆𝒂𝒓𝒕𝒔, 𝒉𝒂𝒏𝒅𝒍𝒊𝒏𝒈 𝒆𝒗𝒆𝒓𝒚𝒕𝒉𝒊𝒏𝒈 𝒘𝒊𝒕𝒉 𝒂 𝒎𝒂𝒔𝒕𝒆𝒓𝒚 𝒕𝒉𝒂𝒕 𝒆𝒙𝒄𝒆𝒆𝒅𝒆𝒅 𝒂𝒍𝒍 𝒆𝒙𝒑𝒆𝒄𝒕𝒂𝒕𝒊𝒐𝒏𝒔.

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி.

No comments: