7/02/2011

2011 FeTNA தமிழ்த் திருவிழா முதல் நாள் நிறைவு! ஒரு கண்ணோட்டம்!!

சூலை 2, 2011, சனிக்கிழமை காலை 8 மணிகெலாம் விழா அரங்கத்திற்குச் சென்றடைந்து விட்டேன். சென்றவனுக்கு, அளப்பரிய மகிழ்ச்சியும் பரவசமும் பெருவியப்பும். சங்ககால்த்துற்குள்ளாகவே காலடி எடுத்து வைத்தாற் போன்றதொரு மனநிலை.

சங்ககாலப் படங்கள், தமிழன்னை உருவப்படம், திருவள்ளுவர் படம், பண்பாட்டுப் பதாகைகள், நல்வண்ணக் கோலங்கள், அழகு வேலைப்பாடுகள் என அரங்கம் மிக எழிலோடும், பொழிலோடும் காட்சியளித்தது.

மாபெரும் அரங்க வளாகம். வாகனத்தரிப்பு இடங்கள், வணிகக்கடைகள் பரப்பிடம், விசாலமானதொரு உணவுக்கூடம். வசதிக்குறைவில்லாதொரு இடத்தைத் தேர்வு செய்திருந்தனர் விழாக் குழுவினர்.

மங்கள் இசையுடன் விழா துவங்கியது காலை 8.30 மணிக்கு. உள்ளூர்ச் சிறார்கள் தமிழ்த்தாய் வாழ்த்தும், அமெரிக்கப் பாடலும் இசைத்தனர். அரங்கம் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது.

வாழ்த்துப்பா இசைத்தலைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் நீலவண்ண தமிழ்ச் சீருடை அணிந்த பெண்டிர் புடைசூழ குத்துவிளக்கேற்றினார்கள். சிறுகச் சிறுக மக்கள் கூட்டம் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.

முனைவர் தண்டபாணி குப்புசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். தலைவர் முனைவர்.பழனிசுந்தரம் அவர்கள் உண்ர்வுமிகு தலைமையுரை ஆற்றினார்கள். இனமாண்பு போற்றுவது மட்டுமே பேரவையின் வேலை, தம்கடமையில் அரசியலைக் கலப்பதே இல்லை என ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

கவிஞர் சேரன் அவர்களின் பாடலுக்கு, வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கத்துச் சிறார்களின் நடனம் இடம் பெற்றது. பூமியின் அழகே, பரிதியின் சுடரே எனுமந்தப் பாடல் அரங்கத்தைக் கட்டிப் போட்டது. நடனமும் நேர்த்தியாய் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

அதனை அடுத்து, அன்பர் பொற்செழியன் இராமசாமி அவர்கள் அமெரிக்க சிலம்பம் மற்றும் குத்துவரிசைக் கழகத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். அறிமுகத்தைத் தொடர்ந்து சிலம்பம் மற்றும் குத்துவரிசை இடம் பெற்றது.

அமெரிக்காவில் ஏராளமான தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அத்தகைய பள்ளிகளில் எல்லாம் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தினைக் கொண்டு வருமுகமாக அமையப் பெற்றதுதான் அமெரிக்க தமிழ் கல்விக்கழகம். அதனை அறிமுகப்படுத்தியும், அதன் கட்டமைப்புப் பணிகள் பற்றியும் எடுத்துரைத்தார் முனைவர் அரசு செல்லையா அவர்கள். அட்லாண்டாவில், தமிழ்ப் பாடம் அங்கீகாரம் பெற்றது எப்படி என்பதை விரிவாக எடுத்துரைத்து நம்பிக்கையும் ஊக்கமும் ஊட்டினார் அட்லாண்டா மாநகர் தமிழ் சங்கத் தலைவர் முனைவர். திரு. ரவி பழனியப்பன் அவர்கள்.

அமெரிக்க தமிழ் கல்விக்கழகத்தின் கட்டமைப்புக்கு வலு சேர்த்த அன்பர்கள் திரு.செளந்திர பாண்டியன், முனைவர் சொர்ணம் சங்கர் முதலானோர்க்கு சிறப்புச் செய்யப்பட்டது.

பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் அவர்கள், தம் சொல்வீச்சாலும் நகைச்சுவையாலும் அரங்கத்தினைக் கவர்ந்தார். இந்த நேரத்தில் நாம் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். விழாவைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த இலதா கண்ணன் அவர்களது தெளிதமிழும் உச்சரிப்பும், அரங்கத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் இதுவல்லவோ தமிழ் என உணர்ந்து சிலாகிக்கத் தூண்டியது.

சார்ல்சுடன் மாநகர உறுப்பினர் திருமதி காத்லீன் வில்சன் என்பார் வாழ்த்துரை வழங்கினார்கள். டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கத்தாரின், அமெரிக்க மருமகள் ஆண்டிபட்டி மாமியார் எனும் நாடகத்தின் மூலம் சிரிப்பொலி மூலம் அரங்கத்தை அதிர வைத்தார்கள்.

அதற்குப் பின் உணவு இடைவேளை கிட்டத்தட்ட 12.15 மணியளவில் துவங்கியது. காலை ஒன்பது மணி முதலே இணை அரங்குகளிலும், பல்வேறு நிகழ்ச்சிகளும் போட்டிகளும் இணையமர்வுகளாக இடம் பெற்றன.

உணவு இடைவேளைக்குப் பின்னர், கொலம்பசு நகரத் தமிழ்ச்சங்கத்தினரின் நடனம் இடம் பெற்றது. வெகு அருமையாக இருந்தது. மிகுந்து இரசித்துப் பாராட்டப்பட்டது. தனித்தமிழே நனிச்சிறப்பு எனும் தலைப்பில், நண்பர் துரைக்கண்ணனின் தந்தையாரும் தமிழறிஞருமான திரு.துரை எழில்விழியன் அவர்களின் சொல்வீச்சு இடம் பெற்றது. சிந்தனைகளைக் கிளறுவிதமாக இருந்தது அவரது பேச்சு.

அடுத்து, கவிஞர் நா.முத்துகுமார் அவர்களது தலைமையில் கவியரங்கம் இடம் பெற்றது. அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றம் எனும் தலைப்பில் இடம் பெற்றது கவியரங்கம். உணர்வுப்பூர்வமாக இருந்தன கவிதைகள். கவிநயம் சில இடங்களில் மிகவும் தூக்கலாக இருந்தது. அனைவருக்கும் பாராட்டுகளை அள்ளி வழங்கினர் பார்வையாளர்கள்.

அரசி நகரத்து அருங்கலைகள் எனும் தலைப்பில், சார்லட் நகர தமிழ்ச்சங்கத்தினர் வழங்கிய வில்லுப்பாட்டு, முளைப்பாரிப் பாட்டு, கும்மிப்பாட்டு, கரகாட்டம், காவடியாட்டம் முதலானவை அடங்கிய கதம்பம் அனைவரையும் கவர்ந்து, நாட்டுப்புறத்துக்கே இட்டுச் சென்றது. மிகவும் அருமை!!

அட்லாண்டா நகரத்தினர் வழங்கிய வீணை இசை, தெவீகக்களையோடும் இனிமையோடும் சிறப்புற அமைந்தது.

புதுகை பூபாளம் குழுவினர் வழங்கிய நிகழ்ச்சியில் மொத்த வருகையாளர்கள் ஒருங்கே அமர்ந்திருந்தார்கள் என்றே கூற வேண்டும். அடுத்தடுத்து நகையுணர்வுக்கு ஆட்பட்டமையால், ஏராளமானோர்க்கு விலா எலும்பு வலிக்கத்துவங்கின என்றே கூற வேண்டும். அடுத்தடுத்து சர வெடிகளை வெடித்துக் கொண்டே இருந்தனர் பிரகதீசுவரனும் செந்திலும்.

இடையில், தமிழிசைப்பேழை குறுந்தகடு வெளியிடப்பட்டது. நடிகர் சார்லியின் மேடை நிகழ்ச்சியும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மனிதர் தனது அனுபவ நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினார். கவிஞர் நா.முத்துக்குமாரின் வினாவுக்கு விடையளித்தல் நிகழ்ச்சியும் சுவாரசியமாக நடத்தப்பட்டது.

கோடைமழை வித்யா அவர்களது சிவகாமியின் சபதம் நாட்டிய நாடகம் அருமையாக இருந்தது. உணவு இடைவேளை சிறிது தள்ளிப் போகவே, முனைவர் சுந்தரவடிவேலுவும் பதிவர் பழமைபேசியும் இணைந்து தமிழ் மொழி குறித்தான கலந்துரையாடலை நடத்தினர். கூடியிருந்தோர் வெகுவாக அதனைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு முக்கிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றன். விழா மலர் வெளியீடு, முக்கிய விருந்தினரைச் சிறப்பித்தல் ஆகியன்வற்றைத் தொடர்ந்து, முனைவர் மு.இளங்கோவன் சிறப்புரை ஆற்றினார். அழகான பாடலை, இசையறிவோடு தோய்த்துப் பாடினார் முனைவர். அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது. தொடர்ந்து, பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்கள் குறித்தான தமிழ்ப் பேச்சால் அரங்கத்தைக் கட்டிப்போட்டார் என்றே சொல்ல வேண்டும். சக பதிவர் என்கிற முறையிலே, நமது பாராட்டுகள் அவருக்கு உரித்தாகட்டும்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்களைத் தொடர்ந்து, கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் இராதிகா சிற்சபேசன் அவர்கள் தான் கடந்து வந்த பாதை எனும் தலைப்பில் தன் அனுபவத்தைப் பகர்ந்தார். அடுத்த தலைமுறையினருக்கு மிகவும் பயனுற அமைந்தது அவரது பேச்சு.

தொடர்ந்து பண்பட்ட மனதுக்குச் சொந்தக்காரர், கலையாற்றலும் நயமும் மிகுந்த நடிகர் நாசர் அவர்கள் திரைப்படம் குறித்தான் கருத்துகளை மிகச் செறிவாக எடுத்துரைத்தார். மிக, மிகப் பணிவோடும் பண்போடும் ஆற்றிய உரை என்றே கூறுவேன்.

நிறைவு நிகழ்ச்சியாக, தமிழிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்களது தமிழிசை இடம் பெற்றது. இன்னிசையில் நனைந்த தமிழ் நரம்புகள் காதில் தேனைக் கொண்டு செவியுணர்வாகப் பாய்ச்சியது. மொத்தத்தில் முதல் நாள் நிகழ்ச்சியானது, மிகுந்த செறிவோடும் நல்லதொரு ஒழுங்கோடும் அமைந்திருந்தது. ஒளிப்பதிவுகளை இங்கே சென்று கண்டு களித்திடுவீராக.


படங்களுக்கு இங்கு சுட்டிடுவீர்!!

நாளை இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்க முற்படும் வரையிலும் உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்வது,

--சார்ல்சுடன் இஃகயாத் விடுதியில் இருந்து உங்கள் பழமைபேசி.

எழிலார்ந்த நடையில் நடந்தேறி வரும் பேரவைத் திருவிழா

கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் இராதிகா சித்சபேசன் வருகை அளித்திருக்கிறார். மேலும் பல அமெரிக்க அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்களோடு, தமிழ்ப் பண்பாட்டைப் பறைசாற்றும் விதமாய்ப் பல நிகழ்ச்சிகள் பிற்பகல் உணவுக்குப் பின் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அரசி நகரத் தமிச் சங்கத்தின் அருங்கலைகள் எனும், தமிழ்ப் பண்பாட்டுக் கலைநிகழ்ச்சி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. முழுத்தகவலுடன் இன்னபிற தகவல்களுடன் உங்களைச் சந்திக்கும் வரை, இப்படங்களைக் கண்டு மகிழ்வீராக!!


தமிழால் இணைந்தோம்!!

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றம்!

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் திருவிழாவில், கலைமாமணி கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களது தலைமையில், உணர்வுமிகு கவியரங்கம் நடைபெற்றது. மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. அன்பர் உதயசூரியன் மிகச் சிறப்பாக தொகுத்தும், ஒருங்கிணைத்தும் இருந்தார். இதோ, அதில் இடம் பெற்ற ஒரு கவிதை!!

அவையோரே, சபையோரே
அன்பான நண்பர்களே,
எம் தீந்தமிழ் உறவுகளே வணக்கம்!

அவையோரே, சபையோரே
அன்பான நண்பர்களே,
ஆண்டுபல மூத்தோரே,
எம் தீந்தமிழ் உறவுகளே வணக்கம்!!
திருவாசகம் படைத்த
மணிவாசகர் நாமம்
தாங்கித் திரியும் இவ்வுடலுக்கு

திருவாசகம் படைத்த
மணிவாசகர் நாமம்
தாங்கித் திரியும் இவ்வுடலுக்கு

கல்தோன்ற மண்தோன்ற முன்தோன்றிய முதுபெரும் தமிழே
முதுகெலும்பாகட்டும்!!
ஆம், முதுபெரும் தமிழே
எமக்கு முதுகெலும்பாகட்டும்!!

புழுதி தடவி, விழுந்து கிடந்து
ஆடி ஆடி விளையாடிப்
புரண்டு தழுவிய எம்நிலத்தைத்
தழுவித் தாவிவரும் செங்காற்றே
சற்றே என்மீது மோதிவிடு
என்னைக் கொஞ்சம் பேசவிடு

எழுதக் கையும்
எழுதக் கையும் நடுங்கி விடும்
எம்மவர் துயர வரலாறு

சிட்டுக்குருவிகள் போல் பறந்து திரிந்திருந்தோம் - இன்று
விட்டில்பூச்சிகளாய் தீயில் வீழ்ந்து மாய்ந்து விட்டோம்

அழுது அழுது ஒடுங்கியதால்
அடங்கிய கண்கள் பலநூறு
எத்தனை எத்தனை உயிர்களடா?
அரும்பு மொட்டுகளாய்
பிஞ்சுக் குழந்தைகளாய்
தவழும் மழலைகளாய்
எத்தனை எத்தனை உயிர்களடா??
அழுது அழுது ஒடுங்கியதால்
அடங்கிய கண்கள் பலநூறு

தெருமுனை முதல் பாராளுமன்றம் வரை
சொல்வதற்கு
உனக்குத் தமிழ்ச் சொல்லேதும் கிடையாதா?
மெல்லத் தமிழ்ச் சாக
வேடிக்கை பார்க்கின்றாய்
உள்ளம் குமுறாதோ? ஓங்கி ஒலி வாராதோ?

மெல்லத் தமிழ்ச் சாக
வேடிக்கை பார்க்கின்றாய்
உள்ளம் குமுறாதோ? ஓங்கி ஒலி வாராதோ??

நமக்கான அந்நானிலத்தில்
தமிழுக்கும் தமிழனுக்கும் நாதியுண்டோ??
ஆம், பிறந்தோம் என்று அடங்கி அழிவோமா?

கல்லாத மாந்தர்க்கு
கற்றுணர்ந்தார் சொல் கூற்றம்!
அல்லாத மாந்தர்க்கு
நல்லோர் மொழிதல் கூற்றம்!
கிடக்கும் நுணலுக்குத்
தன் வாயதுவே கூற்றம்!
மெல்லிய வாழைக்குத்
தானீன்ற காய் கூற்றம்!
அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாம்!

கல்லாத மாந்தர்க்கு
கற்றுணர்ந்தார் சொல் கூற்றம்!
அல்லாத மாந்தர்க்கு
நல்லோர் மொழிதல் கூற்றம்!
கிடக்கும் நுணலுக்குத்
தன் வாயதுவே கூற்றம்!
மெல்லிய வாழைக்குத்
தானீன்ற காய் கூற்றம்!
அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாம்!
ஆனால் அந்த அறமே பிழைத்து நிற்கும் போது,
எது கூற்றம்?!

அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றம்!
ஆனால் அந்த அறமே பிழைத்து நிற்கும் போது,
எது கூற்றம்?!

தேமதுரத் தமிழோசை
வீடுகளில் ஒலிக்கச் செய்திடுவோம்!
பன்னாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்பல
கற்றுத் தேர்ந்திடுவோம்!
பார் பார்க்கக் கனடியச் சபையில்
தமிழ்க்குரலிட்ட
இராதிகா சித்சபேசன்கள் பெருகட்டும்
மொத்தத்தில்
நம்குரல் அவனியெங்கும் ஒலிக்கட்டும்
அரவணைத்த நாட்டுக்குப்
பெருமைகள் பல சேரட்டும்
நம் பிள்ளைகள்
பேறுகள் ஏராளம் பெற்றிடட்டும்

ஐநா சபையில்
பல்இளித்து
ஆடையின்றி
அம்மணமாய்ப்
பிழைத்து நிற்கும் அறமதற்கு

முச்சந்தியில்
பல்இளித்து
ஆடையின்றி
அம்மணமாய்ப்
பிழைத்து நிற்கும் அறமதற்கு
நாமே கூற்றாவோம்!!
நம் உயர்வே கூற்றாகட்டும்!!

வாழ்க தமிழ்!!

FeTNA: பேரவை விழா எழுச்சியுடன் ஓங்கியது!

அரங்கம் எங்கும், பனைநில தமிழ்ச்சங்கத்துக்கே உரிய பண்பாட்டுக் கூறுகளைப் பறைசாற்றும் விதமாகப் பல்வேறு பதாகைகளுடனும், வண்ண மலர்கள் சூட அழகுற எழிலோடு அமையப் பெற்றிருக்கிறது. கடையெழு வள்ளல்கள், முதல், இடை, கடைச்சங்கம் போற்றும் படங்கள் என பல்வேறு கூறுகள் இடம் பெற்றிருக்கின்றன.

தமிழ்ச்சிறார்கள் வாழ்த்துரைக்க, நிகழ்ச்சி மங்கல் ஒலியுடன் துவங்கியது. அதையொட்டி, முனைவர் தண்டபாணி குப்புசாமி வரவேற்புரை வழங்கினார். அதையடுத்து குத்துவிளக்கேற்றி முறையாக நிகழ்ச்சி துவக்கப்பட்டது.

பேரவைத் தலைவர் முனைவர் பழனிசுந்தரம் அவர்கள் உணர்வுமிகு தலைமையுரை வழங்கினார். இதோ, இம்மணித்துளியில் கவிஞர் சேரன் அவர்களின், பூமியின் அழகே, பரிதியின் சுடரே பாடலுக்கு தமிழ்நாட்டியத் தாரகைகள், தமிழிசைக்கொப்ப நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். பாடல் வரிகள், அரங்கத்தைப் பரவசத்தில் ஆழ்த்தியது. அதற்கடுத்து, வட அமெரிக்க சிலம்பம் மற்றும் குத்துவரிசைக் கழகத்தினரின் சிலம்பாட்டம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

தற்போது முனைவர் அரசு செல்லையா அவர்கள், அமெரிக்க தமிழ்க் கழகத்தினை அறிமுகப்படுத்தி பேசி வருகிறார். இக்கழகத்தின் தேவை, ஒருங்கிணைந்த பாடத்திட்டம், அமெரிக்கா பல்கலைக்கழகங்களில் தமிழை இடம் பெறச் செய்வது, தற்போதைய முன்னெடுப்புகள் முதலானவற்றை மிகவும் கருத்துச் செறிவோடும், நுட்பங்களின் அடிப்படையில் உரை நிகழ்த்தினார்.

அவரை அடுத்து அட்லாண்டா தமிழார்வலர் இரவி, சியார்ச்சியா மாகாணத்தில் தமிழ் அங்கீகாரம் பெற்றது எப்படி என்பதை விளக்கி வருகிறார். தமிழை பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக அங்கீகாரம் செய்த சியார்ச்சியா மாகாணத்திற்கு நமது நன்றிகள். அவர் இச்செய்தியைப் பகரும் தருவாயில் அரங்கம் அதிர்ந்தது.

அதையடுத்து, கட்டமைப்புக்கு வலுவூட்டிய நண்பர் செளந்திர பாண்டியன் மற்றும் முனைவர் சங்கரபாண்டி ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது. பாடநூல்களை முக்கிய விருந்தினர்கள் வெளியீடு செய்தார்கள்.

அமெரிக்க தமிழ்க் கல்விக் கழகம் நிச்சயம் வலுப்பெறும். அமெரிக்க மண்ணில் தமிழ் தழைத்தோங்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

தற்போது தமிழ்ப் பேராசிரியர் திருமதி புனிதா ஏகாம்பரம் அவர்கள், தம் தமிழ்ப் பேச்சால் அவையைக் கட்டிப் போட்டு உரையாற்றினார். நல்ல தமிழ் சொல்வீச்சு.

விழாவின் கருவுக்கிணங்க, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் தமிழச்சி அவர்களின் மேடைநடத்தும் பாங்கு அமைந்திருந்தது. தமிழும், தமிழ் உச்சரிப்பும் தமிழுக்கு பெருமை சேர்ப்பதாக இருந்தது.

திருமதி.புனிதா ஏகாம்பரத்தின் சொல்வீச்சுக்குப் பின், நடிகர் சார்லி அவர்களின் மேடைநாடகம், கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களின் வினா,விடை நேரம் அமைந்திருந்தது.

இணை அரங்கில் தமிழ்த்தேனீ போட்டிகள், உலகத் தமிழர் அமைப்பின் கூட்டங்கள் என பலவும் இடம் பெற்று வருகிறது. அமெரிக்க மருமகள் ஆண்டிப்பட்டி மாமியார் எனும் தலைப்பில் இடம் பெற்ற நகைச்சுவை நாடகம் கைதட்டலை அள்ளிக் குவித்தது. இணையரங்குகளில் இடம் பெற்ற தமிழ்த் தேனீ நிகழ்ச்சியில், அமெரிக்க இளஞ்சிறார்களின் தமிழாற்றம் வியக்கத்தகு விதமாய் இருக்கக் கண்டோம்.

அத்துடன் எல்லா அரங்குகளிலும் நிகழ்ச்சிகள் உணவு வேளைக்காக இடை நிறுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. உணவு ஏற்பாடுகள் மிக நேர்த்தியாக செய்யப்பட்டு இருக்கிறது. அந்த இடத்தில் மட்டுமே, வந்திருப்போரை ஒருமுகமாகப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. பெரும் கூட்டம். 1100 பேர் வரையிலும் வந்திருக்கக் கூடும் எனத் தோராயமாகக் கணக்கிடப்பட்டு உள்ளது.


Watch live streaming video from fetnaorg at livestream.com
பரிதியின் சுடரே, நற்றமிழே வாழ்க! நின் கொற்றம் சிறக்கவே!!

--அரங்கத்தில் இருந்து பழமைபேசி

முதல் நாள் நிகழ்ச்சிக்கான ஆயத்தம்

சார்ல்சுடன் நகரில் இருக்கும் விடுதிகள் எங்கும் தமிழ்க் குரல்! வழமைக்கு மாறாக, நிறைய ஈழத்தமிழ் தேனாக வந்து பாய்கிறது காதுகளில். காலை ஆறு மணி தொடக்கம், பல விடுதிகளில் பல நண்பினரைச் சந்திக்கும் பொருட்டு போய் வந்திருக்கிறேன். மிக ஆவலாய் எழுந்து ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் அனைவரும்.

வெளியே, நீலக்கடல் வெளி அம்சமாய்க் காட்சி அளிக்கிறது. காலை நேரக் காற்று வருடிச் செல்கிறது. தமிழ்க்கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. பனைநில தமிழ்ச் சங்கத்தாரோ தேனீக்களாய் இங்குமங்கும்.

அரங்கம் வடிவாய் அழகுறப்பட்டுக் காட்சியளிக்கிறது. இன்னும் பத்து மணித் துளிகளுக்குள், மங்கல இசை முழங்க, 2011 பேரவைத் தமிழ்த் திருவிழா, மேலைப்பெருமழைப் புலவர் பொ.வெ.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவாக எழுச்சி கொள்ளக் காத்திருக்கிறது.

சங்கே முழங்கு சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு


-- விழா அரங்கத்தில் இருந்து உங்கள் பழமைபேசி.

7/01/2011

2011 FeTNA விருந்தினர் மாலை - படங்கள்

மிகவும் இரம்யமானதொரு இயற்கைச் சூழல். மீனகம். கண்கவர் வண்ணங்களில், வகைவகையாய் மீன்கள். மீனகம் முற்றத்தில் வந்து நின்றாலோ, கடலைத் தழுவி வரும் இனிய மாலைக் காற்று நம்மையும் தழுவிச் செல்கிறது.

நீலக் கடல்வெளியில், இராட்சத கப்பல்கள் முதல் சிறு படகுகள் வரை வகை வகையாய் கலங்கள். அவற்றை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் போதே, ஆங்காங்கே மேலெழும்பிச் செல்லும் டால்பின் வகைப் பெருமீன்கள். கண்ணுக்கு பார்வை கிடைக்குமளவுக்கு நீல்வண்ணம் நீண்டு கிடக்கும் பரவசக் காட்சி.

இவை நடுவே, தமிழ் உறவுகள் கதைத்துக் கதைத்து உற்சாகக் கடலில் மிதக்கும் காட்சி. மீனகமே இன்தமிழ் கேட்டுப் பூரித்தது.

முக்கிய விருந்தினர்கள் அனைவருக்கும் பேரவைத் தலைவர் முனைவர் பழனிசுந்தரம் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் தெண்டபாணி குப்புசாமி அவர்கள் வரவேற்பு நல்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து, பனைநில தமிழ்ச்சங்கத்தினர் முக்கிய விருந்தினர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.

நிறைய தமிழுறவினர் வந்து நலம் விசாரித்தனர். அகமலர்ச்சிக்கு எல்லையே இல்லை. பெருமகிழ்ச்சியுடன் பேரவை முன்னோடியினருடன் நானும் நலம் விசாரித்து, அளவளாவி மகிழ்ந்தேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நிகழ்ச்சி தொடர்ந்து கொண்டே இருந்தது.

எனக்குப் பணி நிமித்தம் அறைக்கு வர வேண்டி இருந்தமையால், நிகழ்ச்சி நிறைவு பெறுவதற்கு முன்பே விடைபெற வேண்டியதாயிற்று. இயற்கைச் சூழலுடன், பலவகையான உண்டி மற்றும் பானங்களுடன், தேன்தமிழ் உறவுகளுடன் ஒரு இனிய மாலைப் பொழுதை அனுபவிக்கும் வாய்ப்பை அமைத்துக் கொடுத்த பனைநில தமிழ்ச்சங்கத்தாருக்கும், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்!

நிழல்படங்கள் உதவி: திரு.கண்ணன் மற்றும் திரு.சிவன் அவர்கள்

சுட்டியைச் சொடுக்கி, படங்களைப் பெரிய அளவில் கண்டு மகிழுங்கள்!!





--சார்ல்சுடன் கடற்கரை முற்றத்தில் இருந்து பழமைபேசி!!

2011 பேரவைத் தமிழ் விழா - கோலாகலத் துவக்கம்

கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச் சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில், எங்கும் இன்புற்ற நினைவுகளைக் கண்டேன். ஆம், கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்கு முன்னர், இதே சார்ல்சுடனுக்கு வந்திருந்தேன். 2011 பேரவைத் திருவிழாப் பணிகள் துவக்கவிழாவிற்கு வந்திருந்தேன். என்னே ஒரு இனிமையானதொரு நாள்?

அதே நினைவுகளொடு, டென்னசி மாகாணம் மெம்பிசு நகரில் இருந்து பேருவப்புடன் இன்றைய நாளில், அதே சார்ல்சுடனுக்கு வந்திருக்கிறேன். இடையிடையே, தமிழ் உறவுகளிடம் இருந்து அழைப்புகள். இப்படியாக, இதோ சார்ல்சுடன் நகருக்கு வந்திருக்கிறேன். கடந்த ஆண்டு கண்ட உறவுகளையும், புதிதாய்க் காணப் போகும் உறவுகளையும் காணப் பேரவலுடன் சார்ல்சுடன் மீனகத்திற்குள் அடியெடுத்து இன்னமும் இருப்பது முப்பதே மணித்துளிகள்தாம்.

இத்திருவிழாவினை நடத்துவதற்கு, தம் உழைப்பைக் கொடுத்தவர்கள் ஏராளம். ஒரு குடும்ப விழாவில் என்னென்ன கூறுகள் நிகழுமோ, அத்துனையும் இங்கே உண்டு. ஆழக்கடலில் முக்குளித்து முத்துக் கிடைத்தது போன்றதொரு உணர்வுதான் உழைத்தவர் அனைவருக்கும்.

நிகழ்ச்சிகளைத் தர இருக்கும் பல்வேறு தமிழ்ச்சங்கத்தினரையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். வர இருக்கும் மூன்று நாட்களிலும், பல்வேறு நிகழ்ச்சிகள், பேரின்பக் கூறுகள் இடம் பெறப் போகிறது. அண்மையில் இருக்கும் தமிழருக்கெலாம், இப்போதும் காலம் தாழ்ந்து விடவில்லை. இக்கணமே புறப்பட்டு வாருங்கள். விழாக் காணுவோம்! கொண்டாடுவோம்!!

விருந்தினர்க்கு வரவேற்பு அளிக்குமுகமாக, மாலை விருந்து நடக்கப் போகும் சார்ல்சுடன் மீனக வளாகத்தில் இருந்து,

பணிவுடன்,
பழமைபேசி.